காதல்!!!

இந்த மூன்று எழுத்து மந்திரச்சொல் எத்தனை வேலைகள் செய்கிறது!!!!

ஓர் இளைஞனின் உயிரைத் தட்டித் திறக்கும் சாவியாய்!

ஒருவனுக்கு தாரம் எனும் இன்னொரு தாயைத் தரும் கடவுளாய்!

வழி தெரியாத ஒருவனுக்கு திசைகாட்டும் கருவியாய்!

அமாவாசையின் இருளில் ஓர் அதிசய நிலவொளியாய்!

சூரியனில் மிதக்கும் வானவில்லின் வர்ணஜாலமாய்!

உயிருக்குள் இன்னொரு உயிராய்! 

loving coupleகாதல் ஓர் அதிசய வேதியியல் மாற்றம் !!!!!!..

காதல்… பூமியின் முதல் மொழி. ஆதாமும் ஏவாளும் பேசிக்கொண்ட மொழி. காற்று நுழைய முடியாத இடங்களிலும் காதல் அலைந்து திரியும். ஆட்சி செய்யும். மனித இதயங்களின் வேர்களில் பன்னீர்த்துளிகள் தெளிக்கும். வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களின் அனுமதியின்றி ஓவியங்கள் வரையும்.

காவியக்கோலங்களின் முதல் புள்ளிகளையும் முக்கிய புள்ளிகளையும் இந்த காதல் தான் வைத்துப் போகிறது.

இலையுதிர்கால மரங்களின் கீழ் குவிந்து கிடக்கும் இலைகள் போல காதல் நடந்து திரிந்த இடமெல்லாம் நமக்கு அறிமுகம் இல்லாத பல இதயங்களின் நினைவுகள் சிந்திக் கிடக்கின்றன. சிதறிக் கிடக்கின்றன.

இதயம் வலிக்க வலிக்க இன்பம், இனிப்பு தடவிய துன்ம்… காதல் கடவுளுக்கே புரியாத அதிசயம். காதல் வந்துவிட்டால் கடவுளுக்கே அவஸ்தை. தன் இதயத்தில் காதல்செடி ஒன்று நட்டுவைத்து தண்ணீர் ஊற்றாத மனிதன் நம்மில் யாருண்டு? வாலிபம் தீர்ந்த பின்னு வலிமை குன்றாத காதலை என்னவென்று சொல்ல? சாகும் வரை ரகசியமாய் ஒரு காதல் ரோஜாவிற்கு கண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறது நம் ஒவ்வொருவர் இதயமும்.

காதலின் தோட்டத்தில் பூத்துச்சிரிக்கும் பூக்களை விடவும் பூப்பதற்கு துணிவின்றி இன்னும் மொட்டுகளாகவே முனகிக் கொண்டிருப்பவை தான் ஏராளம்.. ஏராளம்… இதயப் பூமியை விட்டு வெளியே தலைகாட்ட பயந்தே, முளைக்காத காதல் விதைகளின் எண்ணிக்கை மெரினா கடற்கரையின் மணல் துகள்களை விட ஆயிரம் மடங்கு அதிகம் இருக்கக் கூடும். காதலிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கோடி கண்ணதாசன்களும் ஓராயிரம் வைரமுத்துகளும் உட்கார்ந்து கவிதை படைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்த காதல் கண்ணதாசன்களும் வைரமுத்துகளும் கடைசிவரை ஊமைகளாகவே இருந்து விடுகிறார்கள்.

சின்ன வயது பள்ளிக்குழந்தைகளின் புத்தகங்களுக்கு நடுவே மயிலிறகுகள் ஒளிந்து கொண்டிருப்பதைப்போல ஒவ்வொருவரின் இதயப்புத்தகத்தையும் திறந்து பார்த்தால் அங்கே மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கில் கவிதைகளை கண்டெடுக்கலாம்.

ஆனாலும், இந்த கவிதைகள் மீது பார்வை வெளிச்சங்கள் விழுவதே இல்லை. விழ அதன் சொந்தக்காரர்கள் அனுமதிப்பதில்லை. 

காதல் என்ன செய்யும்?

என்னவோ செய்யும்… என்னென்னவோ செய்யும்… ஆனாலும் காதல் என்ன செய்யும் என்று யாராலும் விளக்க உரை எழுதி விட முடியாது. காதல் என்ன செய்தது என்றோ, காதல் என்ன செய்யும் என்றோ… இதுவரை யாரும் விரிவாக ஒரு புத்தகத்தை எழுதி இருக்கவில்லை.

பத்து நாள் குழந்தைக்கு அழ மட்டும்தான் தெரியும், மார்பிலும் மடியிலுமாக மாற்றி மாற்றி போட்டு பதறித்துடிக்கும் தாயிடம் எறும்பு கடித்ததையோ வயிறு வலிப்பதையோ சொல்லத் தெரியாது. அதுபோல காதலில் விழுந்தது முதல் காதலர்களும் குழந்தைகள் தான்.

குழந்தையின் மொழி அழுகை சப்தம். காதலின் மொழி பார்வை மௌனம். அம்மாக்கள், அப்பாக்கள், அண்ணன்கள், அண்ணிகள், மாமாக்கள், அத்தைகள் இன்னபிற உறவுகள், அத்தனை பேர் மனசுக்குள்ளும் காதல் நடந்து சென்ற சுவடுகள் இருக்கும். கால் உடைந்த நாற்காலியாய் நம் வீடுகளில் ஒதுங்கி, ஒடுங்கி கிடக்கும் உங்கள் தாத்தா, பாட்டியின் அருகமர்ந்து, “நீங்கள் யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?” என்று ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.

ஆயிரம் பூக்கள் அருகருகே பூத்துச்சிரிப்பது போல் அவர்கள் முகம் பிரகாசிக்கும். ஆயிரம் மின்மினிப்பூச்சிகள் அவர்களைச் சுற்றி வட்டமடிக்கும் காட்சி. கண்ணுக்குள்ளே பிரதிபலிக்கும். எல்லாம் ஒரு நொடி தான், மறுநொடி பெரிதாய் சில பெருமூச்சுக்கள் கிளம்பி காற்றோடு கலக்கும். ஆம் ரோமியோ-ஜூலியட் கதையை விட, லைலா-மஜ்னு கதையை விட கனமான காதல் கதைகள்nசாதாரண மனிதர்களின் நெஞ்சங்களில் புதைந்து கிடக்கின்றன.

சாலைகளும், பேருந்துகளும், மின்சார ரயில்களும், பேருந்து நிறுத்தங்களும், பள்ளிகளும் கல்லூரிகளும், வகுப்பறைகளும் காதலின் மௌன சாட்சியங்கள். காதல் தேசத்தின் நினைவுச் சின்னங்கள். ஒவ்வொரு வகுப்பறையும் பேச ஆரம்பித்தால் வயிற்றில் குழந்தையை சுமக்கும் தாய்போல இதயத்தில் காதல் சுமந்த கோடான கோடி இதயங்களின் பட்டியல் கிடைக்கும். பத்தாவது மாதத்தில் குழந்தையை பிரசவித்து வலிக்கும் சுமைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுவாள் தாய்… ஆனால், காதலை சுமந்து கொண்டிருப்பவர்கள்… அதை சுமக்கவும் முடியாமல், பிரசவிக்கவும் முடியாமல் படும் பாடு… கொடுமையிலும் கொடுமை. 

புத்தகத்து நடுவில் மயில்
இறகு போல பிரசவிக்காமலே போன பள்ளி காதல்.
வாத பிரதிவாதம் முடிந்தும்
தீர்ப்பு எழுதாமலே முடிந்து போன கல்லூரி காதல்.
செவியும் உதடும் சில இலக்கங்கள் தேய்ந்தும்
இலக்க மாற்றத்துடன் தொலைந்து போன செல் பேசி காதல்.
மணிக்கு முன்னூறு வேகத்தில் கைவலிக்க
விசைப்பலகையை கையாண்டும் கண்காணாமலே போன முகப்புத்தக காதல்.
ஹோசானாவுக்காகவே அடுத்தவீடு இளம் பெண்களிடம்
அநயாசமாய் வந்த விண்ணை தாண்டி வருவாயா காதல்.

இப்படி இன்னும் கூட காதலை பிரசவிக்காமல், கல்லறைகளில் சுமந்து கொண்டே உறங்கும் ஜீவன்கள் எத்தனை, எத்தனை? மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால், மனிதன் இறைவனை மதிப்பானா? காதலும் அப்படித்தான். எப்போது வரும், எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. யாராலும் சொல்லவும் முடியாது. காதல் எப்போதும் வரும். எப்படியும் வரும். 

காதல்… மதம் பிடித்த யானையாய் சிலரின் இதயக் கதவுகளை உடைத்து உள்ளே வருகிறது.

காதல்… ஜன்னலோர மரத்தின் கிளைகள் வீட்டிற்குள் உதிர்க்கும் பூக்களைப் போல சிலரின் இதயங்களில் மென்மையாய் விழுகிறது.

காதல்… பூட்டிய வீட்டின் கதவிடுக்கில் தபால்காரன் செருகிவிட்டுச் செல்லும் கடிதமாய்… சிலருக்காக காத்திருக்கிறது.

காதல்… ஏப்ரல் வெயிலில் வியர்வைத்துளிகளை தொட்டுச் செல்லும் தென்றலின் விரல்கள் போல சிலரை சுகமாய் தொடுகிறது. அதனால் தான் சொல்கிறேன். காதல் எப்போதும் வரும். எப்படியும் வரும்.

பூமிப்பெண்ணின் முகத்தை பனித்துளிகள் முத்தமிடும் மார்கழி மாதத்தில் ஒரு அதிகாலை தெருக்களும், வீடுகளும், மரங்களும், செடிகளும் இருளில் செய்த மெல்லிய ஆடைகள் உடுத்திக்கொண்டது போல் எங்கும் வைகறை ஓவியங்களின் வசனமில்லா காட்சிகள். நீளமான தெருவில் நடந்து கொண்டிருந்தான் அவன். பெரும்பாலான வீடுகள் குளிருக்கு பயந்து பூட்டிக் கிடந்தன. ஒரு கதவு திறக்கும் சப்தம். அவன் பாதங்களுக்கு சில அடிகள் முன்பாக கதவு திறக்கப்பட்டதான் சாட்சியாக வீட்டுக்குள் இருந்து தெருவில் படர்ந்த வெளிச்சம். அத்தனை நேரமாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெளிச்சம் வெளியில் குதித்த வாசலில் அந்த வெளிச்சங்களின் தலைவியாக, அந்த வெளிச்சங்களின் தாயாக ஒரு தேவதை கையில் கோல மாவு கிண்ணத்துடன் படிகளில் இறங்கும் தேவதை கோலம் போட குனிவதற்கு முன்பாக ஒரு நுண்விநாடி, நின்று நிதானித்து அவனைப் பார்த்தாள். அவனும் பார்த்தான். அவன் விழியில் புறப்பட்ட பார்வைகள் அவளின் விழியில் மோதி உடைந்தது. ஒரு இதயம் காதலில் விழுந்தது. காதல் இது போல் எப்படி வேன்டுமானாலும் வரலாம்.

ஒரு மாலை நேரத்தில் தோழி வீட்டு ஜன்னலோரத்தில் நிலைக்கண்ணாடியில் அவனுக்கு முகம் காண வரம் தந்தாள். பிறிதொருநாள் சந்தித்தார்கள் அண்ணா என்றாள் அடிபாவி அழைக்காதே அந்த உறவு உன் தோழிகளுக்கு மட்டுமே உரித்தானது என்றான். மீண்டும் மீண்டும் சந்தித்தார்கள் பார்வையாலே பேசி பழகினார்கள் பேருந்து பயணம் பேரின்ப பயணமானது மணித்துளிகள் நாட்களாயின நாட்கள் வாரங்களாயின வாரங்கள் மாதங்களாயின காதல் என்ற வார்த்தையை உபயோகிக்காமலே காதலை உணர்ந்தார்கள்.

கடந்து செல்லும் ரயிலை போல சில நாட்கள் அவனை தடதடக்க வைத்தாள் சிலநாட்கள் விண்ணை தாண்டி பறக்க வைத்தாள் அவனை. ஒருமுறை மூன்றுநாள் பிரிவை கூட தாங்காமல் ஓடோடி வந்தான் அவளை காண பின்னொரு காலத்தில் வருடக்கணக்கில் பிரிவோம் என்றறியாமல்...

இதே போன்றதொரு நந்நாளில் அவள் கைப்பையிலிருந்து களவாடிய குழந்தை பருவ புகைப்படத்தை மெருகேற்றி பரிசளித்தான் அவ்வளவு கூட்டத்திலும் மீண்டும் குழந்தையாகிப் போனாள் அவள். இப்படி காதல் எப்படி வேன்டுமானாலும் வரலாம்! 

காதலியுங்கள் கருப்பு வெள்ளை கானாமல் போகும்,

காதலியுங்கள் இன வேற்றுமை இல்லாமல் போகும்,

காதலியுங்கள் சாதி வெறி உங்கள் கண் முன்னால் செத்துப்போகும்,

காதலியுங்கள் மதவெறி உங்கள் காலில் மண்டியிடும்,

காதலியுங்கள் அடிமைத்தனம் அகண்டு போகும், 

வாருங்கள்

ஆதலினால் காதல் செய்வோம்!!!

- கீழ்.கா.அன்புச்செல்வன்