jallikattu 401

தேவை என்ன?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சமொன்று உள்ளது. அப்படி தமிழகத்தைப் பொருத்தளவில் உள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்றாக உள்ளது தான் ஜல்லிக்கட்டு. ஆனால் நமது மாநில சிறப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த நாம் ஒவ்வொரு முறையும் மத்தியில் டெல்லியை நாட வேண்டியுள்ளது.

என் மாநிலத்தின் கலாச்சார முறைக்கான உரிமையை வேண்டுமா, வேண்டாமா என மத்திய அரசு முடிவு செய்யுமா? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.

நான் என்ன சாப்பிடுவேன்? என்ன விளையாடுவேன்? எனது கலாச்சாரம் எது? எனது பண்பாடு எது? என டெல்லியில் இருக்கும் மத்திய அரசிற்கு எப்படி தெரியும்! அந்தந்த மாநில அரசிற்குத் தானே இதெல்லாம் தெரியும். அப்படியிருக்கும் போது எனது கலாச்சார முறையை மாநில வழிமுறையை நிர்ணயிக்கும் உரிமை எப்படி மத்திய அரசாங்கத்திடம் இருக்க முடியும்?.

நான் தான் தமிழ் பேசுகிறேன்; என் மாநில முதலமைச்சர் தான் தமிழ் பேசுவார்; அப்படியானால் எங்கள் மொழி ரீதியான, பண்பாட்டு ரீதியான உண்மையும், உணர்வும் எப்படி மத்திய அரசுக்குப் புரிய வரும்!

ஒருவேளை இம்முறை ஜல்லிக்கட்டுக்கான உத்தரவு ஏற்பட்டால் கூட அடுத்த வருடமும் எங்கள் மொழி, கலாச்சாரம் தெரியாத இதே மத்திய அரசிடம் தான் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி முறையிட வேண்டும்!

நிரந்தரத் தீர்வு

எனது மாநிலத்தின் சிறப்பம்சங்களை, கலாச்சாரத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டிய அதிகாரம் டெல்லியில் இருக்கக் கூடாது. மாநிலத்திற்குட்பட்டே அமைய வேண்டும். இதற்கான சட்டத் தீர்மானங்களை நிறைவேற்றுவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இந்தத் தீர்மானங்கள் நிறைவேறினால் மட்டுமே நாம் மாநிலத்திற்கான, நம் கலாச்சாரத்திற்கான உரிமையை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். மாநில அரசிற்கு கீழ் இந்த அதிகாரம் வருமென்றால் மட்டுமே எப்படியும் நமக்குத் தேவையான உரிமையை நம்மால் பெற்று விட முடியும்.

இதனை முன்னெடுக்க நாம் முன்வர வேண்டுமே தவிர சமீப காலத்திய தீர்வை நோக்கி நகர்ந்து ஏமாறி விட வேண்டாம்.

- அபூ சித்திக்