Tamil Nadu Fishemen killed

நேற்று (மார்ச் 6, 2017) தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது மீனவர் பிரிட்சோவை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு, படுகொலை செய்துள்ளது. கொல்லப்பட்ட அந்த மீனவ இளைஞரின் உடலைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது.

காவிரி நீர், Demonetization என வெகுமக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் எல்லாம் திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதி உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் என்ன நடவடிக்கை எடுத்துக் கிழித்தனவோ, அதே நடவடிக்கையைத்தான் இந்த மீனவர் படுகொலையிலும் எடுக்கப் போகின்றன. முதலில் மத்திய அரசுக்கு ஒரு கடிதம். சமூக வலைத்தளங்களில் மக்களின் எதிர்ப்பு அதிகமாகும் சூழ்நிலையில், மாவட்டத் தலைநகரங்களில் ஓர் அடையாளப் போராட்டம்.

தமிழர்கள் கொல்லப்படும்போதெல்லாம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, எழுதியே வரலாறு படைத்த கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் மாறி, மாறி முதல்வர்களாகத் தேர்ந்தெடுத்த மானங்கெட்டவர்கள் நாமாகத்தான் இருக்க முடியும். காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடைய அமைச்சரவையில் எப்படியாவது இடம்பிடித்து, நக்கிப் பிழைப்பது; மக்களிடம் வெறுப்புணர்வு அதிகமாகும்போது கூட்டணியை முறிப்பதுபோல் நாடகமாடுவது; மக்கள் மறந்ததும் மீண்டும் இந்தக் கட்சிகளுடன் கூட்டு சேர்வது - இதைச் செய்யாத தமிழகக் கட்சிகள் உண்டா? பிறகு எப்படி இந்தக் கட்சிகள் தமிழக உரிமைகளுக்காகப் போராடும்போது, மத்திய அரசு அதற்கு செவிமடுக்கும்?

தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி கிடைக்காதபோது, மத்திய அரசிடம் திமுக தலைவர் கருணாநிதி காட்டிய வீறாப்பை, 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், ஏழு தமிழர்கள் விடுதலை, கச்சத் தீவு மீட்பு' உள்ளிட்ட தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதுண்டா? தன்னுடைய அகங்காரம், ஆணவத்திற்காக மத்திய அரசைக் கவிழ்த்த, மிரட்டிய ஜெயலலிதா என்றாவது தமிழர் நலனுக்காக அந்த வேலையைச் செய்ததுண்டா?

இந்தக் கட்சியினர் தீவிரமாகப் போராடிய(!) போராட்டங்களில் கூட (கருணாநிதி குடும்பத்திற்குள் சண்டை வந்தபோது, மதுரை தினகரன் அலுவலகத்தில் ஊழியர்கள் கொலை; ஊழல் வழக்கில் ஜெ. கைது செய்யப்பட்டபோது தர்மபுரி பஸ் எரிப்பு) அப்பாவி மக்களைத் தானே கொன்றார்கள்! அப்போது ஆட்டிய வெறியாட்டத்தில் பாதியையாவது மத்திய அரசுக்கு எதிராகவோ, மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராகவோ செய்ததுண்டா? யாரையும் கொல்லச் சொல்லவில்லை; தீவிரமாகப் போராடுவதில் என்ன நோக்காடு?

may17 protest for fishermenகுறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி, தமிழ்த் தேசிய அமைப்புகள்தான் மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, அடக்குமுறையையும், வழக்குகளையும் சந்திக்கின்றன. ஒரு கோடி பேர் திமுகவின் உறுப்பினர்கள், ஒன்றரைக் கோடி பேர் அதிமுகவின் உறுப்பினர்கள் என இருப்பது நாக்கு வழிக்கவா?

இந்தக் கட்சிகள் நினைத்தால், இராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு வடநாட்டவர்கள் யாரும் தீர்த்த யாத்திரை வர முடியாதபடி, சென்னைக்கு வரும் வடநாட்டுத் தொடர்வண்டிகளை பத்து நாட்களுக்கு முடக்க முடியாதா? தமிழர்களின் உயிரைக் கிள்ளுக்கீரையாகக் கிள்ளி எறியும் சிங்கள அரசின் தூதரகத்தை, மத்திய அரசின் அலுவலகங்களை தொடர் போராட்டம் நடத்தி, இழுத்து, மூட முடியாதா?

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை, சுமார் 600 மீனவர்கள் படுகொலை என தமிழர்களின் உயிர் போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் எப்போதும் போல் கடிதம், அடையாளப் போராட்டம் என எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

திமுக, அதிமுகவைப் பின்பற்றி, இப்போது மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசுக்குக் கடிதம், அறிக்கை அரசியல், அடையாளப் போராட்டங்கள் நடத்தத் தொடங்கி விட்டன. இதெல்லாம் மக்கள் முன் 'உள்ளேன் அய்யா' போடும் நாடகங்கள் என்பதால்தான், மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டங்களில் எந்த அரசியல் கட்சியையும் உள்ளே விடாமல் துரத்தி அடிக்கிறார்கள்.

வோட்டுப் பொறுக்கி அரசியல் கட்சித் தலைவர்களின் பித்தலாட்டங்களை விடக் கொடுமையாக இருக்கிறது, அக்கட்சிகளுக்கு அடிமைகளாக இருக்கும் தொண்டர்களின் செயல்கள். வழக்கறிஞர்களாக, பத்திரிகையாளர்களாக, எழுத்தாளர்களாக, IT நிறுவன ஊழியர்களாக இருக்கும் படித்த மக்கள்கூட, சமூக வலைத்தளங்களில் கொஞ்சம்கூடக் கூச்சமில்லாமல் தங்களது தலைமையின் பிழைப்புவாதத்திற்கு முட்டுக் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களது சொரணை கெட்டத்தனத்தின்மீதுதான் இவர்களது தலைவர்களின் பிழைப்பு ஓடுகிறது.

ஒருநாள் இவர்கள், தங்களது தலைமையின் அடையாளப் போராட்ட நாடகங்களை எதிர்த்து, சமூக வலைத்தளங்கள், வாட்ஸப் குழுமங்களில் எழுதட்டும். தமிழர்களைத் தொடர்ச்சியாக வஞ்சிக்கும் தேசியக் கட்சிகளுடன் இனி கூட்டணியே வைக்கக்கூடாது என்று முழங்கட்டும். கட்சி அடிபணிகிறதா, இல்லையா பாருங்கள்... அப்படி அடிபணியவில்லை என்ன இழவுக்கு அந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்?

அரசியல் கட்சி அடிமைகளே... ஒன்றை உணருங்கள்.. பிழைப்புவாதத்திற்காக உங்களது தலைவர்கள் குழிதோண்டிப் புதைத்த மாநிய சுயாட்சியின் மீது நின்று கொண்டுதான், தமிழர்கள் மீதான படுகொலைகளை தேசியக் கட்சிகள் நடத்துகின்றன. இதை பொதுமக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது, டெல்லிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் (சரியோ, தவறோ) கிடைத்ததுபோல், தமிழகத்திற்கு ஒருவர் கிடைக்க மாட்டாரா என்பதுதான். அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் மாற்றுக் கட்சியோ, தலைவரோ உருவாகிவிட்டால், உங்களது கட்சிகளையும், தலைவர்களையும் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய மக்கள் தயங்க மாட்டார்கள். அதுவரை உங்களது தலைவர்கள் மாவட்டத் தலைநகரங்களில் அடையாளப் போராட்டங்களையும், நீங்கள் சமூக வலைத்தளங்களில் கட்சி பஜனையையும் நடத்திக் கொண்டிருங்கள்..!

- கீற்று நந்தன்