ஏர்னெஸ்டோவின் காதலி!

தனக்காக காத்திருப்பதாக உறுதியளித்த காதலி சிசினாவை விட்டு பயணம் செய்த ஏர்னெஸ்டோவின் வண்டி கரடு முரடான சாலையில், காற்றை கிழித்து வேகமாக சென்றது. காதலியை பிரிந்த ஏர்னெஸ்டோவின் மனதில் தான் எத்தனை அழகிய பசுமையான எண்ணங்கள். நினைவு அருவி சுழலில் சிக்கி தவிக்கும் மனது பழைய நிகழ்வுகளை சுழல வைத்தது. அழகிய அந்திப்பொழுதில் சிசினாவை சந்தித்த முதல் வேளை ஏர்னெஸ்டோவின் மனதில் பசுமையாய் படர்ந்தது.

Che Guevaraமருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டு பிசானி கிளினிக்ல் வேலை பார்த்து கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாடுவதும் ஜார்ஜ் மாமாவிடம் க்ளைடர் பாடங்கள் கற்பதுமாக இருந்தார். அர்ஜென்டினா முழுவதும் மோட்டார் பயணம் செய்து வந்திருந்ததால் உலகை சுற்றிப்பார்க்க ஆசை அலைமோதிய காலகட்டமது. அடுத்த பயணத்திற்கான திட்டங்களை தயாரித்துக்கொண்டே இருந்த அந்த அக்டோபர் மாத கடைசியில் ஏர்னெஸ்டோவின் வாழ்வில் புதிய இனிய அனுபவம் வந்தது.

கொன்சலஸ் அகுலியார் அவர்களுடைய மகள் கார்மன் திருமணத்திற்காக ஏர்னெஸ்டோ குடும்பத்தினர் கொரடோப பயணம் செய்தனர். அந்த திருமண விருந்தில் மரியா டெல் கார்மன் "சிசினா" பெரேரோ என்ற 16 வயது மங்கையை கண்டார். கொரடோபவின் மிகவும் வசதி படைத்த வீட்டு மங்கையான சிசினா அழகாய் இருந்தார். சிறுவயதில் ஏர்னெஸ்டோவும் சிசினாவும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாலும் நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்தபோது விழிகள் வீழ்ந்து, இதயங்களில் இறகுகள் முளைத்தது. இருவரின் பார்வையில் இதயங்கள் இடமாறிய வேளையில் "ஏர்னெஸ்டோவின் மீது மின்னல் பாய்ந்த உணர்வு" ஏற்பட்டதாக இந்த நிகழ்வை கண்ட பெப்பெ அகுல்யர் விவரிக்கிறார். முதல் முறையாக காதல் வயப்பட்டார் ஏர்னெஸ்டோ.

ஏர்னெஸ்டோவால் சிசினாவும் கவரப்பட்டார். அவரது அழகிய உருவமும், கலகலப்பும் வெகுளியான பேச்சும், கள்ளமில்லா மனதும் சிசினாவை கவர்ந்தது. "அவரது அழுக்கான கசங்கிய ஆடைகள் சில வேளைகளில் பிடிக்காவிட்டாலும் எங்களை சிரிக்க வைத்தன... அதை ரசித்து ஏர்னெஸ்டோவும் சிரித்து மகிழ்ந்தார்" என சிசினாவின் வார்த்தைகளில் அவர்களது நெருக்கம் வெளிப்பட்டது. சிசினா முதிர்ச்சியடையாதவராக இருந்தாலும் கற்பனை வளமும் புத்தி கூர்மையும் மிக்க பெண்ணாக காணப்பட்டார். சிசினா தான் தனது வாழ்வில் இணையப்போகிற பெண் என ஏர்னெஸ்டோ நம்பினார். ஏர்னெஸ்டோ காதலில் தீவிரமானார்.

தேவதை கதைகளில் வருகிற காதல் போன்றது ஏர்னெச்டோவின் காதல். சிசினா அர்ஜெண்டினாவில் மிகவும் வளம் கொழித்த செல்வந்தரின் மகள். அவர்களுக்கென இருந்த சுண்ணாம்பு சுரங்கம், அரண்மனை போன்ற வீடு, மிகப்பெரிய தோட்டம் என செழிப்புற வாழ்ந்தவர். ஏர்னெஸ்டோ சாதாரணமான குடும்பத்தை சார்ந்தவர். சிசினாவும் அவரது பெற்றோரும் ஏர்னெஸ்டோ குடியிருந்த பழைய வீட்டிற்கு அருகாமையில் குடியிருந்தனர். கொரடொபாவிற்கு வெளியே அவர்களுக்கு சொந்தமான "மலகுயெனோ" என்ற மாளிகையில் கோடைவிடுமுறையில் கழித்த வேளை ஏர்னெஸ்டோ மோட்டார் பயணத்தில் சிசினாவை பார்க்க சென்றிருந்தார்.

ஏழு நாட்களும் அவர் தங்கியிருந்த அந்த அழகு மாளிகை 2000 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தில் அமைந்திருந்தது. அரேபிய குதிரைகள், 2 போலோ விளையாட்டு மைதானம், சுண்ணாம்பு சுரங்க்க தொழிலாளர் குடியிருப்பு என பரந்து விரிந்த அந்த இடத்தில், எழிலாய் நிமிர்ந்து நின்றது அழகிய அரண்மனை போன்ற அந்த மாளிகை. ஞாயிற்றுக் கிழமைகளில் சிசினாவின் குடும்பம் அருகிலுள்ள தேவாலயத்தில் சென்று வழிபடுவது வழக்கம். தேவாலயத்தில் அவர்கள் குடும்பம் மற்ற தொழிலாளர்களிடம் சேராது தனியாக ஜெபங்களில் பங்கு பெற தனி வாசல், அமர்ந்து கொள்ள தனியறை என ராஜகுடும்பத்தின் அனைத்து வகை ஆடம்பரமும் நிறைந்தது சிசினா வளர்ந்த சூழல். இந்த அழகிய ராஜகுமாரி மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக சிசினாவும் ஏர்னெஸ்டோவை மிகவும் நேசித்தார். ஏர்னெஸ்டோவுக்கு அந்த மாளிகையின் செல்வந்த உபசரணைகள் தராத இனிய உணர்வை மனதிற்கு இனிய காதலியோடு இருந்த நேரங்களும் நினைவுகளும் தந்திருந்தது.

சிசினாவின் குடும்பத்தினர் ஏர்னெஸ்டோவை ஒரேயடியாக நிராகரிக்கவில்லை. சில விடயங்களில் சிசினாவிற்கு பொருத்தமானவராக ஏர்னெஸ்டோவை பார்த்தனர். அவரது எளிமையான தோற்றம் சிசினா குடும்பத்தினரை கவர்ந்தது. ஏர்னெஸ்டோ இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பேசிய போதும், அவரது பயண அனுபவங்களை பகிர்ந்த வேளையும் அனைவரும் கவனமாக கேட்டனர். அப்போதெல்லாம் சிசினாவின் கண்களில் ஒளி படர்ந்து கன்னங்கள் சிவந்து புன்னகை வெளிப்பட்டது.

சிசினாவின் பெற்றோர் ஏர்னெஸ்டோவின் பயணங்கள் பற்றி அதிகம் கவலை கொள்ளவில்லை. அவர்களும் உலக அறிவு படைத்து, பன்முக கலாச்சாரத்துடன் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையுடன் இருந்தது அதற்கு காரணம். பிற்போக்கு தன்மையுடைய சமுதாயத்தில் அவர்கள் வேறுபட்ட மனிதர்களாக காணப்பட்டனர் அதனால் மற்றவர்களுக்கு சிசினா குடும்பத்தினர் வாழ்க்கை வித்தியாசமானதாக தென்பட்டது. சிசினாவின் தந்தையார் ஆபத்தான அடர்ந்த அமேசான் காடுகளில் பயணம் செய்திருந்தார். சாலைகள் சரியாக அமையாத காலத்தில் 4 சக்கர வாகன பந்தயத்தில் கலந்துகொண்டிருந்தனர். சிசினாவின் பாட்டியின் மேற்பார்வையில் முதல் விமானத்தை ஓட்டிய பெருமை கொண்டவர். சிசினாவின் மாமா ஒருவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களால் மூழ்கடிக்கப்பட்ட யுத்த கப்பல் ஒன்றில் பலியானார். இப்படி பன்முக தன்மையுடைய குடும்பம் சிசினாவுடையது.

ஏர்னெஸ்டோவுக்கு சிசினாவின் குடும்வ சூழல் சவாலாகவும் அதே வேளை மனதை கவரவும் செய்தது. காதலியை காண அடிக்கடி கொரடோபா நோக்கி பயணம் போனார் ஏர்னெஸ்டோ. 1951ல் தொடர்ந்து மலகுயெனோவிலும், நகரில் அமைந்த வீட்டிலுமாக பலமுறை சிசினா மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. சிசினாவின் உறவினர்களின் ஏர்னெஸ்டோவை அதிகம் விரும்பியவர் சிசினாவின் மாமா மார்டின். மலகுயெனோவில் அவர் அரேபிய குதிரைகளை வளர்த்து வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேசநாடுகளின் படைகளை விரும்பி ஆதரவு தெரிவிக்க இவர் மட்டும் நாஜிப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இரவு முழுவதும் விழித்திருந்து ஏர்னெஸ்டோ, சிசினா மற்றும் நண்பர்கள் விடியும் வரை நடனமாடுவதற்கு பியானோ வாசித்த பாசமான மனிதர் அவர்.

காதல் வளர, ஆசையும் வளர்ந்தது. ஏர்னெஸ்டோ சிசினாவை திருமணம் செய்யவும், தேனிலவு செல்ல தென் அமெரிக்கா முழுவதும் "காரவேன்" பயணம் செல்ல தூண்டினார். பதினாறு வயது மங்கையான சிசினா முடிவெடுக்க முடியாமல் தத்தளிக்க, பெற்றோர் இந்த திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை. இதன் பின்னர் ஏர்னெஸ்டோவுக்கும் சிசினா குடும்பத்தினருக்குமிடையே இடைவெளி உருவானது. விருந்து உபச்சார மேசையில் ஏர்னெஸ்டோவின் முக்கியத்துவம் குறைய துவங்கி, வீண் விவாதங்கள் அவ்வப்போது தென்பட்டது. குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிடினும் ஏர்னெஸ்டோ-சிசினா காதல் இரகசிய சந்திப்புகளில் வளர்ந்தது.

செவிலியர் சான்றிதழ் பெற்ற ஏர்னெஸ்டோ கப்பலில் சில காலம் வேலை பார்த்தார். துறைமுகத்தில் கப்பல் நிற்கிற சிறிது இடைவெளியில் சிசினாவின் கடிதம் கிடைத்தால் கொண்டு சென்று தர அவரது தங்கை செலியாவை அடிக்கடி துரத்துவது ஏர்னெஸ்டோவுக்கு வாடிக்கை. ஓடி வரும் தங்கையின் கைகளில் கடிதம் இருப்பதை பார்க்கும் வேளைகளில் அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. சிசினாவின் தொடர்புகள் குறைந்து கப்பலில் வேலை பார்ப்பது விருப்பமில்லாமல் வேலையை விட்டு நீங்கி மருத்துவ படிப்பை தொடர்ந்தார். அவருக்கும் சிசினாவுக்கும் காதலில் எந்த பிரச்சனியும் இருப்பதாக குடும்பத்தினரிடம் ஏர்னெஸ்டோ வெளிப்படுத்தவில்லை. சிசினாவை காதலிப்பதில் ஏற்பட்ட அழுத்தங்கள் ஏர்னெஸ்டோவின் மனதை வாட்டியது.

இப்படியான ஒரு சூழலில் 7 நாட்கள் இனிதாக காதலியுடன் கழித்து விடைபெற்ற காதலர் கண்களும் நெஞ்சமும் ஈரமானது இயற்கையே. காதலியை சந்தித்த நிகழ்வுகளை மனதில் சுமந்ததால் பயணத்தின் தூரத்தை ஏர்னெஸ்டோ உணரவில்லை. ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி நெகோசியா என்ற இடத்தில் ஆல்பர்டோவின் கல்லூரி தோழியின் வீட்டை நோக்கி சென்றது.

(வரலாறு வளரும்)

-திரு