17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 அன்று நடத்தப்பட உள்ளது. இதோடு தமிழகத்தின் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் ஆட்சி செய்யும் பார்ப்பனிய பாஜகவும் தமிழகத்தில் ஆட்சி செய்யும் கொள்ளைக்கார அதிமுகவும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதற்கு எதிராக திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணி சேராது சில கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழக மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன ?

 eps tamilisai and ponnarபார்ப்பனிய மேலாதிக்கத்தையும் சமக்கிருத ஆதிக்கத்தையும் மையமாகக் கொண்ட வர்ணாசிரம மனுதர்ம அடிப்படையிலான இந்திய தேசியத்தை - இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைப்பதையே தனது லட்சியமாகக் கொண்ட பாசிச ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி. 2014இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்த மோடி தலைமையிலான பாஜக அரசு, தனது பார்ப்பனிய இந்திய தேசிய கனவை நிறைவேற்ற எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது; ஐந்து ஆண்டு காலத்தில் கொள்கை முடிவு எடுக்கும் அதிகார மட்டங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வரலாற்று ஆய்வு நிறுவனங்கள், அறிவியல் நிறுவனங்கள் என அனைத்திலும் ஆர்எஸ்எஸ் காரர்களை அமர்த்தியுள்ளது; எல்லா நிலைகளிலும் இந்தி- சமஸ்கிருத மயமாக்கலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் லவ் ஜிகாத் என்ற பெயரிலும் இஸ்லாமியர்கள் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும், பசு குண்டர்களை கொண்டும் காவி ரவுடிகளை கொண்டும் படுகொலைகளை நடத்தி வருகிறது; ஆர்எஸ்எஸ்ஸின் பல்வேறு வானரப் படைகள் மூலம் அன்றாடம் மதச் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை உமிழ்ந்துக் கொண்டும் தாக்குதல் நடத்தியும் அம்மக்களை பாதுகாப்பற்ற ஓர் அச்ச நிலையிலேயே வாழும்படி செய்துள்ளது. நாடெங்கும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கல்வியை காவிமயமாக்கி வருகிறது. தேசியங்களின் தனித்துவங்களை காலில் போட்டு நசுக்கி, ஒரே இந்திய தேசியம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே உணவு, ஒரே வரி என்று பார்ப்பனிய இந்து சாம்ராஜ்யத்தை கட்டமைக்கத் துடிக்கிறது; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் வணிகர்கள், சிறு - நடுத்தர உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அத்தனை மக்களையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் நம்பகமான சேவகனாக இருந்து நாட்டைக் கூறு போட்டு விற்று வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சுயேச்சையான அமைப்புகளாக சொல்லப்பட்டு வந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி என அனைத்தும் மோடியின் விருப்பப்படி இயங்குபவையாக மாற்றப்பட்டுவிட்டன .

 இந்திராகாந்தி நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கியே அவசரநிலை பாசிச காட்டாட்சியைக் கொண்டு வந்தார். மோடியும் ஹிட்லரைப் போல தேர்தலில் மிருக பலத்துடன் ஜெயித்து, நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்களையே இந்துத்துவ பாசிச மயமாக்கி வருகிறார். இந்திரா பாசிசத்தை விட கொடூரமான. பார்ப்பனிய பாசிச ஆட்சி இது.

 மோடி வைத்ததே சட்டம். மோடியை தூக்கிப் பிடிப்பது தான் ஊடக அறம். மோடி - பிஜேபியை விமர்சிக்கும் சுதந்திரமான அறிஞர்கள், கலைஞர்களுக்கு துப்பாக்கி குண்டுகளே பரிசு என்ற கொடுங்கோன்மை. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாடே சுடுகாடாகி போகும் என்பது திண்ணம்.

 இந்த மோடி கும்பல், தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்துக்குப் பின், சசிகலா கும்பலை ஓரங்கட்டியும், வருமான வரித்துறையின் மூலமும் சிபிஐ மூலமும் ஓபிஎஸ்- இபிஎஸ் கும்பலை மிரட்டி பணிய வைத்தும், கொள்ளைக்காரர்களின் கூடாரமான அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நீதிமன்றத்தின் துணையோடு அதிமுக எடப்பாடி அரசை மோடி பாதுகாத்து வருகிறார். நீட், ஜிஎஸ்டி, காவிரி மேலாண்மை வாரியம், மேகதாது அணை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ, இந்தித் திணிப்பு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிப்பு, கீழடி ஆய்வு மறுப்பு, செம்மொழி வாரிய புறக்கணிப்பு என நீளும் தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் அனைத்துக்கும் ஒத்திசைந்து பாஜக அரசின் காலடியில் படுத்துக் கிடக்கிறது எடப்பாடி - ஓபிஎஸ் கும்பல். அதிமுக கட்சியை தமிழக பாஜ கட்சியின் பினாமி கட்சியாக மாற்றி உள்ளதுடன் கவர்னர் மூலமும் தலைமைச் செயலர் மூலமும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் எடப்பாடி அரசை கொண்டு வந்து விட்டது மோடி கும்பல். டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு வற்றாத செல்வச் சுரங்கமாக உள்ள தமிழகத்தை பார்ப்பனிய இந்திய தேசியத்தில் கரைத்துவிடத் துடிக்கும் பாஜக மோடியும், பதவியை தக்க வைத்துக் கொண்டு முடிந்த அளவு கொள்ளையடிக்கும் வெறியுடன் தமிழ்நாட்டையே பார்ப்பன, பனியா கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்த்துள்ள அதிமுக எடப்பாடியும் தேர்தல் கூட்டணி சேர்ந்து ஓட்டு கேட்டு மக்களிடம் வருகின்றனர் .

 இந்த கேடுகெட்ட மக்கள் விரோத கூட்டணி மீண்டும் வெற்றி பெறுமானால் நாடு சுடுகாடாகும். இதைத் தடுத்து நிறுத்துவதே இன்று முதல் வேலை. அதற்கு இந்தத் தேர்தல் நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. மோடி -எடப்பாடி கூட்டணியை தோற்கடிக்க, அதற்கு எதிராக அமைந்துள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதுதான் நம் முன்னுள்ள ஒரே வழி .

 நாட்டு நலனில் அக்கறை இன்றி தன் கட்சி நலனை முன்னிறுத்தி தனித்துப் போட்டியிடுகின்ற கட்சிகள் மோடி -எடப்பாடி கும்பலுக்கு எதிரான வாக்குகளை சிதறடித்து மறைமுகமாக பாஜகவுக்கு உதவுகின்றன. இவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும்.

தமிழக மக்களே! 2019 நாடாளுமன்ற தேர்தலில்,

★ பாசிச பாஜக - கொத்தடிமை அதிமுக கூட்டணியை தோற்கடிக்க, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் !

★ பாஜக - அதிமுக கூட்டணி எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் வேட்பாளர்களைப் புறக்கணியுங்கள்!

 - புரட்சிகர இளைஞர் முன்னணி