இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் பத்தாவது ஆண்டு விழா கடந்த சூன் 9-ஆம் நாள் அன்று இலண்டன் மாநகரில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டார். அவரோடு தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார், மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும் எனக் கூறினார்.

Pazha.Nedumaranமேலும் அவர் பேசுகையில்-

"ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பின்னால் உங்களை எல்லாம் சந்தித்து உரையாடுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். எத்தனையோ முறை நான் இலண்டன் வந்திருந்தாலும் 1995ஆம் ஆண்டு, தேசத்தின் குரல், எனது இனிய நண்பர் அண்டன் பாலசிங்கம் அவர்கள் உடல் நலிவுற்று இருந்தபோது அவரைச் சந்திப்பதற்காகவே ஒருமுறை இங்கு வந்து சென்றேன். அதற்குப் பின்னால் எனது நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டுவிட்டது உங்களுக்குத் தெரியும்.

எங்கே இருந்தாலும் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றுகிற அந்த உறுதியோடு, அடக்குமுறைகளை நான் சந்தித்தேன். என் மீதான பொடா வழக்கில் பொடா நீதிமன்றத்தில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி, நீங்கள் தேச விரோதச் செயலை செய்திருக்கிறீர்கள், விடுதலைப் புலிகளை ஆதரித்திருக்கிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டிற்கு உங்களுடைய மறுமொழி என்ன? என்று என்னைப் பார்த்து நீதிமன்றத்திலே கேட்டார்கள்.

அப்போது நான் கூறினேன். "அங்கு தமிழீழத்திலே வாழ வேண்டிய வயதில் அதிலும் தங்கள் வாழ்வின் வசந்த காலப் பொழுதில் எண்ணற்ற இளைஞர்களும் யுவதிகளும் தங்களின் மண் மீட்பிற்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வயதில் என்னாலே அவர்களைப் போல தியாகம் செய்ய முடியாது போனாலும் கூட அவர்களுக்காகச் சிறைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக் கிடைத்ததற்காக நான் நெஞ்சு நிமிர்த்தி என்னுடைய உறுதியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதைக் குற்றமென்று உங்கள் சட்டம் சொல்கிறதோ. அதையே நான் செய்வேன். விடுதலைப்புலிகளைத் தொடர்ந்தும் ஆதரிப்பேன் என்று கூறினேன்.

இது வெறும் முகமனுக்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. என்னுடைய பேரன் வயதில் இருக்கக் கூடியவர்கள், என்னுடைய மகன் வயதில் இருக்கக்கூடியவர்கள், இளைஞர்களும் யுவதிகளும், வாழ வேண்டிய வயதில் தங்களை அழித்துக் கொண்டு தங்கள் நாட்டிற்கு விடுதலை பெறுவதற்காக அவர்கள் அங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் பூராவும் இன்றைக்கு தமிழர்கள் எல்லா நாடுகளிலும் வாழ்ந்தாலும் கூட, அந்தப் போராட்டத்திலே நேரடியாகப் பங்கெடுக்கும் வாய்ப்பு பிற நாடுகளிலே வாழும் தமிழர்களுக்குக் கிடைக்காது போனாலும் கூட, அந்தப் போராட்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் துணையாக நின்றோம் என்பதுதான் நம்முடைய வாழ்நாளில் நமக்குக் கிடைக்கக் கூடிய பெருமை என்ற உறுதியை ஒவ்வொரு தமிழனும் பெற்றாக வேண்டும்.

இந்த உறுதியை உலகமெல்லாம் பரப்புவதற்காகத்தான் அய்பிசி தமிழ் வானொலி இங்கு தோற்றுவிக்கப்பட்டு இந்தப் போராட்டச் செய்திகளை உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு கொண்டு செல்லும் பெரும் பொறுப்பை ஏற்று அதில் சிறப்பாகச் செயல்பட்டு இன்று பத்தாவது அகவையை கொண்டாடுகிறது என்று சொல்லும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதே பிரிட்டனிலே பிபிசி இருக்கிறது. அமெரிக்காவிலே சிஎன்என் இருக்கிறது. அரேபிய நாடுகளிலே அல் ஜசீரா இருக்கிறது. இன்னும் பல்வேறு நாடுகளிலும் வானொலிகள் உண்டு.

ஆனாலும் இவையெல்லாம் அந்தந்த நாடுகளிலே அரசாங்கத்தின் ஆதரவை மறைமுகமாகவோ நேரடியாகவோ பெற்று இயங்குபவை. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட சிங்கப்பூருக்கு தப்பி சென்று அங்கு இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து சுதந்திர இந்திய அரசை நிறுவிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆசாத் இந்த் வானொலி என்ற பெயரிலே ஒரு வானொலியையும் அமைத்தார். அந்த வானொலி அமெரிக்க பிரிட்டிஷ் வானொலிகளின் பொய்யான பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் பிடியிலே சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டுவதற்கு அந்த வானொலி அரிய சேவை செய்தது. ஆனாலும் கூட அந்த வானொலிக்கு ஜப்பானியர்கள் உதவி செய்தார்கள். ஜப்பானிய வானொலி நிறுவனத்தின் மூலம் ஆசாத் இந்த் வானொலியின் செய்திகள் ஒலிபரப்பப்பட்டன.

ஆனால் அய்.பி.சி வானொலி எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாமல், எந்த ஒரு அரசின் ஆதரவும் இல்லாமல் மக்கள் ஆதரவோடு தோற்றுவிக்கப்பட்டு, மக்கள் ஆதரவோடு வளர்ந்து இன்று பத்தாவது அகவையை எட்டியிருப்பதை நான் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். யார் வேண்டுமானாலும் வானொலியைத் தொடங்கலாம். வானொலியை நடத்தலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தை அடைந்திருக்கிற இந்த வேளையில் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் அந்த மண்ணிலேயே வானொலி இயங்குவது என்பது வேறு.

அந்த மண்ணிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அந்நிய மண்ணில் அந்நிய சூழலில் எத்தனையோ இடர்பாடுகளுக்கு நடுவே இந்த வானொலியைத் தோற்றுவித்து இன்று பிரமாண்டமான ஒரு நிறுவனமாக இதை ஆக்கியிருக்கக் கூடிய அத்தனை பேரையும் நான் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். உலகத் தமிழர்கள் அத்தனை பேரின் பாராட்டுக்குரியவர்களாக நீங்கள் திகழ்கிறீர்கள். எந்தப் பயனையும் எதிர்பாராமல் இந்த வானொலியை சிறப்பாக வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் அரிய வகையிலே தொண்டாற்றி இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் எனது பாராட்டு உரித்தாகுக. உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உன்னதமான நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்த வானொலி மேலும் மேலும் வளர வேண்டும் என்று நான் உளமாற வாழ்த்துகிறேன்.

நீங்கள் என்னிடமிருந்து என்ன செய்தியை எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அந்தச் செய்தியைச் சொல்வதற்காகத்தான் நான் பல ஆயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்திருக்கிறேன். அங்கே தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கியமான காலக்கட்டத்தை அடைந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் டி பாக்டோ அரசு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர அரசை நிறுவி நடத்தியதைப் போல தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தலைமையிலே அங்கு ஒரு அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.

நம்முடைய தமிழிலே ஒரு பழமொழி உண்டு. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்று அந்த பூனை நினைக்குமாம். தமிழீழத்திலே ஒரு சுதந்திர அரசு மலர்ந்து அதனுடைய ஆட்சியின் கீழே தமிழ் நிலத்தின் பெரும் பகுதி இருப்பதை ராஜபக்சே போன்றவர்கள் அதைப் பார்க்க மறுத்து அந்த பூனையைப் போல தங்கள் கண்களை மூடிக் கொள்கிறார்கள்.

உண்மை என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போன்றது. அந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது. நான் நினைத்துப் பார்க்கிறேன். நம்முடைய நண்பர் கண்ணன் போன்றவர்கள்.. இன்னும் பல தோழர்கள்.. நம்முடைய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அவருடைய 16ஆம் வயதில் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம்தான் நம்முடைய நாட்டிற்கு விடுதலையைப் பெற முடியும் என உறுதி எடுத்த போது அவருடன் நின்றவர்கள்.

அதனாலே குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளான போதும் கவலைப்படாமல் நம்மாலே இதைச் சாதிக்க முடியுமா, எவ்வளவு பெரிய விஷயம் இது யாரை நம்பி நாம் இதிலே ஈடுபடுவது என்பது போன்ற சிந்தனைகளுக்கு எல்லாம் இடமே கொடுக்காமல் ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒன்றின் மூலம்தான் நம்முடைய மண்ணிற்கு -மக்களுக்கு விடுதலையைப் பெற முடியும் என்ற உறுதியைப் பூண்டு அது செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்து நான் அவர்களை நன்கு அறிவேன்.

அவர்கள் தமிழ்நாட்டிலே தங்கியிருந்த காலத்தில் எவ்வளவு இடர்பாடுகளுக்கு நடுவே வாழ்ந்தார்கள். அதையெல்லாம் அருகேயிருந்து பார்க்கக் கூடிய வாய்ப்புப் பெற்றவன் நான்.

ஒவ்வொரு கட்டத்திலும் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை நான் பார்த்திருக்கறேன். என்னுடைய எண்ணம்- சிந்தனை பின்னோக்கி ஓடுகிறது. ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், அந்த ஒரு துப்பாக்கியும், அருமைத் தம்பி பிரபாகரனின் நெருங்கிய தோழன் பண்டிதர் - பண்டிதரின் தாயார் ஒரே ஓரு பசுமாட்டை வைத்து பால் கறந்து விற்று குடும்பத்தைக் காத்து வந்த நிலையில், அந்தப் பசுமாட்டை தன் தாயாருக்கு தெரியாமல் பண்டிதர் ஓட்டிச் சென்று விற்று, அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய ஒரே ஒரு துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இன்று மரபு வழி இராணுவமாக வளர்ந்து, சிங்களக் கடற்படையை ஓட ஓட விரட்டியடிக்கும் கடற் புலிப்படையை தன்னகத்தே கொண்டு, இன்று வான் புலிகளையும் பறக்க விடும் அளவிற்கு முப்படைகளோடு வளர்ந்திருக்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். எண்பதுகளில் இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், என்னிடம் சொன்னார்கள் : சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று சொன்னார்கள். நம்பவில்லை அவர்கள். ஆனால் இன்று உலகமே வியக்கும் அளவிற்கு மரபு வழி இராணுவமாக அது உருவெடுத்து, முப்படைகளையும் கொண்ட ஒரு அமைப்பாக அது இன்று வளர்ந்திருக்கிறது. இது சாதாரணமான சாதனை அல்ல.

உலகம் பூராவும் பல்வேறு நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் போராட்டங்களுக்குப் பின்னணி இருந்தது. அரசுகளின் ஆதரவு இருந்தது. வியட்நாம்மின் ஏழை எளிய மக்கள், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஹோசிமின் தலைமையில் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அவர்களுக்கு செஞ்சீனமும், சோவியத் நாடும் உதவி செய்தன.

யாசர் அராபத் தலைமையில் நடந்த பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு- அரபிய நாடுகளும், சோவியத் நாடும் அவர்களுக்குத் துணை நின்றன. எந்த விடுதலைப் போராட்டத்தை எடுத்தாலும் அவர்களுக்குப் பல விதமான ஆதரவு கிடைத்ததைப் பார்க்கலாம். இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஜெர்மனி - ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகள் ஆதரவளித்தன.

ஹோசிமின், யாசர் அராபத், நேதாஜி ஆகியோருடன் ஒப்பிடும்போது பிரபாகரன் வயதிலும் அனுபவத்திலும் சிறியவர். ஆனால் அந்தப் பெருந்தலைவர்களுக்கெல்லாம் வெவ்வேறு வல்லரசுகள் வெவ்வேறு நாடுகள். ஆதரவளித்தன. அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவின.

ஆனால் உலகிலேயே எந்த ஒரு அரசின் ஆதரவுமில்லாமல், எந்த ஒரு நாட்டின் ஆதரவுமில்லாமல், ஒரு விடுதலைப் போராட்டத்தை, தன்னையொத்த இளைஞர்களின் - யுவதிகளின் ஆதரவோடு, உலகம் பூராவும் வாழ்கிற தமிழர்களின் ஆதரவோடு அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, இன்று முப்படையாக அதை வளரச் செய்து தன்னுடைய மண்ணின் பெரும் பகுதியை மீட்டு சுதந்திர அரசை நிறுவி, அரிய சாதனை புரிந்திருக்கிற பிரபாகரன் அவர்களோடு ஒப்பிடுவதற்கு ஒருவரும் இல்லை.

தொடக்க காலத்திலிருந்து உடனிருந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அவருடைய சாதனை என்பது எதிர்கால வரலாற்றில் உலகத்தின் மிகச் சிறந்த சாதனையாகப் பொறிக்கப்படும் நாள் அதிக தூரத்தில் இல்லை. இலங்கையிலிருந்து தமிழர்களை ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்திலே விரட்டியடித்தார்கள். தொடர்ந்து வந்தவர்களும் அதையே செய்தார்கள். இதன் காரணமாக உலகம் பூராவும் சிதறினார்கள் தமிழர்கள். இந்தத் தீமையினாலும் ஒரு பெரும் நன்மை விளைந்தது.

உலகம் பூராவும் தமிழினம் சிதறியதன் விளைவாக தமிழ்த்தேசிய உணர்வும், தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வும் உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டன. புலம் பெயர்ந்த தமிழர்கள் சும்மா இருக்கவில்லை. புகுந்த நாட்டில் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையிலும், தங்கள் மண்ணை விடுவிக்கிற போராட்டத்தை நீங்கள் ஒரு போதும் மறக்கவில்லை. அதற்கு உறுதுணையாக நீங்கள் நிற்கிறீர்கள். உங்களால் இயன்ற அளவிற்கு, ஏன் சில வேளைகளில், உங்கள் சக்திக்கு மீறிய அளவிலும் அந்தப் போராட்டத்திற்கு நீங்கள் உதவி வருகிறீர்கள். வேறு எந்த நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் இது போன்று புலம் பெயர்ந்த மக்களின் உதவி முழுமையாகக் கிடைத்ததில்லை. இது குறித்து நீங்கள் நிச்சயமாகப் பெருமிதம் கொள்ளலாம்.

நீங்கள் வாழ்கிற இந்த பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் பொறுப்பு உண்டு. பிரிட்டனின் குடியேற்ற நாடாக விளங்கியதுதான் இலங்கை. பிரிட்டனோ, போர்ச்சுகீசியரோ, டச்சுக்காரர்களோ அங்கு வருவதற்கு முன்னால் அங்கு தமிழர்களுக்கென்று ஒரு தனியரசு இருந்தது. இது வரலாற்றுப் பூர்வமான உண்மை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலே நிருவாக வசதிக்காக இரண்டு பகுதிகளையும் ஒன்றாக இணைத்தீர்கள். ஆனால் நீங்கள் இலங்கையை விட்டு 1948ஆம் ஆண்டு வெளியேறும் போது இரண்டு அரசுகளிடம் அந்த ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிரிட்டன் வெளியேறியிருக்க வேண்டும். செய்யத் தவறி விட்டீர்கள். அதன் விளைவாக, இன்று தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு பிரிட்டன் தான் பொறுப்பேற்க வேண்டும். தங்களுடைய தவறாலே இது நடந்தது என்பதை பிரிட்டிஷ் அரசு உணர வேண்டும் பிரிட்டிஷ் மக்கள் உணர வேண்டும். இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு நீங்கள் முன் வந்து உதவ வேண்டும். உங்களுக்கு மகத்தான கடமை உள்ளது என்று நான் பிரிட்டிஷ் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

உலக நாடுகளுக்கு இருக்கும் பொறுப்பை விட அதிகமாக இந்தியாவிற்குப் பொறுப்பு உள்ளது அண்டை நாட்டுச் சிக்கல் என்று இந்தியா ஈழப் பிரச்னையில் ஒதுங்கி நிற்க இயலாது. இந்தியாவின் நலனும் அதில் அடங்கியுள்ளது. இதை இந்தியா உணர வேண்டும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஈழப் பிரச்னையில் காட்டிய உறுதியை, அவரது அணுகுமுறையை இன்றைய தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தியின் காலத்திலே இருந்த தவறான அணுகுமுறையால் இந்தியாவிற்கும் இழப்பு ஏற்பட்டது. தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தோல்வியடைந்த அந்த வெளிநாட்டுக் கொள்கையை விட்டு விட்டு, இந்திரா காந்தியின் காலத்திலேயே இருந்த அணுகுமுறைக்கு அவர்கள் மாற வேண்டும். அதுதான் இந்தியாவின் நலனிற்கும் உகந்தது" - என்று கூறினார்.

நன்றி: தென்செய்தி