jallikattu 373

ஜல்லிக்கட்டை கம்யூனிஸ்ட்கள் ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பது மீதான நிலைப்பாட்டை தேசிய இனச் சிக்கலின் மீதான மார்க்சிய-லெனினிய அடிப்படையில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய இனப் போராட்டத்தில் முதலாளித்துவ தேசியவாதமும் பாட்டாளி வர்க்க (சர்வ)தேசியவாதமும்:

தேசிய இனப் பிரச்சனையில் ஒடுக்குகிற தேசிய இனத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் உழைக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகப் போராட்டம் பக்கம் கம்யூனிஸ்ட்கள் நிற்க வேண்டும்.

ஒரு விசேஷ கோரிக்கை, நிபந்தனையின்அடிப்படையில் ஒடுக்கப்படுகிற தேசியத்தின் பாட்டாளி வர்க்கம், தேசிய இனப் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும். ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் முதலாளிகளின் முதலாளித்துவ தேசியவாதத்தை அம்பலப்படுதியபடி தேசிய இனப் போராட்டத்தை விசேஷ கோரிக்கையின் அடிப்படையில் கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்க வேண்டும். அதாவது குறிப்பான கோரிக்கை அடிப்படையில் ஆதரிக்க வேண்டும். அந்த கோரிக்கைதான், தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயர்நிர்ணய உரிமை.

ஒடுக்குகிற தேசிய இனத்தில் இருந்து ஒடுக்கப்படுகிற தேசிய இனம் பிரிந்து போக வேண்டும் என்பது ஜனநாயகக் கோரிக்கை. மாறாக, ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் போராட்டத்தை ஆதரித்தால், அத்தேசிய இனத்தின் முதலாளிகளை ஆதரிப்பதாக ஆகி விடும். எனவே நாம் தேசிய இன மக்களின் விடுதலைப் போராட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் கூறுவது, ஒடுக்குகிற தேசியவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடாகும். இதுதான் தேசிய இனச் சிக்கல் குறித்த மார்க்சிய லெனினியத்தின் அடிப்படை. இந்த அடிப்படையில் இருந்து விலகுவது சந்தர்ப்பவாதமும், திருத்தல்வாதமுமே அன்றி வேறொன்றுமில்லை.

இந்திய அனுபவத்தில் இந்த அடிப்படைகளை பேசுவதென்றால் இந்து தேசியம், இந்திய தேசியமாக ஒடுக்குகிற தேசியமாக(அருவமாக) உள்ளது. காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் திலகர், காந்தி போன்றோர்கள் இந்து தேசியக் கருத்தியலை சமூகமயப்படுத்துவதற்கு துணை நின்றனர். இந்து தேசியமானது, வேத பண்பாடு, வேத மரபு, வடமொழி, நால்வர்ண நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு அரசியல், பண்பாட்டு மேலாண்மையை செலுத்துகிறது. ஒடுக்கப்படுகிற தேசியமாக காஷ்மீர், வடகிழக்கு மாகாணங்கள் முதன்மையாகவும் இன்ன பிற தேசிய இனங்கள் பொதுவாகவும் இன, மொழி, பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு, ஒதுக்கலுக்குள்ளாகிறது. ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மைய அதிகாரம் என்ற பெயரில் பல் தேசிய இனங்களின் மொழி, இன, பண்பாட்டு வழக்கங்கள் மெல்ல இந்து தேசியத்திற்குள் கரைக்கப்படுகிறது, தன்வையப்படுத்துகிறது அல்லது ஒழிக்கப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில் பேசுகையில், இந்து தேசியத்திற்கெதிரான காஷ்மீர், வடகிழக்கு மாகாண தேசியங்களின் (பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய) சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் பக்கம் நிற்பது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற ஏனைய தேசிய இனத்தின் போராட்டத்தின் பக்கம் நிற்பது மார்க்சிய லெனினியவாதிகளின் ஜனநாயகக் கடமையாகும். மாறாக, ஒடுக்கப்படுகிற தேசியமான காஷ்மீர், வடகிழக்கு மாகாணங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையானது ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் முதலாளிகளுக்கே சேவை செய்யும், ஆகவே நாம் இப்போராட்டத்தை முதலாளித்துவ நாடாளுமன்ற எல்லைகளுக்குள்ளாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவது இந்து தேசியவாத முதலாளிகளுக்கு ஆதரவாக அமையும்.

முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் கம்யூனிச (சர்வ)தேசியவாததிற்குமான வேற்றுமைகளை உணர்ந்து கொண்டு இச்சிக்கலை அணுக வேண்டும். முதலாளித்துவ தேசியவாதமானது அதிகாரத்தை தக்க வைக்க/கைப்பற்ற தேசியவாதத்தை கருவியாகப் பயன்படுத்தும். பிற தேசிய இனங்களின் மீதான இனப் பகைமைகளை கட்டவிழ்ப்பது அல்லது பாட்டாளி, உழைக்கும் வர்க்க ஜனநாயகத்திற்காக அல்லாமல் முதலாளிகளின் ஜனநாயகத்திற்காக தேசியச் சிக்கலை முதன்மையாக்குவது, தேசிய இனப் பண்பாட்டு பெருமிதங்களை செயற்கையாகப் பேணுவது, வெறியூட்டல் தேசியவாதத்தை சமூகமயப்படுத்துவது போன்றவை இதன் பொதுப் பண்பாகும். தேசிய அரசுகளில் உதாரணம் கூற வேண்டுமென்றால் ஜெர்மனியின் ஹிட்லர், இலங்கையின் சிங்கள அரசு, தற்போது இந்தியாவின் மோடி, அமெரிக்காவின் ட்ரம்ப், பிரான்சில் லாபென் எனக் கூறிச் செல்லலாம். தமிழக அனுபவத்தில் சீமான், மணியரசன் போன்றோர்களை இதற்கு உதாரணம் கூறலாம். இன்றைய சர்வதேச அரசியல் அரங்கில், அரசியல் அதிகாரப் போட்டிகளை தீர்மானிக்கிற முக்கிய இடத்திற்கு முதலாளித்துவத்தின் இனத் தேசியவாதம் முன்னுக்கு வந்து நிற்பது கவனிக்கத்தக்கது.

மாறாக பாட்டாளி வர்க்கத்தின் தேசியவாதம், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையின் பாற்பட்ட சர்வதேசியவாதம் ஆகும். உலகின் அனைத்து இன மக்களின் உழைக்கும் மக்களை சமமாகப் பாவிக்கும், நிலத்தையும் மக்களையும் காக்கும். அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகமாக அல்லாமல், உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்கும். இதற்கு உதாரணம் கூற வேண்டுமென்றால் லெனின் தலைமையிலான முன்னால் சோவியத் ஒன்றிய ரஷ்ய அரசு, டிட்டோ தலைமையிலான யூகோஸ்லாவிய அரசு. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோவியத் ரஷ்ய சோசலிசக் குடியரசில் அங்கம் வகிக்கிற அனைத்து தேசிய இன மக்களும் பிரிந்து போகலாம் என்ற உரிமையுடன் கூடிய கூட்டாட்சி சாத்தியமானது. எழுபது ஆண்டுகள் பிரிந்துபோவதற்கு சட்டப்பூர்வ அரசியல் சாசன வழிகள் இருந்தும், பிரியாமல் இணைந்திருந்தன. அனைத்து இன மக்களின் மொழி, பண்பாட்டு, அரசியல் பொருளியல் உறவுகளை சமமாகப் பாவித்து ஒடுக்கப்படுகிற தேசியம் இல்லாமல், ஒடுக்குகிற தேசியமும் இல்லாமல் சமமான உரிமை சோவியத் ரஷ்யாவில் வழங்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோஷலிச அரசால் மட்டுமே இது சாத்தியமும் ஆகும். எழுபது ஆண்டுகள் கழித்து சோவியத் பல இனத் தேசிய அரசாக உடைந்தபோது ஒரு சிராய்வு கூட இலகுவாகப் பிரிந்ததற்கு லெனினின் தேசிய இனக் கொள்கையே ஆதரமாக இருந்தன. இதைத் தான் பின்னாளில் ”ரஷ்யாவிற்கு அடியில் லெனின் டைம்பாம் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்”என புட்டின் புலம்புவதற்குக் காரணமாக அமைந்தது.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில வறட்டுவாத மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தேசிய இனச் சிக்கல் மீதான மார்க்சிய லெனினிய அடிப்படையை இயங்கியல் ரீதியில் புரிந்துகொள்ளாமல் அருவமாக அகநிலைப் பூர்வமாக புரிந்துகொள்வது அல்லது தேசிய முதலாளித்துவத்திடம் சமரசம் செய்து கொள்வதை பொதுப் பண்பாகக் கொண்டுள்ளது.

தேசிய இன மக்கள் திரளனரின் அரசியல் - பொருளியில் - பண்பாட்டு உரிமைக்கான போராட்டம் என்பது அத்தேசிய இன மக்களின் ஜனநாயகத்திற்கான போராட்டமாக உணர்ந்து கொள்வதில் கம்யூனிஸ்ட்கள் பின்னோக்கிச் செல்கிறார்கள். மாறாக, இனவாத அரசியல் சக்திகளை தேசிய இனச் சிக்கல்களை கைகொள்கிற போக்கு முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந்த இடத்தில் மோடியின் ஆட்சிக்குப் பிந்தைய சூழலில் தேசிய கீதத்தை திரையரங்கில் கட்டாயமாக ஒளிபரப்பி மக்களை எழுந்து நிற்க ஆணையிட்டது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் காஷ்மீரீல் பெல்லட் குண்டு ஒடுக்குமுறையால் பல நூறு காஷ்மீரிகளின் கண் பார்வையைப் பறித்து பலநூறு காஷ்மீரிகளைக் கொன்று குவிப்பது, பஸ்தரில் மாவோயிஸ்ட் ஆபத்து என பழங்குடி மக்கள் கொலை செய்யப்படுவது, செல்லாக் காசு அறிவிப்பை எதிர்ப்பவர்களை தேசத் துரோகிகளாக முத்திரை குத்துவது என இந்திய அரசின் அனைத்து சர்வாதிகாரப் போக்கையும் தேசியவாதத்தின் பெயரால் நியாயப்படுத்துவது, சமூக ஒப்புதலைப் பெற முயற்சிப்பது பெரும் பாசிசப் போக்காக மாறிவருகிறது.

இப்பின்புலத்தில் தேசிய இனச் சிக்கல், முதலாளித்துவ தேசியவாதம் மீதான பார்வையை கம்யூனிஸ்ட்கள் மக்களிடத்தில் எடுத்துச் செல்வதின்அவசியத் தேவையாக முன் எழுந்துள்ளது. ”தேசியம்” முதலாளித்துவத்தின் கற்பிதம் தான், மாறாக அந்த கற்பிதத்தின் பெயரால் மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படும்போது அக்கற்பிதத்தை சரியான வகையில் கம்யூனிஸ்ட்கள் கையிலெடுப்பது அவசியமாகிறது.

jallikattu bull

தேசிய இனச்சிக்கலும் ஜல்லிக்கட்டு அரசியலும்:

ஜல்லிக்கட்டு / மாடு பிடித்தல் / மஞ்சு விரட்டு குறிப்பான தேசிய இனத்தின் பண்பாட்டுக் கூறாக இருக்கிற போது, நீதிமன்ற பொறியமைப்பின் ஊடாகவும், பீட்டா என்ற தன்னார்வ நிறுவனத்தின் ஊடாகவும் இதை தடை செய்கிற இந்துதேசியத்தின் செயல்பாடு, ஜனநாயக மறுப்பாகும்.

மாறாக, ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது ஓர் சமத்துவுமுடைய “சுத்தமான” பண்பாட்டுக் கூறல்ல, இதை ஆதரிப்பது தமிழ் முதலாளிகளின், ஒடுக்குகிற சாதித் தமிழர்களை ஆதரிப்பதாகும் என்று கூறுவது மறைமுகமாக இந்துதேசியத்தின் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக சென்று முடிகிற வாதமாகும். இங்கு நமது விசேசக் கோரிக்கை என்னவெனில், ஏறு தழுவதல் / ஜல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு போன்ற பண்பாட்டு 
விழுமியங்களில் சாதி ரீதியில் தொழில்படுகிற பண்பாட்டு அசமத்துவத்தை கண்டிக்கிற அதே வேளையில், இப்பண்பாட்டு மேலாண்மை மீதான எதிரப்பரசியலின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே!

ஒடுக்குகிற சாதித் தமிழர்களின் சாதிய ஒடுக்குமுறைகளை, பண்பாட்டு மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தியே, ஜல்லிக்கட்டு “உரிமை” மீதான “அரசியல் கோரிக்கையை” ஆதரிக்க வேண்டும். குறிப்பான சமூகத்தின் பண்பாடு மீதான தடையை, ஜனநாயக மறுப்பை சுத்தமான பண்பாடில்லை என்ற அர்த்தத்தில் எதிர்ப்பது ஜனநாயக மறுப்பின் பக்கம் நிற்பதாகும்.

நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவை பிறப்பிடமாக கொண்டு அரசியல் - பொருளியில் - பண்பாட்டுத் தளத்தில் தொழில்படுகிற சாதிய ஒடுக்குமுறைகளை, அசமத்துவங்களை (சொல்லளவிலும், செயலளவிலும்) எதிர்ப்பதோடு, அம்பலப்படுத்துவதோடு, போராடுவதோடு, இன உரிமைக்கான போராட்டத்திலும் ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் அதன் அரசியல் கோரிக்கையின் பக்கம் கம்யூனிஸ்ட்கள் நிற்க வேண்டும்.

இவ்வாறு கூறுகிற இடத்தில் நமது வறட்டு மார்க்சியர்ககளும் முரட்டு நாத்திகவாத திராவிட அறிவாளிப் பிரிவினரும் சில கேள்விகளை எழுப்புகிறார்கள். அதாவது, ஜல்லிக்கட்டு ஒரு பண்பாடே அல்ல, ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாடல்ல, மாட்டையும் மனிதர்களையும் மோத விடுகிற ஜல்லிக்கட்டு விளையாட்டு பகுத்தறிவிற்கு ஏற்ற விளையாட்டல்ல, ஜல்லிக்கட்டு மேட்டுக் குடியினருக்கான விளையாட்டு, சமத்துவமில்லாத விளையாட்டை உழைக்கும் மக்களின் பண்பாடாக ஏற்றுக் கொள்ள இயலாது, நவீன காலத்தில் இந்த விளையாட்டு தேவையற்றது, ஆணாதிக்க விளையாட்டு என சாதி ஏற்றத் தாழ்வின் அடிப்படையிலும், வர்க்க ஏற்றத்தாழ்வின் அடிப்படையிலும், பகுத்தறிவு அடிப்படையிலும், பாலின சமத்துவ அடிப்படையிலும், நவீனத்துவத்தின் அடிப்படையிலும் முன்வைக்கப்படுகின்றன. இதை சற்று நெருங்கிப் பார்ப்போம்.

பண்பாடு என்றால் என்ன?

பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் பழக்கங்கள், அதன் மரபுத் தொடர்ச்சி என்பதைக் குறிக்கிற கருத்தாக்கம் ஆகும். அதாவது சமூக மரபுகளின் தொடர்ச்சி. பண்பாடு பற்றின ராபர்ட் ஹேலூவியின் விளக்கத்தை மேற்கோள் காட்டுவதென்றால்,

“பண்பாடு என்பது ஒரு தனி நபர், தனது சமூகத்திடம் இருந்து கற்றறியும் நம்பிக்கைகள்; வழக்கங்கள்; கலை நெறிகள்; உணவுப் பழக்க வழக்கங்கள், கைவினைகள் போன்றவற்றின் ஒட்டு மொத்த தொகுப்பாகும். இவற்றை அந்தத் தனிபர் தனது சுய படைப்புத் திறன் மூலம் அறியாமல், கடந்த காலத்தின் மரபுத் தொடர்ச்சியாக முறைசார் மற்றும் முறைசாராக் கல்வி முறைகளின் மூலம் அறிந்து கொள்கிறார்”

தமிழ்ச்சமூக அமைப்பும் அதன் பண்பாடும்:

சமூக அமைப்பின் இயக்கத்திற்கு அச்சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியே அடிப்படையாக உள்ளது. அரசியல், நீதி, கலை, மதம், தத்துவங்கள் அச்சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தின் மேலடுக்கில் இயங்குபவை. ஆனாலும் சமூகத்தின் மேலடுக்கு, அடித்தள உற்பத்தி உறவில் செல்வாக்கு செலுத்தும்.

இவையே சமூகத்தின் இயக்க விதி குறித்து மார்க்சிய லெனினியத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தை வைத்துப் பேசுவதென்றால் வேளாண் உற்பத்தி/மறு உற்பத்தி அடிப்படையாகவும், அதன் மேல் கட்டப்பட்டுள்ள அரசியல் அதிகாரம், மதம், சாதியம் மேற்கோப்பிலும் தொழில்படுகிறது.

இந்திய சமூகம் சாதியப் படிநிலையில் இயங்குகிற சமூகமாக இருக்கிற காரணத்தால் சொத்துடைமையுடைய சாதிய சமூகத்தின் அதிகாரமே அரசியல் பொருளியல் பண்பாட்டின் அதிகாரமாக மேலாண்மையாக தொழில்படுகிறது.

அவ்வகையில் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய இந்தியாவில் நகர்ப்புறம் சார்ந்த முதலாளித்துவ பொருளியல் அடித்தளம், நாட்டின் பொருளாதாரத்திலும் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினாலும் சுமார் 60 விழுக்காட்டு மக்கள் கிராமப்புற நில உடமை உற்பத்தி உறவின் எச்சங்களைக் கொண்ட சமூகமாக உள்ளனர்.

சமூகமயக்கப்பட்ட தமிழ்த் தேசியம்:

சேர, சோழ, பாண்டிய, பல்லவர் என்ற அரசுருவாக்க காலகாட்டத்தில் நில எல்லைகள் அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட அரசு தமிழகத்தில் தோற்றம் பெற்றன. வட்டாரத் தன்மை, இனக் குழுத் தன்மை அனைத்தும் இந்த மையப்படுத்தப்பட்ட அரசின் கீழ் ஒரு குடையாக ஒன்றிணைக்கப்பட்டன. தேசிய இணைவாக்கம் பெற்றன. காலனியாதிக்க கட்டம் அதற்குப் பிந்தைய கட்டத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினைகள் இந்த நிலப்பரப்பு அடிப்படையிலான தமிழ்த் தேசிய இணைவாக்கமானது மொழி, இனம், நிலப்பரப்பு அடிப்படையில் நவீன கால அரசதிகாரமாக தீர்மானகரமான வகையில் தோற்றம் பெற்றது.

தமிழகத்தின் கிராமப்புற அரசியல் பொருளாதாரத்தில் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள், கவுண்டர்கள், தேவர்கள், ரெட்டியார்கள், வன்னியர்கள் நிலத்தின் மீதான சொத்துடைய சாதியாக (90%) உள்ளனர். இச்சமூகத்தின் பண்பாடே பழக்க வழக்கங்களே பொதுப் பண்பாடாகவும் பேணப்படுகிறது. காலனியாதிக்கத்திற்கு முன்பும் பின்பும் நில உற்பத்தி உறவிலும், அரசியல் அதிகாரத்திலும் அக்கம் பக்கமாக சில மாற்றங்கள் இருப்பினும், பொதுவாக இச்சாதிகளிடமே நேரடியாகவும் மடம், கோவில் நில உரிமை என மறைமுகமாகவும் நில உரிமை உள்ளன. ஆயிரம் ஆண்டுகளாக கிராம சமூகங்களில் சொத்துடைய வர்க்கங்களின் பண்பாடே மேலாண்மை செலுத்துகிற பண்பாடாக கிராமத் திருவிழாக்களில் பேணப்பட்டு வருகிறது. ஏற்றத் தாழ்வு மிக்க சமூகத்தின் வர்க்கங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேற்றுமைகள், முரண்பாடுகள் இவ்வாறு கிராம சமூகத்தில் நிலைபெற்றன.

தமிழகத்தின் பல்வேறு பிராந்தியங்களில் வட்டாரங்களின் சொத்துடைய வர்க்கங்களின் பண்பாட்டு அடையாளங்கள் பொதுப் பண்பாடாக (மேலோர் பண்பாடு என்ற அர்த்தத்தில்) தமிழர் பண்பாடாக பொதுமைப்படுத்தப்பட்டன அல்லது சுவீகரிக்கப்பட்டன. கொங்கு பண்பாடு, தென் தமிழகப் பண்பாடு என்றுள்ள அதே நேரத்தில் தமிழர் பண்பாடாக பொதுமைப்படுத்தப்பட்டன.

தை மாதத்தில் நடைபெறுகிற பொங்கல் திருவிழா, நில உரிமை பெற்றுள்ள சொத்துடைய வர்க்கத்தின் விழாவாக, பண்பாடாக வெளிப்படுகிற அதே நேரத்தில், தைப் பொங்கல், தமிழர் திருவிழாவாக பொதுமைப்படுத்தப்படுகின்றது.

சமூகத்தின் உற்பத்தி நிலையில், சொத்துடைய வர்க்கத்தின் நேரெதிர் தளத்தில் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள, உழைப்பின் போதிய பலனைப் பெறாத, உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிற அடித்தள மக்களின் பண்பாடு, தொழில், கல்வி ஆகியவை காலம் காலமாக மறுக்கப்பட்டும், விதிக்கப்பட்டும், கீழோர் பண்பாடாக ஒதுக்கப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் வந்தன. சமூகத்தின் அடித்தள மக்களின் மீதான பண்பாட்டுத் திணிப்புகள்/மேலாண்மைகள் வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களில் எதிர்ப்புகளை எதிர்கொண்டன.

உதாரணமாக காலம் காலமாக பறையர்கள் இசைக்கிற இசைக்கருவியான பறையை சாப்பறை என்ற பெயரில் இடைநிலை சாதிகளால் இழிவாக ஒதுக்கப்பட்டது. பின்னர் அச்சமூகத்தின் சுயமரியாதைக்கான எழுச்சியின் காரணமாக போர்ப்பறை என்ற அர்த்தத்தில் தமிழர் பண்பாடாக பறை அடையாளம் விரிக்கப்பட்டது. அதேபோல கீழோருக்கு விதிக்கப்பட்ட இழிவான அடையாளங்களை, மரபுகளை மறுத்தல் என்ற அடையாள மறுப்பு அரசியலும் எழுச்சி பெற்றன. சாதிய பண்பாட்டு மேலாண்மையால் வழங்கப்பட்ட அடையாளங்களை மறுத்தல் அதாவது செத்தாருக்கு குழி வெட்டுதல், ரெட்டியார் சாவு வீட்டில் நாடார் மக்கள் சென்று மாரடித்தல் போன்ற வழக்கங்களை மறுத்த போக்கும் நடைபெற்றது. கோவில் நுழைவுக்குத் தடை, பொதுக் குளத்தில் நீர் எடுக்கத் தடை, தோள் மேல் துண்டு அணியத் தடை போன்ற உரிமை மறுப்பு மரபுகளை தகர்க்கிற எழுச்சிகளும் முன்னுக்கு வந்தன. சில வழக்கங்கள் வழக்கொழிந்தன. சில இன்னும் தொடர்கின்றன.

ஒரு சமூகம் வேட்டைச் சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு மாறுகிற கட்டத்திலும், பின்பு முதலாளித்துவ உற்பத்தி கட்டத்திற்கு மாறிச் செல்கிற போக்கிலும், வர்க்கங்களுக்கு இடையே ஏற்படுகிற தாக்கங்கள், அதன் பண்பாடுகளிலும் வெளிப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகால நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்து வளர்ச்சியடைந்த உற்பத்தி முறைக்கு மாறிச் செல்கிற இக்கட்டத்தில் அச்சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளினரின் மரபான இழி அடையாளங்களை மறுப்பதும், சொந்த அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்வதும் அதன் வளர்ச்சிக் கட்டத்தில் நடைபெறுகிறது. அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, ஆதிக்க இடைநிலை சாதிகளின் பண்பாடாக பொதுமைப் படுத்தப்பட்ட கட்டத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட சாதிகளின் பண்பாட்டையும் இணைத்துக்கொண்டோ அல்லது அடித்தள மக்களின் பண்பாடு பொதுப் பண்பாடாக மாறுகிற கட்டத்திலோ ஒன்றுக்கொன்று மோதிய முரண்பாட்டு நிலையில் இன்று தமிழ்ச் சமூகம் நிற்கிறது.

மாறாக ஏற்றத் தாழ்வு மிக்க சமூக அடுக்கில், வர்க்க வேற்றுமைகளை அற்ற ‘சுத்தமான பண்பாட்டின்’ மீதான ஜனநாயக உரிமையை மறுக்கிற நேரத்தில் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் ஆதரவளிக்க முடியும் என்ற வாதம் இயங்கியல் மறுப்பு வாதமாகும்.

மேலும் எந்திரகதியாக மக்களிடம் தொடர்பற்றவர்களாக நமது அறிவாளிப் பிரிவினர் இச்சிக்கலை (ஜல்லிக்கட்டு உரிமை மீதான அரசியல் கோரிக்கையை) முரட்டு நாத்திகவாதத்தின் பெயரிலும், வறட்டு வர்க்கப் பார்வையின் பெயராலும் ‘அரசியல் கோரிக்கையை’ நிராகரிக்கத் தயாராகின்றனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக கோவில்களில் ஆடு, கோழிகள் வெட்டத் தடை விதித்தார். வறட்டு நாத்திகவாதத்தின் பெயரில் இந்நடவடிக்கையை சில திராவிடக் கட்சிகள் ஆதரித்தன. மாறாக, ஒரு சமூகப் பிரிவினர் குறிப்பான மரபு வழி பழக்கவழக்கங்களை பலவந்தமாகக் கட்டுப்படுத்துவது என்பது ஜனநாயக விரோதமே என்ற அர்த்தத்தில், சிறு தெய்வ வழிபாட்டு உரிமைக்கு எதிரான இந்து தேசிய பண்பாட்டு மேலாதிக்க நடைமுறையாக இந்த சட்டம் எதிர்க்கப்பட்டது. இந்தப் பின்புலத்திலேயே ஜல்லிக்கட்டு மீதான தடையை அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் அணுக வேண்டும்.

இந்து தேசிய வாதமானது தனது பண்பாட்டு மேலாதிக்கத் தாக்குதலை நீதிமன்றப் பொறிமுறைகளின் ஊடாக மேற்கொள்கிறது, அதற்கெதிராக “அரசியல் கோரிக்கையாக” இந்த உரிமையைக் கோர வேண்டும்.

- அருண் நெடுஞ்செழியன்