இரவல் அரசு :

“அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று பாடி நடித்த எம்ஜிஆரின் வழி வந்த இன்றைய அஇஅதிமுக அரசு தொட்டதெற்கெல்லாம் மைய அரசிடம் அஞ்சி அஞ்சி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் சாசனப்படி மாநில அரசின் தலைவராக ஆளுநர் இருந்தாலும் நடைமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற முதல் அமைச்சரே அனைத்து அதிகாரங்களும் கொண்டவர். அரசின் அன்றாட நிகழ்வுகள் முதல் மிக முக்கிய கொள்கை முடிவுகள் வரை முதல் அமைச்சரின் கண்னசைவிற்கு ஏற்ப நடக்கும். அந்த முதல்வர், அவர்தம் அமைச்சரவைக் குழு கூடி எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் மாநில அரசின் நடைமுறையில் இறுதி முடிவாக இருக்கும். இப்படி இறுதி முடிவு எடுக்கக்கூடிய இடத்தில் உள்ள முதலமைச்சருக்கென்று, அவர் சார்ந்த கட்சிக்கென்று கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இருக்கும். மக்கள் செல்வாக்கு பெற்று ஆட்சிக்கு வரும் அரசாங்கம் மக்களுக்கு தாம் அளித்த வாக்குப்படி, கொள்கைப்படி கோட்பாட்டின்படி ஆட்சி நடத்துவார்கள்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள், காங்கிரஸ், பாசக, தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கங்கள் என்று தங்களுக்கான தனித்தனி கொள்கை கோட்பாடுகளில் இயங்கும் இயக்கங்கள் உண்டு. இதில் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற கட்சிகள் வழக்கமான அரசாங்க நடைமுறைகளோடு தங்களின் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுப்பது வழக்கம். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தவரை மைய அரசும் காங்கிரசை சார்ந்ததாக இருந்ததால் பல விடயங்களில் மாநில அரசு மைய அரசுக்கு விட்டுக் கொடுத்து போக வேண்டி இருந்தது. ஆனாலும் காமராசர் என்கிற மிகப்பெரிய ஆளுமை இங்கே முதல்வராக இருந்ததால் மக்கள் நலனுக்கான திட்டங்களை மைய அரசிடம் பேசியே கொண்டுவர முடிந்தது. பின்னால் ஆட்சிக்கு வந்த திமுகவின் மூன்று ஆட்சிக்காலங்கள் மைய அரசோடு போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. போராடி மாநில அரசிற்கான உரிமைகளைப் பெற வேண்டி இருந்தது. அப்படி பெற்ற ஒன்றுதான் சுதந்திர நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமை. அதற்கு முன்னதாக ஆளுநர் மட்டுமே குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் இரண்டிலும் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்று வந்தனர். அடுத்து அவசர நிலை பிரகடனத்தின் போது தமிழக அரசு மட்டுமே இந்திராவை எதிர்த்தது. அவசர நிலை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட்ட ஒரே கட்சி திமுக தான். அதுபோல இரண்டுமுறை ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளான இயக்கமும் திமுக தான். இப்படி பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்னும் ஏன் திமுக 1967 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடிக்கும் முன்பே இங்கே எதிர்க்கட்சியாக இருக்கும் போது மைய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து களம் கண்ட கட்சி.

modi and eps

அடுத்து அஇஅதிமுக, எம்ஜிஆர் மைய அரசை கலைஞர் அளவிற்கு பெரிதாக எதிர்க்காவிட்டாலும் மைய அரசுடன் ஒருவிதமான இணக்கத்துடன் ஆட்சி நடத்தினார். சட்டமன்ற தேர்தல் என்றால் அஇஅதிமுகவை முன்னுறுத்தியும் நாடாளுமன்ற தேர்தல் என்றால் காங்கிரசை முன்னிறுத்தியும் தொகுதிகளைப் பங்கிட்டு, வெற்றி பெற்று எப்போதும் மைய அரசுடன் ஒத்துப் போகும் அரசை நடத்தினார். காங்கிரசும் எம்ஜிஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை உணர்ந்து மாநில அரசின் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலிதாவைப் பொறுத்தவரை, சமீப கால அரசியல்வாதிகளில் மிகவும் சக்தி வாய்ந்த பிராந்திய தலைவராக இருந்தார். காங்கிரஸ், பாசக இரண்டோடும் மோதி இருக்கிறார். நரசிம்மராவ், சோனியா, அத்வானி, வாஜ்பாய் மற்றும் மோடி என்று அகில இந்திய தலைவர்களை தன்னை நோக்கி இறங்கி வர வைத்திருக்கிறார். காவேரி விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்தது, சோனியாவை விழுப்புரம் கூட்டத்தில் காக்கவைத்து புறக்கணித்தது, அத்வானிக்கு “செலக்டிவ் அம்னீஷியா” என்று அதிர வைத்தது, வாஜ்பாய் அரசை ஒரு வாக்கில் கவிழ்த்தது இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு வடக்கோடு அவர் மல்லுக்கட்டியதற்கு. ஆனால் ஜெவுக்கு அடுத்த இரண்டு முதல்வர்களும் மைய அரசின் வலையில் முழுதாக சிக்கிவிட்டார்கள் என்றால் அது மிகையல்ல.

ஜெ, அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்தே தமிழக அரசானது மைய அரசின் கட்டுபாட்டில் சென்றுவிட்டது. ஜெ எதிர்த்த உதய் மின் திட்டம், மதுரவாயல் பறக்கும் சாலை மற்றும் ஜிஎஸ்டி மசோதா என்று பலவற்றிற்கும் சத்தம் போடாமல் ஒப்புதல் அளித்து தலையாட்டியது பன்னீர்செல்வம் அரசு. பன்னீர்செல்வம் மோடியிடம் குனிந்து வளைந்து கும்பிடு போட்டாரென்றால் அடுத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சான் கிடையாக படுத்தேவிட்டார். முதல்வரும் அவர்தம் அமைச்சரவை சகாக்களும் டெல்லியே கதி என்று கிடக்கின்றனர். வாரத்தில் ஏதாவதொரு அமைச்சர் டெல்லியில் யாரையாவது சந்திக்கிறார். பதவியேற்ற நூறு நாட்களில் முதல்வர் இருமுறை பிரதமரை சந்தித்துவிட்டார். மைய அரசின் உத்தரவுகள் சிரமேற்பட்டு செய்யப்படுகின்றன. “ முதலாளி காலால் இட்ட வேலையை, அடிமை கையால் செய்தான்” என்று சொல்வதைப்போல “முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாகனங்களில் சுழல்விளக்கு அகற்றப்பட வேண்டும் என்று மைய அரசு சுற்றறிக்கை அனுப்பியவுடன், காலம் இருந்தும், ஊருக்கு முந்தி, முதல்வரே தன் கையால் சுழல் விளக்கை அகற்றினார்.

“ஆட்டுக்குத் தாடி எதற்கு? மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு?” என்று மைய அரசிற்கு எதிராக முரசு கொட்டிய அறிஞர் அண்ணாவின் பெயரிலான கட்சியின் ஆட்சியை நடத்தும் முதல்வர், பல்கலைக்கழக துனைவேந்தர்களுக்கான நியமன ஆணையினை தற்காலிக ஆளுநர் தானே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதை வேடிக்கை பார்க்கிறார். சக அமைச்சரின் வீடிற்குள் வருமான வரித்துறை சோதனை நடத்தியதையும் அந்த அமைச்சரை அந்த துறை தன் அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்ததையும் ஒன்றுமே நடவாதது போல கடந்து செல்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக தடையின்றி நடந்த மெரீனா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு அதை ஏற்பாடு செய்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஜெயலலிதா கூட இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்கவில்லை. இப்படி ஜெயலிதாவின் நிலைப்பாடுகளுக்கு நேரெதிரான நிலைப்பாடுகளை எடுக்கும் மாநில அரசு தானாக இயங்குவதாகத் தெரியவில்லை.

பசுவதைத் தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மாட்டுக்கறி சாப்பிடும் சிறுபான்மை மதத்தினருக்கும் இந்துக்களில் பெரும்பானமையினருக்கும் எதிரான மாட்டுக்கறி அரசியலை கிளப்பிவிட்டிருக்கும் மைய அரசுக்கு எதிராக பல மாநில முதல்வர்கள் நேரடியாக களத்தில் இறங்கும்போது நம் முதல்வர் மட்டும் இன்னும் அந்த அரசாணையை படிக்கவில்லை என்கிறார். மைய அரசுக்கு எதிராக அமைச்சர்கள் யாரும் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். இப்படி எல்லாவற்றிலும் மைய அரசுக்கு அனுசரணையாக, பாசகவினரின் மனம் கோணாமல் நடக்கும் முதல்வரை பாசக தன் சொந்த கட்சியில் கூட கண்டிராது. ஆதலால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசை மோடியின் இரவல் அரசு என்று சொன்னால் மிகையாகாது. வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை நீங்கள் செயற்படுத்துங்கள் என்ற பாசகவின் அழுத்தத்திற்கு அடி பணிந்த அடிமை அரசாக எடப்பாடி பழனிச்சாமியும் அதே வருமான வரித்துறை நடவடிக்கைக்கு பதிலாக கிடைத்த இரவல் அரசாக மோடியும் தமிழக அரசை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

காவிமயமாகும் கல்வி

கடந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்களிக்கப்பட்ட நீட் தேர்விலிருந்து இந்த ஆண்டும் விலக்கு அளிக்க மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்ட பின்னர் கடந்த மே மாதம் பல்வேறு அத்துமீறல்களுடன் நீட் தேர்வு நடந்து முடிந்தது. ஆரம்பத்தில் “பொதுப் பாடத்திட்டம் இல்லாத ஒரு நாட்டில் பொதுவானத் தேர்வு எப்படி சாத்தியப்படும்?” என்று கேட்டு நீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம் பாசக ஆட்சிக்கு வந்தவுடன், அது சொன்ன காரணம் அப்படியே நீடிக்கும் போதும் , நாடு முழுதும் நீட் தேர்வு நடத்தி மருத்துவ மாணவர்களைச் சேர்க்க மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆரம்பத்தில் மாநில பட்டியலிலிருந்த கல்வி அவசர நிலை காலகட்டத்தின் போது மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டதே தவறு, மீண்டும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் மாநில கட்சிகளின் கருத்தாக உள்ளது.

பல்வேறு பண்பாடு பல்வேறு பழக்கவழக்கங்கள் கொண்ட இந்தியாவில் பொதுவான கல்வி என்பது சாத்தியம் இல்லாதது. அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் இன்ன பிற உலகளாவிய பாடங்களோடு அந்தந்த மக்களின் சொந்த மொழியையும் வரலாற்றையும் அரசியலையும் போதிப்பதுமே சரியான கல்விமுறையாகும். அறிவியலை, கணிதத்தை, தொழில்நுட்பத்தை இரவல் வாங்கலாம் மொழியை, வரலாற்றை, அரசியலை இரவல் வாங்கக் கூடாது. பல்வேறு இனக்குழு மக்கள் வாழும் இந்தியாவில் ஒரே மொழியை, வரலாற்றை, அரசியலை படிப்பது என்பது பெரும்பான்மைக்கு சிறுபான்மை அடங்கி போகும் போக்கையே ஊக்குவிக்கும். எப்படி நாடு தழுவிய பாடத்திட்டத்தை கொண்டுவர முடியாதோ அதுபோல நாடு தழுவிய தேர்வு முறையை கொண்டு வர முடியாது என்பதை ஆளும் மைய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாடு தழுவிய பொதுத் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் சுமை. டெல்லியில் சகல வசதிகளோடும், பயிற்சி வகுப்பு வழிகாட்டுதலோடு, கடிவாளம் கட்டிய குதிரை போல, தூங்கும் நேரம் தவிர புத்தகத்தை புரட்டுவது ஒன்றையே வேலையாகக் கொண்ட மேல் தட்டு மாணவனோடு, ஆசிரியர் இல்லாத அரசுப்பள்ளியில் படிக்கும், காலையும் மாலையும் விவசாய வேலையோ கூலி வேலையோ செய்து, நேரம் மீதி இருந்தால் புத்தகம் தொடும் குக்கிராம, முதல் தலைமுறையாக படிக்கும் மாணவனும் போட்டி போட வேண்டும் என்பது “குஸ்தி பயில்வானோடு சோத்துக்கு செத்தவனை சண்டையிடச் சொல்வது” போல ஆகும்.

பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு அரசுத் இறுதித் தேர்வே “முடவனுக்கு எட்டாத கொம்புத் தேன்” போல தான் . கிராமப்புற பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம் போன்ற கடின பாடங்களுக்கு கூட ஆசிரியர்கள் இருப்பது இல்லை, அவர்களாகவே படித்து, அவர்களாகவே பயிற்சி பெற்று இறுதித் தேர்வை எழுதுகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலை என்பது “ தாய் ஆமை கடற்கரையிலிட்டு சென்ற முட்டைக்குள் இருக்கும் குஞ்சுகளைப் போலத்தான்”. ஆமைக்குஞ்சுகள் தானாக முட்டி முட்டி வெளிவர வேண்டும், சூரியனின் வெளிச்சம் பார்த்து கடலுக்கு சென்றடைய வேண்டும். வேறு வெளிச்சம் பார்த்து போனால் வழி தவறி அடிபட்டு சாக வேண்டும். இப்படித்தான் கிராமப்புற மாணவர்களும் வழிகாட்ட ஆளின்றி தானாக படிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு மாநில அளவிலான நுழைவுத் தேர்வே நீதிக்கு புறம்பானது, சமத்துவத்துக்கு எதிரானது என்று எண்ணித்தான் 2006 ல் நுழைவுத் தேர்வை நிறுத்தியது அன்றைய திமுக அரசு. இப்போது சமூக சமத்துவத்தில் அக்கறை இல்லாத இடஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று சொல்லும் மேல்தட்டு வர்க்கத்தால் ஆட்டுவிக்கப்படும் மோடி அரசு நீட் தேர்வின் மூலம் அடித்தட்டு மக்கள் படித்து மேலே வருவதை, மருத்துவர் ஆவதை நீட் எனும் அணை கட்டி தடுத்து இருக்கிறது. அடுத்தடுத்து இட ஒதுக்கீடு நிறுத்தம், குலக்கல்வி முறை என்று ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து பழையபடி கல்வியின் குடுமியைப் பிடிப்பதே காவிகளின் நோக்கம். என்ன ஆகப் போகிறதோ நம் அடுத்த தலைமுறை அடித்தட்டு வர்க்கம்?

- கோ