ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டு கேட்க மட்டுமே தொகுதிப் பக்கம் வரும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டி அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். காசைக் கொடுத்து ஓட்டு வாங்கிவிட்டால் ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கு தங்களை கேள்வி கேட்கும் உரிமை கிடையாது என ஆண்டைத்தனமாக திரிந்த தறுதலை அரசியல்வாதிகளின் குரல்வளையைப் பிடித்து மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். இன்னும் சில ஊர்களில் தங்கள் ஊருக்குள் ஓட்டு கேட்கவே யாரும் வரக்கூடாது என ஊரின் வாயிலிலேயே பிளக்ஸ் பேனர்களை வைத்து மக்கள் மிரட்டுகின்றார்கள். மக்களிடம் கூழைக்கும்பிடு போட்டு அந்த மக்களின் மூலமே அதிகாரத்தையும் பெற்று, அந்த மக்களின் தலைமேல் ஏறி மிதிக்கும் எத்தர்களுக்கு இனி புத்தி புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைத்தான் மக்களிடம் கிளர்ந்தெழுந்து இருக்கும் கோபாவேசம் காட்டுகின்றது.

edappadi k palaniswamiஅதிமுக சார்பில் கரூரில் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் தம்பிதுரை அந்தத் தொகுதிக்கு ஓட்டு கேட்கச் சென்ற இடத்திலெல்லாம் மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டு இருக்கின்றார். பல இடங்களில் மக்கள் "இப்போ என்னத்துக்கு ஓட்டு கேட்டு ஊருக்குள் நீ வர... இதுவரைக்கும் எங்களுக்கு நீ என்ன செஞ்சிருக்கே? குடிக்கிற தண்ணி எவ்ளோ மோசமா இருக்கு தெரியுமா?" என்று தங்கள் பகுதியில் விநியோகிக்கப்படும் தரம்கெட்ட குடிநீரைப் பிடித்து, அதை தம்பிதுரையிடம் கொடுத்து குடித்துப் பார்க்கச் சொல்லி அவரைக் கதிகலங்க வைத்திருக்கின்றார்கள். மேலும் தொகுதியில் உள்ள சுடுகாடுப் பிரச்சினை, பேருந்து பிரச்னை, சாக்கடைப் பிரச்னை என்று எதையுமே தீர்த்து வைக்கமால் இப்போது எதற்காக ஓட்டு கேட்டு வந்திருக்கின்றீர்கள் என்று மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த தம்பிதுரை தெனாவட்டாக “எனக்கு ஓட்டு போட்டா போடுங்க...போடாட்டி போங்க. ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் விழமுடியாது" என்று திமிர்த்தனமாகப் பேசி இருக்கின்றார்.

ஓட்டு கேட்டு வரும்போது பிச்சைக்காரர்கள் போல குழைந்து வளைந்து ஓட்டு கேட்பதும், வெற்றி பெற்று, அதிகாரம் கிடைத்த பின்னால் கோடி கோடியாய் கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு அந்த மக்களையே எட்டி உதைக்கும் வழக்கமான ஓட்டுப் பொறுக்கிகளின் கைவரிசையைத்தான் தன்னை இரண்டு முறை தேர்ந்தெடுத்த கரூர் தொகுதி மக்களிடம் தம்பிதுரை காட்டியிருக்கின்றார்.

தம்பிதுரைக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்றில்லை, கடலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.சி சம்பத்துக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவர் பீமராவ் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது அங்கிருந்த பொதுமக்கள் வெள்ள பாதிப்பு சமயத்தில் ஒரு தடவை கூட இங்கு வரவில்லை எனவும், நிவாரண வசதிகள் ஏதும் செய்து தரவில்லை எனவும் கூறி எம்.சி சம்பத்திற்கு எதிராக கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததோடு , அவருக்கு எதிராக கோஷமிட்டும், திரும்பிப் போ என முழக்கமிட்டும் இருக்கின்றார்கள். இதனால் மிரண்டு போன எம்.சி. சம்பத் ஆளைவிட்டால் போதுமென பரப்புரையை முடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து இருக்கின்றார்.

அடிமை அதிமுகவிற்கே இந்த நிலைமை என்றால், அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் அல்லக்கைகளின் நிலமையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தேர்தலுக்கு முன்னால் டயர் நக்கி என்று அழைத்துவிட்டு, இன்று அதே டயர் நக்கிகளுடன் கூச்சமே இல்லாமல் கூட்டணி வைத்திருக்கும் பாமகவும் ஓட்டு கேட்கச் செல்லும் இடங்களில் எல்லாம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. அந்தக் கட்சியின் அரக்கோணம் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஏ.கே.மூர்த்தியும், திருத்தணி அ.தி.மு.க எம்.எல்.ஏ. நரசிம்மன் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பிரசாரம் செய்யச் சென்றபோது, புது கீச்சலம் என்ற கிராமத்தில் கடுமையான தண்ணீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள், கிராமத்திற்கு வெளியிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தி எம்.எல்.ஏ. நரசிம்மனை கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றார்கள். தண்ணீர் வசதி செய்து கொடுக்காத நீங்கள், எங்கள் ஊருக்குள் பிரச்சாரம் செய்ய வரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றார்கள். இதனால் வேறு வழியில்லாமல் ஊரே எதிர்த்ததால், பா.ம.க. வேட்பாளர் பிரச்சாரம் செய்யாமல் வந்த வழியே திரும்பிச் சென்றிருக்கின்றார்.

இதே போல சேலம் மாவட்டம் அரங்கனூர் ஊராட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த முறை தங்கள் ஊருக்குச் செய்வதாக அரசியல் கட்சிகள் அளித்த எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால் தாங்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி தவித்து வருவதாகவும், மேலும் அரசின் பல்வேறு திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாலும் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊரின் எல்லையில் எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க ஊருக்குள் வரக்கூடாது எனவும், மீறி உள்ளே நுழைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படாது எனவும் எச்சரித்து பேனர் வைத்துள்ளார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகவும், இந்து பாசிச கொலைகார பிஜேபி அரசுக்கு எதிராகவும், மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிவிட்டு டயர் நக்கிகளுடன் ஒரு டயர் நக்கியாய் தன்னை இணைத்துக் கொண்ட பாமகவுக்கு எதிராகவும் கடும் அதிருப்தி நிலவுவதை நம்மால் வெளிப்படையாகவே பார்க்க முடிகின்றது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் மக்கள் குடிநீருக்காக அலைக்கழிக்க வைக்கப்படும் துயரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் பத்து நாள், இருபது நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் அசுத்தமான, குடிப்பதற்குத் தகுதியற்ற தண்ணீரே விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்கள் தங்களின் குடிநீர்த் தேவைக்காக தங்களின் வருமானத்தில் கணிசமான பகுதியை செலவழிக்க வேண்டிய அவல நிலையை இந்த அரசு ஏற்படுத்தி இருக்கின்றது.

தங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் உயிரோடு இருக்கின்றார்களா, இல்லை செத்துவிட்டார்களா என்று ஐந்தாண்டுகளாக எட்டிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் ஊரை அடித்து உலையில் போட்டு சொத்து சேர்ப்பதை மட்டுமே செய்து வந்த கும்பல், இன்று மக்கள் மத்தியில் சூடு, சுரணையே இல்லாமல் ஓட்டு கேட்கச் செல்லும்போது அதற்கான தீவிரமான எதிர்வினைகளை மக்களிடமிருந்தே சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

பொதுவாகவே ஓட்டுப் பொறுக்கி அரசியலில் இருப்பவர்களுக்கு மானம் வெட்கம் எல்லாம் இருக்காது என்பதும், சுரணையற்ற பேர்வழிகள் என்பதும் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும், தமிழ்நாட்டையே அழித்து குட்டிச் சுவராக்கிவிட்டு தைரியமாக அதிமுகவும், பிஜேபியும் ஓட்டு கேட்டு மக்கள் முன் வருகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களின் சகிப்புத் தன்மையின் மீது உள்ள நம்பிகைதான் காரணமாகும். ஆனால் பல இடங்களில் மக்கள் தங்களின் நெஞ்சில் இந்த ஆட்சிக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த கோபத்தை வெளிப்படையாக வெளிக்காட்டி இருக்கின்றார்கள். இந்தக் கோபம் தேர்தலில் முழுமையாக வெளிப்பட்டு ஊழல் பேர்வழிகளும், மதவெறி, சாதி வெறி பிடித்த பாசிஸ்ட்டுகளும் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பதைத்தான் கள நிலவரங்கள் காட்டுகின்றன.

- செ.கார்கி