ஒரு பெரும் பொருளாதார வீக்க வெடிப்பிற்குப் (economic bubble burst) பிறகே அமெரிக்காவின் பொருளாதாரம் அண்மையில் படுபாதாளத்திற்குப் போனது. பொருளாதார வீக்கம் என்பது சந்தையில் பொருட்களின் விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டது. சந்தையில் பொருட்களின் விலை அதிகமாகிக் கொண்டே போவதை பொருளாதார வீக்கம் என்பார்கள். சந்தையில் பொருட்களின் விலை உயர வேண்டுமானால் பணப் புழக்கம் அதிகமாக இருக்க வேண்டும். பணப் புழக்கம் எப்படி அதிகமாகும்? மக்களின் சேமிப்பில் இருக்கும் பணம் அனைத்தும் சந்தைக்கு வருமானால், சந்தையில் பணத்தின் புழக்கம் அதிகமாகும். சந்தையில் பணப் புழக்கம் அதிகமாகுமானால் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கும். பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்குமானால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும்.

economic bubbleஇருபதாம் நூற்றாண்டிற்குப் பிறகு உலகில் பல நாடுகள் பொருளாதார வீக்க வெடிப்பிற்கு ஆளாகி, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தபோதும் இந்தியா மாத்திரம் இப்படியான பொருளாதார வீக்க வெடிப்பிற்கு உள்ளாகாமல், தன்னுடைய பொருளாதாரத்தை நிலைப்படுத்தியே வந்திருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே பல பொருளாதார வீக்க வெடிப்பிற்கு உள்ளாகி, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும்போது, ஏழைகள் அதிகம் கொண்ட நாடு என்றும், மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் இருக்கும் நாடு என்றும் கருதப்படும் இந்தியா மாத்திரம் எப்படி பொருளாதார வீழ்ச்சியை சந்திக்காமல் நிலையாக நடை போடுகிறது என்றால், அது இந்திய மக்களின் சேமிப்பு பழக்கத்தில் இருக்கிறது. சேமிப்புப் பழக்கம் என்பது இன்றைய காலங்களில் இரண்டு விதங்களில் நடைபெறுகிறது. ஒன்று வங்கியில் பணத்தை சேமிப்பது (இதை பேங்கிங் சிஸ்டம் எக்கானமி என்பார்கள்); மற்றொன்று மக்கள் அவர்க்களின் வீடுகளிலேயே பணத்தை சேமிப்பது.

ஒரு நாட்டின் அனைத்து மக்களும் வங்கிகளில் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பார்களேயானால் வங்கிகளில் பணப் புழக்கம் அதிகமாகிவிடும். அதாகப்பட்டது வங்கிகளில் பணம் அதிக அளவில் இருக்கும். வங்கிகள் அடிப்படையில் சேமிப்பதோடு சேர்த்து, லோன் கொடுப்பதின் மூலம் சந்தையில் முதலீடும் செய்யக் கூடியது. அப்படி இருக்கையில் வங்கிகள் தங்களிடம் இருக்கும் அளவிற்கு அதிகமான பணத்தை லோன் கடன்களாக வெளியே கொடுக்கத் தொடங்கும். வங்கிகள் கொடுக்கும் கடன் பணம் சந்தையில் புழங்கத் தொடங்கும். அதாவது சந்தையில் பணப் புழக்கம் அதிகமாகத் தொடங்கும். சந்தையில் பணப் புழக்கம் அதிகமானால் என்ன நடக்கும் என்பதை மேலே பொருளாதார வீக்க வெடிப்பு விளக்கத்திலேயே பார்த்துவிட்டோம். ஆக பேங்கிங் சிஸ்டம் என்பது மறைமுகமாக பொருளாதார வீக்க வெடிப்பிற்கு வழி வகுக்க கூடியவைகள். இதுதான் அமெரிக்காவிலும் நடைபெற்றது. அதாவது அங்கு அனைத்து குடிமக்களும் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வங்கிகளில் போட்டு வைத்து, செலவு செய்வது வழக்கம்.

இதன் காரணமாக அமெரிக்க வங்கிகளில் பணத்தின் புழக்கம் அதிகமாகி, அதன் வழி சந்தையில் பணத்தின் புழக்கம் அதிகமாகி, அதன் வழி பொருட்களின் விலை அதிகமாகி, இறுதியில் அதன் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. இது பேங்கிங் சிஸ்டத்தின் பாதக அம்சம். அது எப்படி பொருட்களின் விலை அதிகமானால், பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். வங்கிகளில் அதிக பணம் புழக்கத்தில் இருப்பதால், அமெரிக்க வங்கிகள் இஷ்டத்திற்கு லோன்கள் கொடுக்கத் தொடங்கின. அனைத்திற்கும் லோன்கள்தான் - வீடு, கார், சொத்து, தனி நபர்க் கடன் இப்படி இஷ்டத்திற்கு லோன்களை அமெரிக்க வங்கிகள் மக்களிடம் தண்ணீராக வாரி இறைத்தன.

நன்றாக கவனியுங்கள்... அமெரிக்க வங்கிகள் தொட்டதெற்கெல்லாம் லோன்கள் என்று வாரி இறைத்தவைகள் மக்களின் பணம். அதாவது மக்கள் உழைத்து சம்பாதித்து ஈட்டிய பணத்தை தங்களின் கைகளில் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் (அதாவது புளி டப்பா, உப்பு டப்பா, அரிசி டப்பா, சக்கர டப்பா என்று வீடுகளில் சேர்த்து வைக்காமல்) வங்களில் போட்டு, பிளாஸ்டிக் மணி மூலம் (டெபிட் மற்றும் கிரேடிட் கார்ட்) செலவு செய்ய வைத்திருந்த பணம். வங்கிகள் லோன் கொடுக்கிறது என்றால் அந்த லோனிற்கு கண்டிப்பாக இன்டிரஸ்ட் திரும்ப கேட்கும்தானே. அப்படித்தான் அமெரிக்க வங்கிகளும் தண்ணீராக வாரி இறைத்த லோன் பணத்திற்கு திரும்ப வட்டியும் கேட்கத் தொடங்கின. இதை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். ஜான் என்கிற அமெரிக்கர் அந்த நாட்டின் வங்கியில் இஷ்டத்திற்கு லோன்கள் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது கார் லோன், வீட்டு லோன், பெர்சனல் லோன் இப்படி. அவர் கண்டிப்பாக இத்தனை லோன்களுக்கும் திருப்பி மாதா மாதம் வட்டி கட்டியாக வேண்டும். மேலும் அசல் பணத்தையும் திருப்பி செலுத்தியாக வேண்டும். சரிதானே. இங்கே மீண்டும் நன்றாக ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். ஜான் வாங்கியிருக்கும் அனைத்து லோன் பணமும் அவரைப் போல சக பிரஜைகள் அவர்க்களின் சம்பள மற்றும் சேமிப்பு பணத்தை வங்கிகளில் போட்டு வைத்திருந்த பணம்தான்.

ஜான் வாங்கிய லோனுக்கு திருப்பி வட்டியை கட்டிவிட்டுப் போகிறார் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நடந்தது என்னவென்றால் ஜான் வட்டி கட்ட வேண்டிய தொகை அதிகமான அளவிற்கு அவருக்கு சம்பள வருமானம் இல்லை. அதாவது ஜான் வாங்கிய லோனின் வட்டித் தொகை மாதத்திற்கு மாதம் அதிகமாகிக் கொண்டே போக, ஜானின் சம்பளம் மாத்திரம் உயராமலேயே பல ஆண்டுகள் அப்படியே இருந்தது. அப்படி இருந்தால் என்னவாகும்? ஜானால் வாங்கிய லோன்களுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வட்டியே கட்ட முடியாது ஜான், எங்கிருந்து அசலைத் திருப்பி வங்கிக்குத் தருவது? ஜான் மஞ்சள் கடுதாசி கொடுத்துவிடுகிறார். அதாவது ஜானுக்கு கொடுக்கப்பட்ட லோன்கள் திரும்ப வராத காரணத்தால், அவருக்கு லோன்கள் கொடுத்த வங்கி அவருக்கு கொடுத்த லோன்களின் தொகையை வாராக் கடனாக அறிவித்து விடுகிறது. அதாவது ஜானைப் போன்ற மற்ற பிரஜைகளின் சேமிப்பு பணத்தின் ஒரு சதவிகிதமும் இந்த வாராக் கடனில் போய்விட்டது. இப்படி ஒரு ஜான் இல்லை, பலபேர் வாங்கிய லோன்களுக்கு வட்டியும் கட்ட முடியாமல் அசலையும் திரும்பத் தர முடியாமல் வங்கிகளுக்கு மஞ்சக் கடுதாசி கொடுத்துவிட, வங்கிகள் வாராக் கடனால் திவாலாகிவிட்டன. அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது.

நாம் சம்பாதிக்கும் பணத்தின் ஒருபகுதியை வங்கிகளிலும், மீதிப் பணத்தை கைகளிலும் (புளி டப்பா, உப்பு டப்பா, சுருக்கு பை இப்படி) சேமிக்கும் பழக்கம் கொண்டவர்க்கள். அதாவது நாம் அனைவரும் முழுவதுமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வங்கிகளில் சேமித்து வைத்து, அதன் மூலம் செலவழிக்கும் பழக்கம் கொண்டவர்க்கள் கிடையாது. கைகளில் சிறுக, சிறுக பணத்தைச் சேர்க்கும் நம்முடைய பழக்கம்தான் நமது பொருளாதார நிலைப்பாட்டிற்கான மிகப் பெரும் பலம். கைகளில் சிறுக சிறுக பணத்தை சேமிக்கும் பழக்கமானது, சந்தையில் தேவையில்லாத பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக சந்தையில் பொருட்களின் விலையும் அதிகரிக்காமல் இருக்கிறது.

மக்களே அவர்க்களின் கைகளில் பெரும் பணத்தை சிறு சேமிப்பாக வைத்திருப்பதால் வங்கிகளிலும் பணத்தின் புழக்கம் கட்டுப்பாடுடனே இருக்கிறது. இதன் காரணமாக வங்கிகளால் லோன் என்கிற பெயரில் மக்கள் பணத்தை தண்ணீராக வாரி இறைக்க முடியாது. இதன் காரணமாக வங்கிகளின் லோன்கள் மூலம் சந்தைக்கு வரும் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது. அதாவது பொருட்களின் விலையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதான் நமது பொருளாதார உறுதித் தன்மையின் அசைக்க முடியாத அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்திற்குத்தான் இப்போது வந்திருக்கிறது வேட்டு. அதாவது நம் அனைவரையும் பேங்கிங் சிஸ்டத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று வெளிப்படையாகவே ஆளும் வர்க்க அமைப்புக்களால் பேசப்படுகிறது, எத்தகைய ஒளிவுமறைவும் இல்லாமல்.

அதாகப்பட்டது இனி நாம் அனைவரும் கைகளில் சிறுக, சிறுக சேமிப்பதை விட்டுவிட்டு (புளி டப்பா, உப்பு டப்பா, சுருக்கு பை இப்படி) நாம் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் வங்கிகளில் போட்டு டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் வழி செலவு செய்ய வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகிறோம். இது வங்கிகளில் பணப் புழக்கத்தை அதிகப்படுத்தி விடும். வங்கிகளில் பணப் புழக்கம் அதிகமானால் என்ன நடைபெறும் என்பதை அமெரிக்க பொருளாதார வீக்க வெடிப்பு உதாரணத்தின் மூலம் பார்த்தோம். ஆனால் அனைத்து மக்களும் பேங்கிங் சிஸ்டத்திற்குள் வரவழைக்க இப்போது ஆளும் வர்க்க அமைப்புக்கள் சொல்லும் கண்கட்டுக் காரணம் கருப்பு பண ஒழிப்பு மற்றும் கள்ளப் பண ஒழிப்பு. பேங்கிங் சிஸ்ட பிளாஸ்டிக் மணி மூலம் கள்ளப் பணமும் கருப்பு பணமும் ஒழிகிறதோ இல்லையோ நிச்சயமாக வங்கிகளில் பணம் புழக்கம் அதிகமாகிவிடும்.

வங்கிகள் தன்னிடம் இருக்கும் அதிக பணப் புழக்கத்தை நிச்சயமாக பல லோன்களாக வெளியே தரக் தொடங்கும். வங்கிகள் லோன்களை வாரி இறைக்கத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதையும் அமெரிக்க ரிஷசன் உதாரணத்தின் வழி பார்த்தோம். இப்போது நடைபெறும் சங்கதிகள் வம்படியாக மக்களை பேங்கிங் சிஸ்டத்திற்குள் கொண்டுவரும் முயற்சி. இதை ஆளும் வர்க்க அமைப்புக்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லவும் செய்கின்றன. கருப்பு பண அரக்கனின் வாயிலிருந்து தப்பித்து, இப்போது பொருளாதார வீக்க (economic bubble) இரத்த காட்டேரியின் வாயில் போய் விழப்போகிறோம். ஏற்கனவே பெரும் பாகாசுரக் கம்பெனிகள் பல இலட்சம் கோடிகளில் நம் வங்கிகளில் லோன் கடனை வாங்கிவிட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்துவிட்டன. நாமும் தாராள மனதுடன் அந்த இலட்சம் கோடிகளை வாராக் கடன் என்று கணக்கு எழுதி தள்ளுபடி செய்துவிட்டோம். இப்போது நம்முடைய வங்கிகள் தள்ளாட்டத்தில்தான் இருக்கின்றன. வங்கிகளின் வாராக் கடன் பிரச்சனையையும் அப்புரானி சுப்புரானியையும் பேங்கிங் சிஸ்டத்திற்குள் கொண்டு வருவதையும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக அடித்திருக்கிறது இப்போதைய நடவடிக்கை.

இப்போதைய நடவடிக்கை குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஒரு பொருளாதார நிபுணர் (அப்படித்தான் சொல்கிறார்கள்) இப்படி சொன்னார். கருப்புப் பணம்தான் இன்றைய விலை வாசி உயர்விற்கு காரணம் என்றும், இந்த நோட்டு முடக்க நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்றும், அதனால் சந்தையில் பொருட்களின் விலைவாசி குறைந்துவிடும் என்றும், அது மக்களுக்கு பெரும் நன்மை என்றும் திசை திருப்பினார். கருப்புப் பணம் மூட்டைகளாக ஒவ்வொரு பண முதலையின் வீடுகளிலும் மலைப்போல குவிந்திருக்கும் என்பதே மிகப் பெரிய பொது புத்தி. ஆனால் எண்பது சதவிகித கருப்புப் பணம் அசையா சொத்துக்களாகவே இருக்கின்றன. அதனால் இந்த நோட்டு முடக்கத்தால் எந்த பண முதலையிடம் இருக்கும் அசையா சொத்தும் செல்லாது என்று ஆகிவிடப் போவதில்லை. மேலும் மக்களின் பணம் வங்கிகளில் முடக்கப்படுவதால் சந்தையில் பணப் புழக்கம் இருக்கப் போவதில்லை.

காரணம் மக்கள் வங்கிகளில் இருந்து எடுக்கும் பணத்திற்கு வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரம்பு குறைந்தது ஐம்பது நாட்களுக்கு என்று இப்போதைக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் மக்களின் பணம் வரம்பிற்கு உட்பட்டு வங்கிகளிலேயே முடக்கப்பட்டுவிடும். வங்கியில் இருந்து பணத்தை மக்களின் இஷ்டத்திற்கு அவர்க்களின் தேவைக்கு ஏற்ப எடுக்க முடியாமல், அது வங்கியில் முடக்கப்பட்டுவிடுவதால் மக்கள் சந்தையில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது. இது சந்தையில் பணப் புழக்கத்தை முடக்கிவிடும்.

சந்தையில் அதிக பணப் புழக்கம் எப்படி பாதகமோ அதே போலத்தான் சந்தையில் பணப் புழக்கம் இல்லாம் இருப்பதும். பணப் புழக்கம் இல்லையென்றால் சிறு வணிகம் பாதிக்கப்படும். சிறு வணிகம் பாதிக்கப்படுமானால் நாட்டின் GDP குறையும். குறையட்டுமே என்ன போச்சு என்றால் நாட்டின் பொருளாதாரம் சரிகிறது என்று அர்த்தம். காரணம் ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியம் என்பது அந்த நாட்டின் GDP-யைப் பொருத்தே கணிக்கப்படும். GDP காலாண்டுகளிலேயே கணிக்கப்படும். இப்போதைய நோட்டு முடக்கம் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் கையை வைத்துவிட்டது.

உலக அளவில் தோல்வி அடைந்து விட்ட பேங்கிங் சிஸ்டம் குறித்தும், அதிலிருந்து விடபட மேற்கில் எத்தகைய அறிவார்த்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை மேலும் அதிகமாக அறிந்து கொள்ள இந்த புத்தகத்தை படிக்கவும். The Only Game in Town: Central Banks, Instability, and Avoiding the Next Collapse எழுதியது Mohamed A El-Erian. இவர் பல பெயர் பெற்ற பொருளாதார நிறுவனங்களில் ஆலோசகராக இருந்தவர், இருப்பவர்.

- நவீனா அலெக்சாண்டர்