வனங்களுக்குள் சென்று தங்களுக்கான உணவை தேடுவது, விறகு பொறுக்குவது, தேன், மெழுகு, சாராயம் காய்ச்சுவதற்கான இலை, தழைகள் என பல பொருட்களை சேகரிப்பது துவங்கி அடர்வனங்களுக்குள் மனம் லயித்து சங்கமிக்க பழங்குடியினரின் வாழ்வில் ஓராயிரம் காரணங்கள் உண்டு. பறவைகளின் கீச்சொலி காதுகளில் சற்றே விழ தினம் தினம் பொழுது புதிய நிறத்தை சூடிக் கொள்ளும். ஓடைகள் சலசலப்புடன் தங்கள் இருப்பை அறிவிக்கும். தாகத்தை தீர்த்துவிட்டு ஓடையில் கால் நனைத்துக் கிடப்பது சுக அனுபவம். கால்நடைகளுக்கான பச்சை தீவனங்களுடன் தான் மாலை ஊருக்குள் நுழைவார்கள்.

இவையெல்லாம் வெறும் நினைவுகளாக மாறிப் போனது. கிராமத்தின் நினைவுகள் மனதில் நிழலாட, வேலையற்ற பகல் பொழுது வாழ்வின் பெரும் துன்பமாக மாறிவிட்டது. தினமும் 10 முதல் 35 கிமீ வரை அவரவர் சொந்த கிராமம் நோக்கி செல்வது வழக்கமாகிவிட்டது. எரிந்து போன வீடுகள், நாவறண்டு கிடக்கும் கால்நடைகள் என சாப நிலமாக காட்சியளிக்கிறது அந்த நிலப்பரப்பு. போரின் சுவடுகள் போல் ரத்தக் கறை படிந்த சுவறுகள். அந்த கிராமத்தின் செவிப்பறைகளில் துப்பாக்கி குண்டுகளின் ஓசை இன்னும் அச்சத்துடன் அதிர்கிறது.

நர்மதை பள்ளத்தாக்கின் லட்சக்கணக்கான மக்கள், கலிங்கா நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடியினர், வயநாட்டில் எரிக்கப்பட்ட பழங்குடியினரின் வீடுகள், எந்த வாழ்வாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திராவில் - மகாராஷ்டிராவில் தினமும் செத்து மடியும் விவசாயிகள் என தேசத்தின் மிகப்பெரும் ஜனத்திரள் இன்று தனது சொந்த நாட்டில் அகதிகளாய் நிற்கிறது. வருகிற 2010ல் தில்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் “வளர்ச்சி” பணிகளால் வீடுகள் இழந்து நிற்கப்போவது 30,00,000 பேர். நாளை ஒரு நாள் வரும் பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது இந்திய பெரும் முதலாளிகளே பம்பாயின் பங்குச் சந்தை கட்டிடத்தின் கீழ் அல்லது மலபார் ஹில்ஸ் பகுதியில், தில்லியின் சாணக்யாபுரி, பாராளுமன்ற கட்டிடம் உள்ள இடத்தில் பாக்சைட், எஃகு தாது, பெட்ரோலியம், கனிம வளங்கள் உள்ளதாக கண்டுபிடித்து இந்த இடம் வேண்டும் என கோரும் பட்சத்திலாவது இந்த அரசியல்வாதிகளுக்கு நகரவாசிகளுக்கு இடம்பெயர்தலின் சோகம், வலி என்னவென்பது தெரியவருமா?

தினமும் காலையில் குறித்த நேரத்தில் தலைவர்கள் வந்து விடுவார்கள். அதற்குள் அந்த முகாமில் அனைவரும் கிளம்பி தயாராக இருக்க வேண்டும். ஆயுதம் ஏந்திய தலைவர்கள் அன்றைய திட்டத்தை அறிவிப்பார்கள். குறைந்த பட்சம் அந்த முகாம்களிலிருந்த இது போல் 4000 முதல் 5000 பேர் வரை ஊர்வலமாக கிராமங்கள் நோக்கிச் செல்வார்கள். கிராமங்களுக்கு சென்றவுடன் அந்த கிராம மக்களை அங்கிருந்து வெளியேறி முகாம்களுக்கு செல்ல முதலில் பரிந்துரைப்பது. அதற்கு அவர்கள் சம்மதித்து கிளம்பிவிட்டால் பிரச்சனை இல்லை. அப்படி சம்மதிக்காதவர்களின் வீட்டை கொளுத்த வேண்டும். அந்த வீட்டுப் பெண்களையும், அந்த கிராமத்தில் உங்களைக் கவர்ந்த எந்த பெண்ணையும் நீங்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தலாம். அந்த ஊரில் நக்சல் ஆதரவாளர்கள் என்ற துளி சந்தேகம் ஏற்பட்டாலும் அந்த வீட்டை எரித்து விட்டு, சொத்துக்களை சூறையாடலாம்.

சில கிராமங்களில் இந்த கயவர்களை கண்டு பயந்து மக்கள் வயல்கள் நோக்கி ஓடிவிடுவதுண்டு. அந்த கிராமங்களை முற்றிலும் கபளீகரம் செய்த பின்பு சென்று கொண்டேயிருக்கலாம். இந்த தேச பக்த செயலில் நீங்கள் ஈடுபட மறுத்தால் அடுத்த நிமிடம் நீங்கள் சுட்டுக் கொல்லப்படலாம். ஒத்துழைத்தால் மாதம் ரூ.1500/- சம்பளமும், பத்து கிலோ அரிசியும் அரசாங்கம் வழங்கும்.

இது ஏதோ தெலுங்கு சினிமாவின் காட்சியல்ல, நம் நாட்டில் கடந்த ஒரு வருடமாக மத்திய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடனும், தாராளமான நிதியுதவியுடனும் நடந்து வரும் சுதந்திர இந்தியாவின் அற்புதமான திட்டம். இந்த திட்டம் நடைபெறும் மாநிலம் சட்டிஸ்கர். இதனை மேலும் ஒன்பது மாநிலங்களில் செயல்படுத்த பரிந்துரைகள் வேறு பலமாக உள்ளது. இந்த ஒன்பது மாநிலங்களுக்கு எனத் தனியாக 1000 கோடி ரூபாயை தயாராக வைத்துள்ளார் மன்மோகன் சிங்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் பஸ்தர், தான்தேவாடா மாவட்டங்களில் இந்த திட்டம் முழு வீச்சில் நடைபெற்று அதன் ஆண்டு விழாவும் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. சல்வா ஜுதும் அரங்கேறி 14 மாதங்கள் முடிவடைந்துவிட்டது. அதன் ஓராண்டு நிறைவை ஒட்டியே தெஹல்கா, அவுட்லுக் பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளிவரத் துவங்கின. உள்துறை அமைச்சகம் மற்றும் ராணுவத்தின் இது போன்ற பல நடவடிக்கைகள் தீவிரமான ஸ்ரீர்ஸ்ங்ழ் ன்ல் உடன் நடப்பதால் இவை வெளிவருவதில்லை. மொத்த கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எல்லாம் கேலிக்குள்ளாகும் விதமாக உள்ளது. இந்தியாவின் ஒரு மாவட்டம் ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்கப்படுகிறது ஆனால் அதைப் பற்றி வெளி உலகுக்கு எதுவும் தெரிய வராது என்பது 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் கரும்புள்ளியே.

தான்தேவாடாவில் மரியாகொண்ட், தோர்லா பழங்குடியினர்தான் ஜனத்தொகையில் 82% உள்ளனர். கள்ளர்கள் மற்றும் சுன்திகள் அங்குள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர். தாழ்த்தப்பட்டவர்கள் ஜனத்தொகையில் 3% உள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு வனத்துறையினரிடம் உள்ளது. அந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வசித்து வந்த பூர்வகுடிகளை விரட்டி விட்டு ஜமீன்தார்கள் வசம் தான் அந்த நிலங்கள் 1947 வரை இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அந்த நிலங்கள் வனத்துறைக்கு கைமாறியது. காட்டின் பூர்வகுடிகளை அரசாங்க பதிவேடுகள் இன்றளவும் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பதத்தின் கீழ் தான் தொகுத்து வைத்துள்ளது. அங்கு நில உரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அரசாங்கம் ஆட்சி செய்கிறது.

தான்தேவாடா மாவட்டத்தில் உள்ள 1220 கிராமங்களில், 700 கிராமங்களில் பள்ளிகள் கிடையாது. மொத்த மாவட்டத்தில் 26 ஆரம்ப சுகாதார மையங்கள் மட்டுமே உள்ளது. 17 கிராமங்களுக்கு ஒரு தனியார் மருத்துவர் உள்ளார். 40,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 37 காவல் நிலையங்கள். தொடர்ந்து பட்டினி சாவுகள் நிகழும் மாவட்டங்களில் தான்தேவாடாவும் ஒன்று. அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, அதைவிட அந்த பள்ளிகளில் பெரும் பகுதி ஆயுதப் படைகள் முகாமிட்டிருப்பதால் வகுப்புகள் நடைபெறுவதில்லை. ஆயுதப்படைகளின் தங்குமிடங்களாக அவை இருப்பதால் நக்சல்கள் இந்த பள்ளிகளை பல இடங்களில் தகர்த்து விட்டனர். இந்த மாவட்டத்தில் 26 மேல்நிலை பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. அங்குள்ள பயிலாதில்லா சுரங்கம் தான் வேலைவாய்ப்புக்கான ஒரே மார்க்கம். ஆனால் மொத்த சுரங்கத்திலும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு இல்லை. இந்த தொழிற்சாலை அந்த மாவட்டத்துக்கு செய்த நன்மை அங்கு பாய்ந்தோடும் சங்கினி மற்றும் தான்கினி ஆறுகளை மாசுபடுத்தியது தான். ஆறு மாசுபடுவதை எதிர்த்து போராடிய பஸ்தர் மாவட்டத்து முன்னாள் கலெக்டர், டாக்டர். பி.டி.சர்மாவுக்கு செருப்பு மாலை அணிவித்து தனது வரலாற்று பங்களிப்பை நல்கியது சட்டிஸ்கர் பி.ஜே.பியின் தலைமை.

சாலைகள் அமைத்தால் அது மேலும் காடுகள் அழிவதை துரிதப்படுத்தும், சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்காக போடப்படவில்லை, வியாபாரிகள் காட்டை அழிக்கவே அது போடப்படுகிறது என நக்சல்கள் சாலைகள் போடுவதை அனுமதிக்கவில்லை. கந்துவட்டிக் காரர்கள் மற்றும் வியாபாரிகளின் சுரண்டல் வாழ்க்கையை மேலும் சங்கடம் நிறைந்ததாக மாற்றியுள்ளது. ஒப்பந்தக்காரர்கள் இன்றளவும் 25 ரூபாய் அளவுக்கே தினக்கூலி வழங்குகிறார்கள். மறுபுறம் அருகில் உள்ள ஆந்திர பிரதேஷ மாநிலத்தின் கோணடா மாவட்டத்தில் உள்ள போலாவரம் அணையினால் இங்கு 2335 குடும்பங்கள் நிற்கதியாய் நிற்கிறது.

ஒரிசா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரத்தை தனது எல்லைகளாக கொண்டுள்ள மாவட்டம் தான்தேவாடா. ஆந்திராவிலுள்ள தெலுங்கானா பகுதிகள், மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் மற்றும் தான்தேவாடாவின் அடர்ந்த வனங்களுக்குள்ளும் மாவோயிஸ்டுகள் பெரும் அளவில் இயங்கி வருகிறார்கள். மத்திய - மாநில அரசுகள் நாடு முழுவதிலும் பழங்குடியினரை மிகுந்த அலட்சியத்துடன் அணுகி வருவது நாமறிந்ததே. அப்படியான சூழலில் அந்த பகுதி மக்களின் அத்தியாவசியமான வாழ்வுரிமை சார்ந்த கோரிக்கைகளை பெற்று தந்த மாவோயிஸ்டுகள் மீது மக்களுக்கு நன்றியுண்டு. வன இலாகாவின் அடாவடித் தனம், அரசாங்க அதிகாரிகளின் ஊழல், லஞ்சம் மலிந்த போக்குகளை கட்டுப்படுத்தியது.

15 ஆண்டுகளாக அந்த மாவட்டங்களில் தண்டகாரண்ய ஆதிவாசி கிசான் மஸ்தூர் சங்கம் என்கிற பெயரில் மாவோயிஸ்டுகள் பழங்குடியினரின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். பல போராட்டங்களில் வெற்றியும் கண்டுள்ளார்கள். பொதுவாக முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமை கட்சிகள் தங்கள் இயக்கப் பணிகளை சமவெளிகளோடு நிறுத்திக்கொண்டார்கள். மிகவும் அரிதாகவே பழங்குடியினரிடம் சென்றுள்ளன.

பி.ஜே.பியின் ரமன் சிங் தலைமையிலான அரசாங்கம் தான் சட்டிஸ்கரை ஆண்டு வருகிறது. பிரதான எதிர்கட்சி காங்கிரஸ். இவர்கள் தவிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) அங்கு இயங்கி வருகிறது. பி.ஜே.பி., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த மாநிலத்தில் மிகுந்த இசைவுடன் இயங்கி வருபவை. எதிர்கட்சி தலைவரான காங்கிரசை சேர்ந்த மகேந்திரகர்மா, முதலமைச்சர் ரமன் சிங்கின் செல்லப்பிள்ளை. அவரை அங்குள்ள மக்கள் பி.ஜே.பியின் 60வது எம்.எல்.ஏ. என்றே அழைக்கிறார்கள்.

வசதி படைத்த காஷ்யப் ஆதிவாசியான மகேந்திர சிங் கர்மா தனது அரசியல் வாழ்க்கையை கல்லூரி பருவத்தில் துவங்கினார். 1978ல் எம்.எல்.ஏ. ஆனார். 1981ல் அவரது செயல்பாடுகள் மீது அதிருப்தி ஏற்பட்டதால் அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்தது. உடனடியாக காங்கிரஸில் இணைந்தார். அடுத்து மாதவ் ராவ் சிந்தியா துவக்கிய கட்சியில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினரானார். பின் சட்டிஸ்கர் தனித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டவுடன் அஜீத் ஜோகி அமைச்சரவையில் அமைச்சரானார். காங்கிரஸின் ஆதிவாசிகள் பிரிவின் தலைவராக இன்றளவும் திகழ்கிறார்.

மாவோயிஸ்டுகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதை தவிர்த்தாக வேண்டும் என்ற ஒற்றை செயல் திட்டத்தில் அங்குள்ள சர்வ கட்சிகளும் இணைகிறார்கள், காண்டிராக்டர்கள், வியாபாரிகள் என ஆதிவாசிகளின் வாழ்வை சூறையாடுபவர்களும் அதில் சங்கமிக்கிறார்கள். 1990ல் பி.ஜே.பி அரசாங்கம் ஜன் ஜாக்ரன் அபியானை துவக்குகிறது. கிராமங்களுக்கு சென்று மாவோயிஸ்டுகள் பற்றிய தகவல்களை திரட்டுவது. கொள்ளையடிப்பது, பலாத்காரம் புரிவது, அறுவடைகளை கபளிகரம் செய்வது என அபியான் தனது சேவையை துவக்கியது. இந்த நடவடிக்கைக்கு மக்கள் யுத்தக் குழுக்கள் தக்க பதிலடியை கொடுக்கிறது. அபியானுக்கு மூடுவிழா நடக்கிறது. பின்பு தொடர்ந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையின் பல முகாம்கள் தொடர்ந்து தான்தேவாடாவில் அமர்த்தப்படுகிறது, இந்திய ரிசர்வ் பெட்டாலியன்கள் நாகாலாந்திலிருந்து வரவழைக்கப்படுகிறது.

2005 மே மாதம் மீண்டும் மிக விரிந்த திட்டத்துடன் மகேந்திர கர்மாவின் தலைமையில் சர்வா ஜிதும் துவக்கப்படுகிறது. சத்திஸ்கரில் இயற்றப்பட்டுள்ள சத்திஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்புச் சட்டம் தான் அரசாங்கத்தின் அடாவடித்தனங்களுக்கு அடிப்படை. போடா, தடாவை போல இது அசுர பலம் பொருந்தியது. இந்த சட்டத்தின் நிழலில் தான் சல்வா ஜுதும் கொழுத்து நிற்கிறது. சல்வா ஜுதும் என்றால் பிணி தீர்க்கும் வேட்டை. சல்வா ஜுதும்க்கு எந்த தெளிவான கட்டுமானமும் கிடையாது. யார் யாருக்கு எந்த பொறுப்பு என திட்டவட்டமாக எந்த நடைமுறையும் அங்கில்லை. எல்லாம் மகேந்திர கர்மாவின் விரல் அசைவுபடி நடக்கும். வசதிபடைத்த ஆதிவாசிகளும், வியாபாரிகளும் தான் முடிவெடுக்கும் இடத்தில் ஆலோசகர்கள். சல்வா ஜுதும் தன்னிச்சையான மக்கள் இயக்கம் என ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வனங்களுக்குள் சென்று புரச இலைகள் (பீடி சுற்றப் பயன்படும் இலை) சேகரிக்க மற்றும் தேர்தலில் பங்கேற்பது போன்ற நக்சல்கள் விதித்த தடைகளால் மக்க்ள சினம் கொண்டு எழுந்து துவக்கிய தன்னெழுச்சியான இயக்கம் சல்வா ஜுதும் என விளக்கமளிக்கப்பட்டது.

சில மாதங்களிலேயே 50,000 பேர் துப்பாக்கி முனையில் தங்கள் உடமைகள் இழந்து, உயிருக்கு பயந்து முகாம்கள் நோக்கி செல்லத் துவங்கினர். சல்வா ஜுதும் வெளிப்படையாக கூறுகிறது நீங்கள் முகாம்களுக்கு வாருங்கள் அல்லது நக்சல் ஆதரவாளராக கருதப்பட்டு கொல்லப்படுவீர்கள். “இங்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று எதுவும் இல்லை, ஆதிவாசிகளுக்காக நாங்கள் எங்கள் அரசியல் வித்தியாசங்களை களைந்து போராடுகிறோம்” என்கிறார், மகேந்திர கர்மா. சல்வா ஜுதும் அரசியல் சாராத அமைப்பு என்பதால் அதற்கு அரசு தடையற்று நிதி வழங்குகிறது. கிராமங்களை அழித்து மக்கள் நடமாட்டம் இல்லாமல் செய்து விட்டால், நக்சல்களிடம் உணவு பற்றாக்குறை ஏற்படும், அவர்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும்,மெதுவாக அவர்களை தனிமைப்படுத்தி அழித்து விடலாம் என்பது அரசாங்கத்தின் ராஜதந்திர யோசனை.

ஆரம்பம் முதலே காங்கிரஸின் அஜித் ஜோகி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அந்த பகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணீஸ் குஞ்சாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். அவரின் கூற்றுப்படி சல்வா ஜுதும் மேலும் நிலைமையை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் மக்களை கடும் நெருக்கடிக்குள் ஆழ்த்தி வருகிறது, இந்த மாவட்டத்தில் அரசாங்கம் தன் சொந்த மக்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தி வருகிறது என்கிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீயூரோ சல்வா ஜுதுமை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த மாவட்டங்களின் காவல்துறை கூட சல்வாஜுதுமின் கோரப்படியில் சிக்கியுள்ளது. அந்த மாவட்டத்தில் பல சோதனை சாவடிகளை அமைத்து, வாகன போக்குவரத்து கூட அவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. குறிப்பாக எந்த பத்திரிக்கையாளரும் இந்த மாவட்டத்துக்குள் நுழைய முடியாது. அப்படி நுழைந்தவர்கள் திரும்பி உயிரோடு வருவது மிகவும் அரிது.

அங்குள்ள கிராமங்களில் நக்சல்களின் பரிந்துரையின் பெயரில் கிராம நிர்வாகத்தை முடிவு செய்யும் சங்கம்கள் துவக்கப்பட்டன. பொதுவாக கிராம அதிகாரி, நாட்டாமை என தனிநபர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, ஜனநாயகமான அதிகார பகிர்வை ஏற்படுத்தியது இந்த சங்கம். சங்கங்களை ஒழித்துக் கட்டி பழைய நடைமுறையை தொடரச் செய்வது தான் சல்வா ஜுதுமின் பிரதான நோக்கம். மரபான எந்த நடைமுறையையும் மாற்றக் கூடாது என்பது பி.ஜே.பி.யின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. சங்கம் வேண்டும் என்று கூறினால், நக்சல் ஆதரவாளர் என்று கருதி சிலபல துப்பாக்கி ரவைகள் உங்களை துளைக்கலாம். கிராமங்களுக்குச் சென்று அவர்களை முகாம்கள் நோக்கி விரட்டுவது. ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள், பெண்களை திரட்டி அவர்களுக்கு ஆயுத பயிற்சியளிப்பது, அம்பு, ஈட்டி, துப்பாக்கிகள் என ஆயுதம் ஏந்திய படையை உருவாக்குவது. இந்த படைதான் சல்வா ஜுதும் என அழைக்கப்படுகிறது.

சல்வாஜுதுமில் இணையும் கிராமத்திற்கு கலெக்டர் ரூபாய் 2 லட்சத்தை கொடுப்பார். அது மட்டுமல்ல மாவோயிஸ்டுகளை கொல்பவர்கள், துப்பாக்கி, கன்னி வெடி பற்றிய தகவல்கள் மற்றும் அது பற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு ஊக்கத் தொகை வேறு அளிக்கப்படும். இப்படியான ‘வட்டார எதிர்ப்பு படைகளை’ உருவாக்கி நக்சல்களை ஒழிப்பது தான் மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம், பரிந்துரைக்கும் நடைமுறை. 4000 சங்கம் உறுப்பினர்கள் சரணடைந்து சிறையில் உள்ளனர். 50,000 பேர் நிற்கதியாய் முகாம்களில் உணவின்றி, அடிப்படை சுகாதார வசதிகளின்றி கடந்த 15 மாதங்களாக வாழ்வின் துன்பம் மிகுந்த பகுதியை கடந்து வருகிறார்கள். கடந்த ஓராண்டில் 90 அப்பாவி பழங்குடியினரை சல்வா ஜுதும் படைகள் கொன்று குவித்துள்ளன. ஏராளமான பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். சல்வா ஜுதும்க்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது எதிர் தாக்குதலை தீவிரமாக முடுக்கியுள்ள நக்சல்களின் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். இது மக்களின் வாழ்க்கையின் மீது அரசாங்கத்தின் வெறியாட்டம்.

900 சதுர அடி இடத்தில் 107 நபர்கள் அடைக்கப்பட்டுள்ளதுதான் முகாம்களின் மூச்சுத் திணறும் நிலை. வேலை இல்லாமல் அரசாங்கம் கொடுக்கும் உணவுப் பொருட்கள் போதாமல், திக்கு தெரியாது முழித்துக் கொண்டிருக்கிறது ஆயிரக்கணக்கான குடும்பங்கள். மீண்டும் கிராமங்களுக்கு திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கை தவிர்த்து வாழ்வில் வேறு எந்த ஏக்கமும் இல்லை. ஆனால் கலெக்டரோ வேறு விதமாக கூறுகிறார். “எதற்கு நீங்கள் காடுகளில் அவதிப்பட வேண்டும். நாங்கள் இங்கு நெடுஞ்சாலை அருகில் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டித் தருகிறோம் இங்கேயே தங்கி விடுங்கள்” என்கிறார். முகாம்களில் குடி தண்ணீர், உணவு, இருப்பிடங்கள் வழங்கப்படுகிறதோ இல்லையோ பசித்த வயிறுகளுக்கு அம்பு, ஈட்டி, துப்பாக்கிகள் வழங்கப்படும்.

வளர்ச்சி என எந்த இடத்தில் அரசாங்கம் பேசினாலும் அது அந்த பகுதியை சார்ந்த பழங்குடியினருக்கு, பூர்வகுடிகளுக்கு அ-வளர்ச்சியாகவே உள்ளது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகள் ரகசிய நோக்கங்கள் கொண்டது. டாட்டா, எஸ்ஸôர், நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்கே காடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இங்கு நுழைய முடியாததால் மிட்டல் அருகில் உள்ள ஒரிசா மற்றும் ஜார்கண்டின் கதைகளை முடித்துக் கொண்டிருக்கிறார். தான்தேவாடா, பஸ்தர் மாவட்டங்களில் தான் உலகத்தின்மிகத் தரம் வாய்ந்த எஃகு தாது உள்ளது. இதுதான் இந்த நிறுவனங்களின் லாபவெறி பிடித்த கண்களில் நிழலாடுகிறது. இந்தியா முழுவதிலும் மிகவும் நுட்பம் வாய்ந்த இரும்பினால் செய்யப்பட்ட சிலைகள் பஸ்தர் மாவட்டத்தில் தான் மரபாக வடிக்கப்படுகிறது. இந்த மாவட்டம் 5வது அட்டவணையின் கீழ் வருகிறது.

மிகவும் பின்தங்கிய நிலப்பரப்புகள் என்பதால் 5ஆம் அட்டவணையின்படி இந்த பகுதியில் அந்த கிராம பஞ்சாயத்துகளின் அனுமதியின்றி எந்த நில ஆர்ஜிதமும் செய்ய இயலாது என்கிறது. கேரளாவில் உள்ள ப்ளாச்சிமடாவில் இயங்கி வந்த கொக்கோ கோலா நிறுவனத்தை அந்த கிராமப் பஞ்சாயத்து தனது எளிய சட்டங்களால் ஸ்தம்பிக்கச் செய்தது. அந்த பாடத்திற்குப் பின்னால் பெரிய முதலீட்டில் தொழில் துவங்கும் நிலப்பரப்பில் உள்ள கிராமங்களின் கட்டுமானத்தை தகர்த்து கிராமங்களே இல்லாமல் செய்துவிட்டால் பிற்காலத்தில் பிரச்சனை எழாது என்ற புதிய இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது இந்திய முதலாளிகளின் மூளை.

தொடர்ந்து நக்சல் விஷயத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாகவே பார்க்கும் மத்திய - மாநில அரசாங்கங்களின் பார்வையில் மாற்றம் தேவை. நக்சல்களின் கோரிக்கை என்ன, அது மக்களுக்கானதா சுரண்டலுக்கு எதிரானதா, அதை எப்படி சீர் செய்வது என ஆக்கப்பூர்வமான எந்த அணுகுமுறைகளையும் மேற்கொள்ளாமல், ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தை ஆயுதம் வாங்கவும் பலாத்காரம் புரியவும் செலவிடுவது முட்டாள் தனமானது. அந்த ஆயிரம் கோடியில் இந்த பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை, வாழ்வுரிமைக்கான சிறு தொழிற்சாலைகளை துவக்கிடலாம். தொடர்ந்து இயற்கை வளங்களை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடைமுறையை நிறுத்தாமல், பூர்வகுடிகளுக்கான எதிர்காலம் சாத்தியமில்லை.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் வடஅமெரிக்கா சென்று அங்கிருந்த பூர்வகுடி செவ்விந்தியர்கள் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்து, தடயங்கள் இல்லாமல் அழித்து தங்கள் நாடாக அறிவித்துக் கொண்டார்கள். அதற்கு சற்றும் சளைக்காமல் இந்திய அரசு தன் சொந்த நாட்டின் மக்களை அதைவிட கொடூரமான பல வழிகளில் அழித்து வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய விசயங்களில் அமெரிக்காவை பின்பற்றுவது என்கிற நிலைப்பாட்டின் பிரதிபலிப்பை நாம் இந்த விசயத்தில் தெளிவாகக் கவனிக்கலாம். அமெரிக்க அதிபர் புஷ் வெளிப்படையாக அறிவிக்கிறார் “நீங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் எங்களுடன் கலந்து கொள்ளாவிட்டால் நீங்கள் தீவிரவாதத்தின் ஆதரவாளராக, ஒசாமாவின், சதாமின் நண்பர்களாக கருதப்படுவீர்கள்” - அந்த அறிவிப்புக்கு சற்றும் மாற்றம் இல்லாதது நீங்கள் கிராமத்தை விட்டு வெளியேறாவிட்டால் நக்சலைட்டுகளின் ஆதரவாளர்களாக, நக்சலைட்டாகவே கருதப்படுவீர்கள் என்பது.

“எல்லா முதலாளித்துவ நாடுகளின் குணாம்சம் என்னவெனில் முதலாளித்துவத்தின் கொடுமைகள் குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தினை, ஆத்திரக்காரனாக ஆக்குகிறது. இது அராஜக அரசியல் போன்றே அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் ஒரு சமூக விளைவாக உள்ளது. இந்தப் புரட்சி ஆவேசம் மிகவும் தற்காலிகமானது, பயனற்றது. அது வேகமாக ஒரு பூர்ஷ்வா கவர்ச்சி முழக்கத்திலிருந்து இன்னொரு கவர்ச்சிக்கு ஆட்பட்டு பணிந்து போய்விடுகிறது. இது எல்லோரும் அறிந்த ஒன்று. கொள்கை ரீதியாகவும், பொதுமையாகவும் இதனை அங்கீகரிப்பதால், ஒரு புரட்சிக் கட்சியின் தொடக்க கால தவறுகளை தொலைந்து போகச் செய்ய முடியாது. அது மீண்டும், மீண்டும் தலைதூக்கும். இதுவரை கண்டிராத வடிவங்களில் அது தோன்றும், கண்டிராத சூழலில் தோன்றும்”. - லெனின் 

- அ. முத்துக்கிருஷ்ணன்