jallikattu protest 422

"எம்ஜிஆர் இறப்புக்குப் பின் ஜெயாவிற்கு அரணாக நின்று அதிமுக-வைக் காப்பாற்றியது எங்கள் குடும்பம்தான். எனவே அதிமுக-வை உடைக்க எப்பவும் நாங்கள் விடமாட்டோம்" என்று திவாகரன் (சசிகலா) கூறியதும்...

"குருமூர்த்தி தலைமையில் அதிமுக-வை உடைக்க சதி நடக்கிறது. திராவிடம் × ஆரியம் போர் மீண்டும் எழுகிறது. ஆரியம் இங்கு காலூன்ற முடியாது" என்று நடராஜன் (சசிகலா) கூறியதும்...

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் அன்று அவரது சமாதிக்கு மரியாதை செலுத்த வந்த தீபா, முடியாமல் திரும்பிப் போய், "ஜெயலலிதா பிறந்த நாளில் எனது முடிவை அறிவிப்பேன்" என்று சொன்னதும்...

ஒருபுறம்;

அதே நாளில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் தன்னெழுச்சியாக விடிய விடிய போராடிய மாணவர்கள்-இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதும், அதற்கான கண்டனப் போராட்டங்கள் எழுந்ததும்...

மறுபுறம்

இவ்விரண்டும் தனித்தனி சம்பவங்களாக இருக்கலாம்.

ஆனால், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் அதிமுக உடைவதை தள்ளிப் போட்டிருக்கிறதா? சசிகலா நடராஜன் - அதிமுக அரசாங்கம், ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தைக் காட்டி மத்திய அதிகார மையங்களை அச்சுறுத்தி தன்னை தற்காத்துக் கொள்கிறதா? வேறு ஏதாவது காரியம் சாதித்துக் கொள்ளவும் முயல்கிறதா? இப்படி சந்தேகங்கள் எழுவதைப் புறந்தள்ளிவிட முடியாது.

பண மதிப்பிழப்பு தாக்குதலுக்கு எதிராக ஏடிஎம் முன்னால் போராடிய பள்ளிக்கரணை மார்க்சிஸ்டு இளைஞர்களை அடித்து நொறுக்கிய காவல் துறை,

ஒரு சிறிய தெருமுனைக் கூட்டத்திற்கு கை ஒலிபெருக்கி அனுமதியளிப்பதில் கூட பலமுறை அலையவிடுகிற காவல்துறை,

மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பினர் டாஸ்மாக்கிற்கு, பணமதிப்பிழப்பிற்கு எதிராக போராடிய பொழுது குண்டுக்கட்டாக தூக்கி தொடர் செயல்பாட்டை அமுக்கிய தமிழக காவல் துறை...

எப்படி ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை அணுகியது, அணுகுகிறது எனபதை அவதானியுங்கள்.

முதலில் அலங்காநல்லூரில் போராடிய சில நூறு பேர்களை இரவு முழுக்க அனுமதித்து காலையில் குண்டுக்கட்டாக கைது, தொடர்ந்து சீமான் போன்றவர்கள் மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்டு செய்திகள் பரப்பப்பட்டதும்,

ஜல்லிக்கட்டுக்காக சிறிதளவில் மெரினாவில் கூடிய மாணவர்களை அனுமதித்து 100,1000,100000...என கூடுவதற்கு வேடிக்கை பார்த்து பாதுகாப்பு கொடுத்ததும்,

தானாக கூடிய கூட்டம் - எந்த அரசியல் கட்சிகளுக்கும் இங்கு இடமில்லை - சமூக வலைதள இளைஞர் மற்றும் மாணவர்களின் கட்டுக்கோப்பான அறவழிப் போராட்டம் என்பதைத் தொடர்ந்து எழுப்பி எல்லை மீறாமல் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்வதும்,

எல்லை மீறுகிற இடத்தில் மட்டும் தடியடி நடத்தி அச்சுறுத்தி கட்டுக்குள் வைப்பதும்,

ஜல்லிக்கட்டு ஆதரவு-பீட்டா எதிர்ப்பு என்பதைத் தாண்டி இப் போராட்டம் மற்ற விசயங்களுக்குப் போனாலும் மீண்டும் மீண்டும் அங்கேயே கொண்டுவந்து நிலைநிறுத்தப்படுவதும்,

சீமான் உட்பட திரையுலகத்தினரிடம் மட்டும் soft corner அணுகுமுறையைக் கடைபிடித்து, மே17 இயக்கம் போன்றவர்களிடம் வேறு அணுகுமுறையைக் கடைபிடித்து வருவதும்,

திமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பெரிதும் ஆதாயம் தேடிவிடாதபடி எச்சரிக்கையாக இருப்பதும்,

கோவன் பாடிய பாடலுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது; ஆனால், ஜல்லிக்கட்டை தடையை மீறி நடத்தப் போகிறோம், நடத்தவிட்டு கைது செய்யுங்கள் என்று கூறிய சீமான் இதுவரை கைது செய்யப்படாததும்,

எல்லாம் அதிமுக, தன்னெழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது என நம்பச் சொல்கிறீர்களா?

எதிர்பார்த்ததை மீறி தன்னெழுச்சிப் போராட்டம் எழுந்து அதிமுக-வைப் பயமுறுத்துகிறதே ஒழிய கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாதவர்களும் அல்ல.

அதிமுக - பாஜக ஆளும் கும்பலுக்கிடையிலான முரண்பாட்டில் பகடைக் காயாக உருட்டப்படுகிற ஜல்லிக்கட்டுப் பிரச்சினை - போராட்டம், ஆளும்கும்பலுக்கு - ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு குறியீடாக முன்னிறுத்தப்படுகிறது. அப்படி மாற்றுவதற்கான சூழலும், கட்சியும், தலைமையும் இப்பொழுது இல்லை என்பதே உண்மை. சில புரட்சிகர அமைப்புகள் மட்டுமே உள்ளன. இருப்பவர்கள் அவ்வாறு மாற்ற முயலுவது வரவேற்கத் தக்கதே. மக்களிடையே குறிப்பிட்ட கருத்தியல் மாற்றமாவது வரட்டுமே. மாணவர்கள் இந்த எழுச்சி வடிந்தபின் உள்ள படிப்பினைகளைக் கொண்டு அரசியல் அமைப்பாவதன் அவசியத்தை உணரட்டுமே!

இத்தன்னெழுச்சிப் போராட்டமும் தியாகமும் வீணாகிவிடக் கூடாது என்பதும், நிகழ்வுகளை உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே பார்க்கக் கூடாது என்பதுமே நமது ஆதங்கம்.

- ஞாலன்