பல வழக்குகளில் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று முன்கூட்டியே சொல்லும் அளவுக்கு நம் மக்களிடம் சட்டம் பற்றிய அறிவு(!) இப்போதெல்லாம் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொதுஜனங்களும் ‘ஜெயலலிதாவை  யாரும் ஒன்னும் செய்யமுடியாது சார், அதெல்லாம் அந்த பொம்பளைக்கு மேல்மட்டம் வரைக்கும் செல்வாக்கு இருக்கு. காசகுடுத்துக் கரைட் பண்ணி  வெளிய வந்துருவா’ என்று சர்வ சாதாரணமாக பேசிக் கொண்டார்கள். ஆனால் குன்காவின் தீர்ப்பு வெளிவந்தவுடன் நாம் மகிழ்ச்சி அடைந்தோம். இன்னும் சில நீதிபதிகள் நேர்மையானவர்களாக ஊழல்கறை படியாமல், அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்காமல் இருக்கின்றார்கள் என்று. ஆனால் அந்த நம்பிக்கை சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. மக்கள் நினைத்தது தான் கடைசியில் நடந்தது. நீதித்துறையில் ஒரு குன்கா இருந்தால் ஆயிரம் தத்துக்களும் லட்சம் குமாரசாமிகளும் நாக்கில் எச்சில் ஒழுக பணப்பெட்டிகளுக்குப் பின்னால் ஓடுவது அம்பலமானது.

  agri krishnamurthiஜெயலலிதாவுக்கு நிர்வாகத் திறமை உள்ளதாக பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்றும், ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படும் என்றும், ஏன் இன்னும் சில  அதிதீவிர அ.தி.மு.க பக்தர்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தான் மழையே பெய்யும் என்றெல்லம் கூட சொல்கின்றார்கள். இப்படி சமூக நிலைமைகளை ஆராய்ந்து பார்த்துப் பேசும் திராணியற்ற ஒரு பெரும் மொக்கைக் கூட்டம் அ.தி.மு.க.விற்கு வாக்குவங்கியாக உள்ளது. அது ஜெயலலிதா சிறைக்குப் போனால் மொட்டை போட்டுக் கொள்ளும், மண்சோறு திங்கும், பால்குடம் எடுக்கும், அலகு குத்தும், காவடி தூக்கும், அக்கினிச்சட்டி ஏந்தும் - இன்னும் ஒரு படி மேலே போய் பேருந்துகளைக்கூட கொளுத்தும். இப்படி பணத்திற்கும், மதுவிற்கும், பிரியாணிக்கும் அடிமையான ஒரு பெரும் கூட்டத்தை ஜெயலலிதா தன்னுடைய ஊழல் பணத்தின் மூலம் சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்.

  அதனால் தான் அவர் என்ன தவறு செய்தாலும் அதை மிக எளிதாக மக்கள் எடுத்துக் கொள்கின்றார்கள். ‘ஏன் கருணாநிதி கொள்ளையடிக்கவில்லையா அம்மா மட்டும்தான் கொள்ளையடித்தாரா’ என்று எதிர்க்கேள்வி வேறு கேட்கும் கேவலமான மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். இதை நன்றாக தெரிந்து கொண்ட ஜெயலலிதா மற்றும் மன்னார்குடி மாஃபியா கும்பல் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களைக் கொள்ளையடித்து வாங்கிக் குவித்துள்ளது. ஒவ்வொரு துறை அமைச்சரும் தன் துறை சார்ந்த நிர்வாகத்தின் மூலம் மாதம் இத்தனைக் கோடிகள் கண்டிப்பாக வசூல் செய்து கொடுக்க வேண்டும் என டார்கெட் கொடுக்கப்படுகின்றது. அப்படி சரியான முறையில் வசூல் செய்து கொடுக்கும் அமைச்சர்களுக்கு அதில் குறிப்பிட்ட தொகை திரும்ப அவர்களுக்குகே இனாமாக கொடுக்கப்படுகின்றது. இதில் ஏதாவது குளறுபடி நடந்தால் மட்டும் தான் அமைச்சர்கள் மாற்றப்படுவது எல்லாம் நடக்கின்றது. இதுவரை ஜெயலலிதா அமைச்சரவையில் மாற்றப்பட்ட அனைத்து அமைச்சர்களும் கொள்ளையடித்ததை மேல்மட்டத்துக்குச் சரியான வகையில் கணக்குக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டனர். குற்றத்தின் தன்மையைப் பொருத்து அமைச்சர் பதவியைப் பறிப்பதில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியைப் பறிப்பதுவரை நடக்கும்.

    இப்படி இவர்கள் வரைமுறையில்லாமல் அடித்த கொள்ளைக்கு முதல் ரத்த சாட்சியாக பலியானவர்தான் முத்துக்குமாரசாமி. நேர்மையான வகையில் வேளாண் துறையில் பொறியாளராக பணியாற்றிவந்த இவரை அமைச்சரும் அவரது அடிப்பொடிகளும் பணவெறி தலைக்கேறி தொடந்து மிரட்டியதால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். இது எல்லாம் ஏற்கெனவே பத்திரிக்கையில் வெளிவந்த செய்திகள். இந்தச் சம்பவம் நடந்தவுடன் எதிர்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது ஜெயலலிதா அரசு முந்திக்கொண்டு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி என்பது தமிழக காவல்துறையின் ஒரு பிரிவு என்பதும், அது தமிழக அரசிக்குக் கட்டுப்பட்ட  ஏவல் துறை என்பதும்  ஊர் அறிந்த ஒன்று. எங்கே எதிர்க் கட்சிகள் கேட்பதுபோல சி.பி.ஐ விசாரணை வைத்தால் தானும் மாட்டிக் கொள்வோமே எனப் பயந்த ஜெயலலிதா திட்டமிட்டே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். அக்ரி கிருஷ்ணமூர்த்தியோ எல்லாம் அம்மாவுக்கு தெரிந்துதான் நடந்தது என உண்மையை போட்டுடைக்க கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

  தற்போது இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எஸ் ரவி அடிப்படை ஆதாரம் இல்லாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் அரசு தரப்புக்குச் சாதகமாக இல்லை. பொறியாளரை  நேரடியாக தற்கொலைக்குத் தூண்டியதாக எந்த ஆதாரமும் இல்லை. கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்படுள்ள காரணங்கள் ஏற்புடையதாக உள்ளன. மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் மற்றும் வழக்கில் சூழல்களைப் பார்க்கும் போது மனுதாரருக்கு நிவாரணம் அளிக்கலாம். எனவே மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகின்றது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

  நேரடியாக அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு  இந்த வழக்கில் தொடர்பில்லை என நீதிபதி எப்படி கூறினார் என்று தெரியவில்லை. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தன்னை முத்துக்குமாரசாமியிடம் இருந்து அவரால் நேர்மையாக நியமிக்கப்பட்ட 7 ஓட்டுனர்களிடம் தலா 1.75 இலட்சத்தை வசூல் செய்து கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினார். அதனால்தான் குமாரசாமியிடம் தான் பணம் வாங்கித் தரும்படி தொலைபேசியில் மிரட்டினேன் என இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செந்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதை ஒரு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளாமல் இந்தக் கொலைகாரனை நீதிபதி விடுதலை செய்தது அவர் விலை போய்விட்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. போதாத குறைக்கு இந்தக் கொலைகாரனுக்கு நிவாரணம் வேறு வழங்கலாம் என்று கூறுகின்றார். (இவர் தத்துவிடம் பயிற்சி எடுத்து இருப்பார் என நினைக்கின்றேன். அதனால் தான் விடுதலை கேட்டால் உடன் போனசாக நிவாரணம் கொடுக்க வேறு பரிந்துரைக்கின்றார்)

  சென்ற ஆண்டு நவம்பர் மாதம்  சென்னை எழும்பூரில் நடைபெற்ற புதிய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய நீதிபதி வி.எஸ்.ரவி “அரசு வக்கீல்களாகிய நீங்கள் நடுநிலையோடு பணியாற்ற வேண்டும். ஒரு வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்று தெளிவாக்கப்பட்டால், அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுத்து விட வேண்டும். சில வழக்குகளில் பலவீனமான புலன் விசாரணையில் தோல்வியடையலாம். அதைக் கண்டு கவலைப்பட தேவையில்லை” என்று பேசினார்.

  அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத் தண்டனை வழங்குவதற்கான அனைத்து முகாந்திரங்களும், சாட்சிகளும் உள்ள இந்த வழக்கில் வி.எஸ்.ரவி எப்படி இவரை விடுவித்தார்? நீதிபதிகள் பொது மேடைகளில் பேசும் போது யோக்கிய சிகாமணிகளாக பேசுவதும் நீதிமன்றத்தில் தன்முன் வழக்கு விசாரணைக்கு வரும் போது வழக்கமான பாணியில் தன்னுடைய ‘கைவரிசையைக்’ காட்டுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

 இனி ஜெயலலிதா பிரச்சார மேடை எங்கும் தனது ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை என நீட்டி முழங்குவார். தனது  அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த போது தான் உறுதியான நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தன்னை நிரபராதிகள் என நிரூபித்துக் கொண்டார்கள் என்றும் வாய் கூசாமல் புளுகுவார். அதற்கான வாய்ப்பை நீதிபதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.

  கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைப்பதற்கு முன்னாலேயே முந்திக் கொண்டுவந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம் கவுண்டர் சாதிவெறியன் யுவராஜும், அவனுக்கு சொம்பு தூக்கிய நாமக்கல் எஸ்.பி செந்தில்குமாரும் பாதுகாக்கப்பட்டனர். இன்று வரையில் இந்த வழக்கில் நேர்மையான விசாரணை என்பது நடைபெறவில்லை. இதில் சி.பிஐ விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிவரலாம். கோகுல்ராஜ் கொலைவழக்கு மட்டும் இல்லாமல் திருச்செங்கோட்டில் இருந்து பல்வேறு வழிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சென்று கொண்டிருந்த லஞ்சப்பணம் விஷ்ணுபிரியாவால் தடுக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்கின்றார்கள். இதை அவரது தோழியான கீழ்க்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி ஊடகங்களின் முன்னாலேயே போட்டுடைத்தார்.

  இதுமட்டும் அல்லாமல் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையில் கள மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முத்துக்கிருஷ்ணன் தமது உயரதிகாரிகளின் கொடுமை தாங்க முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவையில் நியாய விலைக் கடை ஊழியர் சத்திவேல் அ.தி.மு.க நிர்வாகிகளின் கொடுமை தாங்க முடியாமல் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இப்படி பல நேர்மையான அரசு ஊழியர்கள் அ.தி.மு.க ரவுடிகளின் கொடுமைகள் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு இறந்துள்ளனர்.

 டாஸ்மாக்கை வீதிக்கு வீதி திறந்து வைத்து லட்சக்கணக்கான தமிழ்ப் பெண்களின் தாலியறுத்து ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்து சொத்து சேர்த்தது போதாது என, அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களிலும் மிகப்பெரும் அளவில் ஊழல் செய்துள்ளார்கள். அதற்காக யாரை வேண்டும் என்றாலும் கொலை செய்யத் தயாராக உள்ளனர். இதை சிறப்பாக நடத்தி கொடுப்பதுதான் மானங்கெட்ட மங்குனி அமைச்சர்களின் வேலை. இன்னும் ஒரு ஐந்தாண்டுகள் ஜெயலலிதா முதலைச்சராக இருந்தார் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விதவைகள் நிறைந்த மாநிலமாக மாற்றுவது மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொள்ளையடித்து, தனது பெயரிலும் தனது உடன் பிறவா சகோதரிகள் சசிகலா, இளவரசி போன்றவர்களின் பெயரிலும் மாற்றிக் கொள்வார். இந்த லட்சணத்தில் இந்த ஊழல் பேர்வழிக்கு பாரத ரத்னா விருது வேறு வழங்க வேண்டும் என ஒரு அடிமை ராஜ்ஜிய சபாவில் பேசியிருக்கின்றது. ஜெயலலிதா பெண்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கின்றாராம். பின்னே டார்கெட் வைத்து  எத்தனை  லட்சம் பெண்களை விதவைகள் ஆக்கி அழகு பார்த்திருக்கின்றார் இந்த அம்மா!. என்ன ஒரு தாயுள்ளம்!.

  எனவே நீதிமன்றங்கள் மூலமாக இந்தப் பாசிஸ்ட்டுகளைத் தண்டிக்க முடியும் என நாம் இனி நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்த உண்மையை உணர்ந்து மக்கள் தான் தங்களுடைய சக்தியின் மூலம் இந்த மக்களுக்கு எதிரான பாசிச வக்கிரம் பிடித்த, பணவெறி பிடித்த கொலைகாரக் கூட்டத்தை தூக்கி எறிய வேண்டும். அப்படி தூக்கி எறியும் நாள் தான் தமிழக மக்களுக்கு உண்மையான நன்னாள்.

- செ.கார்கி