இந்திய அரசு தேசிய தேர்வுகள் நிறுவனம் (National Testing Agency) மூலம் நீட் தேர்வு நடத்தி வருகின்றது. இத்தேர்வு மூன்று முக்கிய காரணங்களால் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. முதலாவது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் மாநில அளவில் கல்லூரிகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இருக்காது. மாணவர்கள் தனித்தனியே நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தகுதி இல்லாத மாணவர்களை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறச்செய்து மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பளிக்கலாம் அது மருத்துவப் படிப்பின் தரத்தை இழக்கச் செய்துவிடும் இது இரண்டாவது காரணம். இறுதியாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதியான மருத்துவ மாணவர்களை நுழைவுத் தேர்வு அடிப்படையில் நிரப்புவதன் மூலம் தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கலாம்.

NEET exam

கல்விக் கொள்கைகள்

நம் நாடு எழுபது ஆண்டுகளில் கல்விக் கொள்கைகளில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் (Right to Education Act) 2009 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டமானது 6 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு பொருந்தக் கூடியதாகும். ஆனால் சிக்கல் இங்கு இருந்துதான் ஆரம்பமாகிறது என்று சொல்லலாம். இந்நாட்டில் சுமார் 1.25 கோடி அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 1.60 கோடியாகும். தனியார் பள்ளிகளில் சுமார் 90 விழுக்காடு பள்ளிகள் கட்டணக் கல்வி அளிக்கின்றன. பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகள் தரமானவை என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டு அதிக கட்டணம் செலுத்தி பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 2012 ஆண்டு முதல் கட்டாய கல்வி மற்றும் இலவசக் கல்விச் சட்டத்தில் மாற்றம் செய்து தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஒரு புறம் குறைவான சேர்க்கை உள்ள அரசுப் பள்ளிகளை நடத்த ஆசிரியர் சம்பளம், நிர்வாகச் செலவுகள் என்று பெரும் தொகையை செலவு செய்கிறது அரசு. மறுபுறம் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடன், குறைவான ஆசிரியர் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவுகள் செய்து தனியார் கல்வி செழித்துள்ளது. இதே நிலைதான் உயர் கல்விக்கும் உள்ளது.

தொழில்முறைக்கல்வி தேர்வுகள்

இந்தியாவில் நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகள் பலதுறைகளில் நடத்தப்படுகின்றன. பொறியியல் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (Joint Entrance Test) நடத்தப்படுகின்றன. இந்நியாவில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த நுழைவுத் தேர்வின் மதிப்பெண் பொதுவானது. ஆனால் இத்தேர்வு கட்டாயம் அல்ல. தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு இத்தேர்வின் மதிப்பெண் கட்டாயமாகும். நமது நாட்டில் தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் இருப்பதனால் பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

தொழில்முறை கல்வியில் (Professional Courses) தேர்வுகள் மாணவர்கள் தங்கள் தகுதிகளை நிரூபித்து அத்துறையில் கல்வி பயின்றிட வாய்ப்பளிக்கிறது. இத்தேர்வின் நோக்கம் நியாயமானதும் உறுதியானதும் கூட. ஆனால் இத்தேர்வின் மூலம் தகுதி பெற்ற மாணவர்களுக்கான உரிய இடங்களை வழங்கி உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் தேர்வுகளில் தேர்ச்சியும் தகுதியும் பெற்ற மாணவர்கள் அதற்குரிய கல்வி இடங்களை பெறாத போது அது போன்ற நுழைவுத் தேர்வுகளின் நோக்கம் நீர்த்து போய் விடுகின்றன. தகுதி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களில் மேலிருந்து கீழ்வாரியாக மொத்த இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு மாணவனுக்கு மருத்துவ இடம் கிடைப்பதை த{ர்மானிப்பது அவன் வாங்கும் மதிப்பெண் மட்டுமல்ல மற்ற மாணவர்களின் மதிப்பெண்களும்தான். அரசாங்கம் நிர்ணயிக்கும் மதிப்பெண் (cut off mark) என்பது அவ்வாண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, மருத்துவ படிப்பு இருக்கைகளின் எண்ணிக்கை, கேள்வித்தாளின் கடினத்தன்மை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இது போக சாதிய மற்றும் பொதுப் பிரிவில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் (Minimum Eligilibility) பெற்றிருத்தலும் அவசியம்.

எவ்வாறு நீட்தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு இருக்ககைகள் நிரப்பபடுகின்றன?

ஒரு மாநிலத்தின் மொத்த மருத்துவ படிப்பு இருக்கைகளின் எண்ணிக்கையில் 15% இடங்கள் அகில இந்நிய அளவில் நீட் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். மீதம் உள்ள 85 சதவீதம் மாநில அளவில் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும். இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை அகில இந்திய அளவில் நிரப்பியது போக மீதம் உள்ள 85 சதவீத இடங்களை அந்த மாநிலங்கள் மருத்துவ இடங்களை நிரப்பிக் கொள்ளலாம். இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நிரப்பிக் கொள்ளலாம். இதன் மூலம் தகுதி வாய்ந்த மாணவர்களே தனியார் சுய நிதி கட்டண முறையில் சேர வழிவகுக்கிறது. இதன் மூலம் தகுதி இல்லாத மாணவர்கள் புறவாசல் வழியாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேருவதை தடுக்க முடியும். நாம் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை மூன்று விதமாக பிரித்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கல்லூரி 100 இடங்களில் 50 சதவீதம் அம்மாநில அரசால் சாதிய அடிப்படையில் ஒதுக்கப்படும் மீதம் உள்ள 50 சதவீத இடங்களை நீட் மதிப்பெண் தேர்ச்சியின் அடிப்படையில் சுயநிதிப் பரிவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாநில இட ஒதுக்கீடு

மாநிலங்கள் கடைபிடிக்கும் இடஒதுக்கீட்டினை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம். இதன்மூலம் மாநிலங்கள் தங்கள் சுயஉரிமைகளை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்தியாவில் அதிக அளவில் இடஒதுக்கீடு வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு 65 சதவீதம் இடஒதுக்கீடு முறையை பின்பற்றுகிறது. அதிக மருத்துவ இடங்களை மாநில மாணவர்களை கொண்டு நிரப்பி வந்த நிலையில் அகில இந்திய ஒதிக்கீடு 15 சதவீதம் தமிழக மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகளை பறிப்பதாக உள்ளது. ஆனால் மறுபுறம் மருத்துவ கல்லூரிகளே இல்லாத பிற மாநில மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை பெற நீட் தேர்வு உதவுகிறது.

பள்ளிக் கல்வி சிக்கல்கள்

கல்வி மாநில பட்டியலில் உள்ள காரணத்தினாலும், பல்வேறு மொழிவாரி மாநிலங்கள் உள்ளதால் இந்நியாவில் ஒரே விதமான கல்வி மற்றும் தேர்வும் சாத்தியமில்லாத ஒன்றாகும். அது மட்டுமில்லாது பல கல்விமுறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் நீட் தேர்வு கேள்விகள் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படுகிறது. மாநில கல்வி பாடதிட்டத்தின் கீழ் படித்து வரும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர் என்பது உண்மை.

இரண்டாவது மிகப்பெரிய குறைபாடு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் நீட் தேர்விலோ, மருத்துவ படிப்பில் சேருவதற்கோ தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கஷ்டப்பட்டு பள்ளிப் படிப்பில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் மதிப்பில்லாமல் போகிறது அதனால் பள்ளிக் கல்வியின் நோக்கம் வீணாகிறது.

நீட் தேர்வின் சிறப்புகள்

 பணவசதியுள்ள மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் என இருவாசல்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதியாக இருந்தன. தற்பொழுது பணம் இருந்தாலும் நீட் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே சேர முடியும்.

 மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் வெளிநாடு பிரிவில் (NRI Quota) மூலம் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

 வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் உள்ள திறன் கொண்ட மாணவர்கள் அகில இந்திய இடஒதுக்கீட்டின் மூலம் பிற மாநில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பலனடையலாம்.

 தனியார் மருத்துவ கல்லூரிகளை நீட் தகுதித் தேர்வின் மூலம் மறைமுகமாக ஒருவரைமுறைக்குள் அதன் செயல்பாடுகளை கொண்டு வர முடியும்.

 உரிய தகுதி இருந்தும் மாநில இடஒதுக்கீடுகளால் மருத்துவ இடம் கிடைக்காத முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் அகில இந்நிய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பாக அமையும்.

நீட் தேர்வின் குறைபாடுகள்

 மாநிலக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்காத நீட் தேர்வுமுறை ஏழை மாணவர்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில் அவர்களுக்கு அரசுப் பள்ளிகளை தவிர வேறு வழிகள் இல்லை.

 பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகப் பெரிய சுமையாக, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மருத்துவதுறை இல்லாமல் பிற துறைகளுக்கு சேர அந்த மதிப்பெண்கள் தேவை எனவே மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு அரும்பாடுபட்டு எடுக்கும் மதிப்பெண்கள் நீட் தேர்வுக்கு உதவுவது இல்லை மாறாக அதைவிட கடுமையாக உழைப்பை மேலும் செய்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும். இது கல்வி முறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடு. இது மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையை கொடுக்கும்.

 மாநிலக் கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்விற்கு தனியாக பயிற்சி செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதற்கு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டும். இது கல்வி ஏழைகளுக்கு எட்டாத கனியாக மாற்றும் நிலையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு, நடுவண் பள்ளி கல்வி (CBSE)திட்டத்திற்கு இணையாக மாநில கல்வி பாடங்களை செம்மை படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறது, இது ஒரு நல்ல முயற்சி என்றாலும் அரசின் பங்கு இதில் அதிகமாகவும், துரிதமாகவும் செயல்பட்டால் மட்டுமே ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற உதவும்.

நுழைவு மற்றும் தகுதித் தேர்வு அவசியமா?

 நுழைவு மற்றும் தகுதித் தேர்வின் நோக்கம் என்ன? பல ஆயிரம் மாணவர்களில் தகுதியான சில நூறு மாணவர்களை தேர்ந்தெடுப்பதுதான். ஆனால் தேர்வு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறு தகுதி பெறும் மாணவர்களில் மருத்துவ படிப்பில் உள்ள மொத்த இடங்கள் உள்ளவரை மட்டுமே நிரப்பப்படுகின்றன மீதம் உள்ள மாணவர்கள் தகுதி இருந்தும் வாய்பில்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்? இது நுழைவுத் தேர்வு மற்றும் தகுதித் தேர்வின் நோக்கங்களை கேள்விக்குறியாக்குகிறது.

 கல்வி மாநிலங்களின் உரிமைப் பட்டியலில் உள்ள காரணத்தினால் அந்த மாநிலங்கள் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு போதுமான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். ஆனால் சுமார் பத்து மாநிலங்களில் ஒன்று அல்லது அதுவும் இல்லாத மாநிலங்கள் உள்ளன. அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலங்களின் முறையே கர்நாடகம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேசம் முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவிலுள்ள மொத்த மருத்துவ கல்லூரி இடங்களில் 44 சதவீதம் இடங்கள் தென் மாநிலங்களில் உள்ளது. கல்வி அடிப்படை உரிமை கொண்ட நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளை விட தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகம் உள்ளது. மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மிகக் குறைந்த அளவில் உள்ளன. இந்த ஆண்டு 85 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட விண்ணப்பம் பெற்றுள்ளதாக அரசு நடுவண் அரசு அறிவித்துள்ளது அதில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தான் அதிகம் இருக்கும் என்பது நிதர்சனம். அவ்வாறு துவங்கப்படும் கல்லூரிகள் குறைவாக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் துவங்க அரசாங்கம் சலுகைகளை அறிவித்து ஊக்குவித்தால் நலம்.

 நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் கொண்டு வருவதற்கு முன்னர் போர்க்கால அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களில் தேவையான அளவு மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தி இருந்தால் மாநில இட ஒதுக்கீட்டின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் பலனடைந்து இருப்பர்.

 நம் கல்விக் கொள்கைகளில் மாற்றம் வர வேண்டும். ஒருபக்கம் தேவைக்கதிகமான பொறியியல் கல்லூரிகள் அதில் காலியாக உள்ள பொறியியல் படிப்புகள் மறுபுறம் குறைவான மருத்துவ படிப்பு இடங்களுக்கு மிகப் பெரிய போட்டி. இந்நிலைக்கு பதில் நெகிழ்வுத் தன்மை கொண்ட கல்வி முறை வேண்டும். ஓர் ஆண்டில் மருத்துவப் படிப்புக்காக தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்(கடநஒiடிடந).

 தற்போது தேவைக்கு அதிகமாக உள்ள பொறியியல் கல்லூரிகளை வேறு பாடப்பிரிவுகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். போதுமான வசதிகளை மேம்படுத்தி அக்கல்லூரிகள் குறிப்பிட்ட மருத்துவ பாடப்பிரிவுகளை நடத்த அனுமதிக்கலாம்.

 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சுயநிதி பிரிவின் கீழ் சேரும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் மீதம் உள்ள தொகையை மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து செலுத்த வேண்டும். இது போதுமான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கும் வரை தொடர வேண்டும். சமீபத்தில் கர்நாடக அரசு இம்முறையை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஏன் மருத்துவத்திற்கு முக்கியத்துவம்?

நீட் தேர்வு, தகுதி, இட ஒதுக்கீடு போன்றவைகளை புறம் தள்ளிவிட்டு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும் மருத்துவக் கல்லூரிகளின் நோக்கம் என்ன? தகுதியான, திறமையான மருத்துவர்களை உருவாக்குவது மட்டுமல்ல போதுமான மருத்துவர்களையும் உருவாக்குதல் வேண்டும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பதிவு செய்யபட்ட மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை சுமார் 7.5 லட்சம். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுருத்தல் படி 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். நம் நாட்டின் மொத்தம் மக்கள் தொகை 135 கோடி அதன்படி இந்தியாவில் 13.5 லட்சம் மருத்துவர்கள் தேவை ஆனால் இருப்பதோ 7.5 லட்சம் பேர் மட்டுமே. உடனடியாக 5.5 லட்சம் மருத்துவர்கள் தேவையுள்ள நிலையில் நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கை 52000 மட்டும்தான். தற்பொழுது உள்ள உடனடி தேவையை பூர்த்தி செய்ய நாம் குறைந்தபட்சம் 7 முதல் 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. நமக்கு தேவை போதுமான மருத்துவக் கல்லூரிகளை போர்க்கால அடிப்படையில் துவங்க அரசாங்கம் முயற்சிகள் எடுக்க வேண்டும். உலகத்தில் மிக அதிக அளவில் மருத்துவர்கள் அதாவது 1000 மக்களுக்கு கத்தார் நாடு சுமார் 7 மருத்துவர்களைக் கொண்டுள்ளது. கீயுபா, பெல்ஜியம், ஸ்பெயின், கிரிஸ் போன்ற நாடுகள் தேவைக்கு அதிகமான மருத்துவ சேவையை கொண்டுள்ளன. மிக அதிக மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில் 1800 மக்களுக்கு 1 மருத்துவர் விகிதம் மட்டுமே உள்ளது. அதிலும் கிராமப்புரங்களில் இந்த விகிதம் மிக அதிகம். அதாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அதிக மருத்துவர்களும் அதிக மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் மிகக் குறைந்த அளவில் மருத்துவர்கள் உள்ளனர்.

மிகக் குறைந்த மருத்துவர்கள் உள்ள காரணத்தினால் மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நோக்கி குவியும் நிலை உள்ளது. இது மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி; மருத்துவம் என்பது கட்டணம் சார்ந்ததாக மாறிவிட்டது. மருத்துவர்களுக்கு எப்போதும் பற்றாக்குறையாக உள்ளது. தேவைக்கு அதிகமான மருத்துவர்கள் இந்தியாவில் சேவை செய்யும் நிலை ஏற்பட வேண்டும். அதிக இளையோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. நம் நாட்டில் இளம் வயதினரின் மக்கள் தொகை சுமார் 60மூ விழுக்காடு ஆகும். நம் நாட்டிற்கு தேவையான மருத்துவர்களை உருவாக்கினால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் உரிய மருத்துவச் சேவையை அளிக்க முடியும்.

மனித வளம் நம் பலம்

 அதிக மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில் மிகக் குறைந்த அளவில் மருத்துவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

 கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம் அதில் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 6.75 லட்சம். இதில் சுமார் 52000 மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் வாய்ப்பில்லாத மாணவர்களின் எண்ணிக்கை 6.25 லட்சம். இதனால் நம் நாட்டிற்கும் உலகிற்கும் தேவையான மனித வளம் வீணடிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் நமக்கு தேவையான மருத்துவர்கள் ஐந்து வருடங்களில் கிடைத்திருப்பார்கள். குறைவான மருத்துவர்கள் ஆண்டுதோறும் வெளிவருவதால் மருத்துவச் சேவைகள் எல்லா தரப்பு மக்களுக்கும் சென்று சேருவதில் சிரமங்கள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையால் அடிப்படை சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகின்றன. இதனால்; மக்கள் உயர் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவச் சேவையை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மருத்துவச் சேவையை மருத்துவ சந்தையாக மாற்றும் நிலைக்கு தள்ளுகிறது.

 போதுமான மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தன்னிறைவை அடைந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் மருத்துவ படிப்புக்கான வசதிகளை ஏற்படுத்தினால் போதும் நம் நாட்டிற்கு தேவையான மருத்துவர்களையும் உருவாக்கலாம். புpற நாடுகளுக்கு சேவை அளித்து வேலை வாய்ப்பை பெறலாம்.

 கியூபா நாடு அதன் பொருளாதாரத்தில் 44 சதவீதம் நிதியை மருத்துவத்திற்கு செலவிடுகிறது. நம் நாடும் மருத்துவத்திற்கான அடிப்படை உள்கட்டமைப்புகளை உருவாக்குவதின் மூலம் மருத்துவத் துறையில் தன்னிறைவை அடைய முடியும்.

தேசம் என்பது மக்களுக்கானது, எதிலும் மக்கள் நலனே முன்னிலை படுத்தப்பட வேண்டும். இந்தியா தன் எல்லைகளை பாதுகாக்க இராணுவத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்குகிறது அதைவிட மிக முக்கியமானது மக்களை நோய்களில் இருந்து பாதுகாப்பது. மருத்துவச் சேவை என்பது நம் அடிப்படை உரிமைகளுக்கு அடுத்த படியாக கருதப்பட வேண்டும். பல லட்சம் மாணவர்களுக்கு சில ஆயிரம் மருத்துவ இடங்கள் என்பது மிகக் குறுகிய பாதையில் அனைவரையும் பயணம் செய்ய கட்டாயபடுத்துவதாகும். தற்பொழுது உள்ள நிலையில் அரசே தேவையான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க முடியாவிட்டாலும் தனியார் உதவியோடு விரைந்து தேவையான மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி; அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இதனை நீட் நுழைவுத் தேர்வு பிரச்சனை, மாநிலங்களுக்குள் ஏற்படும் பிரிவினை, மத்திய மாநில அரசுகளின் அதிகார பங்கீடு, சாதிய மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் போன்ற குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் நோக்கினால் அதன் பாதிப்பு மொத்த தேசத்திற்கும்தான்.

- சந்தோசுகுமார் சுந்தர்