"நம் நாட்டில் அரசியல் மாற்றம் என்பது என்ன தெரியுமா? கெட்டதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான். நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக உள்ள நோய்கள் என்ன தெரியுமா? அரசியல் கட்சிகள், தேர்தல், பார்ப்பான், பத்திரிகை, சினிமா ஆகிய இந்த அய்ந்தும்தான்" என்கிறார் பெரியார்.

ஐந்தும் மூன்றும் ஒன்பது என்ற குமாரசாமி தீர்ப்பை கொண்டாடியவர்களை இந்த நாடே அறியும். ஊழல்தான் நிர்வாகம்; நிர்வாகம்தான் ஊழல் என்ற கொள்கை, கோட்பாட்டுடன் வாழ்ந்தவர் ஜெயலலிதா.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஊடகங்கள் வேண்டுமென்றே ஜெயலலிதா இறந்து விட்டார் என்பதை சாதகமாக எடுத்துக்கொண்டு, ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்பது போலவும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசி இந்த மூன்று பேரும்தான் ஊழல் செய்து தண்டனை பெற்று இருக்கிறார்கள் என்பதைப்போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

jayalalitha and sasikala 390

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இப்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத் தான் இருக்கிறது. இப்படியொரு அவமானத்தை எதிர்கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லது தான் என்று கூறத் தோன்றுகிறது என்று அம்மாவின் கூஜா நாளேடான தினமணி தலையங்கம் (15.02.2017) தீட்டுகிறது.

​கொள்ளையே தியாகம்; பார்ப்பனியமே சமூகநீதி; ஊடகங்களோ மாமாக்கள்; அதிகார வர்க்கம்தான் கமிஷன் ஏஜெண்டு; போலீசு துறை ஏவல் நாய்; சர்வாதிகாரமே நிர்வாகத் திறன்; சதிச்செயலே சாணக்கியம்; ஆளப்படும் மக்களுக்குப் பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு; தேவர்களுக்கு அமிழ்தம்; இவைதான் பாசிச ஜெயா உருவாக்கியிருக்கும் அரசியல் அகராதி.

​இந்தியச் சமுதாயம் தெரசாவை மட்டுமல்ல; பாசிச எம்.ஜி.ஆரைக் கூட வள்ளலாகப் போற்றுகிறது. பாசிச இந்திராவை அன்னையாக்குகிறது. பாசிச ஜெயாவை அம்மாவாக்கித் துதிக்கின்றது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கூட அதிகாரமிக்கவர்களாக வலம் வருகிறார்கள். ஆனால் தவறை தட்டிக் கேட்பவர்களின் குரல்வளைகள் எப்போதும் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படுகிறது.

ஜெயலலிதா இறந்தபோது, வீரத்தில் வேலு நாச்சியார், அன்பில் அன்னை தெரசா, அறிவில் ஔவையார் என்றெல்லாம் எழுதி, இந்த ஊடகங்கள் தங்களையும் அதில் கரைத்துக் கொண்டார்கள். பாசிஸ்டுகள் தங்கள் நிழலைக்கூட நம்ப மாட்டார்கள், அதனால்தான் சசிகலாவை ஒட்டியும் ஓரசாமலும் வைத்திருந்தார் ஜெயலலிதா. காந்தி இருந்தபொழுது அவருடைய சாம்பலை இந்திய முழுவதும் தூவினார்களாம். ஜெயலலிதாவைப் புதைக்காமல் எரித்திருந்தால் அடிமைகள் தமிழகம் முழுக்க அம்மாவின் சாம்பலைத் தூவியிருப்பார்கள்.

தனது மனைவிமார்களில் சிலரை, அந்நிய உளவாளிகள் என்று அறிவித்துக் கொன்றானாம் இடிஅமீன். அதைப் போல தனது அமைச்சரவையில் இருந்த பன்னீர்செல்வம் அவர்களை, ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தார் என்று விலக்கி வைத்தவர்தான் ஜெயலலிதா.

jayalalitha sasikala ilavarasi sudhakaran

ஏகலைவன் தூரத்திலிருந்து துரோணாச்சாரியிடம் வில்விதை கற்றான். குருதட்சணையாக கட்டை விரலை வெட்டிக்கொடுத்தான். ஆனால் சின்னம்மாவோ ஜெயலலிதாவின் நிழலிலேயே இருந்து அரசியல் வித்தை கற்றார். அப்பல்லோவில் வைத்து எல்லா குருதட்சணையும் கொடுத்தார்.

திருப்பாற்கடலை நக்கி குடிக்கப் போன பூனை, கடலில் விழுந்து செத்துப்போனதாம். நான்கு அங்குலம் நகர்ந்து வந்துவிட்டால் நகரையே வலம் வந்ததாகக் கருதுமாம் நத்தை. சின்னம்மாவின் கதையும் அப்படியே ஆனது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற சிலப்பதிகாரத்தின் வாக்கும் பலித்தது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்கிறார். 2G அலைக்கற்றை வழக்கில் கணிமொழி சிறை சென்றபோது என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை உங்களின் ஊகங்களுக்கே விட்டுவிடுகிறேன். "அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இல்லாதபோது ஜனநாயகவாதியாகவும், அதிகாரத்தில் இருக்கும்போது சர்வாதிகாரியாகவும் இருப்பார்கள்" என்று ஓசோ சொன்னது இன்றும் பொருந்துகிறது.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஓளரங்கசிப் என்ற மன்னரின் வாரிசுகளே காரணம். அதேபோல அதிமுகவின் வீழ்ச்சிக்கு சசிகலா மற்றும் மன்னார்குடி வகையறாக்களே காரணமாக இருப்பார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகியிருக்கிறார். "சாணிக்குப் பொட்டிட்டு சாமியென்பார் செயலுக்கு நாணி நீ கண்ணுறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு" என்கிறார் பாரதிதாசன். இரும்புச்சட்டியில் வறுபடுகிறோம் என்று எண்ணி, எரியும் அடுப்பில் விழும் கதையாக இருக்கிறது தமிழர்களின் நிலைமை. குற்றம் பதவிக்கான தகுதியாகிவிட்டது. நாங்களும் ஊழலை ஒழிப்போம்; நல்லாட்சி தருவோம் என்று முழக்கமிடுகிறார்கள். ஊழலை ஒழிப்பதற்கு ஒரே வழி திமுகவையும், அதிமுகவையும் ஒழிப்பதுதான்.

- தங்க.சத்தியமூர்த்தி