Veeramani, Nedumaran, Ramdoss and Vaiko

தோழர்களே, உலகிலே பல நாடுகளில் போர் மேகங்கள் கவிந்து துப்பாக்கி ஓசை கேட்டுக் கொண்டு இருந்தாலும் கூட, அந்தப் போருக்குச் சிறிது இடைவெளி கொடுப்பதற்காகக் கிறிஸ்துமஸ் நாள் அன்று போர் ஓய்வு கடைப்பிடிக்கப் படுகிறது. கிறிஸ்துமஸ் திருநாள் அன்று துப்பாக்கிகள் ஒலிப்பது இல்லை.

டிசம்பர் 24 ஆம் நாள் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்காக - மட்டக்களப்பில் புனித மேரி தேவாலயத்தில் மண்டியிட்டவர்களாக, ஜோசப் பரராஜசிங்கம் அவர்களும், அவரது துணைவி யார் சுகுணம் அம்மையார் அவர்களும் ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள். மட்டக்களப்பு தேவாலயத்தின் ஆர்ச் பிஷப் கின்ஸ்லி சிவம் பிள்ளை அவர்களுடைய தலைமையிலே அந்த வழிபாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிற பொழுது குண்டுகள் பாய்கின்றன - ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருக்கு அருகிலேயே இருக்கக்கூடிய சுகுணம் அம்மையார் மீதும் குண்டுகள் பாய்கின்றன. தேவாலயத்திலே இரத்த வெள்ளம். கருணையை, அன்பை, பரிவைப் போதிக்கக்கூடிய இடத்திலே சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இலங்கைத் தீவிலே மட்டும் அல்ல, தமிழ் ஈழத்தில் மட்டும் அல்ல, இந்தச் செய்தி பரவியவுடன் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இடி விழுந்ததைப் போலத் தவிக்கிறார்கள்.

இந்த வேளையில் தான் விடுதலைப் புலிகளே இந்தப் படு கொலையை நடத்தி விட்டார்கள் என்று புதிதாக அமைந்து இருக்கக் கூடிய மகிந்த ராஜபக்சே அரசாங்கத்தினுடைய இராணுவ அமைச்சகம் கருத்துச் சொல் கிறது.

நான் நடுநிலையாளர்களைக் கேட்கிறேன். நீங்கள் இதுவரை வைத்துக் கொண்டு இருக்கின்ற கருத்துகளைச் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து விட்டுக் கேளுங்கள். ஓர் எளியவனாகக் கேட்கிறேன். இந்த மண்ணிலே என்றைக்கும் அமைதி தவழ வேண்டும் என்று பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கக்கூடிய ஒரு திராவிட இயக்கத்தின் தொண்டனாகக் கேட்கிறேன். அறிவாசான் பெரியாருடைய திடலில் இருந்து கேட்கிறேன். நான் கருத்துகளைப் பேசி முடிக்கிற வரை உங்களுடைய கருத்துகளை ஒரு பக்கத்திலே ஒதுக்கி வைத்து விட்டு, திறந்த மனதோடு எங்களுடைய கருத்துகளைக் கேட்டு உங்கள் இதயத் தராசிலே எடை போட்டுப் பாருங்கள். உங்கள் செவிகளைத் தாருங்கள். உங்கள் இதயங்களைத் தாருங்கள்.

கடந்த 15 ஆண்டுகாலமாக, தமிழ்நாட்டில் இந்தியாவில் ஏற்கனவே ஒருவிதமான கருத்து திணிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பதைப் போல மற்றொரு பக்கம் இருக்கிறது. அதைக்கொஞ்சம் பாருங்கள்.

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளாக இலங்கைத் தீவிலே ஈழத் தமிழர்களுக்காக முரசு கொட்டியவர். சிறந்த பேச்சாளர். மனித உரிமைகளுக்காகப் போராடி வந்தவர் என்பதை மறந்து விடக்கூடாது. (He is a member of the North East Secretariat of human rights) மனித உரிமைகள் அமைப்பின் வடகிழக்குச் செயலகத்தினுடைய உறுப்பினர். மனித உரிமை அமைப்பினுடைய உறுப்பினர். அவர் நாடாளுமன்றத்தில் மனித உரிமை மீறல்களைப் பற்றியே அடுக்கடுக்கான சான்றுகளோடு, ஆவணங்களின் துணையோடு எடுத்து வைத்த வாதங்கள் சிங்களப் பேரினவாத அரசுக்குச் சம்மட்டி அடியாக விழுந்து இருக்கிறது. சவுக்கடியாக விழுந்து இருக்கிறது.

பல்வேறு ஊடகங்களும், பல்வேறு விதமான அயல் நாட்டுச் சக்திகளும் அவர்களுடைய எண்ணங்களை, கருத்துகளைத் திரை போட்டு மறைத்துக் கொண்டு இருக்கக்கூடிய வேளையில் நாடாளுமன்றத்திலும், நானிலம் எங்கும் கருத்துகளைச் சொல்லி வந்த அவர்களின் குரலாகத் திகழ்ந்த அவருக்கு, “மாமனிதர்’’ என்கின்ற உயர்ந்த விருதினை விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கி இருக்கிறார். அவரைப் புலிகளே சுட்டுக் கொன்று விட்டார்கள். இப்படி ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார்கள். என்று ஓர் அரசாங்கத்தின் தரப்பிலே அமைச்சரவையிலே இருக்கக் கூடிய இராணுவ அமைச்சகத்தின் சார்பிலே சொல்கிறார்கள். இதுவரை அமைந்த அரசுகள் அனைத்தையும் விட வஞ்சகத்துக்குப் பெயர் போன அரசு சந்திரிகா அரசு என நான் நினைத்தேன். அதைவிட ஒரு கொடிய அரசுதான் இப்போது அமைந்து இருக்கிற மகிந்த ராஜபக்சே அரசு.

ஈழத் தமிழர்களுடைய பிரச்சனை என்பது என்ன? அதனுடைய பின்னணி என்ன? தனி ஈழம் கேட்கிறார்களே சரிதானா? அந்த நாட்டினுடைய இறையாண்மையைப் பாதுகாத்து ஒற்றுமை ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு நிலைப்பாடு.

நான் கேட்கிறேன். ஈழத் தமிழர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்றால் அதன் வரலாறு என்ன? அவர்கள் அரசு அமைத்து வாழ்ந்தவர்கள். வரலாற்றின் வைகறைக் காலத்திலே இருந்து தனி அரசு அமைத்து, தனிக் கொற்றம், தனிக் கொடி என்று வாழ்ந்தவர்கள். போர்த்துக்கீசியர்கள் நுழைந்த பின்பு, டச்சுக்காரர்கள் வந்தபின்பு, பிரிட்டிஷ்காரர்களின் அதிகார எல்லைக்குள்ளே இலங்கை அரசு சிக்கியதற்குப் பிறகு சிங்கள இனம், தமிழ் இனம் இந்த இரண்டையும் அதிகார வளையத்துக்குள் பிணைக்கின்ற வேலையிலே இந்த ஆங்கிலேயர்கள் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் வெளியேறிச் செல்லுகிறபோது நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் சிங்கள இனத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டுப் போனார்கள். 1948 பிப்ரவரி 4 ஆம் தேதி அப்போது தமிழர்கள் நினைக்கவில்லை - பெரும் கேடு தங்களுக்கு வரும் என்று அவர்கள் ஊகிக்கவில்லை.

முதல் வேலையாக, பத்து இலட்சம் தமிழர்களின் வாக்கு உரிமையைப் பறித்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து சென்று இரத்தத்தை வியர்வையாகக் கொட்டி அங்கே காப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்களை உருவாக்கிய இந்திய வம்சாவழித் தமிழர்கள் பத்து இலட்சம் பேருடைய வாக்கு உரிமையைப் பறித்தார்கள். முதல் கேடு இப்படித்தான் வந்தது.

இந்த வரலாறுகளை நான் குறிப்பிடக் காரணம், இங்கே இளைஞர்கள் பெரும் அளவிலே வந்து இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்களினுடைய வரலாறு, இந்தப் பிரச்சினையினுடைய இன்னொரு பக்கம். பலருடைய கவனத்திற்குச் செல்லாத அளவிற்குக் காலம் வேகமாகச் சென்று கொண்டு இருக்கக்கூடிய சூழலில் பலர் மறந்து விடுகிறார்கள். பலருக்குச் செய்திகளே தெரியவில்லை. அதனால்தான் நான் சுருக்கமாக ஒரு பருந்துப் பார்வையில் பாய்ச்சலில் இதனுடைய வரலாற்றுப் பின்னணி என்ன என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்திய வம்சாவழித் தமிழர்களுடைய வாக்கு உரிமை பறிபோனதற்குப் பிறகு, அப்போது தோட்டத் தொழிலாளர்களுடைய சார்பிலே கூட எட்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்களே, அதையும் இழந்த நிலையில், அரசியலில் நிலைமைகள் புதிதாக உருவாகின்றன. 1949இல் பேரறிஞர் அண்ணா, அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய அதே காலத்தில் தந்தை செல்வா அவர்கள் `தமிழரசுக் கட்சி’ யைத் தொடங்கினார்கள். தங்களுக்கு உரிமைகளைப் பெற முடியும் என்று அற வழியில், அமைதிவழியில் மக்கள் ஆட்சியில் நாடாளுமன்றத்திலே குரல் எழுப்பித் தாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். தமிழர்களினுடைய உரிமையைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழர்கள் போர்க்குரல் எழுப்புவார்கள். அவர்கள் எதிர்த்துப் புறப்படுவார்கள் என்று கருதிய பண்டாரநாயகா, தந்தை செல்வாவோடு 1957 ஜூலை 27 ஆம் தேதி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தைப் புத்த பிட்சுகள் எதிர்த்தார்கள். சிங்களவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த ஒப்பந்தம் குப்பைத் தொட்டியிலே போடப்பட்டது.

இதை நான் கூறக் காரணம் 1957-லே என்ன நடந்ததோ அதுதான் 2006-லும் நடக்கும். அதனால் தான் இதைக் கூற விரும்புகின்றேன். அதன் பிறகு காலம் வேகமாகச் சில மாற்றங்களைச் செய்து கொண்டே வந்தது. டட்லிசேனநாயகா அதிபர் ஆனார். அவர் 1965 மார்ச் 20 ஆம் தேதி தந்தை செல்வாவோடு ஓர் ஒப்பந்தம் போட்டார். தமிழர்களுக்கு நாங்கள் அடிப்படை உரிமைகளைத் தருவோம் என்று ஒப்பந்தம் போட்டார். இதற்கு இடையில், `சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி, புத்த மதம் மட்டுமே அரசு மதம். அது தான் அதிகாரபூர்வமான மதம்’ என்று அறிவிக்கப்பட்டது. மதமும், மொழியும் சிங்களருக்கு மட்டும். சிங்கள மொழி பௌத்த மதம் இதைத்தவிர வேறு நம்பிக்கைக்கு இடம் இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்ட கால கட்டத்தை எண்ணிப் பாருங்கள்.

தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெறவேண்டும் என்று கருதிய காலத்தில் Standardisation தரப்படுத்துதல் என்ற முறையில் கல்விக் கூடங்களுக்குப் பாடசாலைகளுக்குப் போகிற தமிழ்ப் பிள்ளைகளுக்கு உரிமை மறுக்கப்பட்டது. கல்வியில் சிங்களவர்களுக்குத் தனிச் சலுகை கொடுக்கப்பட்டது. சிங்கள மாணவர்கள் 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்வு பெறுவார்கள் - தமிழர்கள் 50 மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த நிலையில் இரண்டு ஒப்பந்தங்களும், இரண்டாவது ஒப்பந்தமும் அதைப் போலவே சிங்களவர்களாலே கிழித்து எறியப்பட்டது. பௌத்த பிட்சுகள் போர்க் கொடி உயர்த்தினார்கள். இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, ஜெயவர்த்தனே கண்டி வரையிலே நடைப்பயணம் சென்றார். 1965 - ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் நிலைமை வேகமாக மாறிக் கொண்டே வருகிறது. தங்களுடைய உரிமையைப் போராடிப் பெற வேண்டும். என்று கருதுகிற காலத்தில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆம். போலீசாரின் அடக்குமுறை. முதலில் தடியடியில் தொடங்கி, துப்பாக்கிச் சூடு வரையிலே வந்து நிற்கிறது. இந்தச் சூழலில் 1972 ஆம் ஆண்டு இலங்கை, குடியரசு ஆகிறது. ஆங்கிலேய கவர்னர் வெளியேறுகிறார்.

1972 அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி தந்தை செல்வா அவர்கள் அதுவரை ஏற்பட்ட அனுபவத்தை எடுத்துச் சொல்லுகிறார். தமிழர்கள் அடிமை இனமாக வாழ்வதா? அல்லது சுதந்திரமும் மானமும் உரிமையும் உள்ள மக்களாக வாழ்வதா? இதுதான் எங்கள் முன்னாலே இருக்கிற கேள்வி. ஏனெனில், ஆங்கிலேயர்கள் வெளியேறியதற்குப் பிறகு, சிங்கள இனம் ஆக்கிரமிப்பு இனமாகவும், நாங்கள் அடிமை இனமாகவும் ஆக்கப்பட்டு விட்டோம். எனவே அடிமை இனமா? அல்லது சுதந்திரம் உள்ள மனிதர்களாக வாழ்வதா? என்பதை மக்கள் தீர் மானிக்கட்டும். ஜனநாயகம் பேசுகிற நண்பர்களுக்குச் சொல்லுகிறேன். எது ஜனநாயகம்? மக்கள் தீர்மானிக்கட்டும் என்று அவர் சொல்லுகிறார். பொதுமக்களுடைய கருத்து என்ன என்பதை அறிவோம் என்று அவர் சொல்லுகிறார்.

தனி ஈழத்துக்கு ஆதரவு கிடையாது. இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்றுதான் எங்கள் நிலைப்பாட்டைத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்று சிங்கள அரசு சொல்லுகிறதே இது உண்மையா? நான் சொல்வது உண்மையா? என்பதைத் தெரிந்து கொள்ள நான் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். காங்கேசன் துறைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கட்டும். நான் போட்டியிடுகிறேன். தமிழ் மக்கள் சுதந்திரம் உள்ளவர்களாக, தனி நாடு அமைத்து வாழ்கின்றவர்களாக அவர்கள் வாழ வேண்டும் என்ற கருத்தை தனித் தமிழ் ஈழம் - தனி நாடு என்ற கருத்தை முன்வைத்து நான் போட்டியிடுகின்றேன். சிங்கள அரசுத் தரப்பிலே அவர்கள் போட்டியிடட்டும். மக்கள் என்ன தீர்ப்பைத் தருகிறார்களோ அதை ஏற்றுக்கொள் வோம் என்று இராஜினாமா செய்தார்.

இரண்டரை ஆண்டுக் காலம் தேர்தல் நடத்த வில்லை. 1975 பிப்ரவரி 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. தந்தை செல்வா மாபெரும் வெற்றி பெற்றார். தமிழர்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கையை வைத்து வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு நீண்டநாள் நாடாளுமன்றம் கூடவில்லை. 1976 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். என்ன தீர்மானம்? காங்கேசன் துறை இடைத் தேர்தலில் போட்டியிட்டேன். கொள்கையை முன் வைத்துப் போட்டியிட்டேன். தனி நாடாக வாழ்வதா? அடிமை இனமாக வாழ்வதா? தனி நாடு என்ற கோரிக்கையை மக்கள் ஆதரிக்கிறார்கள். எனவே, இந்த நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிகிறேன். என்று அவரும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அந்தத் தீர்மானத்தின் இறுதியில், இறைமை உடைய சுதந்திரமான மதச் சார்பற்ற சமதர்மக் குடியரசாக - தனி நாடாக தமிழ் ஈழத் தமிழ் நாடு அமைய வேண்டும். என்று அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தீர்மானத்தை அவரும் 11 உறுப்பினர்களும் அந்த அவையிலே கொண்டு வருவதற்கு முன்பே அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இவையெல்லாம் மக்கள் ஆட்சியில் அறவழிப் போர் முறைகள். அண்ணல் காந்தியார் காட்டிய வழி இத்தனை எதிர்ப்புகளையும் காட்டியதற்குப் பிறகு, 1976 ஆம் ஆண்டு மே 16ஆம் நாள், வட்டுக்கோட்டைப் பகுதியில் பண்ணாகம் என்ற இடத்தில், மற்ற அமைப்புகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணித் தந்தை செல்வா தலைமையிலே தீர்மானம் நிறைவேற்றியது. தனித் தமிழ் ஈழம் அமையும். மதச்சார்பு அற்ற இறைமை உடைய சுதந்திரக் குடியரசாக, சமதர்மக் குடியரசாகத் தமிழ்ஈழம் அமையும் என்று ஒரு தீர்மானத்தை வட்டுக் கோட்டையிலே நிறைவேற்றினார்கள்.

அதன்பின்னர் 1977ஆம் ஆண்டு தேர்தலில் 19 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். நான் கேட்கிறேன். இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் தான் இந்தியாவில் தேசபக்தி உடையவன் என்றும், தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று சொல்கிறவன் எல்லாம் பிரிவினைவாதி என்றும், ஏன் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கே உலை வைப்பவன் என்றும் பேசுகிற மேதாவிகளுக்கு நான் சொல்லுகிறேன். ஏன் இந்தக் குரலைக் கிழக்குத் தைமூருக்கு வாக்கு எடுப்பு நடந்த போது நீங்கள் எழுப்ப வில்லை? 1999 ஆகஸ்டு 30 ஆம் தேதி இந்தோனேசியாவில் இருந்து தனியாக கிழக்குத் தைமூர் பிரிய வேண்டும் தனி நாடு வேண்டுமா? அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா? என்று அய்.நா. சபையின் மேற் பார்வையில் ஒரு வாக்கு எடுப்பு நடத்தப்பட்டது. இதை ஏன் யோசிக்கவில்லை நீங்கள்? அய்.நா. சபையின் மேற்பார்வையில் நடை பெற்ற அந்த வாக்கு எடுப்பில் 74.2 சதவிகிதம் மக்கள் கிழக்குத் தைமூர் தனி நாடாக வேண்டும் என்று வாக்கு அளித்தார்கள். இன்றைக்குக் கிழக்குத் தைமூர் தனி நாடாக அமைந்து இருக்கிறது.

ஒரு நாட்டினுடைய இறையாண்மையைத் தீர்மானிப்பது யார்? அந்த நாட்டு மக்கள். இறையாண்மை என்பது என்ன? ஒருமைப்பாடு என்பது என்ன? அங்கே தமிழ் ஈழம் என்று தனி நாடு கேட்டு விட்டால் இங்கும் தனி நாடு கேட்பார்கள் என்ற கவைக்கு உதவாத வாதத்தை வைக்கிறீர்களே, நீங்கள் யார் உலகுக்கு நாட்டாமை பேசுவதற்கு? அப்படியானால், கராச்சியின் பிடியிலே இருந்து டாக்கா விடுபட வேண்டும், கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் ஆவதற்கு, வங்கதேசமாக உலக வரைபடத்தில் உதயமாவதற்கு இந்திய இராணுவம் சென்றதே, நான் என்றும் மதிக்கின்ற இந்திரா காந்தி அம்மையார் அதை உருவாக்கிக் கொடுத்தாரே, அப்பொழுது எங்கே போயிற்று இந்த உபதேசம்? பாகிஸ்தானை எப்படி நீங்கள் பிரிக்கலாம் என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை?

எந்த விவாத மன்றத்திற்கும், இந்த மேடையிலே இருப்பவர்களும் சரி, எங்கள் தோழர்களும் சரி எவரோடும் கருத்துக்குக் கருத்து, கேள்விக்குக் கேள்வி, பதிலுக்குப் பதில் பேசத் தயார்! சிந்தனைக் கூடங்களுக்கு வர நீங்கள் தயாரா? பேசுங்கள். தாராளமாகப் பேசுங்கள். நாங்கள் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறபொழுது, எங்கள் மனச்சாட்சி தெளிவாக இருக்கிற பொழுது நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

1977ஆம் ஆண்டுத் தேர்தலை நான் குறிப்பிட்டேன். 18 இடங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழம் என்ற கருத்தை முன் வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அதற்குப் பிறகு நிலைமை என்ன? அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஓர் இலட்சம் புத்தகங்கள் சாம்பல் ஆக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் அமெரிக்க நாட்டில் மசாசூசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆம். தமிழ் ஈழத்தை ஆதரித்து, 1981 ஜூன் 18 ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மறுநாள், 19-ஆம் நாள் அந்த மாநிலத் தினுடைய கவர்னர் ‘Today is is Eelam day’ என்று பிரகடனம் செய்தார்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிக்கடைச் சிறையில் 56 தமிழர்கள் கோரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். குட்டிமணி, ஜெகன், தங்கதுரை வெட்டிக் கொல்லப்பட்டார்கள். புத்தர் சிலைக்கு முன்னாலே ஓரடி உயரத்துக்கு இரத்தம் தேங்கி நின்றபோது உலகமே திடுக்கிட்டது. தமிழகமே ஆர்ப்பரித்து எழுந்தது. திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்து அரசியல் கட்சிகளும் குமுறியெழ உணர்ச்சிப் பெரு வெள்ளமாகத் தமிழகம் மாறியது. 1983ஆம் ஆண்டு கோரமான இனப்படுகொலை நடந்தது. அதை இனப்படுகொலை என்று நான் கூறவில்லை இந்திய நாட்டின் பிரதமர் இந்திய நாட்டினுடைய நாடாளு மன்றத்தில் What is happening in Srilanka is nothing but genocide அங்கு நடப்பது இனப் படுகொலை என்று அம்மையார் இந்திராகாந்தி அவர்கள் சொன்னார்கள்.

ஓர் இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள அரசு. தமிழர்களுக்கு ஆதரவான கருத்துகளை அம்மையார் இந்திராகாந்தி கூறினார். என்ன சொல்லுகிறார்? The tamils of the north and east are the original inhabition of the island வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழுகின்ற தமிழர்கள் அந்தத் தீவின் பூர்வீகக் குடிமக்கள் - மண்ணின் மைந்தர்கள் ஆவர் என்று சொன்னார். ஆனால், மகிந்த ராஜபக்சே அதிபரான உடன் அதிர்ச்சி தரத்தக்க கருத்தைப் பேசுகிறார். ஏன்? அவர் அடிப்படை சுயாட்சி உரிமைகளைக் கூட ஏற்றுக் கொள்ளப் போகிறவர் அல்ல. தமிழர் தாயகம் என்பதே கிடையாது. No question of home land அது மட்டும் அல்ல. யாரும் எங்கும் போய்க் குடியேறலாம் என்கிறார். இந்தக் கருத்தை விமர்சிக்க வேண்டாமா? நான் கேட்கிறேன். இன்றைக்குக் கூடச் செய்தித்தாள்களில் பார்க்கிறேன். இஸ்ரேலில் மேற்குக் கரையிலே பதற்றம் (west bank) யூதர்களின் குடியிருப்பு (colonisation) பாலஸ்தீனியர்களுடைய பூர்வீகத் தாயகப் பகுதியிலே கொண்டு வந்து அவர்களைக் குடியமர்த்துகிறார்கள். அதை உலகமே கண்டிக்கிறது.

ஈழத்தில் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். அடிப்படையான கோரிக்கைகள் என்ன? தமிழர்களின் பூர்வீகப்பகுதிகளில் கொண்டு வந்து சிங்களக் காடையர்களைக் குடியமர்த்தி, தமிழர்களுடைய மக்கள் தொகையினுடைய எண்ணிக்கையைக் குறைக்கிறார்களே என்று தானே அவர் உண்ணா விரதம் இருந்தார்? 12 நாள்கள் குடிநீரும் பருகாமல் மறைந்து போனார், கணைக்கால் இரும்பொறையைப் போல.

நான் கேட்கிறேன், பதற்றம் நிறைந்த ஒரு சூழல் 1983, 86, 87ஆம் ஆண்டுகளில் உருவானதற்குப் பின்னர், ஜெயவர்த்தனா மிகவும் தந்திரமாக, நயவஞ்சகமாக இந்தியாவோடு ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டார். இப்பொழுது மீண்டும் இராஜபக்சே வந்து, இந்தியா முன்னிலையிலே இருக்க வேண்டும் என்று கேட்கிறாரே - இது நல்ல நோக்கத்திலா? அகிலத்தின் அத்தாணி மன்றத்தில் தமிழர்களுக்காக ஆராய்ச்சி மணி ஓசையை எழுப்பியது நார்வே நாடுதானே? அவர்கள்தானே அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னாலே குரல் கொடுத்தார்கள்? இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிலே இருந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பாலசிங்கத்தை நார்வே நாட்டுக்காரன் தானே கொண்டு போய்த் தன்னுடைய அரசாங்கச் செலவிலே அவருடைய உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தான். தமிழர்கள் எல்லாக் காலத்திலும் நார்வே நாடு இருக்கின்ற திசைநோக்கித் தெண்டனிட்டு நன்றி செலுத்த வேண்டும் என்று எங்கேயும் நான் கூறுவேன். அந்த நார்வே நாடுதானே இந்தப் பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுத்தது.

நான் கேட்கிறேன். போர் நிறுத்தத்தை மீறக் கூடாது. என்று இங்கே அடிக்கடி பேசுகிறார்கள், போர் நிறுத்த மீறல்கள் புலிகள் செய்வதாகச் சொல்லுகிறார்கள். நான் நண்பர்களுக்குச் சொல்லுவேன். போர் நிறுத்தத்தை யார் அறிவித்தது. முதலில், சொல்லுங்கள்? போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்தது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்தான். டிசம்பர் 24ஆம் தேதியில் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். They have declared unilateral ceasefire ஏப்ரல் 24ஆம் தேதி வரையிலே அந்த ceasefire -அய் அவர்கள் பின் பற்றினார்கள். பயந்துகொண்டா? சிங்கள இராணுவம் அவர்களைத் தாக்கி விடும்; தாக்கி அழித்துவிடும் என்று கவலைப்பட்டா? இல்லை.

உலகத்தில் இதுவரை இப்படி ஒரு சாகசம் நடந்தது இல்லை என்கிற அளவுக்கு, கட்டநாயகா வானூர்தித் தளத்திலே 27 விமானங்களைச் சுக்கு நூறாக ஆக்கி விட்டு, அதிலும் ஓர் உயிருக்குக்கூடப் பாதிப்பு இல்லை என்று காட்டியதற்குப் பிறகு போர் நிறுத்தம் அறிவித்தார்கள்.

நாங்கள் பலம் வாய்ந்தவர்கள் நாங்கள் போரிலே வெல்லக் கூடியவர்கள். எங்களை வெல்ல முடியாது என்று உலகத்துக்குக் காட்டி விட்டுப் போர் நிறுத்தம் அறிவித்தார்கள். ஏப்ரல் 24ஆம் நாள் வரையிலே அந்தப் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்ததே, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ததா? இலங்கை போர் நிறுத்தத்தை நாங்கள் கடைப்பிடிக்கப் போகின்றோம் என்று சொன்னார்களா? இல்லை. பிறகு என்ன ஆயிற்று? தொடர்ந்து இதே பதற்றமான நிலைமை, மோதல்கள் நடந்து கொண்டே இருந்தன, 2001 டிசம்பர் 24 ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவித்தனர். நாங்கள் 30 நாள்களுக்குப் போர் நிறுத்தத்தைக் கடைப் பிடிக்கிறோம் என்று சொன்னார்கள் 30 நாள்கள் கடந்தன. 30 ஆம் நாள் மீண்டும் நாங்கள் இன்னும் 30 நாள்களுக்கு நீட்டிக்கிறோம் என்று சொன்னார்கள்.

அப்படியானால் இந்தப் போர் நிறுத்த அறிவிப்பு சிங்கள அரசு விரும்பிக் கொண்டு வந்தது அல்ல. இந்தப் போர்நிறுத்தம் விடுதலைப் புலிகளாகக் கொண்டு வந்த போர் நிறுத்தம். பன்னாட்டு அரங்கின் குற்றவாளிக் கூண்டிலே நிற்க வேண்டிய நிலைமைக்கு ஆளான சிங்கள அரசு, வேறு வழி இன்றி 2002 பிப்ர வரி 22ஆம் நாள் அன்று இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்திலே கையெழுத்து இட்டார்கள். சரி நிலைமை காட்சி மாறுகிறது என்று கருதினோம். எங்களுக்கும் காட்சி மாறியது. நாங்கள் வேலூருக்குப் போனோம். ஜெயிலுக்குப் போனோம். செப்டம்பர் மாதம் 16, 17,18தேதிகளில் முதல்சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற்றது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை அக்டோபர் 31, நவம்பர் 1, 2, 3 தேதிகளில் அதே தாய்லாந்தில் நடைபெற்றது. அடுத்து, மூன்றா வது சுற்றுப் பேச்சுவார்த்தை நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய நாள்களில் நடை பெறுகிறது. நவம்பர் 25 ஆம் நாள் உலகின் பல நாடுகள் தமிழர்கள் பகுதியின் மறு சீரமைப்புக்கும், கட்டமைப்புப் பணிகளுக்கும் நிதி வழங்குகிறோம். இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும் இருதரப்புக்கும் நிதி வழங்குவதற்கு வருகிறோம் என்று உலக நாடுகள் முன் வருகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உட்பட 4 பில்லியன் டாலர் தொகையினை நாங்கள் தருகிறோம் என்று அறிவித்தன. இந்தக் கட்டத்தில் அமெரிக்க நாட்டினுடைய வெளிவிவகாரத் துறையிலே இருந்து வருகின்ற ரிச்சர்ட் ஆர்மிடேஜ் யாழ்ப்பாணத்தைப் பார்த்து விட்டு இப்படி இடிபாடுகளாகக் காட்சி அளிக்கிறதே என்று வருந்தினார் எங்கே? இராணுவம் முகாமிட்டு இருக்கிறது அல்லவா - அங்கே சொன்னார்.

அந்தச் சூழ்நிலையில் மீண்டும் மறுவாழ்வு கட்டமைப்புப் பணிகளுக்குத் தருகிறோம் என்று சொல்லி ஒரே கூட்டத்தில் முதல் கட்டமாக 380 கோடி ரூபாய் தருகிறார்கள். 18 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க உறுதி கொடுத்துவிட்டார்கள். இப்படி நன்கொடை கொடுப்பதற்கு உலக நாடுகள் முன் வந்ததற்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா? தமிழர் பகுதிகளுக்கும் மறுவாழ்வு வேண்டும். சிங்களர் பகுதிகளுக்கும் சிங்கள அரசு பயன்படுத்திக் கொள்ளட்டும். இதைக் கண்காணிக்கின்ற பொறுப்பை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும். பணம் மீதம் இருந்தால் donar countries நன்கொடை கொடுத்த நாடுகளுக்கே திரும்பக் கொடுக்கப்பட்டு விடும்.

Vaikoஇவ்வளவு சிறப்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழர் பகுதிகளுக்கு மறு வாழ்வு வேண்டும் எனில் interim self governing authoirty இல்லாமல் எப்படி மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும்? ஆகவே, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவர்கள்தான் ஆட்சி நடத்துகிறார்கள். உலகத்திலே எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான நிர்வாகம் நடைபெறுகிறது. வருவாய்த் துறையிலே விவசாயத் துறையிலே நிதித் துறையிலே காவல் துறையிலே அவர்கள் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல அரசு நடத்த வேண்டும் என்று சொன்னால் அங்குப் போய் பாடம் கற்றுக் கொண்டு வரலாம் என்கிற அளவுக்கு அவர்களுடைய நிர்வாகம் நடைபெறுகிறது. இருப்பினும் இந்தச் சூழ்நிலையில் மறு வாழ்வுக்குக் கொடுக்கப்படுகிற நிதியைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு interim self governing authoirty வேண்டும்.

இந்த வேளையில் ரனில் விக்கிரமசிங்கே அமைச்சரவையின் மூன்று அமைச்சர்களுடைய பொறுப்புகளைப் பறித்தார் சந்திரிகா. பாராளுமன்றத்தைக் கலைத்தார். பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டது யார்? இணக்கமான சூழ்நிலையைக் கெடுத்தது யார்? சங்கிலி வன்னியன் காலத்திலே காக்கை வன்னியன் ஒருத்தன் இருந்தான் அல்லவா? அந்தக் காக்கை வன்னியன் இப்பொழுது கருணாவாகி இருக்கிறான்! வேறு என்ன? துரோகிகளை உருவாக்குவதே அவர்களுக்கு வழக்கம். தமிழர்கள் அதற்குப் பலியாவது வேதனைக்கு உரியது. ஆக, துரோகிகளை உருவாக்கி வைத்துக் கொண்டு தமிழர்களைக் கொன்று குவிக்கின்ற வேலையில் ஈடுபடு கின்றார்கள். ஆம் போர் நிறுத்த மீறல்களில் விடுதலைப் புலிகளும், அங்கே இருப்பவர்களும் வன்முறையில் ஈடுபடுவதாக இங்கே செய்திகள் சொல்லுகிறார்களே, நான் கேட்கிறேன்.

எனது அருமைச் செய்தித் துறை நண்பர்களே, காந்திய வழியிலே வாழ்வு நடத்தி, அந்த எளிய மனிதர் தன்னுடைய நுண்மாண், நுழை புலத்தினால், அறிவுத்திறனால் தமிழ் இணையதளத்தினை இயக்கிக் கொண்டு இருந்தாரே, அந்தப் பத்திரிகையாளர் சிவராம் என்கின்ற தராக்கியை நடு ரோட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்து சுட்டுக் கொன்றார்களே, ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை உலகம்? அப்போது எங்கே போனார்கள் இந்த நடு நிலையாளர்கள்? அதற்கு முன்பு, ஜெனீவாவுக்குச் சென்று மனித உரிமை மீறல்களை, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற கொடுமைகளைச் சுட்டிக் காட்டிய ஒரே காரணத்துக்காக வழக்கறிஞர் குமார் பொன்னம்பலத்தை அவர் வீட்டிலே இருந்து கொண்டு போய் நடுரோட்டிலே சுட்டுக் கொன்றார்களா இல்லையா? அவர் மகன் தானே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்? யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்திலே அவரையும் தாக்கி இருக்கிறார்களே நான்கு நாள்களுக்கு முன்னால் பத்திரிகையாளர் மயில்வாகனன் கொல்லப் பட்டாரே, பத்திரிகையாளர் அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டாரே, பத்திரிகையாளர் சகோதரி நிர்மலா ராஜன் கொல்லப்பட்டாரே, இவர்கள் எல்லாம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்காகத் தானே கொல்லப்பட்டார்கள்?

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகுதானே விடுதலைப் புலிகளின் தரப்பிலே அவர்களுடைய போர்க்களத்தின் தளபதிகள், புகழன் கொல்லப்பட்டாரே, கௌசல்யன் கொல்லப்பட்டாரே, மேஜர் சங்கர் கொல்லப்பட்டாரே, செந்தமிழன் கொல்லப்பட்டாரே, இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டீர்களா? ஆக, போர் நிறுத்த மீறல்கள் என்கிற போர்வையில், சிங்கள இராணுவம் தமிழர் பகுதிகளிலே சென்று இப்படிப்பட்ட கொடுமைகளைச் செய்யக் கூடிய இந்த நிலையில் ஒரு தரப்பைக் குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்?

நண்பர்களே, செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலே இருந்து சென்ற கடற்படைத் தளபதி அருண் பிரகாஷ் ஐந்து நாள்கள் இலங்கையிலே தங்கி இருந்தார் அரசாங்க விருந்தினராக. தங்கி இருந்தது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகக் கருத்துகளைச் சொன்னார். நமது கடற்பகுதியில் நமது கடல் ஆதிக்க எல்லைக்குள் தமிழக மீனவர்களை புலிகள் சுட்டுக் கொன்றதாக அவர் அங்கே சொன்னார். செப்டம்பர் 17ஆம் தேதி சொன்னார். மாலையிலே செய்தியை கேள்விப்பட்டேன். மறு நாள் காலை நான் டெல்லிக்குச் சென்றேன். செப்டம்பர் 18ஆம் தேதி பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் இந்திய கடற்படைத் தளபதியினுடைய கருத்துகள் வெளிவந்ததைச் சுட்டிக் காட்டிக் கூறியபோது அவர் திடுக்கிட்டார். இம்மாதிரியான கருத்துகள் கூறியது சரி அல்ல என அவர் கூறினார். காலத்தின் அருமை கருதி அந்தக் கடிதத்தை முழுமையாக இங்கே வாசிக்க இப்பொழுது நேரம் இல்லை.

இப்பொழுது அதிபராகி இருக்கிற மகிந்த ராஜபக்சே அப்போது பிரதமர். அவர் ஜூன் மாதம் இந்தியாவுக்கு வருகிறார். இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு ஒப்பந்தம் போட வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார். அதிபராக சந்திரிகா இருந்த காலத்தில் பிரதமராக இருந்த மகிந்த ராஜ பக்சே நல்லெண்ணத் தூதராக இந்தியாவுக்கு வந்தவர் வெளி உறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கைச் சந்தித்து இராணுவக் கூட்டு ஒப்பந்தம் போட வாய்ப்பு இருக்கிறது என்று ஜூன் மாதத்தில் கூறுகிறார். ஆகவேதான், ஜூலை 28 ஆம் நாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்தித்தேன் அம்மாதிரி இலங்கைப் பிரதமர் கூறி இருக்கிறாரே, இராணுவக் கூட்டு ஒப்பந்தம் போடுவது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக ஆகிவிடும். அம்மாதிரியான எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? என்று கேட்ட போது, நாங்கள் இராணுவ கூட்டு ஒப்பந்தம் உறுதியாகப் போடமாட்டோம். இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறினார்.

இராணுவ ஒப்பந்தம் போட மாட்டோம் என்று அவர் கூறி இருந்தாலும், அதற்குப் பிறகு நவம்பர் முதல் வாரத்தில் இந்து ஆங்கில நாளிதழில், தொடர்ந்து மூன்று நாள்கள் செய்தி வந்தது. இந்தியா இலங்கை இராணுவக் கூட்டு ஒப்பந்தம் போட ஏற்பாடு ஆகிவிட்டது. கையெழுத்தாக வேண்டியதுதான் பாக்கி என்று joint statement by both the governments இரண்டு நாட்டு அரசுகளும் சேர்ந்து கூட்டு அறிக்கை வெளியிட்டது. நான் வெளி உறவுத் துறை அமைச்சராக அன்று இருந்த நட்வர்சிங் கிடம் இதைப்பற்றிக் கேட்ட போது, பத்திரிகைச் செய்தியைப் பற்றி நீங்கள் பரபரப்பு அடைய வேண்டாம். அம் மாதிரி எண்ணம் எங்களுக்கு இல்லை என்று சொன்னார். இருப்பினும் அதற்கு மறு நாளும் செய்தித்தாள்களில் செய்தி வந்ததை முன்னிட்டு நான் உடனடியாக டெல்லிக்குச் சென்று நவம்பர் 10ஆம் நாள் அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடத்திலே ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்தேன்.

நான் எடுத்துக் கூறியதற்குப் பிறகு பிரதமர் அவர்கள் மனிதாபிமான உணர்வோடு, நடுநிலை உணர்வோடு கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் மனத்திலே கருதி, எப்படிப்பட்ட வஞ்சக வலையை ஜெயவர்த்தன அன்று விரித்தார் என்பதையும் அவர் எண்ணிப் பார்த்து, நாங்கள் ஒப்பந்தத்திலே கையெழுத்துப் போடமாட்டோம் என்று கூறினார்.

இன கொலையைத் தமிழர்கள் மீது செய்வதற்கு இலங்கை அரசுக்கு உதவிய குற்றவாளியாக இந்தியா நிற்க வேண்டிய நிலைமை வரும். எனவே இம்மாதிரி பலாலி விமானதளத்தைப் பழுதுபார்க்கிற வேலையிலோ, அல்லது இலங்கையோடு இராணுவ ஒப்பந்தத்திலே ஈடுபடுவதிலோ இந்தியா நிச்சயமாக அப்படிப்பட்ட ஒரு தவறைச் செய்து விடக் கூடாது என்று கூறியபோது, நிச்சயமாக அப்படிப்பட்ட ஒரு தவறு நடக்காது. அப்படி ஒப்பந்தம் போடப்பட மாட்டாது என்று கூறினார்கள். இதற்குப் பிறகு சிலகாலம் கழித்து நடவர்சிங் இலங்கைக்குப் போகிறார். ஜூன் 10ஆம் நாள் அன்று அவர் அங்கே சென்று, ஒப்பந்தம் கையெழுத்து இடாவிட்டாலும் ஒப்பந்தத்தினுடைய பிரிவுகள் நிறைவேறிக் கொண்டு இருக்கின்றன என்று கூறுகிறார்.

மறுநாள் நான் டெல்லிக்குப் போகிறேன். காலையிலே அவர் சொன்னதை நண்பகலில் ரேடியோவிலே கேட்டேன். ஜூன் 10 ஆம் நாள் நட்வர்சிங் கொழும்பிலே இவ்வாறு சொன்னார் என்பதைப் பிற்பகல் 2 மணி செய்தியில் கேட்டுவிட்டு, மறுநாள் காலையில் நான் டெல்லிக்குச் சென்றேன். 11ஆம் தேதி பிரதமரைச் சந்தித்தேன். பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடத்திலே நான் மீண்டும் ஒப்பந்தம் நிச்சயமாகக் கையெழுத்து ஆகிவிடும் என்றும். இலங்கைக்கு ராடார்களைக் கொடுப்பதற்கு இந்தியா தயாராகி விட்டது என்றும், கொழும்பிலே இரண்டு அரசுகளின் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியாவின் வெளி உறவுத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார். நேற்றைய செய்தித்தாள்களிலும், இன்றைய செய்தித்தாள்களிலும் சிறிய அளவிலான ரேடார்களைக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்து இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்து இருக்கிறது. இதற்கு என்ன சொல்லுகிறார்கள்? வெளி விவகாரத் துறையிலே இருக்கக் கூடிய சில அதிகாரிகள், உளவுத் துறையிலே இருக்கக்கூடிய சில அதிகாரிகள், புலனாய்வுத் துறையிலே இருக்கக் கூடிய சில அதிகாரிகள்.

1986, 1987-களில் எந்தக் கருத்தோடு இருந்தார்களோ, அதே கருத்துகளை இன்றைக்கும் வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய அதிகாரிகள், அரசாங்கத்துக்குத் தவறான வழியைக் காட்டி விபரீதமான நிலைமைகள் உருவாகுவதற்குக் காரணமான அதே அதிகாரிகள், இன்றைக்கும் அப்படி ஒரு நிலைமையை உருவாக்கத் திட்ட மிட்டுச் செயல்படுகிறார்கள்.

அதற்காக, என்ன பூச்சாண்டி காட்டுகிறார்கள்? சீனாக்காரன் வரப்போகிறான், சீனா பெரும் அளவு ஆயுதங்களைத் தந்து விடக் கூடாது. பெரிய ரேடார்களைக் கொடுத்துவிடக் கூடாது. சீனா அங்கே வந்து உட்காருவதற்கு நாம் இடம் கொடுத்துவிட்டால், தெற்குஆசியப் பகுதியில் இந்தியாவின் அரசியல் நலன்களுக்கு அது ஏற்றது அல்ல. ஈழத் தமிழர்களுக்கும் அது பெரும் துன்பமாக முடிந்து விடும். அதைவிட நம் தரப்பில் இருந்து இரண்டு சின்ன ரேடார்களைக் கொடுத்து நாம் சரிக்கட்டி விடலாம் என்ற கருத்தை அதிகாரிகள் உருவாக்கி இருப்பது நம்பகமான வட்டாரங்களில் இருந்து எனக்குத் தெரியும். இதே கருத்தை பிரதமர் அவர்களிடத்திலே சொன்னேன். இம்மாதிரி எல்லாம் அதிகாரிகள் பேசுகிறார்களே, சீனர்கள் இலங்கையின் வம்சா வழி மக்கள் அல்லவே, சீனர்களின் வம்சா வழியினர் இலங்கையில் வாழவில்லையே, சீன மொழி பேசுகிற மக்கள் யாழ்ப்பாணத்தில் இல்லையே? இதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் வம்சா வழியினரும் இலங்கையில் குடி இருக்கவில்லையே? அங்கே வாழ்பவர்கள் தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசும் மொழியால், பின்பற்றும் கலாச்சாரத்தால் எங்கள் நாடி நரம்புகளிலே ஓடுகிற இரத்தத்தால் எங்கள் தொப்புள் கொடி உறவுள்ள தமிழ் மக்கள் அல்லவா அவர்கள்?

இலங்கையின் இறையாண்மையைப் பற்றி சொல்கிறீர்களே, அங்கே தமிழர்கள் காலம் காலமாக அனுபவித்து வந்த கொடுமைகளைப் பற்றி எண்ணினீர்களா?

இங்கு தமிழன் மாமிசம் விற்கப்படும் என்று அறிவித்த கொடுமை நடந்ததே. தமிழ்ப் பெண்கள் மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டு நூலில் கட்டித் தொங்க விடப்பட்டதே இப்படிப்பட்ட கொடுமை உலகில் வேறு எங்கும் நடக்கவில்லையே? அதன் விளைவாகவேதானே ஆயுதப் போராட்டம் அங்கே மூண்டது?

எனவே, இவ்வளவு நிலைமைகளுக்குப்பிறகு, பேச்சு வார்த்தைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை அரசு சொல்லுகிற வேளையில் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நான் சென்னேன், ``நார்வே நாடுதான் அதற்கான முயற்சி எடுத்தது. அந்த நார்வே அரசு எடுக்கிற முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பாக இருப்பதுதான் சரியாக இருக்கும்’’ என்ற எனது கருத்தை பிரதமர் கனிவோடு கேட்டார். என் கருத்தினுடைய நியாயத்தை அவர் கேட்டதோடு மட்டும் அல்ல. அவர் பதில் கூறிய விதத்திலே எனக்கு மனத்துக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது.

இப்பொழுது நாங்கள் அதைத்தான் சொன்னோம். இந்தியாவைக் கொண்டு வந்து முன்னிறுத்துவதாகக் காட்டுவதன் மூலம், இந்தியா தங்கள் பக்கத்திலே இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். எனவே, அங்கு அடுத்து என்ன நடக்கும்? என்று தெளிவுபடச் சொல்ல முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. போர் மூளக்கூடாது என்றுதான் விரும்புகிறோம். போர் திணிக்கப்படலாம். அங்கே இருக்கக் கூடிய விவசாய விளைநிலங்களுக்கு விவசாயம் செய்வதற்குத் தமிழர்களுக்கு வாழ்வு உரிமை இல்லையே? மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியவில்லை. தங்களுடைய முகாம்களை விட்டு இலங்கை இராணுவம் வெளியே வந்து அத்து மீறி இப்படிப்பட்ட அக்கிர மங்களில் ஈடுபடுகிறதே?

எனவேதான், நாதியற்றுப் போகவில்லை தமிழன் - நானிலம் முழுவதும் இருக்கிற தமிழனுக்கு உணர்வு உண்டு. ஈழத்திலே இருக்கக் கூடிய தமிழர்கள் வதைக்கப்பட்டால் அவர்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு இராணுவ ரீதியான நட வடிக்கைகளை மேற்கொள்ளுமானால், ஒடுக்கி விடலாம் என்று கருதுமானால், நயவஞ்சகமாக தந்திரமாக இந்தியாவைத் தங்கள் பக்கத்திலே கொண்டு வந்து நிறுத்தலாம் என்கின்ற அவர்கள் கபட நாடகத்திலே அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்று கருதுவார்களேயானால், அது ஒருக்காலும் நடக்காது. அது பலிக்காது என்பதை நான் தெரிவித்துக் கொள் கிறேன்.

இந்த உணர்வு தமிழ் நாட்டிலே நீறு பூத்த நெருப்பாக இருக்கிற உணர்வு தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் அல்லவா? கருத்துக் கணிப்பு எடுத்தவர்களைக் கேட்கிறேன். யானை இறவு விழுந்த போது உண்மையான கருத்துக் கணிப்பு நடத்தி இருந்தால் தமிழ்நாட்டிலே 90 சதவிகிதம் மக்கள் அந்தப் போரிலே வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருப்பார்கள். இயற்கையாக, நம் இனத்துக்காரன், நம் சகோதரன், சகோதரி களத்திலே இருக்கிறபோது அவர்களுக்கு ஆதரவாகத்தான் கருத்துகள் வரும். சிங்கள அரசினுடைய வஞ்சக வலையிலே இந்தியா ஒருக்காலும் விழாது என்று நம்பிக்கை வைத்து இருக்கிறோம். ஆகவே, இந்தியாவைத் தன் பக்கம் வசப்படுத்திக் கொண்டு ஒரு இனக் கொலையை ஏவலாம் என்று கருதினால் அது நடக்காது நடக்க விட மாட்டோம் என்ற வகையிலே தமிழர்களுக்கு நாங்கள் உறுதியாக துணையாக இருப்போம். ஈழத் தமிழர்களுக்குத் துணையாக இருப்போம். அவர்கள் மரணப் பூமியிலே போராடிக் கொண்டு இருக்கிறார்கள் - அவர்களுக்குத் துணையாக இருப்போம். அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படுகிறபோதே சாவைச் சந்திப்பது என்று முடிவு எடுத்துக் களத்துக்குச் செல்லக்கூடிய தீரர்கள். மரணத்திற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்து அழைப்பவனாக, நச்சுக் குப்பியைக் கழுத்திலே கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு போகக் கூடிய அந்த தீரர்களின் கூட்டம், அவர்கள் மண்ணின் மானம் காப்பதற்காக, அங்கு வீரர் களும், வீராங்கனைகளும் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள். மொத்தத் தமிழ் மக்களும் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள்.

இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போடக்கூடாது என்று எங்கேயாவது காவல் செய்து தடுத்தார்களா? ஒரு சத விகிதத்துக்கு மேல் ஓட்டு விழவில்லையே, மொத்தத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து இருக்கிறார்கள். இதுதான் ஈழத்தில் இருக்கிற நிலைமை இங்குள்ள தமிழர்களின் உணர்வும், அதுதான். அந்த சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே என்றானே அந்த நிலைமை இனி இங்கு இருக்காது. இருக்கவும் கூடாது.

நான் வன்முறையாளன் அல்ல. வன்முறையின் மீது பற்றும் காதலும் கொண்டவன் அல்ல. ஆனால், அமைதிப் பூங்காவாக எங்கள் தாய்த் தமிழகம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன். அதே நேரத்தில் பாலஸ்தீனத்துக்காகப் பாரிலே குரல் கொடுக்கிறார்களே, கொசோவுக்காகக் குரல் கொடுக்கிறார்களே, மதத்தின் பெயரால் குரல் கொடுக்கிறார்களே, எங்கள் இனத்துக்காரன் சாகிறபோது அவனுக்காகக் குரல் கொடுக்க மாட்டோமா? கொந்தளிக்கிற உணர்வுகளுக்குத் தீனி போட்டு விடாதீர்கள். வன்முறை இங்கே வரக் கூடாது. நீங்கள் விதைத்து விடாதீர்கள். வன்முறை எதிர்காலத்திலே விளைவதற்கு விதைகளைத் தூவி விடாதீர்கள்.

நாட்டின் நலனில் அக்கறை கொண்டவனாக, இந்தியாவின் நலனில் அக்கறை கொண்டவனாக, இந்தியாவின் பூகோள அரசியல் நலனில் அக்கறை கொண்டவனாக, மனித இதயங்களின் நாடித் துடிப்பை உணர்ந்தவனாக இந்தக் கருத்தை நாங்கள் எடுத்து வைக்கின்றோம். தீவிர உணர்வுகள் எப்படி வளரும்? இலட்சம் பேர் வேண்டாமே, பத்து இலட்சம் பேர் வேண்டாமே, எண்ணி ஆயிரம் ஐயாயிரம் பேர் உருவாகி விட்டால் அதற்குப் பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? அலைகடலிலே சுவர் எழுப்பி விடுவீர்களா? சமுத்திரத்திலே சுவர் கட்டுவீர்களா? காஷ் மீரத்திலே கட்ட முடிய வில்லையே? கடலிலே கட்டி விடுவீர்களா?

இந்த ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பாருங்கள் எதிர்காலத்தில் பாரதூர விளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது. எச்சரிக்க வேண்டியது எங்களுடைய கடமை. அபாய அறிவிப்பு அல்ல. நல்ல எண்ணத் தில், நல்ல நோக்கத்தில் தவறான பாதையில் இந்திய அரசு அடி எடுத்து வைத்து விடக் கூடாது என்பதற்காக. மக்களால் தேர்ந்து எடுக்கப் பட்ட அரசு. இந்த அரசை நாங்கள் மதிக்கிறோம். டாக்டர். மன்மோகன் சிங் அரசுக்கு எங்களைப் பொறுத்த மட்டிலே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தமட்டிலே நிபந்தனை இன்றி முழுப்பக்கபலமாக ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். சேதுக்கால்வாய்த் திட்டம் தந்த அரசு செந்தமிழுக்குச் செம்மொழி பட்டம் சூட்டிய அரசு, தமிழர்களால் உருவாக்கப்பட்ட அரசு. தமிழகத்தின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக் கப்பட்ட அரசு.

ஆகவேதான் தமிழ்க் குலத்துக்குக் கேடு செய்கிற காரியங்களிலே ஈடுபட்டு விடக் கூடாதே என்கின்ற நல்ல எண்ணத்திலே இந்தக் கருத்துகளை வைக்கின்றோம். ஆகவே, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற உணர்வோடு, நாளை நடப்பது நல்லதாகவே நடக்கும் என்ற உணர்வோடு நம் பிக்கையோடு இருக்கிறோம். அதே வேளையில் ஒரு நாட்டின் ஒரு இனம் தனி நாடாக இருப்பதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அங்கிருக்கிற மக்கள்தானே தவிர நாம் அல்ல. தனி ஈழம் என்பதோ, அல்லது இலங்கையோடு சேர்ந்து இருப்பது என்பதோ அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டியது. உலகத்தின் காவல்காரன் வேலையை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. நாம் உலகத்தின் நாட்டாண்மைக்காரன் அல்ல. ஒரு தேசிய இனத்தினுடைய குரல் வளை நெரிக்கப்படுகின்ற போது, மானம் அற்றவர்களாக, உரிமை அற்றவர்களாக, நாயினும் கேவலமாக அவர்கள் நடத்தப்படுகின்ற போது, பொங்கி எழுந்து அவர்கள் தங்களுக்கு என்று ஒரு அரசு அமைத்துக் கொள்வதுதானே உலகம் இதுவரை பார்த்து இருக்கிறது. அய்.நா.சபைக்கு முன்னாலே ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஒவ்வொரு நாட்டினுடைய கொடி பறக்கிறதே, அதைப் போல எங்கள் தமிழ் மக்களுக்கும் ஒரு கொடி பறக்க வேண்டும். தமிழ் ஈழத்தின் கொடி பறக்க வேண்டும் என்று ஆசை இருக்காதா? இருக்கிறது. தமிழ் ஈழம் மலரும். அது காலத்தின் கட்டாயம்.

(2005, டிசம்பர் 24ம் நாள் பெரியார் திடலில் நடந்த எழுச்சி மிகு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள், தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஜனவரி 2006ல் வெளியானது)

-வைகோ