ந. பிச்சமூர்த்தி....

இவரைத் தாண்டி நீங்கள் புதுக் கவிதைக்குள் போய்விடவே முடியாது.... மணிக்கொடி காலத்தில் புதுமைப் பித்தன், கு. பா. ரா வுக்கு பின் வரும் இவரின் ஆளுமை.... அசாத்தியமானது.... 1930ல் மணிக் கொடி இதழில் எழுதத் தொடங்கினார்....குடும்ப பிரச்சினைகளை நிறைய எழுதினார்....குடும்பம் என்பதே கலவைகளின் கூட்டு..அதில் எல்லாரும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம்.. ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாகவும் இருக்கலாம்.. ஆனாலும் மனங்கள் வேறு படும் தருணங்கள் வந்தே தீரும்.. கருத்துக்கள், அவரவரின் பார்வையில் காட்சியின் பொருள் மாறு படத்தான் செய்யும்.. அத்தனையும் கடந்து கடத்திக் கொண்டு செல்வது என்பது பெரிய சவாலான செயல்.. அது பற்றி அலசுகிறது இவரின் படைப்புகள்... குடும்ப சிக்கல், தனிமனித உணர்வின் வெளிப்பாடு என்று இவரின் பேனா திறக்கும் ஒவ்வொரு கதவிலும்... மனித மனங்கள் தனியாகவோ, கூட்டாகவோ.. யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்...

na pitchamurthyஆங்கிலம், சமஸ்கிருதம் , அத்வைதம் என்று தேர்ச்சி பெற்ற இவரின் மனம், துறவு வாழ்க்கையை ஒட்டியே இருந்திருக்கிறது....127 சிறுகதைகளை எழுதிய இவர், 1900ல் கும்பகோணத்தில் பிறந்தவர்....புதுக்கவிதை,வசனகவிதை வரலாற்றில் மகாகவிக்கு அடுத்த முன்னோடி, மணிக்கொடி இதழின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமை. கடைகோடி மனிதனையும் சென்றடையும் வரிகளுக்கு சொந்தக்காரர்...

தாய், வானம்பாடி, ஒருநாள், நாகூர் ஆண்டவா, பாம்பின் கோபம், பெரியநாயகி உலா, மோகினி, விஜயதசமி, முள்ளும் ரோஜாவும், காவல் என்று நீள்கிறது இவரின் படைப்புகள்...

தனது "பதினெட்டாம் பெருக்கு" என்ற சிறுகதையில், ஆரம்பத்திலேயே சில வரிகளில் தனிமையை பற்றி பேசுகிறார்..... இவருக்குள் எப்போதும் இருந்த ஒரு துறவியின் விரல்களில் வழிந்த மையாகத்தான் நான் பார்க்கிறேன்...."தனிமை என்பதை எல்லாரும் பிரமாதப் படுத்துகிறார்கள்.... ஆனால் தனிமையை ரசிக்க எல்லாராலும் முடியாது. தனிமையில் வசிக்க ஒரு சிலரால் கூட முடியாது. சொல்லப் போனால் சாதாரன மனிதனுக்கு தனிமை அபாயகரமானது, உள்ளம் உடல் எல்லாவற்றிக்கும்..."

நான் யோசித்துப் பார்க்கிறேன்..... இன்று நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை அல்லது விருப்பம்... இன்னும் கட்டமைக்கப் படாத வார்த்தை ஜாலங்கள், எல்லாமே நம்மை தனிமை என்ற ஒற்றை சொல்லுக்குத்தானே இழுத்து செல்கிறது..... "நான் கொஞ்சம் தனியா இருக்கணும்... லீவ் மீ அலோன்..."-பதற்றம், பரிதவிப்பு, அன்பு, ஆசை, அத்தனைக்கும் தனிமை தேவைப் படுகிறது.... தனிமை ஒரு தீரா வழியை நமக்கு காட்டிக் கொண்டே இருப்பதை பதற்றத்தோடு இவர் சொல்லியது போலவேதான் நான் எட்டிப் பார்க்கிறேன்.. துறவு நிலை மனம் என்பது சாதாரணமாக கடந்து விடக் கூடியது அல்ல.. அது பாம்பின் விஷம்.. கொஞ்சம் கொஞ்சமாக உங்களை வேறு பொருள் காணச் செய்யும்..... அப்படிதான் இவரின் வரிகளில் நாம் மெல்ல மெல்ல மறந்து தன்னை இழக்கிறோம்...அது மிகப் பெரிய வசீகரம்..

இப்படியும் கூறுகிறார்....." தனிமையை கையாளத் தெரிந்தவன்.. ஞானி, யோகி...." என்று. ஆனால் இங்கு நடப்பது என்னவோ.. தனிமைதான் நம்மை ஆளுகிறது.. அது கடலுக்குள் துளியாவது போல தோன்றும்.. ஆனால் பலியாகிக் கிடக்கும் கடலாய் ஒரு முக்கோண அபாயத்துக்குள் கொண்டு செல்லும்.. என்பது ஒரு நீட்சியின் மறு சுழற்சி...

எங்கெங்கு தேவையோ அங்கு பாரதியை துணைக்கு அழைக்கிறார்... கதை சொல்லும் நேர்த்தியில் முன் பின் இருக்கும் இடைவெளியில் பாரதி இன்னும் அழகாய் மாறுகிறார்.. கவிதைகளாக... "முள்ளும் ரோஜாவும்.." படித்து திகைக்கையில் அன்றே தொடங்கிய மனதின் விருட்சம் பற்றி வேர் விடத் தொடங்கியது ஓர் ... ஆசை....

பத்து ரூபாய்க்கு மனைவியை ஒருவனிடம் அடகு வைக்கும் "அடகு" கதையை படித்த போது திக் என்று தூக்கி வாரிப் போட்டது.... சிண்ட்ரெல்லா கதை போல கற்பனை அல்ல... இது, இன்னும் எங்கோ ஒரு குக்கிராமத்தில் ஒரு கல்லுடைப்பவளாகவோ, மண் சுமப்பவளாகவோ, மாடு மேய்ப்பவளாகவோ ஒரு "கருப்பி" இருந்து கொண்டுதான் இருக்கிறாள், பன்னிகள் விற்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன... என்று முகத்தில் அறையும் ரத்த சகதியாக நினைவு படுத்துகிறது உண்மை....... இக் கதைக்குள் இருக்கும் உளவியல், வாழ்க்கை முறை, கடன் வாங்கியவனின் இயலாமை..., கடன் கொடுத்தவனின் மனநிலை.. என்று பன்னிக் கூட்டமாக மனதுக்குள் பிறவியின் அர்த்தங்கள் மாறி மாறி மேய்வதை படம் பதிக்கிறார்..... நான் மௌனித்து அடுத்த கதைக்கு சென்றேன்....

படித்துக் கொண்டே யோசிக்கையில் ஒரு பிரம்மாண்டமாய் விரிகிறார் இவர்... இவரைப் படிக்க படிக்க, காணும் இடமெல்லாம் படைப்புகள் சிதறிக் கிடப்பது போன்ற மாயைக்குள் ஒரு துருவ மனம் எனை ஆட்கொள்ளுகிறது...

"பிஷூ" என்ற புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதியவர் ந.பிச்சமூர்த்தி...

மற்றவர்களின் கட்டுரைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தொனி, போக்கு, நடை யுக்தி இவரிடம் இருந்தது...இலக்கிய தூரத்தில் இவரின் பக்கங்கள் புது புது பாதைகளை அமைத்தது என்றால் மிகை இல்லை. வெளியில் கண்ட காட்சிகள் இவர் மனதுக்குள் சென்று வரிகளாக வெளியேறும் போது ஒரு புதிய பொருள் கொண்ட தேடலை ஆத்மார்த்தமாக, தத்துவார்த்தமாக நாம் கண்டுணர முடியும்...உண்மைகளின் மிக அருகில் சென்று அவைகளை பேண்மையாக மாற்றும் சக்தி கொண்ட பேனாவின் விரல்கள் இவருடையது... ஆயிரமாயிரம் அர்த்தங்களை தாடிக்குள் புதைத்து வைத்திருக்கும் நா. பிச்சமூர்த்தி... ஒரு யோகியின் தனிமையில், படிக்கும் கண்களில் மந்திரம் போல ஊற்றிக் கொண்டே இருக்கிறார்...... உருக உருக உறைந்து கொண்டே செல்லும் வரித் துகளின் சூட்சுமக் கனவுக்குள் இவர் ஒரு மிகப் பெரிய விடியலை சமைத்துக் கொண்டே இருக்கிறார்...

கட்டுரைகள் "மனநிழல்" என்ற தொகுப்பாக, ஓரங்க நாடகங்கள் பல, மற்றும் சிறுவர்களுக்கான தொகுப்பாக, "காக்கைகளும் கிளிகளும்"என்று ந. பிச்சமூர்த்தியின் ரூபம்.. விஸ்வரூபமாக அப்போதே விரிந்திருக்கிறது.......

"சாரலின் கடுஞ்சினத்தில் பூமோகம் ஆடவில்லை" என்று எழுதுகிறார் கவிதையை....

கவிதை சொல்லுவது எதை என்று உற்று நோக்கும் போது.......

சாரல் என்பது மழையைக் குறிக்கிறது. இந்த இடத்தில் மழையை நாம் மென்மையாக என்று வைத்துக் கொள்ளலாம்..கடுஞ்சினம் என்பது அதீத கோபதைக் குறிக்கிறது. பூமோகம் ஆடவில்லை என்று சொல்லும் போது மழைச் சாரலைப்போல பெண் மென்மையானவள்தான். ஆனால் அவள் பூவைப்போல இல்லை என்கிறது சொல்.... சொல்லுதலின் நிஜம் கவனம் குவிக்கும் இடத்தில், பூமோகம் ஆடவில்லை என்று இளம் விதவையை அது நினைவு படுத்துகிறது. அந்தப் பெண்ணுக்குள் இருக்கும் துக்கம், எதையோ அசையாமல் உற்றுப் பார்ப்பதை உணர முடிகிறது....இப்படி நுட்பங்களின் பக்கம் திறந்து கிடக்கிறது ந. பிச்சமூர்த்தியின் கவிதைப் பக்கங்கள்...

இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத்தெளிவுடன் ஒரு தேடலை முன் வைப்பவர் ந. பிச்சமூர்த்தி. தேடுவதைத் தவிர என்ன இருக்கிறது என்றொரு கேள்வியையும் முன் வைக்கிறார்.... கேள்விகளில் இருக்கும் பதில்களை விட பதில்களில் இருக்கும் கேள்விகள் அசாத்தியமானவை.. அது அற்புதங்களின் குவியல்...

குவியல்களின் ஊடாக தியானித்துக் கிடக்கும் இவரின் படைப்புகளை இன்றைய தலைமுறை கட்டாயம் படித்துதான் ஆக வேண்டும்.. படிக்காத போது படைப்பது எப்படி..?..அதுவும், நல்லவைகள், யதார்த்தங்கள், நம் நாட்டின் வாழ்வியல் முறைகள், உளவியல் பார்வைகள், உறவுமுறைகள் , சக மனிதனின் உயிரின் மீதான அக்கறை என்று நீளும் இவரின் எல்லாவற்றையும் படிக்காமல் எப்படி அடுத்த கட்டம் நகர முடியும்..இது ஒரு தொடர் ஓட்டப் பந்தயம் தான்... முன்னே ஓடியவர் யார் என்று தெரியாமல் நீங்கள் ஓடினால்... புது பாதைகள் கிடைக்கும், ஆனால், வந்த பாதைகள்தான் வரலாறு...

வரலாறு தெரியாமல் நீங்கள் உங்களுக்குள் தான் படித்துக் கொள்ள முடியும்.... உலகம் பெரியது.... இலக்கியம் மிகப் பெரியது.. அது வாழ்வியல் சார்ந்தது... காலங்கள் சுமந்த வரிகளில் ஆன்மாக்கள் உலவுகின்றன....உலறுதல் ஒரு போதும்... தொய்வில்லை மணல்துகள்களுக்கு...

புதைதலில்தான் புதையல்....

ந. பிச்சமூர்த்தி அவர்கள்... இலக்கிய புதையல்....

புதைந்தவன் கிடக்கப் பெறுவான்....

- கவிஜி