ராமாயண காவியம் என்பது ஆரிய திராவிடப் போராட்டத்தின் அப்பட்டமான கதை வடிவம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ராமன் என்ற ஆரியன், திராவிட இனத்தைச் சார்ந்த இராவணன் என்ற அரசனைக் கொன்று ஆரிய மேலாண்மையைத் தக்க வைப்பதையும், சாதிய சனாதன தர்மத்தை வலியுறுத்துவதையுமே இராமாயணத்தில் வால்மீகி கதைவடிவில் செய்துள்ளார். இன்றும் வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இராமலீலா கொண்டாடப்படுகின்றது. அதில் இராவணின் உருவம் கொளுத்தப்பட்டு, திராவிட இனத்தின் மீதான வரலாற்றுப் பகை ஆறாமல் கொளுந்துவிட்டு எரியச் செய்யப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழின உணர்வாளர்கள் இராமனின் உருவத்தைக் கொளுத்தும் போது, ஆரிய மேலாண்மையை ஏற்றுக் கொண்ட ஆட்சியாளர்களால் சிறைபடுத்தப்படுகின்றார்கள். ஆரியர்கள் தங்களின் மேலாண்மையை தக்க வைக்கச் செய்யும் முயற்சியை எந்த வகையிலும் தடுக்கும் திராணியற்ற அடிமைக் கூட்டமாய் தமிழக ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். அப்படி பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் அளவிற்கு இராமன் என்ன அவ்வளவு பெரிய யோக்கியனா என்பதை நாம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டி இருக்கின்றது.

ravananஇராவணனை இராமன் கொல்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போனான் என்பதுதான். நாம் ஏற்கெனவே பார்த்தபடி ஜலந்தராசுரனின் மனைவி பிருந்தையை விஷ்ணு மாறுவேடமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அந்தம்மாள் அதைக் கண்டுபிடித்து, விஷ்ணுவுக்கு விட்ட சாபத்தை தீர்க்கத்தான் இராம அவதாரம் ஏற்பட்டது. வால்மீகி ராமயாணத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் படி பார்த்தால் இராமனின் மனைவி சீதை நிச்சயம் கற்புடையவளாக இருக்க வாய்ப்பே இல்லை. பெரியார் சொல்கின்றார் "சீதையை ராவணனிடமிருந்து மீட்ட பின்பு, ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும், ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி, அவளைத் தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில், சீதை தைரியமாக விளக்கமாக தன்னை ராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை. மற்றபடி என்ன சொன்னாள் என்றால் "நான் ஒரு பெண், அபலை. ராவணன் மகா பலசாலி. அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது. நான் என்ன செய்ய முடியும்? சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது" என்றுதான் சொன்னாளே ஒழிய, மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதை கற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பதுதான் இந்த வியாசத்தின் கேள்வியாகும். சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையைக் கற்பிப்பதற்காக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து, பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்”.(நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? தொகுதி 3 பக்கம் 255)

இதை ஏன் சொல்கின்றோம் என்றால், ராமனை கடவுளாக வழிபடும் பக்தர்கள் எந்த அடிப்படையில் ராவணனை ஒழுக்கம் குறைந்தவர்களாக, தீயவனாக சித்தரிக்கின்றார்கள் என்பதால்தான். விஷ்ணு ஒழுக்கமாக இருந்திருந்தால் ராவணன் ஒழுக்கமாக இருந்திருப்பான். விஷ்ணுவின் வரம்பு மீறிய செயலால் ஏற்பட்ட தீவினைதான் இராவணனை விதிப்படி ஒழுக்கம் குறைந்தவனாக மாற்றியிருக்கின்றது.

வால்மீகியின் கதைப்படி பார்த்தாலும் இராவணன் பெருந்தன்மையானவனாகவே கற்பிக்கப்படிருக்கின்றான். இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்திரங்களில் விற்பனன், குடிகளையும், சுற்றத்தார்களையும் இரக்கமுடன் ஆதரித்தவன், தைரியசாலி, வீரன், ஆச்சரியப்படத்தக்க அதிபலசாலி, மிகவும் பக்திமான், தவ சிரேஷ்டன், கடவுளுடைய பிரீதிக்குப் பாத்திரமானவன், பல வரங்களைப் பெற்ற வரப் பிரசாதி என்று இந்தப் பத்து குணங்களையும் கற்பித்து இருக்கின்றார். இராமன் பிறப்புக்குக் காரணமாக விஷ்ணுவின் பாலியல் அத்துமீறலைக் குறிப்பட்டது போல இராவணன் பிறப்புக்கு எந்தவிதமான ஆபாசக் கதையும் வால்மீகியால் கற்பிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட ஒருவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான் என்பதையோ, முனிவர்களையும், ரிஷிகளையும் அவர்களின் காரியங்கள் நடைபெற முடியாமல் தடுத்தான் என்பதையோ, சீதையை வேண்டுமென்றே தூக்கிக் கொண்டு போனான் என்பதையோ காழ்ப்புணர்ச்சியில் சொல்லப்படும் பொய்யாகவே நாம் பார்க்க முடியும்.

அப்படியும் வலிந்து இராவணன் மீது பலி சுமத்துவதற்குக் காரணம், தமிழனான இராவணன் இவ்வளவு அறிவோடும், ஆற்றலோடும், செல்வாக்கோடும் தன் ஆட்சியை செலுத்தி வந்தான் என்ற ஆரியக் கூட்டத்தின் பொறாமைதான் காரணமாக இருந்திருக்க முடியும். அதுதான் இராவணனைக் கொல்லும் அளவிற்கு ஆரிய ராமனை இட்டுச் சென்றது. சில பேர் இராவணனைப் பார்ப்பனன் என்று வாய் கூசாமல் எந்தவித அறிவு ஆராய்ச்சியும் இன்றி கூறுகின்றார்கள். மனுநீதிப் படியே ஆட்சி செய்த ராமன், ஒரு பிராமணனை எப்படி கொன்றிருக்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மனு நீதியின் முன்னால் மண்டியிட்ட ராமான் ஒருக்காலும் பார்ப்பனனான இராவணனைக் கொன்றிருக்க எந்தவித அடிப்படையும் இல்லை.

ஒருவேளை இப்படி கூட இருந்திருக்கலாம், தர்ம சாஸ்திரங்களின் படி தடைவிதிக்கப்பட்ட வேதங்களைக் கற்றதோடு மட்டும் அல்லாமல் கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்கியதால் வயிறு எரிந்த ஆரியக் கூட்டம் திட்டமிட்டு இராவணனைக் கொன்றுவிட்டு, வரலாற்றைப் புரட்டி இருக்கலாம். வரலாற்றைப் புரட்டி எழுதுவது என்பது ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கு கைவந்த கலை என்பதை நாம் ஆதியில் இருந்து மோடி ஆட்சி செய்யும் இந்நாள் வரை பார்த்துதான் வருகின்றோம். அது மட்டும் அல்லாமல் சூர்ப்பநகையை அரக்கி குலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லும் போது சூர்ப்பநகையின் அண்ணனான இராவணன் மட்டும் எப்படி பார்ப்பனனாக இருக்க முடியும்? இது அடிப்படையிலேயே தவறு. காரணம் புராணங்களில் அரக்கர்கள், அசுரர்கள், தஸ்யூக்கள் என்று குறிப்பிடும் வார்த்தைகள் திராவிடர்களையும், தேவர்கள், சுரர்கள், பூதேவர்கள் என்ற வார்த்தைகள் அனைத்தும் பார்ப்பனர்களையும் குறிக்கும் வார்த்தைகளே ஆகும். எனவே இராவணனைப் பார்ப்பனன் என்று சொல்வது ஆரிய இராமனின் அயோக்கியத்தனங்களை மூடி மறைக்கச் செய்யப்பட்ட சதியே ஆகும்.

பார்ப்பனர்கள் சீதையை மட்டும் கற்புக்கரசியாக சித்தரிக்கவில்லை. ஒழுக்கம் கெட்ட பல பேரையும் கற்புள்ளவர்கள் என்று தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்து அவர்களை வழிபடச் செய்து இருக்கின்றார்கள். பார்ப்பனியம் அதி தீவிர பத்தினிகளாக சித்தரிக்கும் தாரை, அகலிகை, துரோபதை, மண்டோதரி போன்றவர்களில் மண்டோதரியைத் தவிர மற்ற அனைவரும் எப்படி ஒழுக்கம் கெட்டவர்களாய் இருந்தார்கள் என்பதைப் பெரியார் அம்பலப்படுத்துகின்றார். இராமாயணம் போன்ற பார்ப்பனிய குப்பைகள் கற்பிக்கும் போலி கற்பொழுக்கத்துடன் இது சம்மந்தப்பட்டிருப்பதால் அதையும் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

முதலாவதாக தாரை. இந்த அம்மாள் பிரகஸ்பதியின் பத்தினி ஆவார். இந்த அம்மாளுக்கு பிரகஸ்பதியிடம் பாடம் படிக்க வந்த சந்திரனிடம் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் புதன் என்ற குழந்தை பிறந்தது. பெரியார் சொல்கின்றார் “தாரை என்பவள் தேவ குருவாகிய பிரகஸ்பதியினுடைய பெண்சாதி. இந்தம்மாளைப் பற்றி விஷயம் அறிவதற்கு கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு, காதம் காதமாய் ஊர்ப்பயணம் போக வேண்டியதில்லை. இன்றைக்கும் தெருத் தெருவாய் தாரையும், சந்திரனும் படுத்து உருளுவதும், நிர்வாணமாய் நின்றுகொண்டு சந்திரனுக்கு எண்ணெய் தேய்ப்பதுமான சத்காலட்சேபத்தை தினம் பார்த்து வருகின்றோம். தாரையம்மன் புருஷனே சங்கதி தெரிந்து இரண்டு பேருக்கும் சாபமிட்டதும், இவர்கள் இரண்டு பேருக்குமாகப் பிறந்த குழந்தை புதன் என்பவன் இருப்பதும் மேற்படி பார்ப்பனர்கள் சாஸ்திரங்களிலேயே இருக்கின்றது. .... ஆகவே குருவின் யோக்கியதை, குரு பத்தினியின் யோக்கியதை, சிஷ்யனின் யோக்கியதை, ஆச்சிரமத்தின் யோக்கியதை, ஆரிய நாகரீகத்தின் யோக்கியதை ஆகிய இவ்வளவுக்கும் தாரையம்மாள் உதாரணமாக விளங்குகிறாள். (இதையெல்லாம் விட கற்பின் லக்ஷணத்திற்கும் இது ஒரு ஆரிய இலக்கியமாய் விளங்குகின்றது." ( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம்வர வேண்டும்? தொகுதி 3 பக்கம் 280)

"இரண்டாவதான அகலிகை அம்மாள் விஷயம். அகல்யை அம்மாள் என்பவள் கெளதம முனிவர் என்கின்ற ஒரு ரிஷியின் பொண்டாட்டி. தெய்வராஜனான இந்திரன் இந்த அம்மாள் மேல் ஆசைப்பட்டு, மாறுவேஷம் பூண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும், பிறகு ஒருவருக்கொருவர் இன்னார் என்று தெரிந்துகொண்டு இரண்டு பேரும் சுகித்ததாகவும், ரிஷி இந்த விஷயம் தெரிந்து இருவரையும் தண்டித்ததாகவும், அத்தண்டனையால் இந்திரனுக்கு சரீரமெல்லாம் பெண் குறியாகவும், அகலியை கல்லாகவும் ஆய்விட்டதாகவும் பார்ப்பன சாஸ்திரங்கள் என்பவைகளே சொல்கின்றன. அதுவும் தெருவில் போகின்ற சாஸ்திரங்கள் சொல்லவில்லை. ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுவதாகிய இராமாயணம், பாரதம் முதலியவைகளில் தான் இந்த உண்மைகள் சொல்லப்படுகின்றன. இதனால் தேவர்களின் அரசன் யோக்கியதையும், ரிஷி பத்தினிகளின் யோக்கியதையும் விளங்குகின்றது”.

“மூன்றாவது, துரெளபதையம்மன் சங்கதி. இந்தம்மாள் முதலில் ஒரு புருஷனை மாத்திரம் கட்டிக்கொண்டு, பிறகு மாமியார் இஷ்டப்படி, மற்றும் நால்வருக்கும் பெண்டாட்டியாக இருந்து வந்திருக்கின்றாள். ஐந்து பேரிருந்தும் ஆசை தீராமல் இன்னொரு புருஷனையும் மனதில் நினைத்து, நினைத்து வருந்தியிருக்கின்றாள் என்பதைத் தானே ஓப்புக் கொண்டதல்லாமல் உலகப் பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால், ஆண்மக்களே இருக்கக்கூடாது என்று தீர்ப்புங் கூறிவிட்டாள். இதனால் அக்காலக் கற்புக்கு லக்ஷணம் புருஷனும், மாமியாரும் யாரிடமும் போகும்படி சொன்னாலும் போய்த்தான் ஆகவேண்டும் என்பதும், அதுவும் கற்பில் சேர்ந்ததுதான் என்பதும், பிறகு தன்னிஷ்டப்படி யாரை ஆசைப்பட்டாலும் அதுவும் கற்புடன் சேர்ந்ததுதான் என்பதும் அக்கால வழக்கத்தில் இருந்ததாய் விளங்குகின்றது…..”( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம்வர வேண்டும்? தொகுதி 3 பக்கம் 280)

ஏற்கெனவே சீதையின் யோக்கியதையைப் பற்றி பார்த்துவிட்டதால் தனியாகப் பார்க்கத் தேவையில்லை. கடைசியாக இருக்கும் இராவணனின் மனைவியான மண்டோதரியை எந்த இடத்திலேயும் தாரையைப் போன்றோ, அகலிகையைப் போன்றோ, திரெளபதியைப் போன்றோ ஒழுக்கம்கெட்டு திரிந்ததாகக் கூறப்படவில்லை.

இப்படி தனிமனித வாழ்வில் ஒழுக்கம் கெட்டவர்களாய் எந்தவித வரைமுறையும் இன்றி விலங்குகளைவிட கீழான நிலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களாய் வாழ்ந்த ஆரியக் கூட்டம், தங்களது அசிங்கத்தையும், ஆபாசத்தையுமே ஒழுக்கம் என்றும், பக்தி என்றும் பண்பாட்டோடு வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்தது. தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையை சாதியால், பார்ப்பன சிந்தனைகளால் சீரழித்தது. கம்பன் போன்ற பார்ப்பன கைக்கூலிகள் தங்களது கவித்திறத்தை ஆரியக் கூட்டத்தை பெருமைப்படுத்த பயன்படுத்தி வயிறு கழுவினார்கள். இன்று வரையிலும் தமிழ்ச் சமூகம் சாதியால் பிளவுபட்டு, நாய்களைவிட கீழான நிலையில் அடித்துக் கொண்டு சாவதற்குக் காரணமான பார்ப்பனியத்தை கம்பனின் வாரிசுகள் கட்டிக் காப்பாற்றி வருகின்றாள். அவர்கள் பார்ப்பனியத்தின் மலமாய் வாழ்ந்து தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து துர்நாற்றத்தை பரப்பி வருகின்றார்கள்.

அந்த நாற்றம் தமிழ்ச் சமூகத்தில் பரவி, பெரும் நோய்களைப் பரப்புவதாலும்,அதைச் சுத்தப்படுத்த வேண்டிய பெரும்பணி நமக்கு இருப்பதாலும் சுத்தப்படுத்தும் பணி தொடரும்…

- செ.கார்கி