இந்திய துணைக்கண்டத்தின் சமூக அமைப்பானது சாதிய சமயத்தை உள்ளடக்கியதாகிய இயங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட சாதிகள் அனைத்தும் சமநிலையில் வைத்து போற்றப்படவில்லை, மாறாக மனுதர்ம சாஸ்திர அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளையும், பாகுபாடு, தீண்டாமையையும் மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக சாதி அடிப்படையில் மக்கள் தங்களை ஒருவரை ஒருவர் உயர்த்தியும், தாழ்த்தியும் பிடிக்கின்றனர். இதனால், இந்த சாதிய சமுதாயத்தில், சாதியப் படிநிலையில் கடைநிலையில் உள்ள மக்கள் அனைவராலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால், தன்னுடைய சொந்த நாட்டிலே அகதிபோல் வாழ்வினை நகர்த்தி வருகின்றனர். அந்த வகையில், உற்றுநோக்கும் போது, சாதியப் படிநிலையில், தாழ்த்தப்பட்டவர்களுள் தாழ்த்தப்பட்டவராக இருக்கக்கூடிய அருந்ததியர்கள் மீதும் அரங்கேற்றப்படும் வன்கொடுமைகள் சொல்லில் அடங்காதவை.

santhiayur arunathathiyar

இதை மெய்பிக்கும் விதமாக, கடந்த கால நிகழ்வுகள் நமக்கு சாட்சியமாக அமைகின்றன. விழுப்புரம் மாவட்டம், கரடிசித்தூரில் 2004 ஆம் ஆண்டு, அருந்ததியப் பெண்கள் நதியா, கோவிந்தம்மாள், வெள்ளையம்மாள், கலா ஆகியோர் பறையர் ஆண்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதில், வெள்ளையம்மாள் என்பவர் இறந்தும் போனார். 2011-ல், நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி மீதான கொடூரமான தாக்குதல், 2012-ல் விழுப்புரம் மாவட்டம் பள்ளிநேயணூரில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் – பறையர் சமூகத்தைச் சேர்ந்த கோகிலாவை திருமணம் செய்த காரணத்திற்காக, பறையர் சமூகத்தால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். 2013-ஆம் ஆண்டு, பெரம்பலூர் மாவட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபன், சாதிய மறுப்பு திருமணம் செய்ததால், சாதி இந்துகளால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். அதேபோன்று, 2016-ல் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சிவகுருநாதன், நெல்லை மாவட்டத்தில் வைத்து பெண் வீட்டாரால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். அருந்தியர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பல நிகழ் சான்றுகளை ஆவணமாகக் காட்ட முடியும். இவ்வாறாக, அருந்ததியர் சமூக மக்களை ஒடுக்குவதில், சாதி இந்துகளைப் போலவே, ஆதிக்க தலித் சாதிகளும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அருந்ததியர் கல்வியாளர்கள் வட்டம் - (ACAA) மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சந்தையூர் கிராமம், இந்திரா காலனியில், பறையர் சமூகத்திற்கும், அருந்ததியர் சமூகத்திற்கும் இடையே ஏற்பட்ட சுவர் பிரச்சனையை கள ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை வெளிக்கொணரவும், மேலும் அங்கு நிலவக்கூடிய சமூக யதார்த்த நிலையினை சுட்டிக்காட்டவும் இந்த உண்மை அறிவும் குழு ஆய்வினை மேற்கொண்டு, இந்த அறிக்கையினை வெளியிடுகிறது.

அருந்ததியர் - பறையர் சமூக உறவு:

சந்தையூர் கிராமமானது ஊரும் சேரிகளாக உள்ள அமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த கிராமத்தில், செட்டியார், வண்ணார், மறவர், கவுண்டர், நாயக்கர், முத்தரையர், பிள்ளைமார் ஆகியோர் தங்கள் சாதிகளின் குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். சந்தையூர் ஊருக்கு வெளியே அருந்ததியர்கள், பறையர்கள் இந்திரா காலனிப் பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். 80 குடும்பம் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 30 குடும்பம் பறையர் சமூகத்தினரும் உள்ளனர்.

இந்திரா காலனி அமைப்பு முறை:

இந்திரா காலனியில் பறையர்களுக்கு சொந்தமான ராஜகாளியம்மன் கோவில் மற்றும் அருந்ததிய உறவின்முறை சாவடி உள்ளது. (இராஜகாளியம்மன் கோவில் மற்றும் சாவடி கட்டப்பட்ட இடமானது இரு சமூகத்தினருக்கும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய புறம்போக்கு நிலமாகும்). அருந்ததியர் சமூகத்தினருக்கு காளியம்மன் கோவில், விநாயகர் கோவில் மற்றும் சாவடி (சொந்த நிலத்தில்) உள்ளன. (மேற்கண்ட அருந்ததியர் சமுதாய கோவில் மற்றும் அவர்களுக்குரிய சொந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளன). விநாயகர் கோவிலை வழிபடுவதற்கு அருந்ததியர் மறுப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் பறையர்கள் தங்களுடைய இராஜகாளியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதற்கு அருந்ததியர் மக்களை அனுமதிக்க மறுக்கின்றனர் அது மட்டுமில்லாமல் சுவரையும் எழுப்பியுள்ளனர். அதை கோவில் சுற்றுச்சுவர் என்றும் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர். இவர்கள் வசிக்கக் கூடிய பகுதியில் ஒரு வீட்டில் வாடகை முறையில் இந்திரா காலனிக்கு பொதுவான அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் பராமரிப்பு, உணவு தயாரிப்பு மற்றும் ஆசிரியர் பணியில் அருந்ததியர் பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக பறையர்கள் தங்களுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதில்லை. பறையர் சமூக மக்கள் தங்கள் குடியிருப்பிற்குச் செல்ல அருந்ததியர்கள் குடியிருப்பின் வழியே தான் நடந்து செல்ல வேண்டும்.

சந்தையூர் மக்களின் சாதி மனநிலையை ஆராயும் போது, ஊரில் வசிப்பவர்கள், இந்திரா காலனி மக்களை தாழ்த்தப்பட்ட சாதியாக பாவிக்கும் மனநிலையில் தான் உள்ளனர். அதே சமயம், இந்திரா காலனியில் வசிக்கும் மக்கள் தங்களை ஒன்றுபட்ட தாழ்த்தப்பட்டவர்களாக நினைக்காமல், இந்து சாதிகளைப் போல், சாதிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். இந்த இரு சமூகத்தினருக்கும் இடையே, மொழி ஒற்றுமையோ, எந்தவிதமான திருமண உறவுகளோ, பொதுவான கோவில்களோ கிடையாது. மேலும், இந்த இரண்டு சாதிகளின் பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்குக் கூட தனித்தனியான கலையரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட இரண்டு சாதிகளுக்கிடையே வர்க்க வேறுபாடுகள் அதிகளவில் உள்ளன. அதிலும் குறிப்பாக, பறையர் சாதி மக்களுக்கு தனியே விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், அருந்ததியர் சாதி மக்களுக்கு ஒருவருக்குக் கூட விவசாய நிலம் கிடையாது. மேலும், அருந்ததியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தற்போதைய நிலையினை பறையர் சாதியினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பெரும்பாலான பறையர் சாதியினர் உயர்க்கல்வியிலும், அரசாங்கப் பணியிலும் பதவி வகித்து வருகின்றனர். அருந்ததியர்கள் தங்களின் அன்றாடத் தேவைக்கு, பறையர்களை விட சாதி இந்துக்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சந்தையூர் தீண்டாமைச் சுவர் பிரச்சனைக்கான பின்புலம்:

புல எண் 193-ல் பறையர் சமூகத்தினரால் போடப்பட்ட ஆக்கிரமிப்பு முள்வேலி, 2.5.2012 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் ஆணையின் படி அகற்றப்பட்டது. தொடர்ந்து இரு சமூகத்தினர் இடையே சமாதானக் கூட்டம் 9.5.2012- வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த சமாதானக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) முள்வேலி ஆக்கிரமிப்பினை 2.5.2012 அன்று அகற்றப்பட்டதற்கு ஆட்சேபணை ஏதுமில்லை.

2) நத்தம் புறம்போக்கில் யாரும் வேலி அமைக்கக் கூடாது.

3) இரு தரப்பினரும் புறம்போக்கில் உள்ள பாதையை சமமாக பயன்படுத்திக் கொள்ளவும்.

4) மேற்படி இந்நிலத்தில், சிமெண்ட் சாலை மற்றும் இதர பணிகள் தொடங்குவதற்கு முன்பாக வருவாய் துறையினரிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறாக வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் மற்றும் இரு சமூகத்தினருக்கும் இடையேயான புறம்போக்கு நிலப்பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது.

ஆனால், இந்த புறம்போக்கு நிலம், நடைபாதை தொடர்பான பிரச்சினையை மீண்டும் பறையர்கள் கையில் எடுக்கத் தொடங்கினர். 4.4.2014 அன்று கீழ்ப்பட்டி ஜமீன்தார் (நாயக்கர் சமூகம்) ஜனார்த்தன பாண்டியன் மகன் விஜய வெங்கடேஷ் பாண்டியன் முன்னிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்கள் அனைத்தும் அருந்ததியர் சமூகத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ளது. தீர்மானம் 3ல் கோவில் திருவிழாவின் போது நடைபாதையில் (புறம்போக்கு இடம்) கீற்றுக்கொட்டகை இரண்டு தரப்பினரும் போடக் கூடாது. மேலும் பாதைக்கு அருகில் சாமி வைத்து வழிபடுகின்ற காரணத்தால், அருந்ததியர்கள் அவ்வழியே பிணங்களை தூக்கிச் செல்லக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் 4ல் பாதையை ( 12 அடி) தவிர்த்து பறையருக்குச் சொந்தமான இராஜகாளியம்மன் கோவில் இடத்தில் அருந்ததியர்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. மேற்படி, கோவில் இடத்தில் பறையர்கள் கோவில் பாதுகாப்பிற்காக எந்தவித நடவடிக்கை எடுக்க பறையர்களுக்கு உரிமை உண்டு என்றும். அதற்கு அருந்ததியர்கள் எந்த வித இடையூறு செய்ய கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கட்டப் பஞ்சாயத்திற்கு பிறகு, இதற்கு முன் கோட்டாட்சியர் தலைமையில் போடப்பட்ட சமாதான கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எதையும் முன்மொழியவில்லை, கடைப்பிடிக்கவில்லை. கோட்டாட்சியர் முன்னிலையில் இரு தரப்பு சமூகத்தின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீறியே 4.4.2017 அன்று ஜமீன்தார் என்ற சாதிய ஆதிக்கத்தின் துணை கொண்டு, அருந்ததியர் மக்களை கட்டாயப்படுத்தி, அவர்களின் ஒப்பம் பெறப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு, புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக கோவில் பாதுகாப்புச் சுவர் என்ற பெயரில் மதில் சுவரை எழுப்பி உள்ளனர். இராஜகாளியம்மன் கோவிலானது இந்த கட்டப்பட்ட சுவரின் உள்ளே அமைந்துள்ளது. இதன் மூலம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு சுவரை எளிதாக கோவில் பாதுகாப்பு சுவர் எனப் பிரச்சாரம் செய்ய முடிந்தது. இதில், ஒரு விதமான சமூக ஒதுக்குதலையும் மற்றும் ஒதுங்குதலையும் உணரமுடிகிறது. ஏனென்றால், மேலே குறிப்பிடப்பட்ட ஜமீன் கட்டப்பஞ்சாயத்தில் அருந்ததியர்கள், பொதுப்பாதையின் வழியே பிணங்களைத் தூக்கி வருவதால், இராஜகாளியம்மன் கோவிலின் புனிதத் தன்மை நாசப்படுத்தப்படுகிறது என்பதனால் பறையர்கள், கோவிலின் புனிதத் தன்மையை பாதுகாப்பது என்ற பெயரில், இரண்டு சமூகத்தினர் காலங்காலமாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை மறித்து ஊரின் நடுவே தீண்டாமைச் சுவரை கட்டி எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில், தீண்டாமை (ஆக்கிரமிப்பு) சுவர் பற்றிய தகவல் பேரையூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இது தொடர்பாக, வருவாய் ஆய்வாளர் 3.7.2017 அன்று, “தமிழ்நாடு 1905 ஆம் வருடத்து 3 வது ஆக்டைச் சேர்ந்த 7 வது பிரிவின்படிக்கான நோட்டீஸ்” (Tamilnadu Land Encroachment Act 1905) சட்டத்தின் கீழ், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, சந்தையூர், இந்திரா காலனி, பறையர் உறவின்முறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும், 18.7.2017க்குள் சுவரை அகற்றுமாறும் மற்றும் உரிய பதிலை அளிக்குமாறும் குறிப்பிடப்படுள்ளது.

இதற்கு பிறகு, 6.7.2017 பறையர்கள், அருந்ததியர்கள் இடையே கலவரங்கள் மூண்டன. இதனால், இரு சமூகத்தினர் மீதும், பேரையூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுப் பயன்பாட்டில் உள்ள பாதையைத் தடுத்து கட்டப்பட்டுள்ள தீண்டாமை (ஆக்கிரமிப்பு) சுவரின் பிரச்சனையானது தீவிரமடைகிறது.

பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குப்பதிவு செய்கின்றனர். நீதிபதிகள் G.R.Swaminathan J. and K.K.Sasidharan ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. 21.8.2017 அன்று இந்த அமர்வு தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பில், “நான்கு(4) மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புச் சுவரை அகற்றிட வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகம், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு ஆணையிடுகிறது”.

santhiayur arunathathiyar 1

இதன் பிறகு, 18.1.2018 அன்று வட்டாட்சியர் ஓர் ஆணையைப் பிறப்பிக்கிறார். அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், ஏற்கனவே, 3.7.2017 அன்று வழங்கப்பட்ட நோட்டீஸ், மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிப் பேராணை உத்தரவு WP(MP15363/17,நாள்-13.7.2017 ன் படி இந்த உத்தரவு கண்ட நான்கு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து, தமிழ்நாடு 1905 வருடத்திய 3 வது சட்டம் 6 வது பிரிவின் படிக்கான நோட்டீஸ் கடந்த 19.7.2017 அன்று பிறப்பிக்கப்பட்டு, போதிய காலகெடு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மேதகு நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவும் முடிந்து விட்டது.

எனவே, வரும் 29.1.2018 அன்றுக்குள் தாங்கள் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி, ஆக்கிரமிப்புச் சுவரை அகற்றாவிட்டால், ஊராட்சி மன்ற ஆணையர், காவல் துறையினரால் அகற்றுப்படும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதன் படிவம் இந்திரா காலனி, பறையர் உறவின் முறை தலைவர் கருப்பசாமிக்கும், அருந்ததிய உறவின் முறை தலைவர் குருசாமிக்கும் அனுப்பப்பட்டது. மேலும், கிராம நிர்வாக அலுவலர் உரிய முறை ஆவண செய்திட வேண்டுமென்று உத்தரவிட்டது. மேலும் இந்த நகல், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர், மதுரை மாவட்ட ஆட்சி தலைவருக்கு அனுப்பட்டது.

இதற்குப் பிறகு, பறையர் உறவின்முறை தலைவர் கருப்பசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கானது, 30.1.2018 அன்று நீதிபதிகள் N.கிருபாகரன், R.T.தரணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பறையர் உறவின் முறையின் சார்பில், இந்து ஆகம விதிகளின்படி கட்டப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கிராமபூசாரி நியமித்து வழிபட்டு வருகிறோம் என்றும், மேலும் அந்த சுவரானது கோவிலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள மட்டுமே கட்டப்பட்ட கோவில் சுற்றுச்சுவர் என்றும் வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சந்தையூரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடிக்க இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு சுவரை 20.2.2018 அன்று வரை இடிக்கக் கூடாதென்று விலக்கு அளித்தனர்.

சந்தையூர் அருந்ததியர் மக்களின் போராட்டம்: 29.1.2018 லிருந்து

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் சுவர் இடிப்பு உத்தரவை, 4 மாத காலமாக செயல்படுத்தாமல், காலம் தாழ்த்திய மதுரை மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து, 70க்கு மேற்பட்ட அருந்ததிய குடும்பங்கள், கடந்த 29.1.2018 முதல் சந்தையூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலையில் அமைந்திருக்கும் தேன்மலையாண்டி சாமி மலைப்பகுதியில் உள்ள செவிட்டு அய்யனார் கோவில் பகுதியில் குடியேறி, அறப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அன்று முதல் இன்று வரை, சட்டத்தை மீறாமல், கண்ணியத்துடன் கடந்த 30 நாட்களுக்கும் மேல் அறவழியில் போராட்டத்தை வழிநடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் அருந்ததிய இன முதியோர்கள் முதல் சிறு குழந்தைகள், பொதுத்தேர்வு எழுதத் தயாராகும் பள்ளி மாணவர்கள், யுவதிகள், பெண்கள் என வயது அடிப்படையில்லாமல் அனைத்து மட்டங்களில் உள்ளவர்களும் ஒருமித்த கருத்தோடு களத்தில் நின்று, தீண்டாமைச் சுவரை அரசு நிர்வாகம் உடனடியாக இடிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்திப் போராடி வருகின்றனர்.

இவர்களின் போராட்ட வடிவமானது சற்று வித்தியாசமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால், அறப்போராட்டத்தை இந்திரா காலனிப் பகுதியில் மேற்கொள்ளாமல், இந்திரா காலனியிலிருந்து 4 கிலோ மீட்டர் தள்ளி இருக்கக் கூடிய தேன்மலையாண்டி மலையடிவாரத்தில் எந்த விதமான பாதுகாப்புமில்லா வனப்பகுதியில், தீண்டாமைச் சுவரை இடிக்க கோரி, அருந்ததிய கிராம மக்கள் அனைவருமே தஞ்சம் புகுந்தனர். இது வரலாற்றிலே மிக முக்கியமான இடத்தைப் பிடிக்க வேண்டிய போராட்ட முறை என்று சொன்னாலும் கூட தகும். அருந்ததியின மக்கள், ஊரில் தீண்டாமைச் சுவருடன் வாழ்வதை விட, காட்டில் வாழும் விலங்குகளுடன் வாழ்வதே சிறந்தது என நினைத்து வனப்பகுதியில் குடியேறினர். வனப்பகுதியில் குடியேறிய அருந்ததியின மக்களுக்கான தொடர்பும், ஊரின் மற்ற மக்களுக்கும் உள்ள தொடர்பு என்பது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத வனப்பகுதியில் அறப்போராட்டத்திற்கு மத்தியில், 19.2.2018 அன்று சாந்தி - சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் திருமணம் அந்த வனப்பகுதியின் அடிவாரத்திலே நடைபெற்றது. இந்நிகழ்வு அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களிடையே உற்சாகத்தையும். பொதுத் தளங்களில் பெரும் வரவேற்பையும் பெற்றது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் இரண்டு வேலை உணவு மட்டுமே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

வனப்பகுதியின் அடிவாரப் பகுதி என்பதாலேயே, அங்கு பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் எதிர்பார்க்க முடியாத நிகழ்வுகளும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நகர்புற மனிதர்களால் மனதளவில் கூட எண்ணிப் பார்க்க முடியாது. அவ்வாறு சூழ்நிலையே போராட்ட களத்தில் நிலவியது. தேள், பாம்பு போன்ற உயிரினங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றவர்களும், மருத்துவமனையிலிருந்து திரும்பிய பின்னர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் உண்டு. முறையான கழிப்பறை வசதியற்ற, சுகாதாரமின்மை பொருட்படுத்தாது அறப்போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது.

தீண்டாமைச் சுவருக்கு எதிரான தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துவரும் அதேவேளையில், போராட்ட நேரத்தில் அவர்களுக்கான மொத்த வருவாயும் என்பது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் துப்புரவு பணியாளர் (அரசுப்பணி) என்ற முறையில் 6 பேரும், மற்ற அனைவரும் விவசாயக் கூலியாக, ஊரின் மற்ற சாதியினரின் நிலங்களில் பணிபுரிந்து தங்களின் அன்றாட வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், போராட்ட காலங்களில் பணிக்குச் செல்லாத காரணத்தால் அவர்களின் தனித்தனியான வருவாய் தடைப்பட்டுப் போயிற்று.

இவர்களின் நிலையே இப்படி இருக்கையில், கல்வி பயின்று வரும் மாணவர்களின் நிலைமை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. இந்தாண்டிற்குரிய பொதுத்தேர்வினை சந்திக்கும் பள்ளி மாணவர்கள் அனைவரும் போராட்ட நேரத்தில் பள்ளி செல்ல இயலவில்லை. இதனால், அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டு, எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

சந்தையூர், இந்திரா காலனில் உள்ள சுவர் தீண்டாமைச்சுவர் என்று சொல்வதற்கு முக்கிய கரணங்கள்:

பறையர்களால் கட்டப்பட்ட சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்பதற்கு பல உதாரணங்களை அருந்ததியர் மக்களும், அரசு ஆவணங்களும் தெளிவாக உணர்த்துகிறது. அவைகளுள் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை நாம் காண்போம்.

சுவர் கட்டுவதற்கும், முள்வேலி அமைப்பதற்கும் முன்பாக, விளையாடிக்கொண்டிருந்த அருந்ததிய குழந்தைகளின் பந்து, இராஜகாளியம்மன் கோவில் இடத்திற்குள் விழ, அதை எடுக்கச் சென்ற ஐந்து வயது குழந்தையை பறையர் இளைஞர்கள் “ஏய் சக்கிலியப் பயலே ஏன் எங்க இடத்துக்கு வந்த” என்று சொல்லி அடித்திருக்கின்றனர்.

வெளியூரிலிருந்து வந்திருந்த அருந்ததிய இளைஞர் ஒருவர் தெரியாமல் கோவிலை (பொது நிலத்தை) குறுக்கே நடந்து சென்றதற்காக “எப்படிடா? மாட்டுக்கறி திங்குற சக்கிலப்பய எங்கள் கோயில் நிலத்துக்குள் நடந்து போலாம்” என்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

santhiayur arunathathiyar 2

சுவர் கட்டிய பிறகு இரு நாய்கள் சண்டைபோட்டு கொண்டிருக்கிறது. இருநாய்களில் ஒன்று பறையருடையது, மற்றொன்று அருந்ததியருடையது. இதைக்கண்ட அருந்ததிய இளைஞர் ஒருவர், நாய்களை விரட்டுவதற்காக கல் எறிந்திருக்கிறார், அந்த கல் எதிர்பாராத விதமாக பறையரின் நாய்மேல் பட்டுவிடுகிறது. இதைப் பார்த்த பறையர் இளைஞர்கள் “எப்படிடா சக்கிலி பயலே எங்க நாயை அடிச்ச” என்று சொல்லி அடிக்க வர, அந்த இளைஞன் “நான் வேண்டுமென்றே செய்யவில்லை” என்று சொல்லியும், பறையர்கள் அதை ஏற்காமல் அந்த இளைஞனை அடிக்கின்றனர். இதைக் கண்ட அந்த அருந்ததிய இளைஞனின் தாய் ஓடிவந்து, “என் மகன் தெரியாமல் செய்துவிட்டான் மன்னித்து விடுங்கள்” என்று கேட்க, அதற்கு பறையர்கள் “சரி உன் பையன விட்டுடறோம், அதுக்குப் பதிலா உன் மொவள தூக்கிட்டுப் போய் நாலுநாள் வச்சிருந்து அனுப்புறோம்” என்று தெரிவித்திருக்கின்றனர். இதுபோல எண்ணற்ற நிகழ்வுகள் அருந்ததியர்கள் இராஜகாளியம்மன் கோவில் இருக்கும் பொதுஇடத்திற்குள் நுழைந்ததற்காகவும், சாதி வெறியினாலும், அவர்கள் செய்யும் தொழிலின் பெயரினாலும் கொலை வெறித் தாக்குதல் பறையர்களால் நடத்தப்படுகிறது.

விநாயகர் கோவிலை வழிபாடு செய்வதற்கு அருந்ததியர் மறுப்பு தெரிவிப்பதில்லை. அனால் பறையர்கள் இராஜகாளியம்மன் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. ஆக அருந்ததியர் மக்களை ஒதுக்குகின்றனர். மேலும் கோவிலைச்சுற்றி சுவர் கட்டி தங்களை ஒதுக்கிக் கொள்கின்றனர். இதுவே பார்ப்பனியத்தின் தத்துவம் ஆகும். இதையே சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டோரின் மீது செயல்படுத்துகின்றனர். இந்த மனோபாவம்தான் தீண்டாமை என்று நாம் சொல்கின்றோம். ஆக, தலித் ஆதிக்க சாதியான பறையர்கள் அருந்ததியர் மீது தொடுக்கும் அனைத்து வன்முறைகளையும் தீண்டாமைக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க முடிகிறது.

அருந்ததியர் சமூக மக்கள், இறந்த மாட்டின் இறைச்சியை சாப்பிடுகின்றனர், பிணத்தை எரிக்கின்றனர் என்று கூறி, அவர்கள் கோவிலின் அருகில் வந்தால் புனிதத்தன்மை பாதிக்கப்படுகிறது. ஆகவே கோவிலைச் சுற்றி பாதுகாப்பு சுவர் மற்றும் சுற்றுச்சுவர் கட்டியதாக பறையர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இதுவே தீண்டாமைச் சுவர் சொல்வதற்கு முக்கிய மற்றும் பெரும் காரணம் ஆகும்.

தீண்டமைச் சுவரானது எப்பொழுதும் சாதிகளுக்கு இடையே தான் கட்டப்படுகிறது. ஆக அருந்ததியர்களையும் பறையர்களையும் உட்சாதி என்று சொல்லும் கருத்து முற்றிலும் தவறான கருத்தாகும்.

ஊடகமும் - சந்தையூர் மக்களின் போராட்ட மறைப்பும்:

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சந்தையூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினருக்கு எதிராக, பறையர் சமூகத்தினர் கடைபிடித்து வரும் தீண்டாமை குறித்தும், அந்த தீண்டாமையை எதிர்த்து அருந்ததிய மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்தும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்தும், குறிப்பாக இந்தப் பிரச்சனையில் ஊடகங்களை கையாளும் சக்திகள் எவ்வாறு போராட்டக்கள நிலவர தகவலை எவ்வாறெல்லாம் திரித்து வழங்குகின்றன என்பதையும் விளக்க முயல்கிறது, இப்பகுதி.

தலித்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள், ஆணவக்கொலைகள், பொருளாதார ரீதியில் தலித் மக்களை பாதிப்புக்குள்ளாக்குவது, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிகள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை ஒரு முகத் தன்மையுடன் ஊடகம் இதுநாள் வரையிலும் அணுகி வருகிறது என்பது தலித் சிந்தனையாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், அதே நேரம் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மேலும் ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ள அருந்ததியர்கள் மீது நடத்தப்படும் சமூக விரோத செயல்களையும், வன்மங்களையும் எந்த ஊடகமும் செய்தியாகக் கூட வெளியிட மறுக்கின்றனர். இதற்கு அடிப்படை காரணம், சாதியப் படிநிலையில் இறுதியாகவும், இழிதொழிலை செய்பவர்களாக இருப்பதாலே, கழிவுநீர்த் தொட்டி மரண செய்திகள் கூட பெரிய விவாதப் பொருளாக மாறவில்லை.

குறிப்பாக, பறையர் சமூகத்தின் மீது சாதி இந்துக்களால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகள் மட்டுமே செய்தியாக வெளியிடப்பட்டு வருகிறது. கூடுதலாக, அது மட்டுமே தலித் பிரச்சனையாக பாவிக்கப்பட்டு ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது. அதே நேரம், தலித்துகளாக உள்ள பறையர்கள், இன்னொரு தலித்தாக உள்ள அருந்ததியர்கள் மீதும் அரங்கேற்றி வரும் வன்கொடுமைகளை செய்தியாகக் கூட வெளியிட பறையர் சமூகத்தினர் பெருந்தடைக்கல்லாக உள்ளனர். இதற்கு அரசியல் ரீதியாக பல காரணங்களும் கற்பிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, மதுரையில் இயங்கி வரும் எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர், தலித் எழுத்தாளர் ரவிக்குமார் போன்றோர் பெரும் பங்களிப்பை நல்கி உள்ளனர்.

சந்தையூர் அருந்ததியர் மக்கள் போராட்டத்தினை ஜனநாயக விரோத சக்திகளின் தூண்டுதலால் நடத்தப்படுகிறது என்றும்,மேலும் அந்த சுவர் கோவில் சுற்றுச்சுவர் தான் என்றும், தங்களுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி போராட்ட செய்தியினை வெளியிடவிடாமல் தடுக்கும் செயலும் நடந்து வருகிறது.

பறையர் சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் எவிடென்ஸ் கதிர், அடிப்படையில் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலே அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்.

இதுவரையிலும் வெளியான செய்திகளில் ஒன்றிரண்டு செய்திகளைத் தவிர மற்ற அனைத்தும், ஒரு சார்புத் தன்மையுடன் வெளியிடப்பட்டிருப்பதை காண முடியும். பொதுவாக, தலித் பாதிக்கப்படுகையில் அது விவாதப் பொருளாக மாறுவதற்கு சிறு காலம் ஆகும். அதற்கு முக்கிய காரணம், செய்தி நிறுவனத்தின் கொள்கை முதன்மையாக அமையும். அதுமட்டுமின்றி, முக்கியமான மைய நீரோட்ட ஊடகங்கள் அனைத்தும் சாதி இந்துகளால் தலைமையேற்று நடத்தப்படுவதும் ஒரு காரணமாக அமைகிறது. அந்த செய்தியாளர் குழுவில் இருப்பவர்களும் சாதிய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இக்காரணங்களால், தலித்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பல செய்தியாக வெளியிடப்படுவதில்லை. அதிலும், குறிப்பாக, ஒடுக்கப்பட்டவர்களில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ள அருந்ததியர்கள், சக்கலியர்கள், தோட்டி, பகடை என பல பெயர்களில் அழைக்கப்படும் சமூகத்திற்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அனைத்தும் செய்திக்கே தகுதியற்ற ஒன்றைப்போல அணுகப்படுகிறது.

இறுதியில் மக்கள் போராட்டம் குறித்து, மக்கள் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும், ஏன் இதை தீண்டாமைச் சுவர் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்? அங்கு நிலவக் கூடிய சமூக சூழல் எவ்வாறானதாக இருக்கிறது? யார் யாரை ஒடுக்குகிறார்கள், அந்த ஒடுக்குமுறை வடிவம் எவ்வாறானதாக உள்ளது? இதில் பாதிக்கப்படுபவர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் சாமானிய மக்கள் மனதில் எழுகூடும். இந்த கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் செய்திப் பதிவுகள் இடம்பெற்றிருக்கலாம். ஆனால், அந்தப் போராட்டக் களம் பற்றியெல்லாம் செய்தி வெளியிடாமல், அந்தப் போராட்டத்தை மழுங்கச் செய்யும் விதத்திலும், அதை ஒரு சாதாரண போராட்டம் போன்றே ஊடகம் தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளது. இது வரலாற்றில் பிழையாகக் கூட வாய்ப்பு இருக்கிறது.

30.1.2018 அன்று வெளியான தி ஹிந்து தமிழ் நாளிதழில், இரு தரப்பு மக்களையும் மாவட்ட ஆட்சியர் சமாதனப்படுத்தியதாகவும், இரு தரப்பில் உள்ள மூத்தவர்களும், தீண்டாமைச் சுவர் பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்த்துக்கொள்வோம், என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு உடன்படாத அருந்ததியர் மக்கள் சிலர் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு மலைப் பகுதியில் போராட்டம் செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியில் அங்கு நடந்தவற்றை ஒரு புகைப்படத்தை வைத்து பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டதாக கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், அதிகாரிகள் வற்புறுத்தி அருந்ததிய மக்களை இதைப்போன்று புகைப்படம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், அச்சமயத்தில் மாவட்ட ஆட்சியர் மக்களுடன் அமர்ந்து இந்த பிரச்சனை தொடர்பாக பேசவே இல்லை என்ற புகாரும் எழுப்பப்படுகிறது. போராட்ட இடத்திற்கு கூட வராமல் தான் இருக்கும் இடத்திற்கு ஒரு சில மக்களை அழைத்து பேசி அனுப்பி உள்ளார், மாவட்ட ஆட்சியர். இதுபோன்ற நிகழ்வுகளை நிருபர்கள் புலனாய்வு செய்ய நினைப்பதுமில்லை, மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகளை அப்படியே செய்தியாகவும் வெளியிடகிறார்கள். மேலும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்த விசாலமான பருந்து பார்வையும் ஊடகம் பார்க்க மறுக்கிறது, என்பதே உண்மையாகிறது.

ஊடகங்களில் செய்தியை தேர்வு செய்யும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பலரில், சிலருக்கு மட்டும் சமூக சார்ந்த சிந்தனையோட்டம் இருக்கும். அப்படி வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பொதுநலம், சமூக நியதி பற்றி பேசுபவர்களுக்கு ஊடக நிர்வாகம் உரிய இடத்தை வழங்க மறுக்கிறது. அந்த வகையில் சந்தையூர் மக்களின் போராட்டத்தை ஊடகங்களில் விவாதப் பொருளாகவும் மாறாமல் இருப்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. நாம் மேல் பார்த்தவை அவற்றில் சிலவே.

சந்தையூர் அருந்ததிய மக்களின் போராட்டத்தை வெறும் கண்களால் காணாமல், இந்து சாதிக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டும். அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற முற்போக்கு சிந்தனையுடன், சந்தையூர் பிரச்சனையை அணுகினால், தீண்டாமைச் சுவர் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கும். அவ்வகையில் இக்குழுவானது, சந்தையூர் கிராமத்தில் பறையர்கள், அருந்ததியர்கள் மீது பல விதங்களில் தீண்டாமையை கடைப்பிடித்து வந்துள்ளனர். அதன் அதிகப்படியான வடிவமே அந்தச் சுவர். எனவே அந்தச் சுவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, இந்து சாதிய வன்மத்துடன் கட்டமைக்கப்பட்டதால், அது தீண்டாமைச் சுவரே… தீண்டாமைச் சுவரே அது….

பரிந்துரைகள்:

1 ) உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு நிர்வாகம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

2) உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி, சந்தையூரில் எழுப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும்.

3) தங்களை தீண்டாமையில் பாதுக்காத்துக் கொள்ள, கடந்த 48 நாட்களாக, மலையடிவாரத்தில் போராடி வரும் அருந்ததிய சமூக மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களின் உணர்வினை மதித்து, துரித நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டும்.

- அருந்ததியர் கல்வியாளர்கள் வட்டம் (ACAA- Academic Circle for Arunthathiyars’ Action) 

கள ஆய்வாளர்கள்:

அ. ரவிச்சந்திரன்
ஆ. பாரதிதாசன்
இ. காமாட்சி
ஈ. ஆசைத்தம்பி
உ. கௌதமராஜன்

Pin It