சமீபத்தில் தமிழக அரசு மன்னன் திருமலை நாயக்கனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் என்று அறிவித்தது. நாட்டிற்காக பெருந்தொண்டாற்றி பல்வேறு தியாகங்கள் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் வரிசையில் வைத்து மன்னன் திருமலை நாயக்கனை ஜெயலலிதா அரசு போற்றி, புகழ்ந்திருக்கின்றது. அவன் கட்டிய அரண்மனையும், அவனது போர் வீரமும், அவனது அற நெறியும் ஜெயலலிதாவை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றது. அதனால் தான் 'அவன் பிறந்த தைப்பூச தினத்தை இனி ஆண்டுதோறும் தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடும்' என மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கின்றார்.

ஆனால் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஓர் உள்குத்து இருப்பதை நம்மில் பல பேர் அறிந்திருக்க மாட்டோம். ஏற்கெனவே தைப்பூசத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் தலைமகன், வருங்கால முதலமைச்சர்,  செந்தமிழன் சீமான் அவர்கள் வற்புறுத்தி இருந்ததை நாம் அறிவோம்.

அதனுடன் சேந்துதான் நாம் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பைப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தீவிர அடிமையாக இருந்த சீமான் முதலமைச்சர் வெறி தலைக்கேறி, மேடைதோறும் ஜெயலலிதாவை கழுவிக் கழுவி ஊற்றுவதால் சீமானின் பரம எதிரி திருமலை நாயக்கனின் பிறந்தநாளை அரசு விழாவாக ஜெயலலிதா அறிவித்திருக்கின்றார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் கணிசமாக உள்ள தெலுங்கு பேசும் நாயக்கர்- நாயுடு  மக்களின் ஓட்டுக்களையும் பெற தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு தரம்தாழ்ந்த முடிவிற்கு ஜெயலலிதா சென்றிருக்கின்றார். மற்றபடி மன்னன் திருமலை நாயக்கன் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் ஆட்சியாளன் எல்லாம் கிடையாது. திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு என்ற திருமலை நாயக்கன் தன்னுடைய ஆட்சியில் மன்னர்களுக்கே உரித்தான அத்தனை குணாதிசயங்களையும் உடையவானாகவே இருந்துள்ளான்.

மனுதர்மத்தை காத்துப் பார்ப்பனனுக்கும், பார்ப்பனியத்துக்கும் காவடி துக்குபவனாகவும், அப்பட்டமான போர்வெறியனாகவும், பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பயன்படுத்தும் வக்கிரம் பிடித்தவனாகவும் இருந்துள்ளான்.

அவனது ஆட்சியில் ஐந்து பேரும் போர்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்தப் போர்களுக்காக மக்களிடம் ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டு அவர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளனர். மக்கள் மேல் அக்கறையற்ற இந்த திருமலை நாயக்கன் தன்னுடைய ஆட்சிக் காலம் முழுவதும் கோவில்கள் கட்டுவது, பழைய கோவில்களை புணரமைப்பது என்று மக்களின் வரிப்பணத்தை மூட நம்பிக்கையால் வாரி இறைத்துள்ளான்.

தன்னுடைய பார்ப்பன அடிவருடித்தனத்தை மெய்ப்பிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பண்டாரங்கள் கட்டுப்பாட்டில் இருந்து பறித்து பார்ப்பனர்கள் வசம் ஒப்படைத்தான். முக்குறுணி பிள்ளையார் கோவில், தெப்பக்குளம், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், திருவனைக்காவல் கோவில் என பல கோவில்களைப் புனரமைத்து  அதற்கு பெரும் பொருளும் கொடுத்து தன்னுடைய பார்ப்பன விசுவாசத்தை காட்டி இருக்கின்றான். பெண் பித்தனாக இருந்த இவனுக்கு 200 மனைவிகள் இருந்ததாக சொல்கின்றார்கள்.

மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதில் மற்ற மன்னர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருந்துள்ளான். எப்போதும் தங்க நகைகளோடும் பட்டோடும்தான் காட்சியளிப்பான். இவனுக்கு பட்டு அங்கவஸ்திரம் செய்து கொடுப்பதற்காகவே வடக்கில் இருந்து செளராஸ்டிரா இன மக்கள் தமிழ்நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, தான் கூத்தடிப்பதற்காகவே கட்டிவைத்த மஹாலைச் சுற்றி அவர்களை குடி வைத்திருக்கின்றான். 

இவன் ஆட்சியின் போதுதான் டச்சுக்காரர்கள் தமிழ்நாட்டின் திருச்செந்தூரையும் தூத்துக்குடியையும் கைப்பற்றினார்கள். அப்படி அவர்கள் கைப்பற்றுவதற்குப் பெரிய அளவில் உதவிசெய்த தேசத் துரோகிதான் திருமலை நாயக்கன். எந்த வகையில் பார்த்தாலும் மன்னன் திருமலை நாயக்கன் பொறுக்கி, புறம்போக்கு, புண்ணாக்காகவே  இருந்துள்ளான். இவனுக்குப் போய் விழா எடுப்பவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை மானமுள்ள மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் அதேசமயம் தைப்பூச தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் நாம் தமிழர் கட்சியின் முருக அடிமைகளையும் நாம் அம்பலப்படுத்த வேண்டி உள்ளது. எப்படி மன்னன் திருமலை நாயக்கன் ஒரு பார்ப்பன அடிமையாக இருந்தானோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல சீமானின் பார்ப்பன அடிமைத்தனம். தைப்பூச நாளில் முருகன் பிறந்ததால் அவனது பிறந்த தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அப்படி இந்த அரசு விடுமுறை அறிவிக்காமல் இருப்பதே தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்கின்றார் சீமான்ஜீ. ஒரு தமிழ் தாலிபானாக வருவதற்குரிய எல்லா தகுதிகளையும் தினம் தினம் தனக்குள் வளர்த்துக்கொண்டே இருக்கின்றார்.

சீமான் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய முருகன், முருகனே அல்ல என்றும், அவன் வட நாட்டு ஸ்காந்தன் என்பதையும் நாம் ஆதாரத்துடன் ஏற்கெனவே அம்பலப்படுத்தி இருக்கின்றோம். இருப்பினும் தனது பார்ப்பன அடிவருடித்தனத்தை மாற்றிக் கொள்ள துப்பில்லாத சீமான் தைப்பூசத்தைத் தமிழர்களின் திருவிழா என்று வாய்கூசாமல் புளுகுகின்றார்.

சீமானுக்குச் சவால் விடுகின்றோம், அவர் ஒரு மானமுள்ள தமிழராக இருந்தால், தைப்பூசத்தில் தான் முருகன் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? எந்த ஒரு முற்பட்ட சங்க இலக்கியத்தில் இருந்தும் அப்படி ஒரு ஆதாரத்தை அவரால் எடுக்கமுடியாது.

புராணங்களில் வரும் தைப்பூசக் கதையை படித்தீர்கள் என்றால் இந்தக் காலத்துச்  சரோஜாதேவி கதைகள் எல்லாம் மண்ணைக் கவ்வி விடும். அவ்வளவு ஒரு ஆபாசமான கதை தைப்பூசத்தில் முருகன் பிறந்த கதை. சீமான் ஒரு தமிழின துரோகி என்பதற்கு அவரது தைப்பூசப் பற்றும் ஒரு நல்ல உதாரணம். ‘தை’ என்ற சொல்லும் தமிழ் இல்லை; ‘பூசம்’ என்ற சொல்லும் தமிழ் இல்லை. பிறகு எப்படி அது தமிழர்களின் திருவிழாவாக இருக்கும்?செம காமெடி போங்க.

தைப்பூச தினத்தின்று முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், காவடியாட்டம், மயிலாட்டம் போன்றவை அவர்களது கட்சி சார்பாக நடைபெறும் என அறிவித்து இருக்கின்றார்கள். பக்தியின் உச்சத்தில் சீமானும் அவரது தம்பிகளும் கையில் வேலை எடுத்துக்கொண்டு கோவணத்துடன் குத்தாட்டம் போடப் போவதை தமிழக முருகபக்த கோடிகள்  அன்று கண்டுகளிக்கலாம்.

ஒருபக்கம் தைப்பூசத்தில் முருகன் மன்னிக்கவும், ஸ்காந்தன் பிறந்தான்; எனவே தமிழ்க்கடவுளான அவனை மதித்து அதற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பச்சை வேட்டி பயங்கரவாதிகள் போராடுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் வக்கிரம் பிடித்த பாசிஸ்டான மன்னன் திருமலை நாயக்கன் பிறந்த தைப்பூச நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஒரு பாசிச அரசு முடிவெடுக்கின்றது. மக்களோ இந்த துரோகிகளுக்குப் பாடம் புகட்ட  ஒரு நல்ல நாள் வராதா என ஏங்கிக் கிடக்கின்றார்கள்.

 - செ.கார்கி