ஏறு தழுவும் "வீர" விளையாட்டு, அதாவது ஜல்லிக் கட்டு உச்ச நீதிமன்ற ஆணைப்படி சென்ற இரு ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்த ஆண்டு இந்த "வீர" விளையாட்டின் ஆதரவாளர்கள் வரும் சட்ட மன்றத் தேர்தலை மனதில் கொண்டு, இதை அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் பெரும்பான்மை மக்கள் இந்த "வீர" விளையாட்டை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள முயலாமல், பெரும் இரைச்சல் எழுப்பும் ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக ஆக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியனரும் ஒரே குரலில் உரக்கக் கூவுகிறார்கள்.

கூடவே வழக்கம் போல ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளின் மெத்தனப் போக்கால் தான் இவ்விளையாட்டை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டவும் தவறவில்லை.

சமூக முன்னேற்றத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத, முதலாளிகளின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டுள்ள முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் தான் இப்படி நடந்து கொள்கிறது என்று இல்லை.

மதி மயக்கத்தில் இருக்கும் மக்களை முன்னேற்ற சிந்தனையில் ஈடுபடுத்தி, புரட்சிக்கு அணியப்படுத்தும் பொறுப்பு உள்ள பொதுவுடைமைக் கட்சியும் இவர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது வருத்தத்திற்கு உரியது. மதுரையில் 27.12.2015 அன்று இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் இந்த "வீர" விளையாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கோரி ஒரு கண்டனப் பேரணியை நடத்தி இருக்கின்றனர்.

அரியலூரில் 4.1.2016 அன்று சிலர் சில காளைகளுடன் சென்று அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனைப் பார்த்து இந்த "வீர" விளையாட்டை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்பொழுது எதிர்பாராத வகையில் ஒரு காளையின் கூர்மையாகச் சீவப்பட்ட கொம்பின் மீது கை பட்டு அமைச்சர் காயம் அடைந்தார்; காயம் பெரிதாக இல்லை என்றும், அதைப் பெரிது படுத்த வேண்டாம் என்றும் கூறி விட்டு, பா.ஜ.க. அரசு தேவைாயன நடவடிக்கையை எடுக்கும் என்று உறுதி மொழி கூறிவிட்டுச் சென்றார்.

தமிழர்களின் "வீர" விளையாட்டை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் கூச்சல்களுக்கு நடுவில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் (Animal Welfare Board of India) வேண்டுகோள் பலரால் கேட்க முடியாமல் போகிறது. தடை செய்யப்பட்டு உள்ள இந்த "வீர" விளையாட்டை உயிர்ப்பித்து விட வேண்டாம் என்று இவ்வாரியம் 31.12.2015 அன்று மைய அரசைக் கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்த "வீர" விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் கொடூரமாகத் துன்புறுத்தப்படுவதைத் தகுந்த ஆதாரங்களுடன் மெய்ப்பித்த பின்பு தான், உச்ச நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது என்பதையும், மனித உயிர்கள்  இவ்விளையாட்டில் காவு வாங்கப்படுவதையும் இவ்வாரியம் சுட்டிக் காட்டி உள்ளது.

ஏறு தழுவுதல் ஒரு வீர விளையாட்டு என்ற சிந்தனை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய களுடையதாகத் தான் இருக்க முடியும். அல்லது 'உழைக்கும் மக்களின் சிந்தனை பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகத் தான் இருக்க வேண்டும்; அவர்கள் காலத்திற்கு ஏற்றபடி சிந்திக்கத் தொடங்கினால் சுரண்டும் வர்க்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும்' என்று அஞ்சும் சுரண்டல்வாதிகளுடையதாகத் தான் இருக்க முடியும்.

இந்த "வீர" விளையாட்டினால் உழைக்கும் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் இல்லை.

உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுக்கவா முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அரசும் உள்ளன? வறுமை, கல்வி அறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் புவி வெப்ப உயர்வு மற்றும் சூழ்நிலைக் கேடு போன்ற மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒன்றுபட முடியாத இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் கூடி "வீரத்துடனும் விவேகத்துடனும்" செயல்பட்டு இந்த "வீர" விளையாட்டை நடத்த அறிவிக்கையை 9.1.2016 அன்று வெளியிட்டு விட்டனர்.

அதுவும் இது சட்ட முறைமைக்கு எதிரானது என்று அரசுத் தலைமை வழக்கறிஞர் கூறிய அறிவுரையையும் உதறித் தள்ளி விட்டுத் தங்கள் "வீரத்தையும் விவேகத்தையும்" காட்டி உள்ளனர்.

ஆனால் இது போல் வீரத்தையும் விவேகத்தையும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை முன்னேற விடாமல் தடுக்கும் பிரச்சினைகளில் காட்ட அரசியல் கட்சிகள் ஏன் முன் வருவது இல்லை?

அனைத்து வகுப்பு மக்களிலும் அறிவத் திறன் படைத்தவர்கள் இருந்தாலும், உயர் சாதிக் கும்பலினரே உயர் நிலை வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே? ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அதீத உள்ளாற்றல் இருந்தாலும் அது அடைக்கப்பட்டும், அடக்கப்பட்டும் உள்ளதே? இக்கொடுமையை எதிர்க்கவும், வெல்லவும் ஏறு தழுவுதலில் காட்டப்படும் "வீரம்" பயன்படுமா?

ஏறு தழுவுதலுக்கு உச்ச நீதிமன்றம் விதித்து உள்ள தடையை நீக்க மைய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி வெற்றி பெறும் அளவிற்கு உங்கள் அறிவு செயல்படுகிறதே? அதே அறிவு ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளாற்றல் வெளிப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்துடன், இடஒதுக்கீட்டுக்கு 50% உச்ச வரம்பு விதித்த தீர்ப்புக்கு எதிராகச் சட்டம் இயற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஏன் செயல்படவில்லை?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.1.2016 இதழில் வெளி வந்துள்ளது)