சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து ஒன்று சேர்த்தது மழை வெள்ளம். ஏழை, பணக்காரன் என வித்தியாசமின்றி ஒரு வேளை உணவுக்காக கையேந்தி நின்று, ஒரே உணவை சாப்பிட வைத்தது மழை வெள்ளம். மனித நேயத்தை வெளிப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது மழை வெள்ளம். முன்பின் தெரியாதவர்கள் கூட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்தது நெஞ்சைக் கவர்ந்தது. எந்த வித பாகுபாடும் இல்லாமல் எல்லோரும் துப்புரவுப் பணியை ஒன்று கூடி செய்தார்கள் இப்படியாக அனைத்து ஊடகங்களிலும் கடந்த இரண்டு மாதங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் தான் இருந்தன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சற்று ஆராய்ந்தமானால் தெரியும்!

மழை வரலாறு

          manual scavengingவடகிழக்கு பருவமழையின் போது கடந்த 100 ஆண்டு காலத்தில் பெய்திராத அளவுக்கு இம்முறை மழை கொட்டி தீர்த்திருக்கிறது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் வெள்ளம் கடுமையான பாதிப்பின் சுவடுகளை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. இதை தான் நூற்றாண்டுகளில் பெய்யக்கூடிய அதிக சாத்தியம் உள்ள மழையளவை நீரியல் நிபுணர்கள் நூற்றாண்டு மழை (100 – லுநயச சுயin) என்று அழைக்கின்றார்கள்.

          வரலாற்றில் இதற்கு முன்பு இப்படியொரு துயரத்திற்கு சென்னை தள்ளப்பட்டதாக பதிவுகள் இல்லை என்று சொல்கிறார்கள். முதல் முறையாக வான்வழி, இருப்புப் பாதை வழி, சாலை வழி ஆகிய மூன்றும் துண்டிக்கப்பட்டு தீவாக மாறியிருக்கிறது.

          1918 க்குப் பிறகு இப்படியொரு கனமழை சென்னையில் இப்போது தான் பெய்துள்ளது. 1918 ல் இருந்த நகரம் இப்போது எத்தனை மடங்கு விரிவடைந்திருக்கும். ஆக்கிரமிப்புகளால் ஏரிகள், நீர்வழிப்பாதைகள் எவ்வளவு சுருங்கியிருக்கும்? அதனால் தான் இவ்வளவு பாதிப்புகள் வர காரணமாகிவிட்டன.

பாதிப்புகள்

            இந்த மழை வெள்ளத்தால் சென்னை மாநகரமும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மழைநீர். சென்னையை ஒரு பெரிய ஏரி போல் காட்சியளித்தது. இதற்கு முக்கிய காரணம் அரசே கூட இருக்கலாம். அரசே ஏரிகளையும், நீர்வழிபாதைகளையும் மறித்து கட்டிடங்கள் கட்டி சென்னையை மெட்ரோ சிட்டியாக மாற்றிவிட்டோம் என்று தப்பட்டம் அடித்து கொண்டிருந்தற்கு சரியான சவுக்கடியை மழை வெள்ளம் தந்துவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

          மக்கள் வேண்டுமானால் தங்கள் சுகபோகத்திற்காக இயற்கையையும், நீர்வழித்தடங்களையும் அழிக்கலாம். ஆனால் இயற்கை எதற்காக அதன் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும்? அதனால் தான் இப்போது மழை வெள்ளம் வடிவத்தில் ஆக்கிரமித்து விட்டது.

          மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உடைகள், உணவுப்பொருட்கள் இன்னும் எத்தனையோ வகையான பொருட்கள் எல்லாம் நீரில் நனைந்து பாழாய் போய்விட்டன. அவற்றையெல்லாம் அவர்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. அதனால் அவற்றை வீதிகளில் வீசினார்கள். மழையின் இந்த கோரதாண்டவத்தால் பலர் தங்களின் வீட்டு மாடிகளிலும், உயரமான வீடுகளிலும் பாதுகாப்பாக தஞ்சம் புகுந்தார்கள்.

          இந்த மழையினால் கடும் பொருளாதர நெருக்கடியை சந்தித்து நடுத்தர வர்க்கம் தான். இத்தனை ஆண்டுகள் உழைத்து சேமித்த அனைத்தையும் மழை வெள்ளத்தில் இழந்துவிட்டார்கள் என்று சொல்வது உண்மைதான்!

          ஆனால் இந்த நடுத்தர வர்க்கத்தைவிட அதிக பாதிப்புக்கு உள்ளானது குடிசைப் குதியிலிருந்த தலீத் மக்களும், வீதியோரம் குடியிருந்தவர்களும், தாழ்வான பகுதியில் குடியிருந்தவர்களும் தான் என்பதை மறுக்க இயலாது. பெரும்பாலும் குடிசைப்பகுதிகளில் துப்புரவுத் தொழிலாளர்களும், குடிநீர் வடிகால் தொழிலாளர்களும் தான் இருக்கிறார்கள். வெள்ளம் வந்தால் அவர்கள் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். இதைப் பற்றிய செய்திகள் ஊடகங்கள் ஏன் வெளியிடவில்லை? என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிவராண உதவிகள்

          பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்கள் திறந்து அதன் வழியாக அவர்களுக்கு உணவும், மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. இதில் அரசின் பங்கை விட தன்னார்வலர்களும், அமைப்புகளும், தனிநபர்களும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அப்படி அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற பொருட்களில் வளைத்து, வளைத்து ஸ்டிக்கர் ஒட்டியது நாம் அறிந்ததே! இது மக்கள் நல அரசின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகவும் திகழ்;ந்தது. இதில் சில தன்னார்வலர்கள் சமூக வலைதளங்களை சிறப்பாக பயன்படுத்தி பாதி;க்கப்பட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்ததது பாராட்டுக்குரியதாகும்.

துப்புரவுப் பணி

          பெரும் மழை வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை நகருக்குள் குப்பைகள் அடித்து வரப்பட்டன. வீடுகளில் புகுந்த வெள்ளத்தில் நாசமான துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தெருவில் வீசினர். மலையாகக் குவிந்தது குப்பை. இதன் காரணமாக பல்வேறு நோய்த் தொற்றுகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டது. சென்னையில் தேங்கிய ஒரு லட்சம் டன் குப்பைகளில் ஆறு நாட்களில் 56 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சுமார் பத்தாயிரம் துப்புரவுப் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (நமது மண்வாசம், மாதஇதழ், ஜன -2016, பக் - 33)

          இந்தச் செய்தியை படித்தவுடனே தெரிந்திருக்கும். துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் துப்புரவுப் பணியாளர்களை வரவழைத்து சென்னையையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துப்புரவுப் பணியை செய்து முடித்திருக்கிறார்கள் என்பது.

          ஈரோட்டிலிருந்து வந்திருந்த இருநூறு துப்புரவுப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஐந்து நாட்களாக சுத்தம் செய்து வரும் அவர்களில் மாரிமுத்து என்ற பணியாளர் கூறுகையில், “எங்களை வீட்டுக்குள் போய் சுத்தம் செய்யக்கூடாது. வெளியில் இருக்குற குப்பைகளை மட்டும் சுத்தம் செய்யுங்கனு அதிகாரிகள் உத்தரவு போட்டாங்க. அப்புறம் ஏதாவது தொலைஞ்சுப் போச்சுன்னா வம்பு நம்மை வந்து சேரும்றதுனால முன்னெச்சரிக்கையா சொல்லிட்டாங்க. எனக்கு சக்கரை நோய் இருக்குதுங்க. வெயில்ல ரெம்ப நேரம் நின்னு வேலை செய்யுறதுனால, வியர்த்துக் கொட்டி அப்;பப்போ மயக்கம் வந்திடுதுங்க. பரவராயில்லைங்க, ஆபத்து நேரத்துல உதவலன்னா அப்புறம் இருந்தென்னங்க?” (குமுதம் ரிப்போர்ட்டர், வாரம் இருமுறை, டிச -29, பக் -17)

          இந்தச் செய்தி நமக்கு பல விசயங்களை உணர்த்துகின்றன. சென்னையில் துப்புரவுப் பணியை மேற்கொண்டதில் பெரும் பங்கு துப்புரவுப் பணியாளர்களுக்கு உள்ளது என்பது எதார்த்த உண்மை. தனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் துப்புரவுப் பணியை செய்து மனித நேயத்தில் உயர்ந்து நிற்கிறார் மாரிமுத்து.

          மழை வெள்ளத்தால் எல்லா விதமான குப்பைகளும், கழிவுகளும் தான் நகருக்குள் வந்திருக்கிறது. மழை வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்திருக்கும் போது அவர்கள் தங்குவதற்கே போதுமான இடவசதி இல்லாத போது அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க எங்கு சென்றிருப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும். அந்த வெள்ள நீரில் தான் அவர்கள் இயற்கை உபாதைகளை கழித்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டங் கூட்டமாக நிவாரண முகாம்களிலும், பாதுகாப்பான குடியிருப்புகளிலும் தங்கும் போது அப்பகுதியில் பெரும் சுகாதர சீர்கேடுகள் நிறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட பகுதியில் துப்புரவுப் பணியை மேற்கொண்டது யார்?

          அதுபோக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க பிளாஸ்டிக் தாள்களில் தான் அடைத்து கொடுத்திருக்கிறார்கள். அவைகள் உண்டாக்கிய குப்பைகள் வேறு ஏராளம்.

          பிஸ்கட் பாக்கெட்டுகள், பால் பவுடர், ரெடிமிக்ஸ் உணவு, நேப்கின், சாக்லெட்கள் என்று சுமார் முப்பது பொருட்கள் கொண்;ட ஒரு பையை தயாரித்து கொடுத்திருக்கிறனர். இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்ட பின்பு அவர்கள் சாப்பிட்டு விட்டு வீசியெறிந்த குப்பைகள் ஒரு பக்கம் மேலும் சென்னையை குப்பையாக்கியது.

          இப்படி சென்னை மாநகரமே குப்பையாக இருந்ததை முழுமையாக துப்புரவுப் பணிகளை செய்து முடித்தது யார்? பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த துப்புரவுத் தொழிலாளர்கள்தானே!

          பல்வேறு அமைப்புகளிலிருந்தும், பல்வேறு இடங்களில் துப்புரவுப் பணியை மேற்கொண்டார்கள். அதை மறுக்கவில்லை. அவர்கள் துப்புரவுப் பணியை மேற்கொண்ட இடங்களில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட சகதிகளும், வீட்டு உபயோகப் பொருட்கள் கிடந்தன. அவற்றை அவர்கள் தெரு தெருவாக, சாலை சாலையாக சுத்தம் செய்தார்கள். அவைகள் அப்படியே தவறாமல் ஊடகங்களில் பரபரப்பான புகைப்பட செய்திகளாயின. நல்ல விசயம் தான்.

          அதே நேரத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் மேற்கொண்ட துப்புரவுப் பணிகள் ஓரிரண்டு தான் ஊடகங்களில் வெளிவந்தன. ஒருநாள், இரண்டு நாள் என்று துப்புரவுப் பணியை செய்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. அப்படி செய்வதற்கு மனம் வரவேண்டுமே. அதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுட்டுகளும், வாழ்த்துகளும் சொல்லிக் கொள்கிறேன்.

மலராத மனிதநேயம்

          நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவது துப்புரவுப் பணியை தொழிலாக கொண்டவர்களுக்கும், இதுபோன்ற இயற்கை பேரிடர் நேரங்களில் மனித நேயத்தின் நிமித்தமாக துப்புரவுப் பணியை செய்கிறவர்களுக்கும் மகப் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம்மில் பலர் சொல்வதுண்டு, அவர்கள் அதற்காகத்தானே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று! அப்படி சொன்னாலும் ஒன்றும் தவறில்லை தான்.

          அப்படி சொன்னால் மேலே குறிப்பிட்டது போல ஏழை, பணக்காரன், சாதி, மதபேதங்கள் அறவே நீக்கிவிட்டது இந்த மழை. மழை நீரால் வெளிப்பட்டது மனிதநேயம் என்று சொல்வது முற்றுலும் முரணானது தானே! ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு அடிப்படை தேவைகள் கூட கிடைக்க வழியில்லாமல் இயற்கையின் பிடியில் சிக்குண்டு தவிக்கும் போது, அவனுக்கு ஓடோடி வந்து உதவுவதும் மனிதநேயம் தான். அதை மறுப்பதற்கில்லை.

          மழை வெள்ளம் எந்த அளவுக்கு மனிதநேயத்தை இணைத்ததோ, அதே போல மழை நீர் வடிய தொடங்கியதும், பாதிக்கப்பட்ட மக்களிடத்திலும் கூட மனிதநேயம் சுருங்கிப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் கழித்த இயற்கை உபாதைகளையும், தாங்கள் தின்று விட்டு போட்ட கழிவுகளையும் எத்தனை பேர் தாங்களே சுத்தம் செய்ய தயாராக இருந்தார்கள். பொதுவான சாலை தெருகளில் இருப்பதை விட்டு விடுங்கள் அவரவரின் வீட்டுக்கு முன்னால் கிடப்பதைக் கூட அவர்கள் சுத்தம் செய்ய தயாராக இருந்தார்களா? எனபது தான் கேள்வி. தங்கள் வீட்டு கழிவுகளை கூட சுத்தம் செய்வதற்கு இன்னொருவன் வருவான் என்று மூக்கைப் பொத்திக் கொண்டு போனவர்கள் ஏராளம். இது எப்படி மனிதநேயத்தை ஒன்றினைத்தாதாக இருக்க முடியும்?

          அதே போல பல்வேறு அமைப்புகளிலிருந்தும் துப்புரவுப் பணியை மேற்கொண்டவர்களில் பலர் தங்களுக்கு பாதுகாப்பான உடைகள், பூட்ஸ், கையுறை, முககவசம், கருவிகள் கொண்டு குப்பைகளை அள்ளியதைப் பார்க்க முடிந்தது. ஆனால் துப்புரவுப் பணியை தொழிலாக செய்துகொண்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் பலர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பலர் செருப்பு கூட போடாமல் துப்புரவுப் பணியை மேற்கொண்டது போன்ற அவலங்கள் ஏராளமாக இருக்கிறது. இவைகளும் ஒருசில நேரங்களில் ஊடகங்களில் வெளிவரவே செய்தன.

          கடுமையான உடலுழைப்பை கொடுத்து சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும் கழிவுகளையும், மலம் நிரம்பிய பகுதிகளையும் சுத்தம் செய்தது துப்புரவுப் பணியாளர்கள்தானே. இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதை கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பது தான் எதார்த்தம்.

          மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் போது பலவிதமான உதவிகளும், நிவாரணங்களும் கொடுக்க முன்வந்தவர்களில், எத்தனை பேர் வெள்ளநீர் வடிய தொடங்கியதும் சென்னையை தூய்மையாக மாற்ற தயாராக இருந்தார்கள்?

          அந்த நேரத்தில் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு தங்குவதற்கு போதிய வசதி கூட இல்லாமல், சரியான உணவு கிடைக்காமல், சுகாதரமற்ற சூழலில், தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் துணிந்து துப்புரவுப் பணியை செய்தவர்கள் துப்புரவுத் தொழிலாளர்களே! அந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், அவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க மருத்துவ முன்னேற்பாடுகள் போன்றவற்றை குறித்து பேசுவதற்கு ஒரு சிலரை தவிர மற்றவர்கள் முன்வரவில்லையே! ஒருவேளை அவர்களது பார்வையில் இது மனிதநேயமாக தெரியவில்லையோ? என்னவோ? இப்படி மனிதநேயத்தையும் பொருட்படுத்தாமல் துப்புரவுப் பணியை மேற்கொண்ட துப்புரவுத் தொழிலாளர்களின் தியாகத்தை தான் ஊடகங்கள் துப்புரவுக் கடவுள்கள் என்று வர்ணித்தார்கள் போலும்!

          அப்படி கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளும் போது அதனால் ஏற்படுகின்ற துர்நாற்றத்தில் மூச்சடைத்து நெஞ்சுவலியால் இரண்டு துப்புரவுத் தொழிலாளிகள் இறந்துவிட்டார்களே? ஒரு துப்புரவுத் தொழிலாளி மூச்சடைத்து மயங்கி உயிருக்கு ஆபத்தான சூழலில் வீடு திரும்பியிருக்கிறாரே இதில் மனிதநேயம் தென்பட மறுக்கிறதே. ஏன்?

          இதில் தான் நிரம்பியிருக்கிறது அந்த சூட்சமம். முதலிலயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா சாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லாமல் மழை வெள்ளம் ஒன்றிணைத்தது என்று. அது உண்மைதானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! உண்மை புரியும்!

          ஒருவேளை அப்படியானால், மனிதநேயம் பற்றி பேசும் போது அவற்றிற்கான அளவுகோல் தான் என்ன? மனித நேயத்துக்குமா பாகுபாடு இருக்கிறது? இல்லை. மனித நேயம் பற்றி பேசுவோரின் மனங்களில் தான் பாகுபாடு இருக்கிறது. அதைப் பற்றி பேச தான் நாம் ஒவ்வொருவரும் மறுக்கிறோம். தொடர்ந்து மறுத்துக் கொண்டே இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் தான் தூய்மையான மனிதநேயம் மலரும்!

- மு.தமிழ்ச்செல்வன், நடுச்சூரங்குடி, சாத்தூர்