ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் நாடே பரபரப்பாக இருக்கிறது.. திடிரென்று பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தலித்துகளின் பிரச்சனையை பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது இந்திய அரசியலில் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது..

mayawatiஎப்போதும் போல மாயாவதியின் ராஜினாமாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது.. . எல்லோருக்கும் இப்போது எழும் ஒரே கேள்வி மாயாவதியின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் எதற்கு இவ்வளவு அவசரமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது தான்.. தலித் பிரச்சனையை பேச மறுப்பதால் என்று காரணம் சொன்னாலும் அதை தாண்டியும் சில காரணங்கள் தென்படுகின்றன..

தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழ:

1985 பிஜ்னோர் இடைதேர்தல் தோல்வியில் மாயாவதியின் தேர்தல் அரசியல் வாழக்கை தொடங்கியது.. 1989-ல் நாடாளுமன்ற உறுப்பினர், 1995 , 1997 , 2002, 2007-ல் முதல்வர் என வீறுநடை போட்ட மாயாவதியின் அரசியல் வாழ்க்கை 2012-க்கு பிறகு தொடந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.. கடைசியாக 2017-ல் நடந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஎஸ்பியில் வெறும் 19 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.. தான் இழந்த அரசியல் செல்வாக்கையும் மக்கள் செல்வாக்கையும் மீட்டெடுக்கவே இப்போது பதவியை துறந்திருப்பார் என்று நினைக்கிறன்.. இதன்முலம் கட்சியை பலப்படுத்த அவருக்கு கூடுதல் காலம் கிடைத்துள்ளது..

தலித் மற்றும் சிறுபான்மையரின் நம்பிக்கை பெற:

தலித்துகளின் வாழ்வியலை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட கட்சி 2007-ல் பிராமண கட்சிகளோடு கூட்டணிவைத்து ஆட்சியை பிடித்தது.. 2007-12 இடைப்பட்ட காலத்தில் பிரமணர்கள் மற்றும் நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தில் கட்சியும் ஆட்சியும் முழுவதுமாக கட்டுண்டு கிடந்தது.. இது தலித் மற்றும் சிறுபாண்மை மக்களிடம் மாயாவதியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதற்கு சமீபத்திய உதாரணம் கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதியில் முஸ்லீம் அல்லாதவரை நிறுத்தி பாஜக வெற்றி பெற்றது.. முஸ்லீம் மற்றும் தலித்துகளின் வாக்குவங்கியை பாஜக இப்போது அறுவடை செய்ய தொடங்கியுள்ளது.. இழந்த தன்னுடைய வாக்குவங்கியை மீட்டெடுக்க வேண்டிய தேவையும் அவசியமும் இப்போது மாயாவதிக்கு ஏற்பட்டுள்ளளது.. மீண்டும் தீவிர மனு எதிர்ப்பு அரசியலில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது..

மாநில அரசியலில் கூடுதல் கவனம்:

2017 சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முதல்வரான பிறகு தலித்துகள் மற்றும் சிறுபான்மையர்கள் மீதான தாக்குதல்களும் படுகொலைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.. . இடஒதிக்கீடு ரத்து, பட்ஜெட்டில் கல்விக்கான நிதி குறைப்பு, ராமர் கோவில் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் என உத்தரபிரதேசம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது.. இந்த சூழலில் மத்தியில் கவனத்தை குவிப்பதைவிட மாநிலத்தில் மொத்த கவனத்தையும் குவிக்க வேண்டிய அவசியம் மாயாவதிக்கு முன்பைவிட இப்போது கூடுதலாக ஏற்பட்டிருக்கிறது ..

2019 நாடாளுமன்ற தேர்தல்:

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு தேசிய கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி கொண்டிருக்கின்றன.. பிஎஸ்பிக்கும் கணிசமான வாக்குகள் தேசிய அளவில் இருக்கிறது.. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சிதறி கிடக்கும் வாக்குகளை ஒன்றுபடுத்த வேண்டும்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே மாயாவதி பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சுக்கள் எழுந்தன.. இந்திய அளவில் தலித் மற்றும் சிறுபான்மை கட்சிகளை இணைத்து 2019 தேர்தலில் மாயாவதி பிரதம வேட்பாளராக களமிறங்கவும் வாய்ப்பிருக்கிறது.. அதற்காக தன்னையும் தன்னுடைய தொண்டர்களையும் தயார்படுத்த இந்த ராஜினாமா மாயாவதிக்கு பயன்படலாம்..

ஆடம்பரம், ஊழல், அளவிற்கு அதிகமான சொத்து குவிப்பு, பார்ப்பனர்களோடு சமரசம், என நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு பெண்ணாக, தலித்தாக, கடந்துவந்த பாதையும், இழப்புகளும், அவர் அடைந்த தொலைவுகளும் அதிகமானவை.. தோல்விலிருந்து அரசியல் புள்ளியை தொடங்கி தொடர் வெற்றிகளை தனதாக்கியவர்.. மீண்டும் தொடர் தோல்வியிலிந்து வெற்றிப்பாதைக்கு திரும்புவார்.. அதற்கு இந்த ராஜினாமா பயன்படும்..

"மாயாவதி இந்திய ஜனநாயகத்தின் அதிசயம்" என்றார், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்.. உண்மைதான் புரிந்தவர்களுக்கு புரியாதவர்களுக்கும் அவர் எப்போதும் அதிசயம்தான்..

- மணிகண்டன் ராஜேந்திரன்