சமூக வலைதளங்கள் எங்கும் ஒரே ரத்தத்தின் வாடை. முகம் சிதைந்த குழந்தைகளின் அழுகுரலும் கதறலும் நாள் முழுவதும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. நீண்ட வரிசையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் பிணங்கள் எல்லாம் உயிர்பெற்று நம்மைப் பார்த்து சிரிக்காதா என்ற ஏக்கம் மனதைக் கவ்வுகின்றது. ஒவ்வொரு போரும் குழந்தைகளை கடவுளின் தேசத்திற்கு வலுக்கட்டாயமாக வழியனுப்பி வைக்கின்றது. கடவுள்கள், அவர்களை வழிதவறி வந்தவர்கள் என்று மீண்டும் திருப்பி அனுப்ப மனமற்று தம்முடைய கொடுங்கரங்களில் இறுகப் பற்றி ரத்தம் வழியும் தனது வாயால் முத்தம் கொடுத்து மகிழ்கின்றன. இரத்தவாடையை சகிக்க முடியாத குழந்தைகள் கதறுகின்றார்கள், கடவுளின் முகத்தில் தமது பிஞ்சுக் கால்களால் எட்டி உதைக்கின்றார்கள். பால்குடி மறக்காத குழந்தைகள் ரத்த வாடை வீசும் கடவுள்களைப் பார்த்து மிரண்டு போய் தாயின் அரவணைப்பில் இருந்து தங்களை திருடிக் கொண்டு வந்த இந்தக் கடவுளை நிச்சயம் ஒரு உண்மைக் கடவுள் வந்து பழி தீர்த்து தங்களை விடுவிப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

syria war 1

கடவுள்களுக்கு எப்பொழுதும் போர்களைப் பற்றியோ, பசியைப் பற்றியோ, உழைப்புச் சுரண்டலைப் பற்றியோ கவலை இருப்பதில்லை. அவைகள் தங்களைப் பிரார்த்திக்கும் நபர்கள் நல்ல அடிமைகளாக, விசுவாசிகளாக இருக்கின்றார்களா என்பதை மட்டுமே பார்க்கின்றன. கடவுள்கள் தங்களுக்குள் எப்பொழுதும் சமரசமாகப் போய்க் கொள்கின்றார்கள். அல்லாவின் தேசத்தில் இருக்கும் எண்ணெய்க்கு ஏசுவின் தேசம் உரிமை கொண்டாட முடியும். அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பெட்ரோ டாலர்களை அல்லாவால் மகிழ்ச்சியோடு வரவேற்க முடியும். அதே போல அல்லாவின் தேசத்தில் எண்ணெய்க்காக நடத்தப்படும் பச்சைப் படுகொலைகளை ஏசு ரசித்து மகிழ்வார். கடவுள்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒருநாளும் முரண்பாடு கொள்வதில்லை. எல்லாக் கடவுள்களும் தங்கள் குழந்தைகள் பட்டினியாலும், நோயாலும், கொடும் வறுமையாலும் சாகும்போது அதைப் பற்றி துளியும் கவலை கொள்வதில்லை. கடவுளின் ஆசிபெற்ற கொலைகாரர்கள், தங்கள் விருப்பம் போல கடவுளின் தேசத்திற்கு கணக்கு வழக்கற்று அதன் குழந்தைகளை கொடூரமாகக் கொன்று அனுப்பி வைக்கின்றார்கள்.

அல்லா சியாவையும் ஆதரிக்கின்றார், சன்னியையும் ஆதரிக்கின்றார், அலாவியையும் ஆதரிக்கின்றார். அதுபோல ஐஎஸ்ஸையும் ஆதரிக்கின்றார். அவர்கள் அனைவரும் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாவதை மேல் இருந்து பார்த்து பரவசம் அடைகின்றார். அல்லாவுக்கு மட்டும் அல்ல. உலகில் உள்ள எல்லா கடவுள்களுக்கும் குழந்தைகள் ரத்தம் என்றால் எப்பொழுதும் விருப்பம்தான். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த சிறுதொண்ட நாயனாரும், கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற தனது மகன் ஈசாக்கை பலியிடத் துணிந்த ஆபிரகாமும் இன்னமும் கொண்டாடப்படும் உலகில் குழந்தைகளின் ரத்தம் கேட்கும் கடவுள்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக மிச்சம் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதி மீது சிரிய ராணுவமும், ரஷ்யப் படைகளும் கூட்டாக இணைந்து ஐ.நா. சபை அறிவித்த 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி கொத்துக்கொத்தாய் மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் ஒரு பக்கம் தங்களை மனிதக் கேடயங்களாய் பிடித்து வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களிடமும், அவர்களை அழித்து சிரியாவை சன்னி தீவிரவாதிகளின் பிடியில் மீட்க நினைக்கும் சிரிய அரசுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு மடிந்து கொண்டு இருக்கின்றார்கள். ஒடுக்கப்பட்ட அலாவி பிரிவு முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதை விரும்பாத சன்னி மேலாதிக்கவாதிகள் ஒட்டுமொத்த சிரியாவையும் கைப்பற்றி தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, அமெரிக்கா ஏகாதிபத்தியம், சவுதியின் துணையுடன் சிரிய அரசுப் படைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

மக்களைக் கொன்று போடும் எல்லா முஸ்லிம்களும் அதை அல்லாவின் பெயரால் செய்வதாகவே சொல்கின்றார்கள். குரானின் வரிகளில் இருந்து தங்களது பயங்கரவாத செயல்களுக்கு ஆதாரங்களையும் காட்டுகின்றார்கள். அல்லா யார் பக்கம் நிற்கின்றார் என்பதுதான் இன்னும் பயங்கரவாதிகளால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே உள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு தன் சொந்த மத மக்களையே கொன்று போடத் துணைபோகும் இஸ்லாமிய நாடுகளை அல்லா மகிழ்ச்சியோடு அங்கீகரிக்கின்றாரா? தன் சொந்த மக்கள் கை கால்கள் சிதறி, உடல் சிதைந்து துர்மரணம் அடைவதை அவர் வேடிக்கை பார்த்துக் களிக்கின்றாரா?

உலகில் உள்ள எல்லா மதங்களும் ஆளும்வர்க்கத்தின் கைக்கூலியாகவே செயல்படுகின்றன. மதவாதிகளுக்கு தன் சொந்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் பட்டினியால் சாவதைப் பற்றியோ அவர்கள் வறுமையால் அழிவதைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. தன் சொந்த மத மக்கள் தன்னுடைய பெயரால் அடித்துக்கொண்டு சாவதைப் பற்றி கடவுள்களுக்கும் கவலை கிடையாது. மத வெறியர்களின் பயங்கரவாத செயல்களை எதிர்க்கத் திராணியின்றி கோழைகளாய், அடிமைகளாய் மத விசுவாசிகள் இருக்கின்றார்கள்.

மனிதம் இல்லாத எல்லாத மதங்களும் இந்த உலகில் இருந்து அழித்தொழிக்கப்பட வேண்டும். சிரியாவிலோ, இல்லை உலகில் வேறு நாடுகளிலோ மதத்தின் பெயராலும், கடவுள்களின் பெயராலும் தினம் தினம் கொல்லப்படும் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களுக்கு இந்த மதவாதிகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். மனித உயிர்களை இரக்கமற்று கொன்றுபோடும் கொடியவர்களை மதமும், கடவுளும் வேண்டுமென்றால் இந்த உலகில் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகளாய், எடுபிடிகளாய் இருக்க அனுமதிக்கும். இந்தச் சமூகம் அறிவுபெற்று முற்போக்காக பொதுவுடமையின் சிந்தனையின் வழி மாறும்போது மதத்தையும், கடவுளையும் வைத்து பிழைப்பு நடத்தும் பிற்போக்கு கும்பல் தங்களது இடத்தை காலி செய்துகொண்டு ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அந்த நாளுக்காக மனிதத்தை மதிப்பவர்கள் நேசிப்பவர்கள் காத்துக்கிடக்கின்றார்கள்.

- செ.கார்கி