நாங்கள் மாவோயிஸ்டு அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். அதிலிருந்து பிரிந்து மக்கள் சனநாயக குடியரசுக் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கி உள்ளோம். இக்கட்சி சமீபத்தில் மார்ச் 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். நாங்கள் இந்த தேர்தல் களத்தில் எங்களது கொள்கைகளாக கீழ்க்கண்டவைகளை முன்நிறுத்துகிறோம்.

(1) தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளை எதிர்க்கிறோம். இக்கொள்கைகளே தமிழக, இந்திய உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து துன்பங்களுக்கும் காரணங்களாகும். எனவே, இக்கொள்கைகளை எதிர்ப்பதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளோம். இதற்கு மாற்றாக, தமிழ்த்தேசியத்தை சார்ந்த தற்சார்பு பொருளாதாரத்தை, தமிழ்த்தேசிய பொருளாதாரத்தை முன்வைக்கிறோம்.

(2) இந்துத்துவா பயங்கரவாதம் ஒன்றிய (மத்திய) அரசில் ஆட்சிக் கட்டிலேறி உள்ளது. இந்துத்துவா பாசிசம் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. அறிவிக்கப்படாத "எமர்ஜென்சி" நிலவிக் கொண்டிருக்கிறது. எனவே, சனநாயக சக்திகளும், முற்போக்காளர்களும், இடதுசாரிகளும் ஓரணியில் சேர்ந்து அனைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டி இந்துத்துவா பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

(3) நெடுங்காலமாக சாதியக் கட்டமைப்பில் இருக்கும் தமிழகத்தில், சமீபகாலமாக சாதி ஆணவக் கொலைகளும், சாதி தீண்டாமைகளும் அளவில் அதிகரிக்கின்றன. இதற்கு முக்கிய காரணகர்த்தா சாதிவெறியன் இராமதாசே ஆவார். தருமபுரியில் மூன்று கிராமங்கள் தீக்கிரையானதற்கு பிறகு தமிழக முழுவதும் உள்ள சாதி ஆதிக்க சக்திகளை ஒருங்கிணைத்து தலித் விரோத சூழ்நிலையை இராமதாஸ் உருவாக்கி உள்ளார். இராமதாசின் இந்தஆதிக்க சாதிவெறி இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முன்பு கிராமங்களில் சாதிகட்டமைப்பிற்கு பங்கம் வராமல் எப்படி பார்ப்பனர்கள் கண்காணித்தனரே, அது போல் இப்பொழுது இந்த இடைநிலை சாதி ஆதிக்க சக்திகள் கண்காணிக்கின்றனர். முழுமையாக தலித் விரோத போக்கை கிராமங்களில் நடைமுறைப்படுத்துகின்றனர்.

மேற்கண்ட இந்துத்துவா, சாதியபண்பாட்டிற்கெதிராக தமிழ்த் தேசிய பண்பாட்டை முன்நிறுத்துகிறோம். தமிழ்த்தேசிய பண்பாடு என்பது சனநாயகப்பூர்வமான, அறிவியல் பூர்வமான உழைக்கும் மக்களின் பண்பாடு ஆகும். இது பழைய மற்றும் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் இந்துத்துவா, சாதிய நிலவுடைமை பண்பாட்டை முழுவதுமாக நிராகரிக்கிறது. ஒரு புதிய வகை பண்பாட்டை முன்நிறுத்துகிறது.

(4) இந்திய ஒன்றிய அரசு "மத்திய அரசு" என்ற பெயரில் அனைத்து அதிகாரங்களையும் குவித்துவைத்துள்ளது. "கூட்டாட்சி" என்று சொல்லிக் கொண்டு போலியான கூட்டாட்சியையே செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. இக்கட்டமைப்பையே நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்.

மாற்றாக, தமிழ் தேசமக்கள் குடியரசு நிறுவப்பட வேண்டும் என்று கூறுகிறோம். தமிழக மக்களின் விருப்பத்திற்கிணங்க பொதுவாக்கெடுப்பின் மூலம் கூட்டரசு நிறுவப்பட வேண்டும் என்கிறோம். அதிகாரங்கள் அனைத்தும் தேசிய குடியரசுகளுக்கே இருக்க வேண்டும். அயலுறவு, போக்குவரத்து, செலவானி, பாதுகாப்பு போன்ற சில துறைகள் மட்டுமே கூட்டரசு நிர்வகிக்க வேண்டும்.(இவைகளை குடியரசுகளும் நிர்வகிக்கும்). அதிகாரங்கள் அனைத்தும் பரவலாக்கப்பட்டு "மக்கள் மன்றங்களுக்கே" அதிகாரங்கள்பரவலாக்கப்பட வேண்டும் என்பதை முன் வைக்கிறோம்.

(1) மேற்கண்டவைகளைப் போன்ற கொள்கைகள் மற்றும் எங்களது திட்டங்களை, பரப்புரை செய்யவும், போராட்டகளமாக்கவும் தேர்தல் வடிவத்தை பயன்படுத்துகிறோம்.

(2) நாடாளுமன்ற சனநாயக மாயயில் மயங்கி இருக்கும் மக்களிடம், இது போலி சனநாயகமே, முதலாளிகளுக்கான சனநாயகமே என்பதை அம்பலப்படுத்தி, உண்மையான மக்கள் சனநாயகத்திற்காக அணி திரட்டவும் தேர்தலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

கும்பகோணம் தொகுதி வாக்காளர்களே!

எல்லா அரசியல் கட்சிகளும் உங்களிடம் வாக்குறுதிகளை வாரி வழங்கி வலம் வருகின்றனர். வாக்கு சீட்டுகளை வாங்கி சட்டமன்றத்திற்கு போனதும் நமக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் திட்டங்களை நிறைவேற்றாமல் தங்கள் குடும்பத்தை வளமாக்கும் வேலையில் இறங்கி மாடிமேல் மாடி கட்டி ஒய்யாரமாய் காரில் பவனி வருவர். நக்சலைட்டுகளாகிய நாங்கள் உங்களிடம் வாக்குறுதிகளை வழங்கி எங்களுக்கு ஓட்டு கேட்க வரவில்லை. கும்பகோணம் தொகுதி மக்களோடு தோளோடு தோள் நின்று கீழ்வரும் கோரிக்கைகளுக்காக போராடவே தேர்தல் களத்தில் வலம் வருகிறோம்.

* நகர மயமாக்கல் என்று கக்கன் காலனி, ஏ.ஆர்.ஆர். காலனி, கல்லுப்பட்டறை தெருவில் வாழும் உழைக்கும் மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் திட்டத்தை முறியடிக்கவும், அவர்கள் வாழும்பகுதியிலேயே அடுக்குமாடி வீடு கட்டித்தரவும்;

* 60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் வாழ்ந்த குடியிருப்புகளை மகாமகத்தை முன்னிட்டு வெளியேற்றியதை முறியடித்து மீண்டும் அக்குடியிருப்புகளை அம்மக்களிடமே ஒப்படைக்கவும்;

* ஒவ்வொரு ஊராட்சியிலும், நகர்ப்புற வார்டுகளிலும், கழிவறை கட்ட நிலமுள்ள வீடுகளுக்கு கழிவறையையும், நிலமில்லா மக்களுக்கு பொது கழிவறையை கட்டித்தரவும்;

* ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்;

* பேருந்துநிலையம், நகராட்சி, பேரூராட்சி வணிக வளாகங்களுக்கு வெளிப்படையானஏலமுறைக்காகவும், உள்வாடகை முறையை ஒழித்து கட்டவும், அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்டு அனைத்து சாதி மக்களுக்கும் (குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு) வணிக வளாகம் கிடைக்கும் வகையில் ஏலத்தை முறைப்படுத்தவும்;

* இதேபோல் அரசு ஒப்பந்தப் பணிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வெளிப்படையான ஏலத்திற்காகவும்;

* அரசு பொறியியல் மற்றும் பட்டய தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகள், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக கட்டித்தரவும்;

* பட்டதாரி மாணவர்களின் வேலை வாய்ப்பிற்காக (TNPSC, TET...) சிறப்பு பயிற்சி கூடங்களை அரசே அமைத்து பயிற்சி அளிக்கவும்;

* இரண்டு ஊராட்சிக்கு ஒரு ஆரம்ப சுகாதார துணை மருத்துவமனையை அமைக்கவும்;

* மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் வரும் பயனாளிகளிடம் தனியார் மருத்துவ மனைகள் முன்பணம் என்று ஆயிரக்கணக்கில் பணத்தை கொள்ளையடிப்பதை ஒழிக்கவும்;

* 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்றவும், ஒரு நாள் சம்பளம் ரூ.500/- ஆக வழங்கவும்;

* அனைத்து மக்களுக்கும் தரமான குடிநீர் வழங்க, சாக்கடை நீரை முழுமையாக வெளியேற்றுவதற்கான திட்டங்களை நிறைவேற்ற;

* கும்பகோணம் தொகுதி முழுக்க அனைத்து ஊராட்சி மற்றும் நகர்புற வார்டுகளுக்கு நூலகங்கள் மற்றும் தரமான சாலை வசதி, தெருவிளக்கு அமைக்கவும்;

* கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் 60வயது நிரம்பிய அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கவும்;

* இலவச வீட்டு மனைகளை பயனாளிகளுக்கு வழங்காமல் அரசு அதிகாரிளே சொந்தமாக்கி கொள்வதை ஒழிக்கவும்;

* பசுமை வீடு, தொகுப்பு வீடுகளை வழங்க அதிகாரிகள், அரசியல் வாதிகள் வாங்கும் லஞ்ச ஊழலை ஒழிப்பது;

* 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்கவும்;

* நெசவு தொழிலாளர், சில்வர் பட்டறை தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதத்தை உறுதி செய்யவும்;

* கட்டிட தொழிலாளர் உட்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நலவாரியத்தின் மூலம் முறையான காப்பீட்டு திட்டத்தையும், ஓய்வூதிய திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றவும்;

* நெல் சாகுபடியாளர்கள், கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடன், உட்பட அனைத்து கடன்களையும் ரத்து செய்யவும், நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவும், உடனடிக் கொள்முதலை அரசு செய்திடவும்;

* மணல் கடத்தலை தடுத்து நிலத்தடி நீரை உயரச்செய்வது; கனிம வள கொள்ளையை தடுப்பது;

* காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்தை முறியடித்திட, ஓ.என்.ஜி.சி. உட்பட அனைத்து நிறுவனங்களையும் விரட்டியடித்திட, காவிரி நதிநீர் சிக்கலில் தமிழகத்தின் உரிமைக்காக போராட;

* கல்வி, மருத்துவம் அரசே ஏற்று நடத்திட;

* தாராளமய-தனியார்மய-உலகமய பொருளியல் கொள்கையை முறியடித்திட தமிழ் தேசியத்திற்கென தனி பொருளியல் கொள்கையை வகுத்திட;

* இந்துத்துவ பயங்கரவாதத்தை முறியடித்திட, சாதி பயங்கரவாதத்தை ஒழிக்க

* மது ஒழித்த தமிழகம் படைக்க, ஊழலை-விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்திட;

* தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்தால் திரும்பப் பெறும் உரிமைக்காக போராட;

* தொழிலாளர், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள், பெண்கள், தலித்துகள், மீனவர்கள், மதசிறுபான்மையின மக்கள், பழங்குடிகளின் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அனைவருக்கும் அதிகாரத்தை உறுதி செய்திட;

* மத்திய அரசின் அதிகார குவிப்பை எதிர்த்திட, தமிழ் தேச குடியரசின் கீழ் மக்கள் ஆட்சி மன்றங்களுக்கே அதிகாரம் என்று அதிகாரத்தை பரவலாக்கிட.

உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு நம் தேசத்தை ஏலம் போட்டு விற்கும் முதலாளித்துவ எடுபிடி கட்சிகளை தேசவிரோத கட்சிகளை புறக்கணிப்போம்.

மக்கள் சனநாயக குடியரசு கட்சி வேட்பாளர் தோழர் எழிலனுக்கு வாக்களிப்போம்.

- நிலைக்குழு,  மக்கள் சனநாயக குடியரசு கட்சி