2016 தேர்தல் குறித்து தமிழர் முன்னணியின் பொதுக்குழு முடிவுகள்

அன்பார்ந்த தமிழர்களே! தமிழ்த்தேச மக்களே!!

ஆரிய, பார்ப்பனிய, இந்திய மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஒற்றை ஆதிக்கத் தன்மைகளுக்கு எதிராக தமிழினம் நடந்திவரும் இனப் போராட்டம்  சமூக, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமயம், கலை, இலக்கியம், வரலாறு, சூழலியல், மெய்யியல் என அனைத்தும் தழுவிய நிலையிலேயே நடைபெற்று வருகிறது. இதனுடைய வெளிப்பாடாகவும், அங்கமாகவும் இப்போராட்டம் நம் தேர்தல் களத்திலும் வெளிப்படுகிறது. 

suba udayakumar pachai thamizhagam

பல தேசிய இனங்கள் வாழும் இந்தியாவில் அதன் பாராளுமன்ற அமைப்பு முறை ஓவ்வொரு தேசிய இனங்களுக்கு சம மதிப்பு என்பதற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவமும், குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவமும் வழங்குவதால்,   தமிழர் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. இது சனநாயகத்திற்கு விரோதமான நாடாளுமன்ற அமைப்பு முறையாகவே உள்ளது. இந்த அமைப்புமுறையில் நாம் நீடிக்கும் வரை மக்கள் அவையை தேசிய இனங்களின் அவையாக மாற்றிட வேண்டும் என நாம் கோரி வருகிறோம். 

தமிழக சட்டமன்றம் இறுதி அதிகாரம் கொண்டவர்களால் (தமிழக மக்களால்) தேர்வு செய்யப்பட்டாலும் இறையாண்மை அற்றதாகவும், வெறும் தீர்மான மன்றமாகவும் உள்ளது. தமிழ்த் தேசிய இனத்தின் மன்றமாகவும் இனச்சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் உள்ள மன்றமாகவும் இருக்க வேண்டிய தமிழக சட்டமன்றம் தமிழ்த் தேசிய இனத்தையும் அதன் தலைமைகளையும் அனுமதிக்காத மன்றமாகவும், வந்தவர்களெல்லாம் வாக்காளர்களாகவும், உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படும் இடமாகவே உள்ளது. 

இறையாண்மை, இறுதி அதிகாரம், எஞ்சிய அதிகாரங்கள் தமிழக சட்டமன்றத்திடமோ, தமிழக அரசிடமோ இல்லை. அதேசமயம், மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள், நடைமுறை  மற்றும் மாறிவரும் சூழ்நிலைகள் உருவாக்கும் அதிகாரங்கள் ஆகிய சாதகக் கூறுகளை நாம் இவ்வமைப்பின் எல்லைவரை வளர்ப்பது, விரிவாக்குவதற்கான போராட்டங்களை கட்டமைப்பது போன்ற சாத்தியங்களும் இவ்வமைப்பு முறையில் உள்ளது.

தமிழக சட்டமன்றம் மற்றும் தமிழக அரசு என்பது இந்திய மேலாதிக்கத்திற்கும், தமிழகத்தின் இறையாண்மைக்கும் இடையே போராட்டம் நடக்கும் அமைப்பாகவே உள்ளது. அதில் இந்திய மேலாதிக்க தன்மையே தற்போது வரை மேலோங்கியதாக உள்ளது. தமிழக அரசிடம் இருக்கும் இறையாண்மை உணர்வு, உரிமை உணர்வு என்பது வெளியே நடக்கும் தமிழர்களின் போராட்டத்திலேயே தங்கி இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் பங்கு பெற்று அதைத் தீர்மானிக்கும் இந்திய தேசிய, திராவிடக் கட்சிகள், அவர்களின் தொங்கு சதைகள் தங்களுடைய ஊழல், சுயலாபம், போட்டி என்பவற்றால் மட்டும் அது இந்திய மேலாதிக்கத்திடம் மண்டியிடவில்லை. அது கொள்கைரீதியாகவே இந்திய மேலாதிக்கத்தின் பகுதியாகவே உள்ளது.

தமிழ் இனத்தின் மீதும், தமிழ்த் தேசத்தின் மீதும் பற்றும், பதில் சொல்லும் கடமையும், பொறுப்பும் இனத்தின் தேசத்தின் விடுதலையை, உரிமையை நோக்கமாகக் கொண்ட தமிழ்த் தேசிய இனம் சார்ந்த கட்சி சட்டமன்றத்தை தீர்மானிக்குமானால் மேலாண்மைக்கும், இறையாண்மைக்கும் இடையிலான போராட்டத்தில் மாற்றத்தை உருவாக்க விழையும். மாற்றத்தை மேலாதிக்கம் அனுமதிக்கவில்லை எனில் இந்நிகழ்வு போக்கு மக்களைத் தேசிய விடுதலைக்கு தயாரிக்கும். அதேபோல் தேசிய விடுதலைக்கான, இன உரிமைக்கான அனைத்தும் தழுவிய ஒரே வழியாக சட்டமன்ற பங்கேற்பை பார்க்கத் தேவையில்லை. இதன் பொருள் பலமுனைகளில் நடக்கும் இனப்போராட்டத்தை நாம் தேர்தல் முனையிலும் எதிர்கொண்டு நடத்த வேண்டும் என்பதே. பங்கேற்பு, புறக்கணிப்பு என்பதை தமிழ்த் தேசிய விடுதலை அரசியல் சூழலே தீர்மானிக்கும்.

தற்போதைய நிலையில் தமிழர்களாகிய நாம் ஒரு தேசிய இனம், நமது தாயகம் தமிழகம் என்கின்ற வரையறுப்பை நம் மக்கள் ஏற்று அதில் வெற்றி பெற விழைவது அல்லது அதற்கான போராட்டமுமே தமிழ்த் தேச சோசலிச குடியரசை அமைப்பதை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். இறுதி இலக்கோடு உடனடி அரசியல் இலக்கும் நடைமுறையும்  இணைந்த திசை வழியில் நாம் முன்னேற வேண்டும். (இறுதி இலக்கற்ற உடனடி இலக்கு நம்மை அடிபணிவிற்கும், உடனடி இலக்கற்ற இறுதி இலக்கு நம்மை வறட்டுவாதியாக மாற்றி விடும்.) 

அந்த வகையில் நடைபெறப் போகும் 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு உடனடி இலட்சியங்களை முன்னிறுத்தியும், தமிழ்த் தேசிய இன உரிமைகளை இலக்காகக் கொண்டும் களமிறங்கி உள்ளது. இது தமிழ்த் தேசிய இன விடுதலை, உரிமைக்கான பயணத்தில் முக்கிய முந்நகர்வு. இந்நகர்வு வெகுமக்களிடையே தமிழ்த் தேசிய அரசியல் வேர்கொள்ளவும், தேர்தல் களத்திலே இனப் போராட்டத்தை எதிர்கொள்ளும் ஓர் அணியை உருவாகி இருக்கிறது. நமது இன நோக்கத்தை தேர்தல் களத்தில் நிறைவேற்ற உழைக்கும் நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைவர் செந்தமிழன் திரு. சீமான் அவர்களுக்கும் இத்தேர்தலில் துணை நின்று பணியாற்றுவோம்.

அதேபோல தமிழர் தாயக சூழலியலை சூறையாடுவதற்கு எதிராகவும், தமிழ்த் தேசிய இன உரிமைக்காகவும், பல்வேறு மாற்று திட்டங்களை முன்வைத்து மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி வருவதோடு தற்போதைய தேர்தல் களத்தில் பங்கு பெறும் பச்சைத் தமிழகம் கட்சிக்கும், அதன் தலைவர் முனைவர் சுப. உதயகுமார் அவர்களுக்கும் இத்தேர்தலில் துணை நின்று பணியாற்றுவோம்.

- தமிழர் முன்னணி