IMG 20140117 180044சிறுவயதில் ‘கழுமரம்’ குறித்த கதைகளைக் கேட்ட போதும், இலக்கியக் குறிப்புகளில் ‘கழுவேற்றம்’ குறித்துப் படித்தபோதும் பெரிதாய் அதைப் பற்றி சிந்திக்காத என் மனது எஸ்.இராமகிருஷ்ணனின் ‘கழுமரம்’ என்ற பதிவை அவரது வலைத்தளத்தின் வரலாற்றுப்பதிவில் படித்தவுடன் அறநெறிகளைப் போதிக்கும் அனைத்து மதங்களின் பின்னால் நின்ற மனித மனங்களுக்குள் இருந்த வக்கிரத்தை ஆய்வு செய்யத் தூண்டியது.

உடனே அதில் குறிப்பிட்டிருந்த ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' உள்ள கழுமரத்தைச் சென்று பார்த்தேன். அதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருந்தனர். (இதைக் காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம்). வாழும் சாட்சியாய் தமிழகத்தில் இருக்கும் கழுமரம் இது ஒன்றுதான். மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களை "கழுவில் ஏற்றுதல்" என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் பல இனங்களில் இருந்தது. கழு சாதாரணமாக மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் 'கழுமரம்' என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. 'வெங்கழு' என்று அதனைக் குறிப்பிட்டனர். 

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாகச் சீவப்பட்ட கழுமுனையில் நிறைய எண்ணெய் தடவி குற்றாவளியை பிடித்து நிர்வாணமாக்கி, அவன் கால்களை நெஞ்சோடு சேர்த்து மடக்கி குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையாலும், கழுவின் கூர்மையாலும், எண்ணெயின் வழுக்கலாலும் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக மேலே துளைத்துக் கொண்டு ஏறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். இறந்த உடலை பறவைகள் கொத்தித் உண்ணும். சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். 

களவு புரியும் போலித் துறவிகளைக் கழுவேற்றுவதை

"கத்தித் திரிவர் கழுவடி நாய்போல் 
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்"
( திருமந்திரம் பாடல் எண் : 1655) என்கிறார் திருமூலர்.

தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தொன்று தொட்டு இதுவே வழக்கமாக இருந்திருக்கிறது.

இலத்தீனில்-க்ருக்ஸ், கிரேக்கில் ஸ்டவ்ரஸ் (மத்தேயு 27:40- பைபிள்) ‘வாதனையின் கழுமரம்’ என்ற சொற்றொடர், இயேசுவுக்குத் தண்டனை அளிக்கப்பட்ட பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்க இலக்கியங்களில், ஸ்டவ்ரஸ் என்ற வார்த்தை எந்தவொரு குறுக்குச் சட்டமும் இல்லாத செங்குத்தான ஒரு கம்பம் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தினார்கள். இயேசுவை ஆணியால் அறைவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிப்பதற்கு அப்போஸ்தலர்களான பேதுருவும் பவுலும் ஸீலோன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்; இது, எவ்விதக் குறுக்குச் சட்டமும் இல்லாத ஒரே செங்குத்தான கம்பம் என்பதைக் காட்டுகிறது.(அப்போஸ்தலர் 5:30; 10:39; 13:29; கலாத்தியர் 3:13; 1 பேதுரு 2:24) 

லூயிஸ் மற்றும் ஷார்ட் என்பவர்களுடைய லத்தீன் அகராதி க்ருக்ஸ் என்ற வார்த்தைக்கு குற்றவாளிகள் அறையப்படுவதற்கோ தொங்கவிடப்படுவதற்கோ பயன்படுத்தப்படும் ஒரு மரத்தைக் குறிக்கிறது. 

சமணர் காலம் :

சமண சமயம் விரிவு படுத்தப்பட்ட காலம், சைவ சமயத்தவர்களுடன் பகை ஏற்பட நேரிட்டது அப்பொழுது அப்பர் சமணர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

“பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்”

பாசி பிடித்த பற்களை உடையவர்கள், அழுக்குப் பிடித்தவர்கள், பலம் இல்லாதவர்கள் என்கிறார்.

நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனது வெப்புநோய் தீர்த்த திருஞான சம்பந்தரின் சைவ சமயம் தழுவிட, 8000 சமணர்களை கழுவேற்றியதாக பெரியபுராணம் கூறுகிறது.

“மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்
கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற”

சம்பந்தர் தனது மதுரைப் பாடல்களில் 

“வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?”

வேதத்தையும் வேள்வியையும் திட்டிக் கொண்டு திரியும் பயனற்றவர்களான சமணர்களையும் பௌத்தர்களையும் நான் வாதத்தில் வென்று அழிக்க விரும்புகிறேன் என்கிறார்.

தீர்வைத் தேடி:

குற்றத்தை இழைத்தவர் என்ற சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காகவோ, “எவரொருவரும் சித்தரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமாக சிறுமைபடுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ உட்படுத்தப்படக் கூடாது” என்று மனித உரிமைகளைக் காக்க உலக நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ள உலக மனித உரிமைப் பிரகடனம் (1948) 5ஆம் விதி கூறுகிறது. இது நடைமுறையில் இருந்தாலும், ஒவ்வொரு நாடும் அவர்களின் வளமைப்படி தனித்தனியான சட்டங்கள் வைத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தண்டனை முறைகளை இன்றைக்கும் அச்சுப் பிசகாமல் அப்படியே நடைமுறைப்படுத்தி வருகிறது. 

சைவ, சமண, வைணவர்களுக்குப் பின்னால் இருந்த சண்டைகளுக்கும், விஞ்ஞானிகளை சாத்தான்களின் தூதர்கள் என்று கொலை செய்த கிறித்துவர்களுக்கும், துப்பாக்கி குண்டுகளால் இரத்தம் பார்த்த இசுலாமியர்களுக்கும், இனப்படுகொலை நடத்தி அதன்மீது நாற்காலியிட்டு அமர்ந்து இருக்கும் பௌத்த மதம் தழுவிய சிங்கள அரசுக்கும் என அனைத்து மதங்கள் கடந்து வந்த பாதையிலும் அதன் வழிநெடுக உள்ள இரத்தக் கரைகளே சாட்சிகளாய்ப் படிந்திருக்கின்றன.

கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்களின் குற்றங்களுக்கும், தண்டனைகளுக்கும் கூட அனைத்துலக வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவே !

அகிம்சை, கருணை, வாய்மை, களவு செய்யாமை, துறவு, அவாவறுத்தல், நடுவுநிலைமை, தியாகம், ஈகை, ஊண் உண்ணாமை என்று நன்னெறிகளைப் போதித்த சமயங்களால் தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், யானையால் மிதிக்கவிட்டுக் கொல்லுதல், தூக்கில் இடுதல், விலங்குகளுக்கு இரையாக்குதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், உயிருடன் தீயிட்டுக் கொளுத்துதல் என்று எவ்வாறு தண்டனைகளைக் கடைபிடிக்க முடிந்தது? மதத்திற்கு மதம், இனத்திற்கு இனம், மனிதனுக்கு மனிதன் தன்னுடைய ஆளுமையை பிறரிடத்தில் புகுத்தியமையால் இருக்கலாம்.

மனிதன் உடையில், பேச்சில், உண்பதில், இடம் பெயர்தலில், களவு புரிதலில் என அனைத்திலும் உச்சபட்ச பரிணாம வளர்ச்சி கண்டபோதிலும் மனதைப் பண்படுத்துவதில் மட்டும் ஏன் இந்தத் தொய்வு ?

காலம் மாறுகிறது, அரசுகள் மாறுகின்றன, விஞ்ஞானத்தின் துணைகொண்டு மதங்களும் வளர்கின்றன. ஆனால் தண்டனைகளும், குற்றங்களும் இன்னும் அப்படியே இருக்கிறது. நாளுக்கு நாள் வளருகிறது என்றாலும் சாலப் பொருந்தும். கடினமாகப் பேசுவதுகூட மிகப்பெரிய தண்டனை என்று எப்பொழுது இந்த உலகம் உணருகிறதோ அன்றைக்குத்தான் இதற்கான தீர்வு. சமூகம் உருவாக்கிய சட்ட, திட்டங்களும் மனதை ஆராய்வதற்காகக் கொண்டு வந்த கடவுள் நம்பிக்கையும் இருந்தும் இந்த நிலை தொடரக் காரணம் புரிதல் குறைபாடு. சமூகக் கட்டமைப்புகளின் அடிப்படையான ஆட்சிமுறைகளில் ஆட்சியாளர்களின் ஆதிக்கமும், தனிமனித ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஆன்மீகக் கட்டமைப்புகளில் குருட்டு நம்பிக்கைகளும் புரிதலை திசை திருப்பி வருதலால் மாற்றுவழி என்ன என்பதே சமூகத்தின் முன் உள்ள ஒரே குழப்பம். இயற்கையின் வழியில் உணர்வுப்பூர்வமாக வாழ மனிதர்களை அனுமதிப்பதா? அல்லது உருவாக்கப்பட்டுள்ள சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு வாழ அனுமதிப்பதா? என்பதே முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி.

பண்டைய பெருமைகளைச் சொல்லும் வரலாறு, ஆய்வுகளை நிகழ்த்தும் அறிவியல், எண்களை அறியும் கணிதம், வாழ்விடத்தை அறியும் பூகோளம் ஆகியவற்றை பால்ய கல்வியில் போதிக்கும்போதே வாழ்வியலின் அடிப்படைகளை, சமயங்கள் கூறும் அறநெறிகளை அதன்மூலம் வாழ்வதற்கான வழிமுறைகளை பயிற்றுவிக்க வேண்டும். அப்பொழுதுதான் சமயங்கள் தொடரும் பாதையில் அமைதியெனும் வித்திட்டு அறநெறியெனும் பூக்களை மலரச் செய்து சகோதரத்துவத்துடன் ஆனந்தமாய் வாழ முடியும். அதுவரை இதுபோன்ற கொலைக் கருவிகளில் மரணத்தின் ஓலங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்

- ச.பிரபு தமிழன்