“லேடிஸ் அண்ட் ஜென்டில்வுமென்” ஆவணப்படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியைக்கூட கொண்டாட நேரமில்லாமல், அடுத்த “லெஸ்பியன் ஆந்த்தம்”க்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இயக்குனர் மாலினி ஜீவரத்தினத்தை ஒரு மாலை வேளையில் சந்தித்தபோது சற்று அதிசயித்துதான் போனேன்... துறுதுறுப்பும், பரபரப்புமாக காணப்பட்ட அந்த சராசரி இளம்பெண்தான் பல பெண்ணியவாதிகளும்கூட பேசத் தயங்கும், பெண்களின் பாலீர்ப்பு உரிமையைப் பற்றி தொடர்ந்து படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

“லெஸ்பியன் ஆன்த்தம் இந்த மாசம் ரிலீஸ் ஆகுதுண்ணா... மதன் கார்க்கி ரிலீஸ் பண்றார்.. மியூசிக் ஜஸ்டின் பிரபாகர், வரிகள் கவிஞர் குட்டி ரேவதி.. இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணாதான் ப்ரட்யூஸ் பண்றார்.. ரொம்ப நல்லா வந்திருக்கு, நீங்க பார்க்குறீங்களா?” லாப்டாப்பை திறந்து அந்தப் பாடலை ஒளிபரப்பினார்.

malini jeevarathnamவரிகள் ஒவ்வொன்றுமே லெஸ்பியன் பெண்களின் உணர்வுகளை வலியோடு வெளிப்படுத்தும்விதமாக ஒலிக்க, காட்சிகளில் ஒரு லெஸ்பியன் தம்பதியின் காதலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மாலினி.

என்னால் அந்த ஆச்சர்யத்தை அப்போதுவரையிலும் நம்பவே முடியவில்லை... இதுகாலம் வரையிலும், பெண்களின் சமபால் ஈர்ப்பு பற்றி தமிழில் இலக்கியப் படைப்புகள் கூட அரிதாகவே வெளியாகியிருக்கிற சூழலில், கலைத்துறையில் இவ்வளவும் சாத்தியமா?... பாலிவுட்டில் “பயர்” திரைப்படம்தான் பெண்களின் சமபால் ஈர்ப்பை மையப்படுத்தி வெளியான முதல் இந்தியத் திரைப்படம்... அந்தத் திரைப்படம் வெளியானபிறகு, இயக்குனர் தீபா மேத்தா கடுமையான விமர்சனத்திற்கும், மிரட்டல்களுக்கும் ஆட்பட்டதை நாம் இன்னும் மறந்திருக்கவில்லை. அதன்பிறகு வங்காளம், மலையாளம், இந்தி என்று ஒரு சில லெஸ்பியன் பெண்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நிகழ்வும் நம் கண் முன்னால் நடந்தவைதான்.

இத்தகைய சூழலில் ஆவணப்படம், அதனைத் தொடர்ந்து பாடல்... பெரிய விஷயம்தான்..

“என்னோட கனவு திட்டமே, லெஸ்பியன் பெண்களோட வாழ்க்கையை, வலியை வெளிப்படுத்தும்விதமா ஒரு முழுநீளத் திரைப்படம் எடுக்குறதுதான். ஸ்க்ரிப்ட்லாம் கூட ரெடி.. யாரெல்லாம் நடிக்கணும்னுகூட ஒரு தெளிவான ஐடியா வச்சிருக்கேன்... ஆனா, இப்போ இருக்குற சூழல்ல அப்டி ஒரு படம் எடுத்தா கண்டிப்பா வெளியிடவிடாம தடைதான் ஏற்படுத்துவாங்க.. அப்டி இருக்கும்போது, அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு தயாரிப்பாளர் கிடைக்குறது குதிரைக்கொம்புதான்..”

ஆர்வமாகப் பேசுகிறார்..

“மாலினி யார்?... லெஸ்பியன் பற்றி இப்டி தொடர்ந்து படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நோக்கம் என்ன?” வந்த வேலையை ஒருவழியாக தொடங்கி வைத்தேன்.

“மாலினி யாருன்னா... அவ சராசரி பொண்ணுதான்.. அவ பொண்ணுங்குற ஒரு விஷயம் போதுமே, பெண்களுக்கான பாலீர்ப்பு உரிமையைப்பற்றி பேச.. நான் மீடியாவுல சில காலம் வேலை பார்த்திருக்கேன்.. அப்போ என்னைச் சுற்றி நிறைய லெஸ்பியன் பெண்களைப் பார்த்திருக்கேன், அவங்க சொல்லமுடியாம தவிக்கும் பல விஷயங்களை உணர்ந்திருக்கேன்.. பெண்களுக்கான பல உரிமைகளைப் பற்றி பேசுற பெண்ணியவாதிகள்கூட, அவங்களோட பாலீர்ப்பு உரிமையைப் பற்றி ஏன் வாய் திறக்குறதில்லைன்னு பலமுறை யோசிச்சிருக்கேன்... ஏன் அவங்க பேசலன்னு உக்காந்து யோசிச்சிட்டு இருக்குற நேரத்துல, நாமே ஏன் பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணிதான் முதன்முதலா ஆவணப்பட முயற்சில இறங்கினேன்..”

“இப்டி ஒரு விஷயத்தைப்பற்றி நீங்க தொடர்ந்து பேசுறதை உங்க கூட இருக்குறவங்க எப்டி பார்க்குறாங்க?”

விசித்திரமாக சிரிக்கிறார்... “இந்த சமூகத்தோட பிரதிபலிப்புதானே அவங்க.. திடீர்னு லெஸ்பியன் பற்றியல்லாம் நான் பேச ஆரமிச்சதும், ‘ரொம்ப நல்லா பண்றடா கண்ணா!’ன்னு பாராட்டவா செய்வாங்க.. பலர் ஒதுங்கிக்கிட்டாங்க, சிலர் ‘தொடர்ந்து லெஸ்பியன் பத்தியே யோசிக்காத மாலு, உனக்கு அது மட்டும்தான் வரும்னு முத்திரையே குத்திடுவாங்க’ தனிப்பட்ட முறையில்
அட்வைஸ் பண்ணாங்க.. ஆனா, இந்த ஸ்க்ரிப்ட்களுக்காக நான் வேலை செஞ்சப்போ, நான் பார்த்த மனிதர்களும், அவங்க வலிகளும் என்னைய தொடர்ந்து நிறைய செஞ்சிட்டே இருக்கத்தான் சொல்லுது... இதுவரைக்கும் பேசப்படாத பல விஷயங்கள் அந்த பெண்களோட வாழ்க்கைல புதைஞ்சிருக்கு... அதல்லாம் பதிவுசெய்யனும்ல..”

“உங்க படைப்புகளுக்கு எதிர்ப்புகள் ஏதாவது வந்துச்சா?”

“பெரிய அளவுல இன்னும் இல்ல... காரணம், ஆவணப்படத்தை திரைப்பட விழாவுலதான் வெளியிட்டேன்.. இப்போ வெளியாகப் போற லெஸ்பியன் ஆந்தம்தான் மியூசிக் சேனல்கள்ல வெளியாக இருக்கு.. அப்போதான் அதல்லாம் நமக்கு தெரியவரும்... ஆனா, என் நோக்கம் லெஸ்பியன் பெண்களோட உணர்வுகளை காட்சிப்படுத்துறது மட்டும்தான், அதனால நம்ம தமிழ்மக்கள் அதை நல்லவிதமா புரிஞ்சு என்னை வாழ்த்தவே செய்வாங்கன்னு நம்புறேன்..”

“உங்க தேடல் பயணத்தில் நீங்க வியந்த விஷயம்னு எதை சொல்வீங்க?”

“நிறைய இருக்கே.. ஆவணப்படம் உருவாக்க கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க ஒரு சுத்து வந்துட்டேன்... என்னோட வாழ்க்கைல மேப்ல மட்டுமே பார்த்த பல ஊர்களுக்கு, கோவில்களுக்குப் போனேன்.. பலதரப்பட்ட பெண்களை சந்திச்சேன்.. பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, லெஸ்பியன் அப்டிங்குற ஈர்ப்பு இருக்குறதே தெரியல.. அப்டி தனக்கு இருக்குற பாலீர்ப்பை உணர்ந்த பெண்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை யார்கிட்டயும் வெளிப்படுத்தாமலேயே வாழ்கிறார்கள்.. லெஸ்பியன் சமூகத்துல தற்கொலைகள் ரொம்ப சர்வசாதாரணமா நடக்குது.. அப்டி இறந்த பின்னாடிகூட, இறப்பிற்கான உண்மையான காரணத்தை குடும்பத்தினரே மறைச்சிடுறாங்க..”

“உங்க படைப்புகளின் வழியா என்ன மாற்றம் நிகழும்னு நினைக்குறீங்க?”

“பெருசா சமூகமே மாறிடும்னுலாம் நம்பல.. ஆனா இப்டி ஒரு விஷயம் இருக்குன்னு சமூகம் புரிஞ்சுக்கவாவது ஒரு வாய்ப்பை இந்த படைப்புகள் கொடுக்கும்னு நம்புறேன்.. தொடர்ந்து அப்படி ஒரு புரிதல்களை ஏற்படுத்தவாவது இயங்கிக்கிட்டு இருப்பேன்.. இப்டி பாலீர்ப்பைப் பற்றி ஆவணப்படம் எடுக்கப்போறதா சொன்னப்போ, அதுக்கு தொடர்ந்து ஊக்கமளித்த என்னோட கலைத்துறை நண்பர்கள் இப்போவரைக்கும் அரவணைப்பா இருக்குறாங்க.. தொடர்ந்து என்னோட இரண்டாவது முயற்சிக்கும் தயாரிப்பின் வழியே உதவி செஞ்ச, பா.ரஞ்சித் அண்ணா இல்லைன்னா இது சாத்தியமாகிருக்காது.. அப்டி பலரும் உதவினது மாலினிங்குற ஒரு பொண்ணுக்காக இல்ல... ஒட்டுமொத்த பெண்களின் உரிமைக்காகத்தான்.. அந்தவிதத்துல என்னோட வேலை, அந்த இரண்டு புள்ளிகளை இணைக்குறது மட்டும்தான்.. ஒரு புது விஷயத்தை, கொஞ்சம் அதிக சென்சிட்டிவான விஷயத்தை சொன்னதுமே உற்சாகமாக என்னை தட்டி அனுப்பிய அந்த நல்ல உள்ளங்களுக்கு எப்பவும் நன்றிக்கடன் பட்டவளா இருப்பேன்.. உரிமைங்குறது கொடுக்கிறது இல்லண்ணா, எடுக்குறது.. அதை இந்த மார்ச் மகளிர் மாதத்திலாவது பேசத் தொடங்குவோமே!”

உற்சாகமாக சொல்லி முடிக்கிறார் மாலினி.. அவரை வாழ்த்தி விடைபெற்றபோது, ஒரு நேர்மறை சிந்தனை மனதிற்குள் பளிச்சிட்டதை உணர்ந்தபடியே நகர்ந்து சென்றேன்...

- விஜய் விக்கி