1991 – 1995 நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றழைக்கப்படும் கொள்கைகள் புதிய பொருளாதாரத் துறையில் வேகமாக நுழைக்கப்பட்டது.

பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்களின் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சம்பந்தமான அறிவியல் விழிப்புணர்ச்சி அதிகரித்தது. அதன் விளைவாக மக்களின் அன்றாடத் தேவைகளுக்காக நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் தொழில்களை அந்த நாடுகளில் செய்யாமல், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்தி செய்ய தொழில் வணிக ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

alang ship breaking unit

மேற்கத்திய நாடுகளுக்கு தேவைப்படும் பின்னலாடைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் திருப்பூரிலும், பஞ்சாப் மாநிலம் லாதியானாவிலும், பங்களாதேசிலும் உற்பத்தி செய்யப்பட்டன. அந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட சாயமேற்றுதல் ரசாயன நச்சுக் கழிவுகளால் நொய்யல் நதியும், இன்னபிற நதிகளும், நிலத்தடி நீரும் நஞ்சாக்கப்பட்டது.

பஞ்சாலைத் தொழில் மேற்கத்திய நாடுகளில் அறவே நிறுத்தப்பட்டு இந்தியா, இலங்கை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் மற்றும் சீன நகரங்களுக்கு மாற்றப்பட்டன. பின்னலாடை மற்றும் பஞ்சாலைத் தொழில் முழுவதும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் இன்றும் ஏற்றுமதி அன்னியச் செலாவனி ஈட்டும் தொழில்களாக மாற்றப்பட்டுள்ளன.

மேற்கத்திய நாடுகளுக்கு தேவைப்படும் நுகர் பொருட்கள் மட்டுமல்லாது, நோய்களின் சிகிச்சைக்கு தேவைப்படும், அத்தியாவசியமான 70% மருத்துகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மருந்துகள் உற்பத்திக்கு தேவைப்படும் “அடிப்படை தொழில் நுட்பம் & பார்முலா” மேலைநாட்டு மருந்துக் கம்பனிகளுக்கு சொந்தமானவை. எனவே காப்புரிமை மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் லாபத்தில் பெரும் பங்கு காப்பிரைட் வைத்திருக்கும் நாடுகளுக்கும் போய்ச் சேர்கிறது.

நுகர்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் அல்லாமல், மக்களின் உயிருக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் பெரும் ஆபத்துக்களை உண்டாக்கும் தொழில்களையும் மேற்கத்திய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தள்ளிவிட்டுள்ளன. அப்படி தள்ளிவிடப்பட்ட ஆபத்தான தொழில்களில் ஒன்று- பழுதான, பயன்பாட்டுக்கு லாயக்கற்ற கப்பல்களை உடைக்கும் தொழில்.

கடல் பயணத்துக்கு லாயக்கற்ற கப்பல்களை உடைக்கும் தொழில் இங்கிலாந்து, கனடா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் (குஜராத் மாநிலம் அலாங் துறைமுகம்) மட்டும் நடைபெற்று வந்தன. காலப்போக்கில் இந்தியா தவிர மற்ற மூன்று நாடுகளிலும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தடைகள் காரணமாக உலகத்தில் கப்பலுடைக்கும் தொழில் இன்று 90% குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

உட்புறம் ஆஸ்பெஸ்டாஸ் சுவர்களால் கட்டப்பட்ட நீர்முழ்கிக் கப்பல்கள், அணுஆயுதக் கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்களை உடைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு புற்றுநோயும், இதயம் மற்றும் நுரையீரல் நோய்களும் கடுமையான தோல் நோய்களும் ஏற்படுகின்றன. நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் விபத்திலும், மேற்கண்ட நோய்களாலும் மாண்டிருக்கிறார்கள்; படுகாயமடைந்திருக்கிறார்கள். ஓடிஷா, ம.பி. சாட்டிஸ்கார், பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் ஒப்பந்தக் கூலிகளாக வேலைக்கமர்த்தப்பட்டு அப்பட்டமான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

2006 ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கிளமன்ஸ்” விமானந் தாங்கிக் கப்பல் உடைக்கப்படுவதற்காக குஜராத் அலாங் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த கப்பலை கிரின் பீஸ் இயக்கம் போராட்டம் நடத்தியும், உச்ச நீதிமன்றம் தலையிட்டும் லண்டனுக்கு திருப்பியனுப்பப்பட்டது.

இதைப் போலவே அண்மையில் கொடைக்கானலில் ஹிந்து லீவர் கம்பனியின் மூடப்பட்ட பாதரசம் தயாரிக்கும் தொழிற்சாலை, ராணிப்பேட்டையில் மூடப்பட்ட வெடிமருந்துத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை போன்ற பல சுற்றுப்புறச்சூழலுக்கு பெருங்கேடு விளைவிக்கும் தொழில்களை உதாரணமாகக் காட்ட முடியும். இந்தத் தொழில்களை நமது ஆட்சியாளர்கள் இருகரம் நீட்டி இங்கே வரவேற்கிறார்கள். நம்நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் கொள்ளை நோய்களையும், கொடூரமான மரணங்களையும் சந்திக்கின்றனர். மேற்கத்திய நாட்டு முதலாளிகள் பல்லாயிரம் கோடி ரூபாயை லாபமாகச் சுரண்டிக் கொழிக்கிறார்கள் .

சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், போராளிகள் தலைமையில் மக்கள் போராட்டம் நடத்தாமல் இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த முடியாது.

- கே.சுப்ரமணியன், இந்திய வழக்கறிஞர் சங்க தேசீய செயற்குழு உறுப்பினர்