இந்தியச் சமூகத்தில் அரச பயங்கரவாதம் அல்லது காவல்துறை அத்துமீறல் என்பது தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு மிக மிக பழக்கப்பட்டது. இன்னும் வெளிப்படையாக விவரிக்க வேண்டுமெனில், தலித் மற்றும் பழங்குடி மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஓர் அங்கம் இந்த அரச பயங்கரவாதம். தீண்டாமையைப் போல, வன்கொடுமைகளைப் போல அவர்கள் அரச பயங்கரவாதத்தையும் அனுபவித்தே தீருகின்றனர். தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமது வாழ்வியல் உரிமைகளுக்காக, வாழ்வாதாரங்களுக்காக, கூலி உயர்வுக்காக, வன்கொடுமை, தீண்டாமை மற்றும் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒவ்வொரு முறையும் காவல்துறையின் முறுக்கேறிய லத்திகள் அவர்களின் மண்டை ஓடுகளைப் பிளக்கின்றன, குறி தப்பாத அவர்களது துப்பாக்கிகள், போராட சிந்தித்த மூளையை சிதறடிக்கின்றன, ஏனைய அவர்களது ஆயுதங்கள் ஊரையே சூறையாடி அத்தனையும் தரைமட்டமானதை உறுதி செய்த பின்னரே ஓய்கின்றன. சுதந்திர இந்தியாவில் எத்தனையோ கொடூர உதாரணங்களை இதற்கு ஆதாரமாகத் தர முடியும்!

police attack tuticorin

உண்மையில் அரச பயங்கரவாதத்தின் வலி என்னவென்பது பொதுச் சமூகத்திற்கு தெரியாது. அது வெறுமனே மற்றுமொரு வன்முறை அல்ல. மாறாக, ஒரு மனித உயிர் அனுபவிக்கவே கூடாத நம்பிக்கைத் துரோகம். நான் இத்தேசத்தின் குடிமகன்/ள் என்ற ஆதாரத்தையும், இது என்னுடைய நாடு என்ற பிடிப்பையும் அது பறிக்கிறது. சக மனிதரால், சமூகத்தால் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட ஒருவருக்கு முதலும் கடைசியுமான அடைக்கலமாக அரசே நின்று இரு கரங்களையும் நீட்டி ஆதரவளிக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் தலித் மக்கள், பழங்குடிகள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு அந்த நல்வாய்ப்பு ஒருபோதும் கிடைத்ததில்லை. மாறாக அவர்கள் அரசாலும் ஒடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையை அனுபவிக்கின்றனர். தனது சொந்தக் குடிமக்கள் மீது அரசே பயங்கரவாதத்தை ஏவும் போது சொந்த மண்ணிலேயே அகதியைப் போல அல்லலுறும் படுபாதக நிலைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகின்றனர்.

அரச பயங்கரவாதத்திற்கு ஒவ்வொரு முறை பலியாகும் போதும் தலித் மக்கள் அரசாங்கத்திடம் கொதித்தெழுந்து ஒரு கேள்வியைக் கேட்பார்கள். அது...’நாங்கள் என்ன அகதியா, நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?’. கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி என காவல்துறையால் தாக்கப்பட்ட எல்லா இடங்களிலும் தலித் மக்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் மீண்டும், மீண்டும் அவர்கள் மீது பயங்கரவாதத்தை ஏவி இந்நாட்டில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என உறுதியாகச் சொன்னது அரசு. தலித் மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் என இம்மண்ணின் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கானதாக மட்டும் இருந்த அரச பயங்கரவாதத்தை பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் அமர்ந்ததும் (பார்ப்பனர்களைத் தவிர்த்து) பொதுவுடைமையாக மாற்றிவிட்டது பா.ஜ.க. இந்து சனாதனத்தை கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சூத்திர அடிமைச் சமூகமாகக் கருதி அதன் எல்லா நலன்களையும், வளர்ச்சியையும், அது இவ்வளவு ஆண்டு காலமும் கட்டிக் காத்து வந்த சமூக நீதியையும் அழிக்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டின் சாதி இந்துக்கள் தம்மை ஆதிக்கவாதியாகக் கருதிக் கொண்டாலும் இந்து மதத்தின்படி அவர்கள் சூத்திர அடிமைச் சமூகமே!

தமிழகத்தின் இந்துக்கள் எவ்வளவுதான் மதப் பற்றாளர்களாக இருந்தாலும் மதச்சார்பின்மையின் மேல் நம்பிக்கை கொண்டு சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கு, மத அடிப்படைவாதத்தை அடையாளம் காண்கிற அளவிற்கு திராவிடக் கருத்தியல் அவர்களை பண்படுத்தியிருக்கிறது. அந்தப் பண்பு தான் பா.ஜ.கவை தமிழகத்தில் வேர் ஊன்ற விடாமல் தடுக்கிறது. பா.ஜ.கவையும், மோடியையும், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து பரிவாரங்களையும் இவ்வளவு காத்திரமாக விமர்சிக்கும், அவற்றின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் மத சூழ்ச்சிகளை சட்டென புரிந்து கொண்டு அம்பலப்படுத்தும் துணிவுள்ள மற்றொரு இந்திய மாநிலம் இல்லை. இதுதான் பா.ஜ.கவின் தமிழக வெறுப்பிற்குக் காரணம். கூடங்குளம் அணுமின் நிலையம் விரிவாக்கம், நியூட்ரினோ திட்டம், காவிரி நீர் பங்கீடு இழுபறி, ஏழு தமிழர் விடுதலை முடக்கம், மீத்தேன் திட்டம், ஜல்லிக்கட்டு தடை, ரேஷன் கடைகள் மூடல், நீட் தேர்வுக் கொடுமை, விவசாயிகள் உரிமைப் பறிப்பு, ஆளுநருக்கு அதிகாரம், மாநில உரிமைகளில் தலையீடு, ஸ்டெர்லைட் பிரச்னை என நாள்தோறும் தமிழகம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக அரசியல் பழிவாங்கல்கள் எல்லாம் அந்த வெறுப்பினால் விளைந்த கொடுமைகள் தான். தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் மட்டுமே அனுபவித்துப் பழகிய அரச பயங்கரவாதத் தண்டனையை ’சூத்திர தேசமான’ ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கும் அளிக்க புதிது, புதிதான உரிமை மீறல்களில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை ஒடுக்க எப்போதும் போல காவல்துறையை ஏவியது தமிழக அரசு. போராட்டக்காரர்கள் கற்களை வீசி, வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டதால், துப்பாக்கியால் சுட்டு 13 பேரை பலியெடுத்து அதை அடக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது என காவல்துறையும், அரசும் விளக்கம் சொல்கின்றன. வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு கொண்டு தான் அடக்க வேண்டுமென என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். 99 நாட்கள் அறவழியில் போராடிய மக்கள் 100 வது நாள் வன்முறையில் ஈடுபட்டிருப்பார்களா? துப்பாக்கிச் சூட்டிற்கு வழி வகுத்ததாகக் கூறப்படும் வன்முறையில் அந்த முதல் கல்லை யார் எறிந்தது? இதுவரையிலும் நடந்த அரச பயங்கரவாதங்களில் முதல் கல்லை எறிந்தவர்களே இம்முறையும் காவலர்களை நோக்கி அதை வீசினார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் (தலித் மற்றும் பழங்குடியினர் மீது) நடந்த அரச பயங்கரவாதம் அல்லது காவல்துறை அத்துமீறலை கவனித்து வருகிறவர்களுக்குத் தெரியும், அரச பயங்கரவாதம் என்பது நன்றாக எழுதப்பட்ட ஒரு நாடகம் என! அதற்கென அரசுகள் எப்போதும் ஸ்கிரிப்ட் புத்தகத்தை பராமரிக்கின்றன. சூழலுக்கு தக்கவாறு சிற்சில மாற்றங்கள் இருந்தாலும், பெரும்பாலும் எல்லா அரச பயங்கரவாதங்களும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி வளர்ந்து, ஒரே மாதிரியான திருப்புமுனைகளோடு ஒரே மாதிரியாக முடித்து வைக்கப்படுகின்றன.

ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் போராட்டத்தின் 100 வது நாளான 22.05.2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதாகத் திட்டமிட்டு பொது மக்களையும் அதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அதன்படி 144 தடை உத்தரவு இருந்தும் சாரை சாரையாக மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர். முற்றுகை என்றால் சூழ்ந்து நிற்பது என்றே அர்த்தம். ஆனால் க்யூ பிரிவு போலீஸார் அதற்கு வேறு அர்த்தம் வைத்திருந்தனர். அதன் பெயர் வன்முறை. முற்றுகைப் போராட்டம் என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் கலெக்டர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடி வன்முறையில் ஈடுபடக்கூடும் என க்யூ பிரிவு போலீஸார் கணித்திருக்கின்றனர். சாதாரணக் குடும்பஸ்தர்களும் சாமானியக் குடிமக்களுமான போராட்டக்காரர்கள் வன்முறைக்குத் துணிந்தால் அவர்களுக்கே பேரிழப்பாக முடியும் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். சுமார் ஒரு லட்சம் பேரோடு அமைதியாகத் தொடங்கிய பேரணி, க்யூ பிரிவு கணித்தபடியே ஒரு கட்டத்தில் வன்முறையின் பக்கம் திரும்பியது. காவலர்களை நோக்கி கற்கள் விழுந்ததால் அவர்கள் தடியடி நடத்தி, பேரணியை நிறுத்த முயன்றனர். போராட்டக்காரர்கள் பதட்டமடைந்தனர், வாகனங்கள் எரிக்கப்பட்டன, பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டன, துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்களின் உயிர் சரியத் தொடங்கியது.

மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள அரசுக்கு சில நெறிமுறைகள் உள்ளன. முதலில் கண்ணீர் புகை குண்டு வீச வேண்டும், பின்னர் தடியடி, அதிலும் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் துப்பாக்கிச் சூடு. முதலில் ஒலிபெருக்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தவிருப்பதாக அறிவிக்க வேண்டும். அதிலும் அமைதியடையவில்லை என்றால், இப்போது நடந்ததைப் போல வாயிலும் மார்பிலும் அல்ல, கால்மூட்டுக்கு கீழ் தான் சுட வேண்டும். பயங்கரவாதத்தின் மூலம் மக்களை ஒடுக்க நினைக்கும் அரசு இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்திலும் இந்த வழிகாட்டுதல் எதையும் பின்பற்றாமல், குறிபார்த்து சுடும் துப்பாக்கி வீரர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்து ஆட்களை சுட்டுத் தள்ளியது காவல்துறை. போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கலவரத்தைத் தொடங்கியதால் தான் சுட நேர்ந்ததாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. உண்மையில் யார் இந்த சமூக விரோதிகள்? கலவரத்தை உண்டாக்க முதல் கல்லை எறியும் அவர்கள் யார்? அரச பயங்கரவாதங்களின் வரலாறு என்ன சொல்கிறதெனில், முதல் கல்லை வீசுபவர் காவல்துறை தரப்பு நபர்களே...

தமிழகத்தில் 1990கள் தொடங்கி கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் நடைபெற்ற அரச பயங்கரவாதங்கள் முழுக்க முழுக்க தலித் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவே அரங்கேற்றப்பட்டன. அரச பயங்கரவாதத்திற்கு அதிலும் துப்பாக்கிச் சூட்டிற்கு அதிகளவில் பலியானவர்களும் அவர்களே! சில முக்கியமான நிகழ்வுகளை இங்கே பட்டியலிடலாம்.

tamirabarani police attackஜூலை 23, 1999 இல் நடந்த தாமிரபரணி படுகொலையிலும் இதே ஸ்கிரிப்ட் புத்தகத்தின் படி நாடகத்தை அரங்கேற்றியது அப்போதைய திமுக அரசு. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு பேரணியாக கலெக்டரிடம் மனுக் கொடுக்க வந்த ஆயிரக்கணக்கான மக்களை இதே போலத் தான் தடுத்து நிறுத்தியது காவல்துறை. கலெக்டர் மனுவை வாங்க வெளியே வராததால், பேரணியை நடத்திய தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான் கூட்டத்திலிருந்து அந்த முதல் கல் விழுந்தது. அதன் பின்னர் ஏராளமானக் கற்கள் விழுந்தன. அவற்றை எறிந்தது சமூக விரோதிகள் என்ற இதே வசனம் தான் அப்போதும் சொல்லப்பட்டது. ஆனால் முதல் கல்லையும், அதன் பின்னர் பாய்ந்த ஏராளமான கற்களையும் காவலர்களே எறிந்தனர் என்பது மக்களால் நிரூபிக்கப்பட்டது. கற்களைக் காரணமாக்கி முரட்டுத்தனமான தடியடியில் இறங்கிய காவலர்கள், நாலாத்திசையும் நெருக்கி கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே ஓடிக் கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றை நோக்கி விரட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் ஆற்றில் விழுந்தனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 17. ஸ்டெர்லைட் படுகொலையைப் போலவே அதுவும் ஜாலியன் வாலாபாக் என்றே வர்ணிக்கப்பட்டது. நீதி விசாரணை நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததைப் போலவே, அப்போது நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தவில்லை எனில், போராட்டக்காரர்கள் திருநெல்வேலியையே சூறையாடி இருப்பார்கள் என்று சொல்லி காவலர்களைத் தப்பிக்க வைத்தது கமிஷன். 17 உயிரைப் பறித்த கொடூரக் கொலையில் ஒரே ஒரு காவலர் மீது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. தற்காப்புக்காகவே போலீஸார் சுட்டனர் என ஏற்கனவே துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிச்சாமி அமைக்கும் விசாரணைக் கமிஷனின் தீர்ப்பு எப்படி இருக்கும் என இப்போதே தெரிகிறது.

செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளைக் கொண்டாடத் திரண்ட தலித் மக்களை பல்வேறு இடங்களிலும் தடுத்து நிறுத்தியது காவல்துறை. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை கைது செய்தது. இதனைக் கண்டித்தும், தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த அவரை அனுமதிக்க வேண்டியும் அவரது அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுவரையிலும் அந்த போராட்டம் அமைதியாகவே நடந்தது. இதன் பின்னர் தான் அரச பயங்கரவாத நாடகம் தொடங்கியது. போராட்டக்காரர்கள் கல்லெறிந்தனர், கலவரத்தில் ஈடுபட்டனர் என்று சொல்லி தடியடியில் தொடங்கி துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது காவல்துறை. 6 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். மரித்தவர்களின் உடலை, இறந்த விலங்குகளைப் போல கம்பில் கட்டித் தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்திற்குள் வீசியெறிந்தது காவல்துறை. ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான நீதி விசாரணை அறிக்கை, போராடியவர்கள் பொதுச் சொத்தை சேதப்படுத்தியதால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்டானது, அதோடு சாதி சங்கங்கள் நடத்தும் ஊர்வலத்திற்கு இனிமேல் தமிழகத்தில் அனுமதி கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியது. ஆனால் முக்குலத்தோர் அமைப்புகள் ஆண்டுதோறும் தேவர் குருபூஜையை கோலாகலமாக கொண்டாடுவதை அனுமதிப்போடு, அரசு அதில் பங்கேற்கவும் செய்கிறது.

தங்களது பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கைக்காக, அக்டோபர் 10, 1994 ஆம் ஆண்டு செங்கல்பட்டுத் துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் காரணை கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள். மனு கொடுத்து அலுத்துப் போனதால், போராட வீதிக்கு வந்தவர்கள் மீது மேற்சொன்ன வகையிலேயே தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானர்கள். இதிலும் சம்பந்தப்பட்ட காவலர்கள் தண்டிக்கப்படவில்லை. 1995 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று திட்டக்குடியில் சாதி இந்துக்களால் தலித் குடியிருப்புகள் சூறையாடப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தலித் மக்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சண்முகம் மற்றும் தொளார் ரமேஷ் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்கள்.

கொடியங்குளத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. ஆகஸ்ட் 31, 1995 அன்று தலித் மக்கள் மீது படையெடுத்தது காவல்துறை. ஊரையே நாசம் செய்து, கண்ணில் பட்ட எல்லோர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உடைமைகள் அனைத்தையும் தரைமட்டமாக்கியது. நீதிபதி கோமதி நாயகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு காவலர்கள் காப்பாற்றப்பட்டனர். அதுமட்டுமல்ல 1990களின் பிற்பகுதியில் நடந்த பள்ளர் மற்றும் கள்ளர் சமூகங்களுக்கு இடையிலான தென்மாவட்டக் கலவரங்களில் சாதி இந்துக்களோடு சேர்ந்து கொண்டு தலித் குடியிருப்புகள் மீதும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது காவல்துறை. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதிலும் காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல்துறையின் அரச பயங்கரவாத அத்துமீறலுக்கு தண்டனை வழங்கப்பட்ட ஒரே நிகழ்வென்றால் அது வாச்சாத்திக் கொடுமைதான். ஜூன் 20, 1992 ஆண்டு தர்மபுரி மாவட்டத்திற்குட்பட்ட சித்தேரி மலைக்கிராமமான வாச்சாத்தியைச் சேர்ந்த பழங்குடி மக்கள், சந்தன மரங்களை வெட்டித் தர வற்புறுத்திய வனத்துறை அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படவில்லை. மக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே மூண்ட சண்டையில் அதிகாரிகளை மக்கள் தாக்கியதாகக் காரணம் சொல்லப்பட்டது. இங்கே கல் என்பது அடி! தம்மை தாக்கிய (!) மக்களுக்கு பாடம் புகட்ட நினைத்த வனத்துறை அதிகாரிகள் மறுநாளே காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளோடு ஊருக்குள் புகுந்து மொத்தத்தையும் சூறையாடினர். 18 பெண்களை பாலியல் வல்லுறவு செய்து அவர்களையும் சேர்த்து 133 பேரை சிறையில் அடைத்தது காவல்துறை. காவல்துறை அத்துமீறல் மற்றும் வல்லுறவை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணையின் நாயகி பத்மினி ஜேசுதுரை, ‘பொறுப்புள்ள அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை’ என்று சொல்லி அறிக்கை அளித்தார். இதன் பின்னர் 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் செப்டம்பர் 28, 2011 அன்று தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்களுக்கு ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த 1990-2015 வரையிலான 25 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 21 கலவரங்களும், திமுக ஆட்சியில் 16 கலவரங்களும் ஏற்பட்டுள்ளதாக மதுரை எவிடென்ஸ் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. இந்த கலவரங்களில் பெரும்பாலானவை சாதிய மோதல்களே. இந்த சாதிய மோதல்கள் அரச பயங்கரவாதத்தால் தான் முடித்து வைக்கப்பட்டன. பொது மக்களிடம் லத்தி, கண்ணீர் புகைக் குண்டுகள், துப்பாக்கிகள், குறிபார்த்துச் சுடும் வீரர்கள் இருப்பதில்லை. மக்கள் போராட்டம் எனும் சிறிய கோட்டிற்கு அருகே அரச பயங்கரவாதம் எனும் பெரிய கோட்டைக் கிழித்துவிட்டு அமைதியை நிலைநாட்டிவிட்டதாக நாடகமாடுகிறது அரசு. நீதி விசாரணை என்ற வார்த்தைக்குள் எல்லாவற்றையும் பொட்டலம் கட்டி வீசிவிடுகிறது. உண்மையில் இதுவரை அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்கள் ஒருபோதும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் தீர்ப்பளித்ததில்லை. மாறாக, அது ஆளும் அரசின் எண்ணவோட்டத்திற்கு ஆதரவாக இருந்து காவல்துறையின் அத்துமீறல்களைக் காப்பாற்றியே வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, கமிஷனின் பரிந்துரைகளை அரசோ, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளோ மதிப்பதில்லை. இப்பின்னணியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டிற்காக அமைக்கப்படும் நீதி விசாரணையில் மட்டும் நீதி நிலைநாட்டப்பட்டுவிடுமா என்ன?! அதிலும் ஏற்கனவே தீய சக்திகள் போராட்டக்காரர்களோடு கலந்துவிட்டதாக முதல்வர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், பெரும் சேதத்திலிருந்து தூத்துக்குடியைக் காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடந்தது என அறிக்கை முடிவு வரும். பத்தாம் வகுப்பு மாணவி ஸ்னோலினுக்கு அதில் ஏதாவது அறிவுரை இருக்கும்.

அரச பயங்கரவாதத்தின் வலியும், விசாரணைக் கமிஷன்களின் துரோகமும் தலித் மக்களுக்கு மிக மிக பழக்கப்பட்டது. தலித் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கிய அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை பொதுச் சமூகம் இதுவரையிலும் சரியானதென்று நியாயப்படுத்தியே வந்திருக்கிறது. அவர்களை சுட்டுக் கொல்வது கூட சரியே என்பது போலத்தான் பொதுச் சமூகம் அத்தாக்குதல்களைக் கண்டிக்காமல் விலகி நின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை ’வன்முறை வெறியாட்டம்’ என அரசும், ஊடகங்களும் முத்திரை குத்திய போது அதை ஆமாம், ஆமாம் என்று அது தலையாட்டியது. மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 150 ரூபாய் கூலி உயர்வு கேட்டுப் போராடி 17 உயிரைக் காவு கொடுத்தனர். தலித் மக்கள் நடத்திய அந்த பேரணியை, ’போக்குவரத்து நெரிசல்’ என கொச்சைப்படுத்தினர் சாதி இந்துக்கள். இதுவரையிலும் தலித் மக்களின் எந்தப் போராட்டத்தையும் தன்னுடையதாக இந்த பொதுச் சமூகம் கருதியதில்லை. சாதி இந்துக்களின் நலனை தி.மு.கவும், அதிமுகவும் மாறி மாறி காப்பாற்றி வந்ததால் அவர்களுக்கு உரிமைப் போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. தமிழகத்தில், சுதந்திரத்திற்குப் பின்னர் அனேகமாக பொதுச் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்டு இத்தனை உயிர்களை வாங்கிய முதல் நிகழ்வாக ஸ்டெர்லைட் போராட்டம் இருக்கக் கூடும். ஆனால் தலித் மக்கள் இதை காலந்தோறும் அனுபவித்து வந்திருக்கின்றனர்.

தலித் மற்றும் பழங்குடிச் சமூக மக்கள் மட்டுமே அனுபவித்து வந்த அரச பயங்கரவாதம் பா.ஜ.கவின் தமிழர் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் பொதுவானதாக மாறி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டமும், ஸ்டெர்லைட்டும் அதற்கான சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தின் பொதுப் பிரச்னைகளில் தேவர், நாடார், மீனவர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் தலித் மக்களின் போராட்டங்களை சாதி இந்துக்கள் பொதுப் பிரச்னையாகக் கருதி தோள் கொடுப்பதில்லை.

விவசாயம், ஜல்லிக்கட்டு, ஆபத்தான வளர்ச்சித் திட்டங்கள், நீட் தேர்வு என சாதி இந்துக்களையும் போராட்டக் களத்திற்கு கொண்டு வரும் காலத்தை பார்ப்பனிய ஆட்சி உருவாக்கிவிட்டது. இத்தருணத்திலேனும் உரிமைப் போராட்டங்களை அரசு எத்தனை வீரியமாக முடக்கும் என்பதை பொதுச் சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். உரிமைகளை நசுக்குவதன் வழியே போராட்டத்தைத் தூண்டிவிட்டு பின்னாலேயே கலவரத்தைத் தொடங்கி வைக்க மூட்டை நிறைய கற்களையும், கலவரத்தை முடித்து வைக்க துப்பாக்கி ரவைகளையும் காவலர்களிடம் கொடுத்தனுப்பும் அரச பயங்கரவாதத்தின் உண்மையான முகத்தை இனியேனும் பொதுச் சமூகம் புரிந்து கொள்ளட்டும். உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் வன்முறையாளர்களோ, தீய சக்திகளோ, சமூக விரோதிகளோ அல்ல என்ற பாடத்தை ஸ்டெர்லைட் போராட்டம் சாதி இந்துக்களுக்கு கற்றுக் கொடுக்கட்டும்.

- ஜெயராணி