பெரியாரியவாதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் அப்படி என்னதான் முரண்பாடு? அடிப்படையே முரண்பாடு தான். ஜாதியை வைத்து தான் தமிழனா என்று வீரத்தமிழர் முன்னணியினர் கண்டுபிடிக்கிறார்கள்; ஜாதியை தமிழனின் அடையாளமாக அதாவது தமிழினத்தின் பெருமைப்படத்தக்க இனக்கூறாக பார்க்கிறார்கள். அப்படி ஜாதியை தமிழனின் அடையாளமாகப் பார்ப்பவர்கள் எப்படி ஜாதியை ஒழிக்க முன்வருவார்கள்? ஜாதி ஒழிப்பைப் பற்றி பேசுவார்கள்? என்பதே அடிப்படை முரண்பாடு. (ஆதாரம்: கண்டிநாயக்கர் ஆவணப்படத்தில் தமிழன் தன் பெயருக்குப் பின் இருந்த ஜாதிப்பட்டத்தை இழந்ததால் தன் அடையாளத்தையும் பெருமையையும் இழந்தான் என்று சொல்கிறார்கள்.)

seeman 238இப்படி ஜாதி என்பது தமிழனின் அடையாளமாகவும், தமிழினத்தின் பெருமைப்படும் இனக்கூறாகவும் நாம் தமிழர் கட்சியினர் இப்போது புதிதாக ஒன்றும் பார்க்கவில்லை. முன்பே சொல்லப்பட்டது தான். இதோ ம.பொ.சி சொல்வதை கவனியுங்கள்.

“வருணப் பாகுபாடு முதலில் தமிழர் சமுதாயத்திலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. இந்த வருண வேறுபாடு தோன்றிய காலம் தமிழர் வட பாரதத்திலும் வாழ்ந்த காலமாக இருக்கலாம். ஆரியர் எனப்படுவோர் பல நூற்றாண்டுக் காலம் நாடோடிகளாக அலைந்து திரிந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். நால்வருணப் பாகுபாடு என்பது விஞ்ஞான முறைப்படி மனித சமுதாயத்தின் வளர்ச்சியைக் குறிப்பதாகும்” (ஆதாரம் :தமிழகத்தில் பிறமொழியினர்- ம.பொ.சி - பக்கம்-246)

வீரத்தமிழர் முன்னணியினர் இப்போது சொல்வதை முன்பே சொன்ன ம.பொ.சி வருணப்பாகுபாடு தமிழர் சமுதாயத்திலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்று “சுத்தத் தமிழர்கள்(?)” பார்ப்பனர்களைக் காப்பாற்றுகிறார். அடுத்து இந்திய நிலப்பரப்பில் வாழக்கூடிய பெருவாரியான மக்களை இழிவான நிலையில் வைத்திருக்கும் வருணப் பாகுபாட்டை மனித சமுதாயத்தின் வளர்ச்சியைக் குறிப்பதாக சொல்கிறார். எந்த மனித சமூதாயம் என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பார்ப்பான் தான் மனிதன். அவன் வளர்ச்சியே மனித சமுதாய வளர்ச்சி என்று எண்ணினாரோ என்னவோ?

இந்த ஜாதி என்பது தமிழரிடம் இருந்து தான் தோன்றியதா? அது தமிழனுக்கும் அடையாளம் தானா? என்ற கேள்விக்கு பெரியார் என்ன சொல்கிறார் என்று
கவனியுங்கள்.

“முதலாவதாக, இந்த ஜாதி என்னும் சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. ஜாதிக்கு ஆதாரம் இந்து மதம் என்று சொல்வது. அந்த இந்து மதம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல் அல்ல; அதற்கு ஆதாரமாக உள்ள வேதமும் மநுதர்மமும் நமக்குச் சம்பந்தப்பட்டவையல்ல. அவைகள் நம் மொழியில் உள்ளவையுமல்ல. நம் மக்களால் எழுதியவையுமல்ல; எப்படியோ அவை நம் தலைக்கு வினையாக வந்து சேர்ந்திருக்கின்றன; ‘இந்து’ என்ற சொல் எந்த மொழியிலும் இல்லை. ஆராய்ச்சிக்காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள்; சிலர் ஓர் இடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிப்பது என்கிறார்கள்: சிலர் ‘பர்சிய’ மொழியில் திருடர்களைக் குறிப்பது என்கிறார்கள். அது மருவி வந்ததென்பார்கள் சிலர்.

மற்றபடி, வருணாசிரம தர்மம் என்னும் சொல்கூடத் தமிழ்ச் சொல் அல்ல. நம்நாட்டில் அந் நியமம் இருந்திருந்தால் நம் மொழியில் அதற்கு வார்த்தை இருந்திருக்கும். சோளம் நம் நாட்டில் விளைகிறது. அதைச் சோளம் என்று சொல்கிறோம். ஆங்கிலேயரும் அதைச் சோளம் என்றே சொல்லுவார்கள் ஏன்? அவர்கள் நாட்டில் அது இருந்ததில்லை. அது போலவே, காப்பியை நம் தமிழ்மக்கள் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு ஒரு பானமாக உபயோகிக்கவில்லை. அதனால், நம் தமிழ்மொழியில் அதற்கு ஒரு பெயரிடுவதற்கில்லாமல் போயிற்று. ஆதலால், நாமும் அதை அந்நிய நாட்டுப் பெயரால் ‘காப்பி’ என்றே அழைக்கின்றோம். ‘வருணாசிரம தர்ம சாதிப் பாகுபாடு’ நம் தமிழ்நாட்டில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே இருந்திருந்தால், நம் மொழியில் அவைகளுக்குத் தனிப் பெயர் இருந்துதானிருக்கும். அன்றியும், இப்பெயர்களையும் இவ் வித்தியாசங்களையும் நாம் ஆதியிலிருந்தே கண்டித்து வந்திருக்கின்றோம் என்பதற்கு அறிகுறிதான் -ஆரியர்களை நாம் ‘மிலேச்சர்கள்” என்று சொல்லுவது. எனவே, இவை ஒழிய வேண்டுமானால், இவ் வாரியத்தன்மை ஒழிய வேண்டும். ஆரிய மதம் ஒழிய வேண்டும். ஆரியக் கொள்கை ஒழிய வேண்டும்.” (ஆதாரம்: சென்னை புரசைவாக்கத்தில் 19-10-1927 இல் பெரியார் சொற்பொழிவு, ‘குடியரசு’ 30-10-1927, பெரியார் சிந்தனைகள்-வே.ஆனைமுத்து, தொகுதி-2, இயக்கங்கள்-1, பக்கம்-708)

மேற்கண்ட பெரியாரின் உரையில் அவர் சொன்ன ‘நம்’ என்பது தமிழர்கள், ‘நம் மொழி’ என்பது தமிழ் மொழியை, ‘நம் நாடு’ என்பது தமிழ்நாட்டை என்பதை வீரத்தமிழர் முன்னணியினர் கவனிக்க வேண்டும்.

மேற் சொன்னதிலிருந்து வீரத்தமிழர் முன்னணியினர் மற்றும் ம.பொ.சி சொல்வது உண்மையா? அல்லது பெரியார் சொல்வது உண்மையா? என்பதை அறிவுள்ள தமிழ் மக்களே ஆய்ந்து பார்க்கட்டும்.

ஜாதியை ‘சாதி’ என்று மாற்றி விடுவதால் அது தமிழாகி விடாது. தமிழருக்கு உரித்தானதாகவும் ஆகிவிடாது.

தமிழர்களுக்குள் பிரிவினையை ஜாதியின் மூலம் கொண்டு வந்த ஆரியப் பார்ப்பனர்களை “அவாள் ஆத்துலேயும் தமிழ்தானே பேசுறாள்” என்று தமிழனாக்கி, ஜாதியை தமிழனுக்கு உரியதாக்கி, ‘தான் சாகும் காலம் வரையிலும் தமிழனின் இழிவுக்குக் காரணமான, தமிழ்த்தேசிய ஓர்மைக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் ஜாதியை ஒழிக்கப் போராடிய’ பெரியாரை தமிழினத்தின் மிகப் பெரிய எதிரியாக கட்டமைக்க முற்படுவதை சுத்த அயோக்கியத்தனமின்றி வேறென்ன சொல்வது? பார்ப்ப சேவகமின்றி வேறேன்ன சொல்வது?

ஜாதியை தமிழனின் அடையாளமாக கருதும் வீரத்தமிழர் முன்னணியினர், அந்த அடையாளத்தை ஒழிக்க காலம் முழுவதும் போராடிய பெரியாரை தமிழினத்தின் மிகப்பெரிய எதிரியாக பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் ஜாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரே இன்னும் இவர்கள் பார்வையில் ‘நாய்க்கர்’ ஆகத்தான் தெரிகிறார். பல ஜாதிமறுப்புத் திருமணங்களை செய்து வைத்த தோழர்.கோவை.இராமகிருஷ்ணன் “நாயுடு”வாகத் தெரிகிறார்.

ஜாதியை அடையாளமாக வைத்துத்தான் “சுத்தத் தமிழரை” இனம் காண முடியும். அதன் மூலம் இருமொழியாளர்களை அடையாளப்படுத்தி, இருமொழியாளர்கள் எதிர்ப்பை தீவிரமாக்கி, புதியதொரு எதிரியை கட்டமைத்து, எதிர்ப்பரசியல் மூலம் தாங்கள் வளர முடியும் என்று நாம் தமிழர் கட்சியினரும் சீமானும் கருதுவார்களெனில், முதலில் ஒன்றை செய்யட்டும். தமிழ்நாட்டில் உள்ள மக்களின் ஜாதிப்பட்டியலை எடுத்து, இந்த ஜாதியினர் ‘சுத்தத்தமிழர்’, இந்த ஜாதியினர் ‘தெலுங்கர்’, இந்த ஜாதியினர் ‘கன்னடர்’ என்ற பட்டியலை தங்களது கட்சி ஆவணத்தில் வெளியிடுங்களேன். (ஜாதிமறுப்பு திருமணம் செய்து அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை எதில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. மேலும் அந்த பட்டியல் தமிழீழத்திற்கும் பொருந்துமா என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்)

மதம், புராணம், இதிகாசம், பண்பாடு என்பதன் பெயராலும், பழக்கவழக்கங்கள் என்பதன் பெயராலும் மக்களின் பொதுப்புத்தியில் உள்ள அடிமைத்தனத்தையும், காலத்துக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத பிற்போக்குத்தனங்களையும் எதிர்த்தே பெரியார் சண்டையிட்டார். அதாவது மக்களின் பொதுப்புத்தியை எதிர்த்து மக்களுக்காக மக்களிடமே சண்டையிட்டார். இதற்கு மக்களின் ஆதரவும், எதிர்ப்பும் எந்த அளவில் இருக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

ஆனால் மக்களின் பொதுப்புத்தியில் இருக்கும் அடிமைத்தனத்திற்கும், பிற்போக்குத்தனத்திற்கும், ஏதாவது ஒரு வியாக்கியானம் சொல்லி அதை நியாயப்படுத்த முயல்வது முற்போக்கும் ஆகாது; பண்பாட்டு மீட்பும் ஆகாது; தமிழனின் அறிவு வளர்ச்சிக்கு சிறிதும் பயன்படாது. எடுத்துக்காட்டாக முருகன் என்பது கடவுள் என்று மக்களின் மனதில் பதிந்திருக்கும் பொதுப்புத்தியாகும். அதை பாட்டன் என்று வியாக்கியானம் சொல்லி நியாயப்படுத்துவதும், பெண் அடிமைத்தனத்தின் குறியீடாக தாலி இருக்கும்போது, ‘அ’ வடிவ தாலியாக மாற்றி விளக்கம் கொடுப்பது என்பதெல்லாம் பண்பாட்டுப் புரட்சியாகாது. (வண்டியில் எலும்பிச்சை பழம் கட்டினால் ஓட்டுநருக்கு தூக்கம் வராது என்று நான்கு வேதியல் பெயர்களை கலந்து எழுதி அதில் அறிவியல்(?) இருப்பதாகவும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்று வியாக்கியானம் அளிப்பார்களோ அப்படி)

அடுத்து ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது திரு.சீமான் அவர்கள் “நா எங்கையாவது பெரியாரப் பத்தி தப்பா பேசி இருக்கேனா?” என்ற கேள்வியைக் கேட்டார். நான் அறிந்த வரையில் திரு.சீமான் பொதுமேடைகளில் பெரியாரை தவறாகப் பேசியது இல்லைதான். ஆனால் தன் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் மட்டும் “அண்ணாவின் பூமி, பெரியாரின் பூமி, எங்கருக்கு காமி! போய்வா சாமி(சிரிப்பொலி)” என்று அடுக்குமொழி நக்கல் வசனம் பேசுவார். அந்த நிலையில் தான் இப்போது இருக்கிறார். நாளை எப்படி இருப்பார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. மேலும் ஆண்டுதோறும் பெரியாருக்கு விழா எடுப்பார். சமூக வலைதளங்களில் பெரியாரைப் பற்றி கேவலமாக எழுதுபவர்களை கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்று ‘பாக்கியராசன், மணிசெந்தில்’ ஆகியோரை வைத்து அறிக்கை வெளியிட செய்வார்.( அப்படிப் பார்த்தால் அவரது கட்சியினர் முக்கால் வாசிப்பேரை நீக்கி இருக்க வேண்டும்)

இது மிகப் பெரிய அரசியல் உத்தி என்று தான் சொல்லவேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியும், கட்சியின் சார்பாக வெளிப்படுத்த முடியாத கருத்தை கட்சியில் உள்ள ஒருவரின் ‘தனிநபர்’ நிலைப்பாடாக சொல்வது நடைமுறையில் இருப்பதுதான். மத்திய பாஜக சொல்ல முடியாததை சுப்ரமணிய சாமியை வைத்து சொல்ல வைப்பது; தமிழக பாஜக சொல்ல முடியாததை எச்.இராஜா மூலமாக சொல்வது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னணித் தலைவர்கள் சொல்ல முடியாததை சுமந்தரனை வைத்துச் சொல்வது, அதற்கு கடுமையான எதிர்ப்பும், விளக்கம் அளிக்க வேண்டிய சூழலும் ஏற்படும் போது ‘அது அவரின் தனிப்பட்ட கருத்து’ என்று தட்டிக் கழித்து நழுவது.

இந்த விடையத்தில் இன்னும் இரண்டு செய்திகளை சொல்லலாம். 1950-51 காலங்களில் பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்தபோது, பெரியார் அக்கொடுமைகளைக் கண்டித்து கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் பொதுவுடமை, சோசலிசம் என்று பேசிய ம.பொ.சி அப்போது திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். அந்த மாநாடுகளில் எல்லாம் ம.பொ.சி கண்ணியமான சொற்களில் பேசுவதும், அதே மேடையில் விபூதி வீரமுத்து,அணுகுண்டு அய்யாவு ஆகிய இருவரும் பெரியாரைப் பற்றி தரக்குறைவான மொழியில் பேசுவதும் நடந்துள்ளன. (ஆதாரம் – பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் - சுப.வீ பக்கம் - 147, மற்றும் பெரியார் ஆகஸ்டு 15 -எஸ்.வீ.ஆர்)

இதே போலத்தான் திமுக ஆரம்பித்த பிறகு அண்ணா, பெரியாரைப் பற்றி கண்ணியமாக பேசுவதும், கருணாநிதி தரக்குறைவான சொற்களில் பேசுவதும் நடந்துள்ளது. இப்படி தனிப்பட்டவரின் கருத்து என்று வன்மைத்தைக் கொட்ட எல்லா கட்சியிலும் சிலரை வைத்துக் கொள்வார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியினரில் சீமான் பேச முடியாததைப் பேச பல சுப்பிரமணிய சாமிகள், சுமந்தரன்கள், வீரமுத்துக்கள்,அய்யாவுகள் இருக்கின்றனர். பெரியார் எதிர்ப்பு பேச தனி அமைப்பு ஒன்றே வீரத்தமிழர் முன்னணி என்று வைத்துள்ளனர்.

1938 செப்டம்பர் 11இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சென்னை கடற்கரைக் கூட்டத்தில் பெரியார் முழங்கிய “தமிழ்நாடு தமிழருக்கே” என்பதே முதல் தமிழ்த்தேசிய முழக்கமாகும். அவரை தமிழ்த்தேசியத்தின் முதன்மை எதிரியாக வீரத்தமிழர் முன்னணியினர் கட்டியமைக்க முற்படுவது சுத்த அயோக்கியத்தனமேயாகும். இந்த இடத்தில் கூட சில இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதற்கும் மிகச்சுருக்கமாக விளக்கம் அளிக்கலாம்.

முதலாவது குற்றச்சாட்டு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்கள் தமிழறிஞர்கள் என்றும். அவர்களே “தமிழ்நாடு தமிழருக்கே” ஒன்று சொன்னார்கள் என்ற குற்றச்சாட்டு.(ஆதாரம் - தமிழ்நாடு தமிழருக்கே -க.சக்திவேல்)

இதற்கு ம.பொ.சி சொல்வதிலிருந்தே பதில் சொல்லலாம். “கட்டாய இந்தியை எதிர்த்து முதலில் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கிளர்ச்சி தோன்றியது. எதிர்ப்பியக்கம் நடத்துவதில் வல்லவரான ஈ.வே.ராவின் தலைமை அதற்குத் தேவைப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தமிழ்ப் புலவர்கள் மட்டுமே நடத்திய தூயமொழிக் கிளர்ச்சியானது, பெரியார் தலைமை காரணமாக அரசியல் வண்ணம் பெற்றது. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்ற சொற்கள் முன்னணிக்கு வந்தன. “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற உரிமைக் குரலும் பிறந்தது. வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த தமிழ்க்கொடி இந்தி எதிர்ப்பு வீரர்களின் கைகளில் காட்சியளித்தது. சுயமரியாதைக்காரர்களெல்லாம் ‘தமிழ் வாழ்க’ என்று வாய் மணக்க வாழ்த்தினர்.” (ஆதாரம்; தமிழகத்தில் பிறமொழியினர் - ம.பொ.சி –பக்கம் -189)

அடுத்த குற்றச்சாட்டு பெரியார் அப்போது தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினாலும், பின்பு “திராவிடர் நாடு திராவிடருக்கே” என்று சொன்னார் என்கிறார்கள். முதலில் பிறமொழியினரையும் உள்ளடைக்கிய சென்னை மாகாணத்தின் அந்த வரலாற்று காலச் சூழலை பார்க்க வேண்டும். 1956 நவம்பர் 1இல் மொழிவழி மாநிலங்கள் அமைந்ததை பெரியார் வரவேற்றதோடு,இதன்பின் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு “தனித் தமிழ்நாடு கொள்கை”யை வலியுறுத்துகிறார். 1973 டிசம்பர் 24இல் பெரியார் இறக்கும் கடைசி ஆண்டு வரை ”தனி நாடு” கோரிக்கையில் தான் (திராவிட நாடு இல்லை என்பதை கவனத்தில் கொள்க) உறுதியாக இருந்தார்.

1963 ஆண்டு சி.பி .இராமசாமி ஐயர் தலைமையிலான இந்திய ஒருமைப்பாட்டுக் குழுவின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தில் பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் “தனித்தமிழ்நாடு” கொள்கையில் தான் பெரியார் இருந்தார். பெரியாரிடம் இருந்து பிரிந்து 1949 செப்டம்பர் 17இல் “திராவி முன்னேற்றக் கழகம்” என்ற ஆரம்பித்த அண்ணாத்துரை அவர்களின் நிலைப்பாடு வேறு. (இது சம்பந்தமாக விரிவான விளக்கம் அறிய பார்க்க ; பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி)


இறுதியாக சில

* ‘திராவிடர்’ என்ற வார்த்தையை ஆராய்ச்சித்துறையில் இருந்து அரசியல் துறைக்கு முதன் முதலில் கொண்டு வந்த அயோத்தியதாச பண்டிதரை ஏற்றுக் கொள்கிறோம். திராவிடர் என்று பேசிய/எழுதிய பாரதிதாசனை தமிழ்த் தேசிய கவிஞராக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் திராவிடர் என்று பேசிய பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது ஒருவரின் பிறப்பையும் சாதியையும் அடிப்படையாக வைத்து அவரது போராட்ட வாழ்வை நிராகரிக்கும் போக்கு அபத்தமானதும் கேவலமானதும் ஆகும்.

* தமிழ்த்தேசிய ஓர்மைக்குத் தடையாக இருக்கும் ஜாதியை ஒழிக்கப் போராடிய பெரியாரை தமிழ்த் தேசியத்தின் முதன்மை எதிரியாக கட்டமைப்பதை வீரத்தமிழர் முன்னணியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

* சீமானே சொன்னது போல மக்கள் தகவலை சரிபார்க்க மாட்டார்கள் என்று தொடர்ந்து பொய்களை சொல்லிவருவதை திரு.சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அந்த உத்தியின் அடிப்படையில் வரலாற்று புரட்டுக்களை கொண்ட “கண்டி நாயக்கர்- மறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு” என்ற ஆவணப்படத்தை எடுத்த வீரத்தமிழர் முன்னணியினரை கண்டிப்பதோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

* “அப்படி என்ன சொல்லிட்டேன். தமிழேனு சொல்லிட்டேன்” என்று தொடர்ச்சியாக திரு.சீமான் கூறி வருகிறார். இங்கு தமிழன் என்று சொல்வதில் யாருக்கும் எந்த பிரச்சனையில் இல்லை. தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதிலும், நீங்கள் முதலமைச்சர்(?) ஆவதிலும் (வாழ்த்துக்கள்) யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் யார் தமிழர்கள், எதை வைத்து தமிழரா என்று நிர்ணயிக்கிறீர்கள் என்பதில்தான் உங்களிடமான அடிப்படை முரண்பாடு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

* மேலும் சாதியை அடையாளமாக வைத்துப் பேசும் தமிழ்த் தேசியத்தை விடுத்து, சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ்த் தேசியம் பேச நாம் கட்சியினர் முன்வர வேண்டும்.

- வா.சி.ம.ப.த.ம. சரவணகுமார்