சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் கொண்டுவரப்பட்டு  அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள வழக்கறிஞர் சட்டத்தில்(advocate practicing act 1961) செய்யப்பட்டுள்ள  திருத்தம்  குறித்து வழக்கறிஞர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். நீதிமன்ற புறக்கணிப்பும், ஊர்வலம் ஆர்ப்பாட்டமுமாக அவர்கள்  ஆர்ப்பரித்து நிற்கிறார்கள். இது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் சில முன்னாள், இந்நாள் நீதிபதிகளும், வழக்கறிஞர் பேராயத்தின்  உறுப்பினர்களும் இந்த சட்டத்திருத்தத்துக்கு வரவேற்பு கம்பளம் விறிக்ககின்றனர். இந்த முரண்பாடு தொடர்பாகவும், வழக்கறிஞர் போராட்டங்களில் உள்ள சாதக பாதகங்கள் குறித்தும் இந்தக் கட்டுரை ஆராய முயலுகிறது.

1. தொடக்கமாக சில வார்த்தைகள்

அண்மைக்காலமாக இந்திய பாராளுமன்ற ஆட்சிமுறை என்பது மெல்ல மெல்ல வளர்ந்த நாடுகள் பக்கமாய் சாய்ந்து அவர்களின் நலன்களை உயர்த்திப் பிடிக்கும் அடிமைத்தனமான வேலைகளைச் செய்து வருகிறது. இந்த மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒவ்வொரு அங்கமும் திருத்தப் படுகின்றன அல்லது அகற்றப்படுகின்றன.

high court chennai 1இதன் ஒரு பகுதியாகத்தான் போராடும் மக்களின் மீது புது புது சட்டங்கள் ஏவப்படுகின்றன. தடியடிகளும் துப்பாக்கி பிரயோகமும் அன்றாட செயலாகி விட்டன. சேம நலக் கோட்பாடு என்பதற்கான அத்துனை அடையாளங்களும் அழிக்கப்பட்டு கார்ப்ரேட் காரர்களின் கள்ளக் காதலியாய் தேசம் அம்மணப் பட்டுக் கொண்டிருக்கிறது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கி தமிழகத்தில் பற்றி எரியும் கெயில் எரிவாயுக் குழாய் வரை, ஆங்கில, இந்தித் திணிப்பு தொடங்கி அயல் நாட்டுக்கல்வி வரை பட்டிலிட்டு நீளும் மக்கள் விரோத செயலுக்கு யாரேனும் குரல் கொடுப்போமே யானால் அது எழுத்தாளரானாலும் சரி , அல்லது மனித உரிமைப் போராளியானாலும் சரி அவர்களுக்கு கண்டிப்பாக மிரட்டலும், கொலையும்  கூடவே வரும். மக்கள் தாக்கப் படுவது , தபோல்கர், பன்சாரே, கல்புர்கி  போன்ற எழுத்தாளர்கள் கொலை செய்யப் படுவது, விவசாயிகள் தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்படுவது, பயமுறுத்தி மாணவர்களின் நியாயமான போர்குணத்தை மழுங்கடிப்பது இதுபோலத்தான் இப்போது வழக்கறிஞர்களின் குரல்வளை அறுக்கப்படுவதும் என்பதை மக்கள் ஆகிய நாம் புரிந்து கொள்ளாமல் போனால் காலம் நம்மை மன்னிக்காது.

2. நிறம் மாறும் நீதிமன்றங்கள்.

சுதந்திரம் எனச் சொல்லப்படும் துரோக வரலிாற்றின் தொடக்கத்தில் இருந்தே நமது நீதிமன்றங்கள் ஆளுவோரின் கைப்பாவைகள் தான். என்றாலும் இப்போது அவற்றின் விசுவாசம் தேச எல்லைகள் கடந்து ரொம்பவுந்தான் முற்றிப் போய்விட்டது.  தேசமே கார்ப்ரேட் கம்பெனிகளின் காலடிக்கு வந்த பின்னால் அதில் ஓர் அங்கமான நீதிமன்றம் மட்டும் என்ன நிமிர்ந்தா நிற்க முடியும்?!

ஒருதலைபட்சமான ஆங்கிலேய நலன்காக்க எழுந்த காலனிய கால சட்டங்கள், உழைப்பு என்றாலே என்னவென்று அறியாத, நடப்பு குறித்து  எத்தகு அறிவும்  அக்கரையும் அற்று, மோகவாழ்விலும் ஊழலிலும் ஊறிப்போன நீதிபதிகள் , என நீதிமன்றங்கள் விலைபோய் வெகு நாட்களாகி விட்டன. மத்தியில் ஆளும் அரசுகளின் பாம்பாக நீதிமன்றமும் , தம்மை கடவுள் போல் பாவித்துக் கொள்ளும் நீதிபதிகளும் எப்படி ஆடிவந்திருக்கிறார்கள் என்பதை பின்வரும் பத்தியல் பாருங்கள்.....

கல்வியில் தனியார் மயம் தொடர்பாகவும் இட ஒதுக்கீடு தொடர்பாகவும் பல்வேறு தீர்ப்புகள் இந்திய உச்ச நீதிமன்றத்தால் வழங்கப் பட்டுள்ளன. ராஜிவ் காந்தியால் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடங்கி அதன்பின்னால் நரசிம்மராவால் முன்னெடுக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட மாறுபாடுகளைப் பிரதி பலிக்கும் வகையில் வழங்கப்பட்ட உண்ணிகிருஷ்ணன் வழக்கு (1993)  அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பதை தொடக்க கல்வி வரை தான் என குறுக்கியது. மேலும் கல்வித்துறையில் தனியாரின் தலையீடு அவசியம் என்றும் அதை யாராளும் தடுக்க இயலாது  என்றும் கூறி இதற்கு முன்பு இருந்து வந்த சிறு சிறு சாதகத் தன்மைகளையும் சீர் குழைத்தது.

இதற்கு பின்னால் எழுந்த டி.எம்.ஏ. பாய் பவுண்டேசன் வழக்கு(2002). இஸ்லாமிய அகாதமி வழக்கு (2003) , பி.ஏ. இனாம்தார் வழக்கு (2005) என நீளும் தீர்ப்புகளின் பட்டியலில் கார்ப்ரேட் மயமாகும் பாதை தெளிவாக தெரிகிறது. அது ஏகாதிபத்தியத்தின் சீர்மிகு பாதுகாவலன் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இது வெறும் கல்வித் துறை சம்மந்தப் பட்டது மட்டுமல்ல விவசாயம், தொழில், சுகாதாரம் என தேசத்தை பாதுகாக்கும் ஒவ்வொரு அங்கத்துக்கும்  இத்தகு துரோகத்தனமான நீதிமன்ற வரலாறு இருக்கிறது. இதை தட்டிக் கேட்கும், எதிர்த்துப் போராடும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் வழக்கு பாய்கிறது. அதே காரணத்துக்காகத்தான் வழக்கறிஞர்கள் நோக்கி இன்று தூக்குக் கயிறு  நீட்டப்படுகிறது.

3. பழி வாங்கப்படும் வழக்கறிஞர்கள்

     வழக்கறிஞர் தொழில் என்பது மற்ற தொழில் முறை படிப்புகளை விடவும் வித்தியாசமானது. சமூகத்தோடும், மக்களின் அன்றாட, அடிப்படை பிரச்சனைகளோடும் நெருங்கிய தொடர்புடையது. பிற கல்வியாளர்களைவிடவும் வழக்கறிஞர்களே அரசியலிலும், சமூக சீர்திருத்த, இயக்கங்களிலும் முன்னின்ற வரலாறு நம் நாட்டில் அனேகம். தமிழகத்தில் வ.உ.சி தொடங்கி தேச நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்களின் வரலாறுகள் பல உண்டு.

பொதுமக்கள் மட்டுமல்ல இந்தி எதிர்ப்பாகட்டும், ஈழத் தமிழர் பிரச்சனையாகட்டும், ராஜிவ் கொலையாளிகள் என புனையப்பட்ட மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டமாகட்டும், காவிரி முல்லை பெரியாறு பிரச்சனைகளாகட்டும் சமுக நிகழ்வுக்கான வழக்கறிஞர்களின் பங்களிப்பு காலந்தோறும் எப்போதும் இருந்தே வருகிறது. அரசு பயங்கரவாதத்தால் அடிபடுவதும் , சிறை செல்வதும் என  பொதுமக்களுக்கான அத்துனை அவஸ்த்தைகளையும் வழக்கறிஞர்களும் சேர்ந்தேதான் அனுபவித்து வருகிறார்கள்.

ஒப்பீட்டு ரீதியாக  வழக்கறிஞர்கள் சட்டம் பற்றிய கூடுதல் புரிதல் கொண்டவர்கள் என்பதாலும், திடமான சங்கங்களைக் கொண்டவர்கள் என்பதாலும், பார்கவுன்சில் எனும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்ததாலும் சராசரி மக்களை விடவும் கூடுதலான வலிமையோடு போரட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தே வருகிறது. அத்தகு ஆளுமைதான் இந்த ஏகாதிபத்தியக் கை வவவகூலிகளுக்கு தலைவலியே. எனவே தான் வழக்கறிஞர்களை ஒடுக்கும் இது போன்ற பாசிச அனுகுமுறையை ஆளும் அரசும், தேச விரோத நீதி மன்றங்களும் கையாளத் துடிக்கின்றன. வழக்கறிஞர்களுக்கும் வாய் கட்டுப் போட்டுவிட்டால் கேட்கவே நாதியற்றுப் போய்விடுமல்லவா?

சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தில்  இந்திய வழக்கறிஞர் சட்டம் 1961ல் பிரிவு 34(1)ன்படி
1. வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஆவணங்களைத் திருத்தினாலோ,
2. நீதிபதிகளுக்கு வேண்டுமென பணத்தை வழக்காடிகளிடம் கேட்டு வாங்கினாலோ,
3. நீதிமன்றத்தை முற்றுகையிட்டாலோ,
4. போராடும் வாசகங்களோடு பதாகை பிடித்திருந்தாலோ,
5. நீதிபதிகளை தரக்குறைவாகப் பேசினாலோ,
6. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் குடித்து விட்டு வந்தாலோ
அவர்களை நீதிபதிகளே நிரந்தரமாகவோ அல்லது இடைக்காலமாகவோ பணி நீக்கம் செய்ய உரிமை உடையவர்கள் என அது குறிப்பிடுகிறது. மேற்படி சட்டம் பிரிவு 14-ஏ முதல் 14-டி வரையிலானவைகள் இதுகுறித்து விளக்கமாகச் சொல்லி வழக்கறிஞர்களின் சுதந்திரத்துக்கும் அடிப்படை உரிமைக்கும் கொள்ளி மூட்டுகின்றன.

4.சமூக விரோதிகளா வழக்கறிஞர்கள்?

குடிகாரர்கள் என்றும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் தருபவர்கள் என்றும் , கட்டப்பஞ்சாயத்து ரௌடித் தொழில் புரிபவர்கள் என்றும் இன்னும் பல்வேறு வகைளில் மக்களின் எதிரிகளாகவும் சமூக விரோதிகளாகவும் ஆளும் வர்க்கங்களும் , அவற்றுக்கு சாமரம் வீசும் பன்னாட்டு பார்ப்பனிய ஊடகங்களும் ஒரு மாயத் தோற்றத்தை மக்களிடம் வழக்கறிஞர்கள் மீது ஏற்படுத்தி உள்ளன. துருதிஷ்டவசமாக வழக்கறிஞர் சிலரின் வரம்பு மீறிடும் நடவடிக்கை அதை உண்மை யெனும் தோற்றத்தை உருவாக்கி விடுகின்றன. ஆனால் எதார்த்தம் வேறு.

சமூகத்தில் எல்லா தரப்பு மக்களிடமும் இத்தகு விலகல் போக்கு இருக்கத்தான் செய்கின்றன. வழக்கறிஞர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. இதே சமுதாயத்தில் வாழ்ந்து வருபவர்கள் தான். இந்த சமுதாயத்தில் ஊடாடும் சகதிகள் அவர்களின் மீதும் படியத்தான் செய்யும். சாராயக்கடைகளை நடத்தி அனைவரையும் குடிக்கச்சொல்லும் அரசு, குற்றவாளி அல்லவாம். குடித்துவிட்டு கோர்ட்டுக்குப் போகும் வழக்கறிஞர்கள் தேச விரோதிகளாம். அடடே என்னங்கடா உங்க சமூக நீதி?!.

வழக்கறிஞர்களின் போராட்டத்தை கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்... அவர்கள் தங்கள் சொந்த நலனைப் போலவே மக்கள் நலனையும் முன்நிறுத்திப் போராடுகிறார்கள் என்று. அதை கொச்சைப்படுத்துபவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளாக மட்டுமே இருக்க முடியும்.

5. சாத்தான்கள் வேதம் வகுக்கின்றன

வழக்கறிஞர்களை நெறிப்படுத்தவும் அவர்களின்மேல் நடவடிக்கை எடுக்கவும் தார்மீக ரீதியில் எந்த யோக்கியதையும் நீதிபதிகளுக்கு இல்லை என்பதையே நாறிடும் அவர்களின் நடைமுறைகள் காட்டுகின்றன. உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி  எச். எல். தத்து பெங்களூரில் 50 வீடுகளை ரகசியமாக வைத்துள்ளார் என மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பகிரங்கமாக பேட்டி அளிக்கிறார். அதே போல உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளான ரங்கனாத் மிஸ்ரா, கே.என். சிங், ஏ.எம். அகமதி, எம்.எம் . புன்சி, ஏ.எஸ். ஆனந்த் , ஒய்.கே. அகவர்வால் உள்ளிட்ட எட்டு பேர்மீது சாந்தி பூசன் கொடுத்த ஊழல் புகார் இன்றுவரை கவனிப்பாரற்று கிடக்கிறது. இது தொடர்பாக முன்னாள் நீதிபதி அலைக்கற்றை தீர்ப்பு புகழ் கங்குலி அவர்கள் என்.டி.டிவிக்கு கொடுத்த பேட்டியில் " என்னை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அசிங்கப்படுத்திய உச்ச நீதிமன்றம், சாந்தி பூசன் கொடுத்த ஊழல் பட்டியல் அடங்கிய உறையை ஏன் திறக்க மறுக்கிறது?" என கேள்வி எழுப்பி உள்ளார். நீதிபதிகளின் மீது வழக்கறிஞர்கள் வேண்டாம் சக நீதிபதிகளே கொடுக்கும் ஊழல் தொடர்பான தகவல்கள் புழுத்து  நாற்றமடிக்கின்றன. அவற்றுக்கு புனுகு பூசி மறைக்கும் வேலையை  இந்த பார்ப்பன பனியா ஊடகங்கள் செவ்வனே செய்து வருகின்றன. இவற்றை மறைக்க நீதிமன்றம் கோயில் போன்றது என்றும் நீதிபதிகள் தெய்வம்
போன்றவர்கள் என்றும் பலவாறு கற்பிதங்கள் பரப்பப் படுகின்றன.

கீழமை நீதமன்றங்கள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை புழுத்து நாற்றமெடுக்கும் இந்த நீதிமான்கள்தான் வரம்பு மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம்!?.

6.வேலியே பயிரை மேய்ந்த கதை

இந்திய வழக்கறிஞர் சங்கம் என்பது நீதித் துறையின் மாண்மை பாதுகாக்கும் நோக்கோடு வழக்கறிஞர்களை நெறிபடுத்தவும் அவர்களின் நேர்மையான போராட்ட குனத்துக்கு பக்கபலமாகவும், அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நீதிபதிகளிடமும், ஆளும் வர்க்க சக்திகளிடமும் இருந்து சட்டத்தின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டது."வர வர மாமியா கழுத போலானா" என்பது போல இப்போது ஆளும் வர்க்கத்துக்கும், பார்ப்பனிய பனியாக்களின் ஏவல்களான நீதிபதிகளுக்கும் அடிமையென கை கட்டி நிற்கின்ற பரிதாப நிலையில் அது இருக்கிறது.
காக்க வேண்டிய அதன் கரங்களே கத்தியை வழக்கறிஞர்கள் நோக்கி நீட்டியிருக்கின்றன.

சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கி ஒரு சமூக விரோதிகளைப்போல வழக்கறிஞர்களை நடத்தும் பார்கவுன்சில், ஒரு பாசிச சர்வாதிகார அமைப்பாகவே செயல் படுகிறது.  குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் எந்தவித விசாரணைக்கும் உட்படுத்தப் படாமலேயே பணிநீக்கம் செய்யும் வினோதம் நடக்கிறது. "நீதிமன்றப் புறக்கணிப்பு சட்ட விரோதம் , அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று அதன் கூடுதல் செயலாளர் மிஸரா மிரட்டுகிறார். தலைவர் மனன் குமார் மிஸ்ராவோ 30% போலி வழக்கறிஞர்களை களையெடுப்பேன் என கர்ஜிக்கிறார். இந்த ஒழுக்க சீலர்கள்தான் தமது அலுவலக துப்புறவுத் தொழிலாளிகள் லிப்டை பயன் படுத்தினால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என@ அறிவித்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

தமிழ் நாடு பார் கவுன்சிலோ, தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது போலப் பாய்கிறது. நீதிபதிகளுக்கு குழாயடித்து அதன்மூலம் நீதிபதியாகிவிடலாம் என்று கனாக்காணும் தலைவர் டி. செல்வம் , தாம் பதவியேற்றதில் இருந்து  இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வீட்டு அனுப்பிவிட்டதாகப் பெருமை பீற்றுகிறார்.

இத்தகு சீலர்களைக் கண்டுதான் " நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்" என்று தனது நோக்கம் நிறைவேறும் வரை பார்கவுன்சில் தேர்தலையே தடுத்து வைத்திருக்கிறது நீதிமன்றம்.

7.மண் குதிரையை நம்பி

சட்டத் திரு்தத்துக்கான அடிப்படைகள் எதையுமே புரிந்து கொள்ளாமல் அல்லது அதன்மீது கொஞ்சமும் அக்கரையில்லாமல்  இந்த வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்து வரும் கருத்துக்கள் நகைப்புக்கு உரியவையாக உள்ளன. "பாம்பும் சாகக் கூடாது, தடியும் உடையக் கூடாது " எனும் பாணியில் இவர்கள் அடிக்கும் ஸ்டண்டுக்கள் சர்க்கஸ் கலைஞனையே மிஞ்சும் அளவுக்கு உள்ளன. இவர்களின் இத்தகு பச்சோந்திப்போக்குதான் நீதிபதிகளுக்கு குதிரை பலத்தைக் கொடுக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகி பால் கனகராஜ் செல்கிறார்... "ஜூன் 6 ம் தேதி நடத்தப்படும் பேரணி உயர் நீதிமன்றத்தை எதிர்த்தல்ல" என்று. மேலும் அவரே சொல்கிறார் " உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளது தமிழகத்தின் சட்டத்திருத்தம்" என்று.

எதிரிகள் யாரெனக்கூட செல்லத் திரானியற்ற இத்தகு  மீடியாபுலிகளா வழக்கறிஞர்களின் பிரச்சனைகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்தப் போகிறார்கள்?!

8.எது உண்மையான தீர்வாக இருக்க முடியும்?

எப்போதுமே சமூக மாற்றத்துக்கான, ஏன், சிறு சிறு சீர்திருத்தங்களுக்கான போராட்டங்கள் கூட, அறிவு ஜீவிகளாலோ அல்லது தேசிய முதலாளிய சக்திகளாலோ தலைமை தாங்கி நடத்தும் போராட்டங்கள் வெற்றியை எட்டிவிடுவதில்லை.மாறாக ஒரு சலனத்தை ஏற்படுத்துவதோடு  நீா்த்துப் போய்விடுவதுதான் வரலாறு.

உண்மையில் வழக்கறிஞர்கள் இப்போது முன்னெடுத்திருக்கும் போராட்டத்தை மனமுவந்து நாம் ஆதரித்தாலும் வரலாற்று படிப்பினைகள் நம்மை கவலை கொள்ளவே செய்கின்றன.

உலக மயமாக்களை எதிர்த்து போராடும் தொழிலாளர்களோடும், நவீன வேளாண் கொள்கைகளை எதிர்த்து விவசாயிகளேடும், சில்லரை வர்க்கத்தில் அந்நிய முதலீடு குறித்துப் போராடும் விவசாயிகளோடும், காவி பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ஜனநாயக சக்திகளோடும், நீதிமன்ற பாசிசத்துக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டம் என்றைக்கு இனணக்கபபடுகிறதோ, அப்போது மட்டும் தான் அதற்கு பூரண வெறறிசாத்தியம்.

அது எவ்வளவு சிரமம் என்றாலும், மக்களின் எல்லா வகையான போராட்டத்துக்குமான ஒரே அடிப்படை ஏகாதிபத்திய  நலன் காக்கும் காவி பயங்கரவாத அரசு தான் என்பதை புரிந்து கொள்ளாதவரை , தனது கருப்பு அங்கி மாயையில் இருந்து வழக்கறிஞர்கள் வெளியே வராத வரை , மக்களோடு மக்களாய் அவர்கள் கலந்திடாத வரை அது குறித்து அவர்கள் யோசிக்காத வரை அவர்களின் போராட்டம் என்றைக்கும் எட்டாக் கனிதான்.

- பாவெல் இன்பன்