Ø  " எங்கள் பள்ளியில் மாணவர்கள் தமிழில் பேச அனுமதியில்லை !"

Ø  " எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல ! கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்!"

Ø  " எங்கள் பள்ளியில் ஆங்கிலம், இந்தி, அரபி, தெலுங்கு போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகிறது!"

Ø  "எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப்பயிற்சி வழங்கப்படுகிறது!"

Ø  " எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சமற்கிருத பயிற்சியும் அளிக்கப்படுகிறது!"

இவைகள் தனியார் பள்ளிகள் வெளியிடும் விளப்பர அறிக்கைகள். இப்படி அறிக்கையிடும் பள்ளிகள்தான் பெற்றோர்களால் கொண்டாடப்படுகிறது. 

நம்மிடம் உள்ள அன்னிய மொழி மோகமே இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. நமது விருப்பத்தையே விளம்பரமாக்குவதால் இப்படி விளம்பரம் செய்ய தனியார் பள்ளிகள் அஞ்சுவதில்லை. இது குறித்து அரசு இயந்திரம் எவ்வித கேள்வியும் கேட்பதில்லை. "தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் தண்டனை" இப்படிச் சொல்லிக்கொண்டு இயங்கும் தனியார் பள்ளிகள் குறித்து அரசோ,ஆட்சியாளர்களோ, அரசியல்வாதிகளோ, பொதுமக்களோ வெட்கப்படுவதாகத் தெரியவில்லை. இதுதான் உண்மையிலும் உண்மை. 

தமிழர்கள் அன்னிய மொழிக்கு அடிமையாவது இன்று நேற்றல்ல சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவுக்குள் படையெடுத்த காலத்திலிருந்தே தொடங்கியிருக்கக்கூடும். தமிழர்களின் நிலப்பரப்பில் குடியேறிக்கொண்டு தமிழர்களை ஆள நினைத்த ஆரியர்கள் தமிழர்களை அடிமைப்படுத்த கையாண்ட முறைதான் அன்னிய மொழி ஆதிக்கம். ஆரியர்களின் மொழிதேவ மொழி என்றும்,அம்மொழியை ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே கற்றுத் தேர்ந்தவர்கள். அவர்களே சமூகத்தில் உயர்வாக மதிக்கத்தக்கவர்கள் என்று மன்னர்கள் முதல் மக்கள் வரை நம்பத் தொடங்கிய காலம்தான் தமிழர்கள் முதலில் அடிமைப்பட்ட காலமாக இருக்க முடியும். 

ஆரியர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்த காலத்தில் மொழி என்பது தகவல் தொடர்புக் கருவி என்ற நிலையிலிருந்து,மொழிக்கு புனிதம் கற்பிக்கப்பட்டது. வழிபாட்டுக்குள் ஆரிய மொழி திணிக்கப்ட்டது. ஆரிய மொழியான சமற்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்ட ஆரிய இனத்துக்கு தமிழினம் இயற்கையாய் அடிமைப் பட்டது. ஆரிய மொழியைக் கொண்டு சமயம் கட்டமைக்கப்பட்டது. சமற்கிருத மொழியிலேயே சமய நூல்கள் இயற்றப்பட்டன. அந்நூல்களுக்கு தொன்மமும் புனிதமும் பூசப்பட்டது. பொருளற்ற மந்திரங்களுக்கு தத்வார்த்த பொருள்கள் கற்பிக்கப்பட்டன. ஆரியர்கள் மன்னர்களின் ஆலோசகர்கள் ஆனார்கள். மன்னர்களும் ஆரியப் பார்ப்பனர்களை போற்றத் தொடங்கினர்கள். ஆரிய மொழிக்கு பரந்து விரிந்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் செல்வாக்கு பெருகியது. 

இக்காலத்தில் தமிழர்களும் "ஆரிய மொழி தேவ மொழி என்றால் தமிழும் தேவ மொழிதான்", "தமிழும் இறைவனிடமிருந்து பிறந்த மொழிதான்" என்று சொற்போர் நடத்தினார்கள். தங்களின் தியானத்தாலும் தவத்தாலும் பெற்ற அறிவுச் செல்வங்களை இறைவனே தன்மூலம் இறக்குவதாக கூறி தமிழுக்கும் புனிதம் பூசத் தொடங்கினார்கள், ஆரியர்களை எதிர்கொள்வதும், ஆரிய மொழிக்கு தமிழை நிகராக்க முயற்சிப்பதுமாக தங்களது ஆரிய எதிர்ப்பை தங்களின் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். தமிழ் பக்தி இலக்கியங்களில் இதற்கானச் சான்றுகள் கொட்டிக்கிடக்கிறது. "ஆரியன் கண்டாய், தமிழ் கண்டாய்" என்று இறைவனை வாழ்த்தினார்கள். ஆரிய எதிர்பின் கூடவே சமற்கிருத மோகமும் வேகமாக வளரத் தொடங்கியது. சமற்கிருத பண்டிதர்களுக்குக் கிடைக்கும் மரியாதையைப் பெற தமிழ்ப் புலவர்கள் பெரிதும் பாடுபட்டனர். தமிழ்ப் புலவர்களும் சமற்கிருதப் புலமையைப் பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. தமிழ் மொழியின் பயன்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக தனது அறிவியல் தன்மையை இழக்கத் தொடங்கியது, இறைவனைப் போற்றுவதும், துதிப்பதுமாக மாறியது. தமிழர்தம் அரிய ஆய்வுகள் தடை பட்டன. அறிவுக்கருவூலங்களாக இருந்த தமிழர்களின் மருத்துவம், பொறியியல், கலை நுட்பங்களைக் கொண்ட ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டது. தமிழ் தன்னகத்தே கொண்டிருந்த அறிவுப் புதையலை இழக்கத் தொடங்கியது. இதனால் தமிழர்களின் ஆய்வு மனநிலை காலப்போக்கில் அழியத் தொடங்கியது.

ஆய்வியல் சிந்தனையின்றி தமிழர்கள் தமிழோடு சமற்கிருதம் கலந்து பேசுவதை எழுதுவதை நாகரீகமாகக் கருதினார்கள். அப்படி இருமொழிகளும் கலந்து பேசுவதும் எழுதுவதும் அறிவாளித்தனம் என்று நம்பினார்கள். இருமொழிப் புலவனாக இருப்பதை கெளரவமாகக் எண்ணிக்கொண்டார்கள். படைபதையும், படைப்பின் அறிவியலைக் கற்றுக் கொடுப்பதையும் பண்பாடாகக் கருதிய இத்தமிழ் மண்ணில், ஓதுவதும், ஓதுவிப்பதும் பெருகியது. அன்று தொட்டு தமிழர்களிடம் அன்னிய மொழி மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. தமிழின் வட்டார வழக்கும், சமற்கிருதமும் சேர்ந்து பல மொழிகள் தோன்றின. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு தேசிய இனமாக வளரத் தொடங்கியது. இந்தியா முழுவதும் பரவியிருந்த தமிழர்கள், வெவ்வேறு இனக் குழுக்களாக மாறிப்போனார்கள். 

19 ஆம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் வளர்ச்சி கண்டது. இக்காலத்தில் தனித்தமிழ் புலவர்கள் தோன்றினார்கள். அறிஞர்களால் அறியப்பட்ட இவர்கள் வெகுமக்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழவில்லை. ஆரிய மொழிக்கு வழிபாட்டு உரிமை இருந்ததால் பாமர மக்களிடம் தொற்றிக்கொண்டிருந்த சமற்கிருத மொழி மீதான பொருள் புரியாத பக்தியை இவ்வியக்கங்களால் மாற்ற இயலவில்லை. பக்திக்குரிய சொற்களை சமற்கிருதத்திலும், சமூக வாழ்வியலுக்கான சொற்களை தமிழிலும் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழ்ச் சொற்கள் சாதாரன வழக்காகவும், சமற்கிருத சொற்கள் ஆன்மீக வழக்காகவும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணத்திற்குவாழ்த்து என்ற இயல்பு வழக்குச் சொல் ஆசீர்வாதம் என்றே ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படுகிறது, நாள் என்னும் சொல் திதி என்று ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படுகிறது, திங்கள் கிழமை என்னும் சொல் சோமாவார் என்று ஆன்மீகத்தில் பயன்படுத்துகிறார்கள் இப்படி கூறிக்கொண்டே போகலாம். 

திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி தமிழகத்தில் வசனத்தமிழ் வளர்ச்சி பெற்றது. சமற்கிருத எதிர்ப்பு வலுப்பெற்றது. சமற்கிருத மொழி மீதான புனிதம் ஓரளவுக்கேனும் உடைக்கப்பட்டது. சமற்கிருத இலக்கியங்களில் உள்ள மூடத்தனங்கள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மந்திர தந்திரங்கள் மக்களிடம் சென்று சேர்ந்தது. ஆரிய பார்ப்பனிய ஆதிக்கம் சற்று தளரத் தொடங்கியது. தமிழர்களின் இலக்கியங்கள்,சங்க இலக்கியங்கள் போற்றப்பட்டது. இக்கட்சிகள் வலுவான காலத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் இந்தியாவின் முக்கிய வரலாற்று நிகழ்வாகும். இத்திராவிடக் கட்சிகள் ஆரிய எதிர்ப்பைக் கைகொண்டு ஆட்சிக் கட்டிலைப் பிடித்தன. ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தொடக்கத்தில் தமிழ் மீதான பற்றுதலை தமிழர்களிடம் விதைத்தன. 

மிகுந்த எழுச்சியோடும், மக்கள் ஆதரவோடும் ஆட்சிக்கு வந்த திராவிடக்கட்சிகள், ஆரிய சமற்கிருத-இந்தி எதிர்ப்பைக் கையாண்ட அளவிற்கு, தமிழின் நவீனத் தன்மையை வளர்க்கத் தவறிவிட்டன. தமிழ் மொழியில் மருத்துவம் - பொறியியல் குறித்த நூல்களை உருவாக்கத் தவறிவிட்டன. இந்திக்குப் பதில் ஆங்கிலம் என்ற நிலைப்பாட்டை இக்கட்சிகள் எடுக்கத் தொடங்கியது. ஆங்கில மொழியறிவு அகிலம் முழுவதற்கும் தமிழர்களைக் கொண்டு செல்லும் என்ற சிந்தனை தமிழர்களிடம் பரவத் தொடங்கியது. இப்போது தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவதும், எழுதுவதும் எதார்த்தமாகவும், அறிவாளித்தனமாகவும் கருதும் எண்ணம் மேலோங்கி வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் சமற்கிருதம் பெற்றிருந்த செல்வாக்கை ஆங்கிலம் பெற்றிருக்கிறது. சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் ஆங்கிலம், அலுவலக அலுவல் மொழியாக அறிவிக்கப்படாமலேயே வழக்கில் உள்ளது. 

தமிழுலக எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் தமிழோடு ஆங்கிலச் சொற்களைச் சரலமாகப் பேசுவதை, எழுதுவதை பழகிக் கொண்டனர். எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் மக்களிடம் ஆங்கில மோகத்தை அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சி விவாதங்களில் ஆங்கிலம் கலந்து பேசுவதை நாகரீகமாகக் கருதும்நிலை உள்ளது. செந்தமிழில் பேசும் மக்களை அப்படிப் பேசாதீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் சொல்லப்படுவதும், அவர்களால் எள்ளி நகையாடப்படுவதும் தமிழகத்தில் நடந்து வருகிறது. எளிமையாக ஆங்கிலத்தில் உரையாடுவது எப்படி என்று எழுத்து ஊடகத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் வேலைக்கான நேர்காணலை எதிர்கொள்வது எப்படி என்று தனிப்பயிற்சி நடத்துகிறார்கள். இவைகளெல்லாம் தமிழ்நாட்டில் இயங்கும் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தேதான் நடக்கிறது. ஆட்சியாளர்களும் இதற்கு எவ்வித எதிர்வினையும் செய்வதில்லை. மக்களின் விருப்பம் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள். மக்களின் விருப்பம் ஆங்கில வழிக்கல்வியாக இருப்பதால் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியை நாங்கள் கொண்டுவருகிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தமிழ், தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும். அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்படவில்லை. இந்தியாவின் தேசியத் தேர்வுகள் அத்தனையும், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலேயே நடத்தப்படுகிறது. இந்தி எதிர்பு மேலோங்கிய நேரத்தில் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் இருக்கும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை தமிழக ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் காரணமாக தமிழர்கள் இந்திய அலுவல் நடவடிக்கைகளை ஆங்கில மொழி வழியாகவே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அவர்களின் தாய் மொழியிலேயே அலுவலகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் வசதி, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் தமிழர்கள் மத்திய அரசுப் பணிகளில் சேர்வது குதிரைக் கொம்பாக உள்ளது. இந்தி எதிர்ப்பில் ஆர்வம் காட்டிய திராவிடக் கட்சிகள் தமிழ் வழியில் நிர்வாக நடைமுறைகளை வளர்க்கத் தவறிவிட்டன. 

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் வழிக் கல்வி காலாவதியாகிவிட்டது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொற்றிக் கொண்டுள்ளது. தமிழ் தமிழ் என்று கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள், இந்தி எதிர்பை விதைத்து ஆட்சிக்கு வந்தவர்கள். தமிழ் வழிக் கல்வியை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் என்ற கோபம் மக்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நேரமிது. இந்நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தி வளர்ச்சியை தமிழகத்திலும் சாத்தியமாக்க முயற்சித்து வருகிறார்கள் சங்க பரிவார் அமைப்பினர். மத்தியில் ஆட்சியைப் பிடித்த இவர்கள் தாய் மொழி நாளைக் கூட இந்தி மொழி வழியாகவே கொண்டாடுகிறார்கள். ஆசிரியர் நாளை குரு உத்சவ் என்கிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தி பெயர் கூறி அழைக்கிறார்கள். இந்தி மட்டுமே இந்தியாவில் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் இருக்கக் கூடாது என்று கொக்கரிக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் இந்தியைக் கற்க விடாமல் ஆங்கிலத்தைத் திணித்துவிட்டது. இந்தியை தமிழகத்தில் மக்கள் ஆதரவோடு கொண்டுவருவோம் என்று கூச்சலிருகிறார்கள். இந்தி கற்றுக் கொள்ளாததினால்தான் இந்திய ஆட்சிப் பணிகளில் தமிழர்களால் அமரமுடியவில்லை என்று பரப்புரை செய்கிறார்கள். இவர்களும் தமிழை இந்திய நிர்வாக மொழியாக ஆக்குவோம் என்று கூறவில்லை. தமிழர்களை இந்தி மொழியிடம் அடிமைப்படுத்தவே தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள்.

மொழிபெயர்பு என்னும் பணி மிகவும் எளிதாக்கப்பட்டிருக்கும் இக்காலத்திலும், இந்தியாவில் தேசிய மொழிகள் மதிக்கப்படுவதில்லை. வேற்றுமையில் ஒன்றுமை என்று கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்தவர்கள், இந்தி மொழி திணிப்பை நடத்தி வருகிறார்கள். இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய் பிம்பம் கட்டப்படுகிறது. 

மொழி என்பது அறிவாகப் பார்க்கப்படும் நிலை தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் தமிழகத்தில் இதைப் பயன்படுத்திக்கொண்டு பணம் கொழிக்கும் தொழிலாக கல்விச்சாலைகளை மாற்றி வருகிறார்கள் தனியார் பள்ளி முதலாளிகள். தனியார் பள்ளி முதலாளிகளின் பண வேட்டைக்கு பாவம் எழைகள் கூட பழியாவதுதான் சமூக சிந்தனையாளர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது. அரசுப்பள்ளிகளை அலட்சியமாக நடத்தும் தமிழக அரசு, தனியார் பள்ளிகளை ஊக்கப்டுத்தி வருகிறது. அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு தனியார் பள்ளிக்குச் சென்றால் பணம் கொடுத்து உதவுகிறது தமிழ்நாட்டு அரசாங்கம். அரசுப் பதவிகளில், பணிகளில் இருப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலேயே படிக்கிறார்கள். குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள்கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு அழகு(?)பார்க்கிறார்கள். இவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கக் காரணம் என்ன?

1.       "தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழியில் படிப்பவர்களால்தான் உயர்கல்வியை ஆங்கில வழியில் எதிர்கொள்ள முடியும்"

2.       " அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை அதனால் தனியார் பள்ளிகளில் எங்கள் பிள்ளைகளைச் சேர்கிறோம்"

3.       "அரசுப்பள்ளிகளில் வசதிகள் குறைவாக இருக்கிறது, பரம ஏழை வீட்டுக் குழந்தைகள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள் அதனால் நாங்கள் தனியார் பள்ளிகளில் எங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறோம்"

4.       "அரசுப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இல்லை அதனால் நாங்கள் தனியார் பள்ளியில் சேர்க்கிறோம்"

5.       " அரசுப்பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுக்க ஆசிரியர்கள் முயற்சிப்பதில்லை, இதனால் எங்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல் படிக்க கட்-ஆப் கிடைப்பதில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம் "

6.       "அரசுப் பள்ளி மாணவர்களிடம் நாகரீகம் இல்லை, அதனால் எங்கள் பிள்ளைகளை கெட்ட சொற்கள் பேசாதபடிக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம்"

7.       " நாங்கதான் அரசுப்பள்ளியில படிச்சு கஸ்டப்பற்றோம், எங்கள் பிள்ளைகளாவது தனியார் பள்ளியில படிச்சு வளமா வாழட்டும்"

8.       " இந்தியும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் போய்விடுவார்கள் எங்கள் பிள்ளைகள் அதனால் எங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்கிறோம்!"

9.       "தமிழ் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை இந்தியோ, ஆங்கிலமோ கற்றுத் தேர்ந்தால் வளமாக வாழலாம் என்ற நிலை உள்ளது. அதனால் எங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம்!"

இப்படி பல காரணங்களை அடுக்கி பணத்தைக் கொட்டிக்கொடுத்து தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். இந்நிலைதான் நம்மை கவலை கொள்ள வைக்கிறது. அப்படியானால்

இந்நிலையே நீடித்தால்,

இன்றைக்கே வீட்டில் தாத்தா பாட்டிகளின் அறிவுரைகள் வெற்றுரைகள் என்று சொல்லும் பிளைகளை, தாத்தா-பாட்டிகளின் இழப்பை/இறப்பை பெரிதாகக் கருதாத பேரப்பிள்ளைகளைத்தான் பார்க்கிறோம்.

நிகழ்கால இறப்பு வீடுகள், முன்பு போல துக்கத்தை கொப்பளிப்பதாக இல்லை. இறப்பும் சாதாரண நிகழ்வாக மாறி வருகிறது.  இது ஞானத்தின் வெளிப்பாடாக இல்லாமல், நுகர்வுக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருப்பதுதான் நம்மை கவலைகொள்ள வைக்கிறது. 

இன்று எதார்த்தமாக நினைத்துக்கொண்டு நாம் வளர்த்துவரும் கல்விக் கலாச்சாரம், நமது பண்பாட்டை குழிதோண்டிப் புதைக்கப்போகிறது. பெற்றவர்களையே பாதுகாக்கத் தவறும் சமூகம் இயற்கையையும், இயற்கை வளங்களையும் எப்படி பாதுகாக்கும்?

தன் இனத்தின் அடையாளம் இருப்பிடமோ, செல்வமோ அல்ல! பரம்பரை பரம்பரையாக முன்னோர்களால் கட்டிக்காக்கப்பட்ட அறிவுச் செல்வமான மொழிதான். மொழிக்கு பெருமை - சொல் வளம், ஒவ்வொரு சொல்லும் பல அறிவியல் அனுபவங்களை நமக்குப் பெற்றுத்தரும். நம் தாய் மொழியான தமிழ் உலகிலேயே அதிக சொற்களைக் கொண்ட மொழியாக உள்ளது. இச்சொற்களைக் காப்பதே நமது செல்வம்.

இன்று முயற்சி செய்தால் கூட நாம் நம் மொழியைக் காக்கலாம். 

- நா.​வெங்க​டேசன், ஆசிரியர், ​மெய்ச்சுடர், ​பேராவூரணி