People Queue Line in ATM

ஜெயமோகன்: இந்திய வரலாற்றில் எப்போதும் அறியப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கள்ளப்பணத்திற்கு ஆதரவாக இப்படி வெளிப்படையாகக் களமிறங்கியதில்லை. இப்படி அதை ஆதரித்து இத்தனை பொருளியலாளர்கள் பேசியதில்லை. அறிவுஜீவிகள் அதன்பொருட்டு கண்ணீர் மல்கியதில்லை. இடதுசாரிகள் கள்ளப்பணத்தைக் காப்பதற்காக பிரச்சார மோசடிகளில் ஈடுபடும் ஒரு காலத்தை நாம் கண்ணெதிரில் கண்டுகொண்டிருக்கிறோம்

  நீங்கள் கட்டுரை எழுத முடிவு செய்ததின் நோக்கமே தவறாக இருக்கிறது. எந்த இடது சாரியும், அதன் தலைவர்களும் கள்ளப் பணத்தை ஒழிப்பது தவறு என்றோ, அதன் நோக்கம் தவறு என்றோ சொல்லவில்லை. மாறாக பொதுமக்கள் இவ்வளவு அல்லல்படுகிறார்களே, அதற்கு ஏற்றார்போல் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மோடி அரசு தவறி விட்டது என்றுதான் சொல்கிறார்கள்.

ஒன்றை திரு. ஜெயமோகன் புரிந்து கொள்ளவேண்டும். இந்திய மக்கட் தொகையில், எழுபது சதம் வணிகப் பொருளாதாரத்தை சாராமல், விவசாயப் பொருளாதாரத்தை சார்ந்துள்ளனர். விவசாயம் சார்ந்த தொழில் வருவாய்க்கு, வரி இல்லை. விவசாய உற்பத்திக்கு வரியில்லை. இதை நன்கு கவனத்தில் கொண்டால், இதர தொழில்கள், வணிகங்களில் கிடைக்கும் வருவாய்க்கு மாத்திரமே வரி விதிப்பு உண்டு. ஆக, கள்ளப்பணம் இன்று ஏடிஎம் வாசல்களில் நின்றுகொண்டிருக்கும் எழுபது சதம் மக்களிடம் இல்லை. வரி ஏய்ப்பு செய்த பணமே கள்ளப் பணம். தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, கையில் இருப்பு உள்ள ஒரிஜினல் பணம் விடிந்ததும் செல்லாது என்கிற அரசு ஆணை, படிக்காத பாமர மக்களுக்கு இடியாக இறங்கி இருக்காதா? இன்று ஏடிஎம் வாசலில் கால் கடுக்க நிற்பவர்கள் யார்? இன்றைக்கு கையில் சிறுவாடாக சேர்த்து வைத்திருக்கும் ஏழைத் தாய்மார்கள் - தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்காகவும், படிப்பிற்காகவும் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை மாற்ற விரலில் கறுப்புக் குறி (எவர் செய்த தவறுக்கு யார் கறுப்பு மை அடையாளத்தை ஏற்பது? - கேவலமாக இருக்கிறது அய்யா) ஏற்கும் கிராம மக்கள். எழுபது சதம் பேர் வரி கட்டத் தேவை இல்லாதவர்கள், இன்றைக்கு கள்ளப் பணம் வைத்திருந்தவர்களாக திரு.மோடியால் ஊடகங்களில் சித்தரிக்கப் படுகிறார்கள். யார் செய்த பாவத்திற்கு யார் தண்டனை அனுபவிப்பது? (பாவம் என்கிற உங்கள் மொழியில் பேசினால் தான் உங்களுக்கு புரியும்)

வரி ஏய்ப்பு செய்த பணம் தான் கள்ளப் பணம் என்கிற பால பாடம் தெரிந்திருந்தால், ஒரு ஜனநாயக நாட்டில் வரி ஏய்ப்புக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத எழுபது சதம் மக்கள் ஏன் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை மாற்ற இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்கிற ஒரு மனிதாபிமான நோக்கில் அணுக முடியும். மோடிக்கு எழுபது சதம் ஏழைகளை கண்ணுக்குத் தெரியாது..அம்பானியும், அதானியும் தான் தெரியும். இன்னொன்று மோடி சொன்னது அவர் எவ்வளவு சிந்தனையளவில் செல்லாக் காசாக இருக்கிறார் என்பது புரியும் - அதாவது, இதுவரை பணம் மாற்றிக்கொண்ட அனைவரையும், (கிராமப் புற மக்களை) கள்ளப் பணம் கட்டியவர்கள் என சித்தரித்தது எவ்வளவு பெரிய இழிவு?

ஜெயமோகன்: உலகில் மிக அதிகமாக கறுப்புப்பணம் கொண்ட ஐந்தாவது பொருளியல் இந்தியாவுடையது -

ஆக கறுப்புப் பணப் புழக்கத்தில், இந்தியா ஐந்தாவது நாடு என்றால், பிற நான்கு நாடுகள் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்கின்றன என்கிற பாராளுமன்ற விவாதம் நடக்க என்ன நடவடிக்கையை பிஜேபி அரசு மேற்கொண்டது?இதர பிற அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசித்ததா? இது இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்கும் நிலை எனில், பிற அரசியல் கட்சிகளை உடனடியாக அல்லவா அழைத்து கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்? ஏன் அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்கத் தவறியது?

உலக நாடுகளுக்கெல்லாம் இடை விடாமல் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் மோடி அந்த பிற நான்கு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? மோடிக்கும் தெரியும், எல்லா அரசியல்கட்சிகளுக்கும் தெரியும் - கள்ளப் பணம் எங்கே உற்பத்தியாகிறது என்று. அந்த ஊற்றுக் கண்ணை அடைக்க வழி என்ன என்று ஆய்வு செய்யலாமே? எண்பது சதம் கள்ளப் பணம் ஒழிக்கப் படவேண்டுமானால், இந்திய பொருளாதாரத்தில் காலாகாலாமாய் ஊடாடிக் கிடக்கும், பார்டிசிபேட்டரி இன்ஸ்ட்ரூமெண்ட்டை (பங்கேற்பு பரிவர்த்தனை பணம்) இன்று இரவிலிருந்து செல்லாது என் மோடி அறிவிக்கட்டுமே - பிஜேபிகாரர்களே மோடியை தூக்கிலிட்டு விடுவார்கள். இப்போதும், பொதுமக்கள் சொல்வதெல்லாம், ஏன் எங்களை வதைக்கிறீர்கள்? வதைபடுபவர்களுக்காக இடதுசாரிகள் தான் குரல் கொடுக்கிறார்கள். வேறு யாரும் குரல் கொடுக்க வரமாட்டார்கள். அப்படி குரல் கொடுக்க வராத கட்சிகளிடம் கள்ளப் பணம் இருக்கிறது என நீங்கள் தாராளமாக நம்பலாம். மடியில் கனம் இல்லாதவர்கள் இடதுசாரிகள். மோசடி என்ற வார்த்தை மோடியுடன் தொடர்புடையது. குஜராத்தில், இவர் இஸ்லாமியர்களை எப்படிப் படுகொலை செய்தார் என்ற விஷயம் ஊரறிந்த ரகஸியம். குஜராத் என்கிற ஒரு சின்ன ஊரில் பயிற்சி முடித்து விட்டு இப்போது தேசம் தழுவிய சுடுகாடு எப்படி அமைக்கலாம் என முயற்சி செய்துகொண்டிருக்கிறார். மோடிக்குத் தெரியாமல் பெண்கள் இனி சிறுவாடு கூட சேர்த்து வைக்க முடியாது.

உலகம் முழுவதிலும் உள்ள முன்னேறிய நாடுகளில், ஸ்வீடன் ஒன்றுதான், நூறு சதம் வங்கிப் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளது. வளர்ந்த பல வல்லரசுகளே இன்னும் பணப் பரிவர்த்தனையை நம்பியுள்ளது. வளர்ந்த நாடுகளில் நூறு சதம் படித்தவர்கள். நம் நாடு எவ்வளவு கல்வியறிவை எட்டியிருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஏறக்குறைய அறுபது சதம் கல்வியறிவற்றவர்கள் உள்ள நாட்டில் நூறு சதம் வங்கிப் பரிவர்த்தனை குறித்து வலியுறுத்துவது, படித்தவன் செய்யும் வேலையல்ல. குறுக்குப் புத்தியுள்ளவர்கள் செய்யும் வேலை. எழுபது சதம் மக்களிடம் இரண்டரை லட்சத்திற்கு மேல் பணம் எப்படி வந்தது என்று கேட்க முடியாது. ஏனென்றால், அது விவசாயத்திலிருந்து கிடைத்த பணம். உழவர்களின் தலையில் கை வைத்தால், வரும் பத்தாண்டுகளில் இந்தியா விவசாயத்தை கைவிட்டிருக்கும். அப்புறம் நாம் சோத்துக்கும் சிங்கியடிக்க வேண்டியதுதான்.மோடியின் பம்மாத்து வேலைகள் எல்லாம் தெரிந்த நாம், மோடியை எப்படி நம்புவது? மரங்கள் அதன் கனிகளால் அறியப்படும் என்று பைபிளில் ஒரு வசனம் உண்டு. மோடி என்ற மரம் குஜராத்தில் என்ன கனிகளைக் கொடுத்தது என்று நமக்குத் தெரியும். கெட்ட மரம் நல்ல கனிகளைத் தராது.

atms queue

ஜெயமோகன்: இதை அறியாத அப்பாவிகள் எவரேனும் இந்தியாவில் செய்தித்தாள் படிக்கும் நிலையில் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். எங்கும் ரசீதே இல்லாத வணிகம் நிகழ்வதை நாம் அறிவோம். நாம் பெறும் ரசீதுகளேகூட பொய்யானவை. ஒவ்வொரு நாளும் நாம் ஈடுபடும் வாங்கல், விற்கல் அனைத்தும் கள்ளப்பணத்திலேயே. ஆனால் கள்ளப்பணம் அங்கே எங்கோ இருக்கிறது என நம்ப ஆசைப்படுவோம். நாமும் நம்மைச் சூழ்ந்தவர்களும் பச்சைக் குழந்தைகள் என வாதிடுவோம்.

நான் ஒரு வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவன். நான் ஒரு மீன் விற்கும் பெண்ணுக்கு கடன் வழங்கினேன். அந்தப் பெண்ணுக்கு வழங்கிய பத்தாயிரம் ரூபாய்க்கு அந்தப் பெண்ணால் எப்படி ரசீது தர முடியும்? கிராமப்புறப் பரிவர்த்தனைகள் அனைத்துமே ரசீதில்லாப் பணப் பரிவர்த்தனைகள்தான். நான் எல்ஈடி டிவி ஒன்று ஒரு பெரிய தொகை கொடுத்து ரசீதில்லாமல் வாங்கினால், அது கள்ளப் பரிவர்த்தனை. நம் நாட்டிலுள்ள எழுபது சதம் மக்கள், இதுபோல் நெறிப்படுத்தப் படாத சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருப்பதால், அவர்களின் வருமானம் வரி விதிப்பு என்னும் எல்லைக்குள் வராது. நான் கூறிய எழுபது சதத்தில், சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள் அடங்குவர். நகர்ப்புறங்களிலுள்ள பெரு வணிகர்களை நான் குறிப்பிடவில்லை. இதுபோன்ற இடங்களில் இருந்துதான் கள்ளப் பணம் உற்பத்தியாகிறது என்பது நமக்குத் தெரியும். அரசுக்கும் தெரியும். இவர்களைக் கண்காணிக்க புதிதாக நடைமுறைகளையும், தணிக்கை முறைகளையும் கொண்டுவாருங்கள்

ஜெயமோகன்: இந்தக் கள்ளப் பணப் பொருளியல் நெடுங்காலம் வளரமுடியாது. ஏனென்றால் ஆக்கபூர்வமான பொருளியலில் லாபம் என்பது மீண்டும் முதலீடாக ஆகவேண்டும். கள்ளப்பணத்தில் அப்படி ஆவது கடினம்.

உங்கள் வாதம் பொருளாதாரம் புரியாத, நடைமுறைகளைப் புரியாத அப்பாவித்தனமான வாதமாகத் தெரிகிறது. கள்ளப் பணம் மீண்டும் முதலீடாக ஆக முடியாது என்பது அபத்தம். இந்தியாவைப் பொருத்தவரை, கள்ளப் பணம் தான் வெளிநாடுகளுக்குப் போய் ஒருசில நாடுகளின் வழியாக, அன்னிய முதலீடாக நம் நாட்டிற்குள் வருகிறது. இது ஒரு பெரும் தொகை. அன்னிய முதலீட்டை இந்தியா ஈர்க்கிறது என்று சொல்வதெல்லாம் முழுப் பூசணிக்காயை மறைப்பது போலாகும். இந்தக் கள்ளப் பணம் எல்லாம் வெள்ளைப் பணமாக மாறுவதுதான் வேதனையிலும் வேதனை. இப்படி அன்னிய முதலீடுகளாக வரும் பணத்தின் மூல வேர் யாருக்கும் தெரியாது, அதற்கான பிரத்யேகமான தணிக்கை முறை ஒன்றும் இல்லை. இதற்கான ஒழுங்கு முறைகளும் இல்லை (ரெகுலேடரி சிஸ்டம்). ஒரு தீவிரவாதிகூட நம் பொருளாதாரத்திற்குள் அன்னிய முதலீடு என்ற போர்வையில் உள்ளே வர முடியும்.

ஜெயமோகன்: ஜன்தன் போன்ற திட்டங்கள் வழியாக இந்தியாவில் ஏறத்தாழ அனைவருக்குமே கட்டாயமாக வங்கிக்கணக்கும், ஏடிஎம் அட்டையும் வழங்கப்படத் தொடங்கி ஓராண்டாகிறது. அப்போது சோறில்லாதவர்களுக்கு வங்கிக்கணக்கா?’ என நம் அறிவுஜீவுகள் கிண்டலடித்தனர். அவர்களே இன்று ஏழைக்கு வங்கிக்கணக்கு ஏது?’ என பாட்டு பாடுகிறார்கள்.

ஜன்தன் திட்டத்தின் மூலமாக தொடங்கப்பட்ட கணக்குகளைப் பற்றி வங்கியாளர்களுக்குத்தான் தெரியும். அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தால் அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள வேகம் – இரண்டு நாட்களுக்குள் பத்தாயிரம் வங்கிக் கணக்குகளைத் திறக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்கள்; கீழே உள்ளவர்கள், இரவு பகலாக கிராமம், கிராமமாக அலைந்து திரிந்து கேஒய்சி பேப்பர்களைத் திரட்டி, படிவங்களில் கையெழுத்து வாங்கி பூர்த்தி செய்து இப்படியாக ஒரே நபருக்கு மூன்று அல்லது நான்கு வங்கிகளில் கணக்கு தொடங்கப் பட்டிருக்கும். இப்படித் தொடங்கப்பட்ட கணக்குகள் தான் புள்ளி விபரங்களுக்காகக் கொடுக்கப்படும். கைனாட்டு போடுபவர்களை நெருங்கக் கூட மாட்டார்கள். வங்கிக் கணக்கு தொடங்காமல் விடப்பட்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருக்கும். இதை வைத்துக்கொண்டு அரசாங்கம் வேறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. கணக்கு ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் ஏதும் போடாவிட்டால், கணக்கு நடைமுறையிலிருந்து அகற்றப்படும். பின், ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு ஏது?

ஜெயமோகன்: உண்மையில் இன்று தொழிலதிபர்களே ஜிஎஸ்டியை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வளர்த்துவிட்ட பூதம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். ஆனால் இன்று அவர்கள் வரிகட்டுவதைவிட பலமடங்கு பணத்தை இவர்களுக்குக் கப்பமாகக் கட்டநேர்கிறது. ஜிஎஸ்டி வந்து அரசு வரிவிதிப்பு முறை இயல்பாகவே நடக்குமென்றால் அவர்களுக்கு உண்மையில் லாபம்தான். இழப்பு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான்

இழப்பு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான். இடதுசாரிகளுக்கல்ல. நியாயமான எந்த நடைமுறைக்கும் தோள் கொடுப்பவர்கள்தான் இடதுசாரிகள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஜெயமோகன்: இந்த நாணய ஒழிப்பு ஜிஎஸ்டிக்கு முன்னோடியாக வங்கிப் பொருளியலை நோக்கி வணிகத்தைக் கொண்டு செல்வதற்காகவே முதன்மையாக உத்தேசிக்கப்பட்டது என்பது பொருளியலறிந்த எவருக்கும் தெரியும்.

நிச்சயமாக நாணய ஒழிப்புக்கும் ஜிஎஸ்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொருளாதாரம் படித்த அனைவருக்கும் தெரியும். நீங்கள் சொல்வதுதான் புதிராக இருக்கிறது; அல்லது உங்கள் அளவிற்கு பொருளாதாரத்தைப் புரியாதவனாக நான் இருக்கலாம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் திரு. ஜெயமோகன் அவர்களே. பொருளாதாரம் வெறும் புனைகதை அல்ல... நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடிய சட்டகம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எந்த முடிவும் அனைவரின்/பெரும்பான்மை ஒப்புதலையும் ஆலோசனைகளையும் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும். உலக நாடுகள் அனைத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகளை கருத்துக் கணிப்பு எடுத்தபின் செயலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆறுமாதங்களாக, ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றால், அந்தப் பணம் எல்லாம் எங்கே? ஏன் ஏடிஎம்களுக்கு உடனே கொண்டு வரப்பட்டு பட்டுவாடா செய்யப் படவில்லை? அந்தப் பணம் எல்லாம் வேண்டப்பட்டவர்களுக்கு முறையின்றி பட்டுவாடா செய்யப் பட்டுவிட்ட்தா? அதனால் தான் பணம் தட்டுப்பாடாக இருக்கிறதா?

உண்மையிலேயே கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கையில் நீதியும், நியாயமும் இருந்திருந்தால், அரசாங்கம் பொதுமக்களிடம் உள்ள பணத்தை நேரடியாக பெற்றுக்கொண்டு, அதற்கு ஈடான புதிய பணத்தை பட்டுவாடா செய்திருக்க வேண்டும். பணம் இல்லாத பட்சத்தில், பணம் அச்சடிக்கும் வரை பொறுத்திருந்து, பிற துறைகளிடமும், சம்மந்தப்பட்ட துறையிடமும் ஆலோசித்து அறிவிப்பு செய்திருக்க வேண்டும். கணக்கில் கட்ட ரூ.2.5 லட்சம் உயர்ந்த பட்சமாக நிர்ணயித்திருக்கக் கூடாது. அதை சொல்லியிருக்கக் கூடாது. பணத்தைக் கட்டுபவர்கள் (கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் கூட) தங்களிடமுள்ள முழுத் தொகையையும் கட்டியபின், ரூ.2.5 லட்சத்திற்கு மேல் கட்டியவர்களிடம் இந்த வருமானம் எப்படி வந்தது எனக் கேட்டு, கணக்கு சரியாக காட்டும் பட்சத்தில், பணத்தை எடுக்க அனுமதித்திருக்கலாம். இரண்டரை லட்சம் என்று நிர்ணயம் செய்து அறிவித்தது உண்மையில் கள்ளப்பணம் வைத்திருப்பவர்களை சுதாரித்துக் கொள்ளச் செய்துவிட்டது. இது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.

கிராமங்களில் வியாபாரம் வாய் மொழியிலும், அதிகபட்சம் சுவற்றின் மேல் போடும் வரிக்கோடுகளிலும் நாணயமாக நடந்து கொண்டிருந்தது. மோடியின் தயவால் நாணயமே ஒழிந்துவிட்டது; இதற்கு போலி அறிவு ஜீவிகள் துணைபோவது தேசத்திற்கு நல்லதல்ல.

       - ப்ரதிபா ஜெயசந்திரன், புதுவை