மத்திய அரசின் 47 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், 52 லட்சம் ஓய்வூதியர்களுக்கும் ஊதியங்களை மாற்றி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட 7வது சம்பளக் கமிஷன் தன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதனை அரசு படித்து வருகிறது. ஏறக்குறைய 2016 - ஜனவரி முதல் அது நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்பள உயர்வு தேவையா இல்லையா? இதனால் நம் நாட்டுக்கோ அல்லது அரசு ஊழியர்களின் வீட்டுக்கோ ஏதாவது நன்மை உண்டா? அல்லது தீமை உண்டா? இதனால் லாபம் அடையப் போவது யார்? இந்த சம்பள உயர்வுக்குப் பின்னால் இருப்பது யார்? என்பதைப் பற்றி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

  consumerism 360நம்முடைய நாட்டில் சில வயதானவர்களின் - சுமார் 50 – 60 வருடங்களுக்கு முந்தைய - அனுபவம் நாம் இன்று கேள்விப் படும் போது அதிசயித்துப் போகும் படியாக இருக்கிறது. ஆம்…அவர்கள் அரசு வேலைக்கு அழைக்கப்பட்டும் போகாதவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அதைவிட வருமானம் விவசாயத்தில் வந்து கொண்டிருந்தது. எனக்குத் தெரிந்த ஒருவரின் தொழில் வெற்றிலைக் கொடி விவசாயம். இன்னொருவர் இரப்பர் விவசாயம். எனவே 60 வருடங்களுக்கு முன் விவசாயமும், அரசு வேலையும் வருமானம் என்று வரும் போது ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் விவசாயம், ஒருவர் அரசு வேலை, ஒருவர் வியாபாரம் என்று பல தொழில்கள் செய்து கொண்டிருந்தாலும் அவர்களுடைய வருமானம் ஓரளவு ஒன்றாக இருந்ததால் இவர்கள் அனைவரும் வேலையுள்ளவர்களாகவே உணர்ந்தார்கள்.

  ஆனால் படிப்படியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட்டப்பட்டது. அதுவும் மிகக் குறைந்த அளவே சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் 1991 – ம் வருடத்தில் நம்முடைய சந்தை, உலகத்துக்கு திறந்து விடப்பட்டு, யாரும் இங்கு வந்து வர்த்தகம் செய்யலாம் என்ற நிலை உருவானது. அப்போது பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கு வரத் துவங்கினார்கள். அவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்வதன் சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்தார்கள். அவர்கள் கண்டுபிடித்தவை 2 விசயங்கள் (1) இந்தியாவில் ஏராளமான செல்வங்கள் உள்ளன. அதாவது இயற்கை வளங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளன. (2) இத்தனை இருந்தும் இவர்களுடைய விற்பனைப் பொருள்களான கார், பைக், ஏசி, தொலைக்காட்சி, கம்பியூட்டர்பொருள்கள், மெஷின்கள், பிரிட்ஜ், உணவுகள், நொறுக்குத் தீனிகள், கோலா வகைய றாக்கள் இவற்றை வாங்கும் வசதி படைத்தவர்கள் இல்லை என்பது தான்.

அவர்கள் நம் பொதுத்துறை நிறுவனங்களையும், நம் இயற்கை வளங்களையும் தந்திரமாக கொள்ளையடிக்க நினைத்தார்கள். அதுவும் நம்மை அறியாமலேயே அதை நிறைவேற்றவும் திட்டம் வகுத்தார்கள். இப்படி அவர்கள் வகுத்த திட்டம் தான் 1991ம் ஆண்டுக்குப் பின் வந்த சம்பளக்கமிஷன்கள் என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். வியாபாரம் என்றால் விற்பவர்களும் வேண்டும்; வாங்குபவர்களும் வேண்டும். விற்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் வாங்கும் சக்தி உள்ளவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். அரசுஊழியர்களும் குறைந்த சம்பளத்தில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களை இவர்களின் பொருள்களுக்கான நுகர்வோர் ஆக்குவது என்பது எளிதான விசயம் அல்ல. நம்முடைய பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பது என்பது எளிதில் இயலாத விசயம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதற்கு இவர்கள் கண்ட மிக எளிதான வழி என்பது அரசு ஊழியர்களை இவர்களின் நுகர்வோர்களாக ஆக்குவதுதான். எனவே இவர்கள் வகுத்த திட்டம்தான் இந்த சம்பள உயர்வுகள்.

இதை மற்றவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இவற்றுக்கு சில மனிதாபிமான முகமூடிகள் கொடுக்கப்பட்டன. இவர்களின் உண்மையானநோக்கம் மறைக்கப்பட்டு, “அரசு ஊழியர்கள் என்பவர்கள் அரசை இயக்குபவர்கள், அவர்கள் நியாயமான சம்பளம் பெறவேண்டும்” என்ற பொய் முகம் நம் ஆட்சியாளர்கள் முன்வைக்கப்பட்டது. இதைத்தான் “ஆடு நனைந்தது என்று ஓநாய் அழுதது” என்பார்கள். இவர்களுடைய சூழ்ச்சியையும் இதனால் நேரப்போகும் ஆபத்தையும் அறியும் சக்தியற்ற நம் ஆட்சியாளர்கள் “எங்கள் வருமானம் இவ்வளவு; அரசு ஊழியர்கள் இத்தனைபேர். நீங்கள் கூறும் சம்பளம் கொடுத்தால் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாதே?” என்றார்கள். அதற்கு அவர்கள் தந்த யோசனை “ஆட்களைக் குறை” என்பது.  “அப்படியானாலும் வருங்காலத்தில் இது ஒரு பெரும் சுமையாக வருமே?” என்று சந்தேகம் எழுப்பினார்கள். “ஓய்வூதியத்தை நிறுத்து” என்றார்கள்.

அவர்களின் சூழ்ச்சிப்படி அரசு ஊழியருக்கு குறைந்த வருமானம் கிடைத்தால் அவன் எளிய உணவு, உடை, உறைவிடத்தில் தேவைகளை நிறுத்திக் கொள்வான். நிறைய கிடைக்கும் போதுதான் இவன் ஊதாரியாகி இவர்களின் பொருள்களை வாங்குவான். எனவே இவர்களின் பொருள்களை வாங்கும் சக்தியுடைய நுகர்வோரை உருவாக்க வேண்டும் என்பதற்காக முழு ஊழியர்களுக்கும் கொடுப்பதற்குப் பதில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தும், ஊழியர்கள் இறக்கும் வரை அவர்களுக்கு சம்பளம், ஓய்வூதியமாக செலவு செய்வதற்குப் பதில் அவன் வேலை செய்யும் நாள் வரைமட்டும் என்றால் சம்பளங்கள் அதிகப்படுத்த முடியும் என்ற உபதேசம் கொடுக்கப்பட்டது. மேலும் இவர்கள் மத்திய அரசுக்குக் கொடுத்த ஓர்ஆலோசனை “மத்திய அரசு சம்பளம் உயர்த்தும் போது மாநில அரசுகளும் உயர்த்த வேண்டியது வரும்; அப்போது அந்த ஊழியர்கள் வருமானவரி கொடுக்க வேண்டியது வரும்; அது உங்களுக்குத்தான் கிடைக்கும், அப்போது உங்களுக்கு பெருஞ்சுமை வராது” என்பது.

ஆனால் அவர்களின் மறைமுகத் திட்டமோ, இது வழி மாநில அரசு ஊழியர்களையும் இவர்களின் நுகர்வோர் ஆக்குவதும், மாநில அரசுகளின் செல்வத்தையும் கொள்ளை அடிப்பதும்தான். இப்படியே கொடுத்துக் கொண்டு போனால் ஒரு கட்டத்தில் இவர்களால் தாங்க  முடியாமல் பொதுத்துறை நிறுவனங்களையும் இயற்கை வளங்களையும் விற்றுத்தான் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்பதும், அதுவழி இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் என்ற, நம் மூதாதையர்களின் வியர்வையால் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்கள், இயற்கை வளங்கள் விற்கப்பட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு, அவர்கள் வாங்கும் பொருள்வாயிலாக இவர்களுக்கு வந்து சேரும். இப்படி மறைமுகமாக நம்மை கொள்ளையடிக்கத் தீட்டிய திட்டம்தான் இது. இவர்கள் திட்டம் 100 சதவீதம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இவைஅனைத்திற்கும் அரசியல்வாதிகளின் ஆதரவு தேவை. எனவே அவர்களுக்கான பென்சன் ரத்து செய்ய ஆலோசனை கொடுக்கப்படவில்லை. இப்படியாக ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக படிப்படியாக சம்பளம் அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவுகள் என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி.

  நம்முடைய நாட்டில் சுமார் 70% மக்கள் விவசாயமும், அதைச் சேர்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். ஒரு குடும்பத்தில் ஒரு அரசு ஊழியனுக்கும், விவசாயிக்கும், ஒரு வியாபாரிக்கும் ஒரேபோல் வருமானம் வரும்போது எல்லோரும் வேலையுள்ளவர்களாகவே உணர்கிறார்கள். ஆனால் அவர்களின் வருமானத்தில் மிகப் பெரிய இடைவெளி இந்த 1991 –முதலுள்ள காலகட்டத்தில் வந்துள்ளது என்பதையே கணக்குகள் காட்டுகின்றன. உதாரணமாக 1998 –ல் அரசின் கணக்குப்படி 1 வெக்டர் (2.5 ஏக்கர்) நெல் விவசாயம் செய்யும் தமிழ்நாட்டுவிவசாயியின் உற்பத்தி பொருள்களின் விலை என்பது 28,910 ரூபாய். செலவு ரூபாய் 24270. ஆகவே அவனின் வருமானம் என்பது 28910 – 24270 = 4640 ரூபாய். அதே விவசாயியின் 2013-ல் உற்பத்திப் பொருள் விலை 78,000 ரூபாய். செலவு ரூபாய் 74039. அப்படியானால் அவனின் வருமானம் 78000 – 74039 ழ= ரூ3961. அதாவது 1998 ல் உள்ள வருமானத்தை விட 679 ரூபாய் குறைந்திருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் 1998-ல் ஒரு அரசு ஊழியனின் சம்பளம் 4640 ரூபாயாக இருந்தால் 2014 –ல் அவன் அடிப்படை சம்பளம் மட்டுமே சுமார் 5.5 மடங்கு அதிகரித்து ரூபாய் 25000த்தை தாண்டி நிற்கிறது. ஒரு அரசு ஊழியனுக்கு ஒரு வருடத்தில் மூன்று முறைசம்பளம் உயருகிறது. ( அகவிலைப் படிகள் இரண்டு முறையும் வருட சம்பள உயர்வு ஒரு முறையும் ) இதனுடன் குறிப்பிட்ட காலஅளவிலான பதவி உயர்வு இவற்றையும் கணக்கெடுத்தால் அவன் சம்பளம் இக்காலகட்டத்தில் சுமார் 8.5 மடங்கு அதிகரித்து ரூபாய் 39000 ரூபாயைத் தாண்டி நிற்கிறது. இதை அட்டவணையாக சொல்வதென்றால்,

வருடம்

விவசாயி

அரசு ஊழியன்

(அடிப்படை சம்பளம்)

அரசு ஊழியன்

(மொத்த வருமானம் )

1998

4640

4640

4640

2014

3961

25000

39000

 1991-ம் வருடத்துக் கணக்கு எடுத்தால் இந்த இடைவெளி இன்னும் அதிகமாயிருக்கும். ஆனால் அந்த கணக்குகள் கிடைக்கவில்லை. அதனால் 1998-ம் வருடக் கணக்கு எடுக்கப்பட்டது.

  ஒரு தாய்க்கு 5 பிள்ளைகள் இருந்தால் எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. அதுபோல் அரசுக்கும் தம் பிரஜைகள் எல்லோரையும் ஒன்றுபோல் பார்க்க வேண்டிய கடமை உள்ளது. அதில் அரசு தவறிவிட்டது. ஒரு வீட்டில் பல உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழில் செய்து கொண்டிருப்பார்கள். 1991-க்கு முன் இவர்களுடைய வருமானத்தில் ஒரு சமநிலை இருந்தது. இதனால் எல்லோரும் வேலை உள்ளவர்களாகவே உணர்ந்தார்கள். ஆனால் அதற்குப் பின் இந்த இடைவெளி அதிகமானபோது அரசு ஊழியனைத் தவிர மற்றவர்கள் வேலை இல்லாதவர்களாக உணரத் தொடங்கினார்கள். இதனால் விவசாயம் சார்ந்த மக்கள் (70%) வேலையற்றவர்களாக உணர்ந்தார்கள். அரசு வேலை சகோதரனைப் போல் வாழ தலைப்பட்டதால் கடனில் மூழ்கி தற்கொலைகளுக்கு தள்ளப்பட்டார்கள். நாட்டில் ஊதாரித்தனம் விதைக்கப்பட்டது. அதற்கு விவசாயத்தால் ஈடுகொடுக்க முடியாததால் மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டார்கள். மக்கள் விட்டதால் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் 2 முறைஅகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இது பத்திரிக்கைகளில் பெரிதாக பிரசுரிக்கப்படுகிறது. அன்று முதல் விவசாயத் தொழிலாளியின் கூலியும் தொழிலாளிகளால் கூட்டப்படுகிறது. விவசாயியின் வருமானம் வருடத்தில் இரண்டு முறை இடிக்கிறது. ஒரு நாட்டைப் பொருத்தவரை அரசு ஊழியனைவிட நாட்டுக்கு முக்கியமாவர்கள் விவசாயிகளே. ஏனென்றால் இவர்கள் தான் மிகமிக முக்கியமான உணவை உற்பத்தி செய்பவர்கள். நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இல்லையானால், உணவுப் பொருளுக்காக நாம் வெளிநாட்டை அணுகும் போது சர்வதேச உறவுகளில் அவர்கள் கூறும் நிபந்தனைகளை நாம் சம்மதிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுவோம். நாம் சுதந்திரமாக எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். உதாரணமாக சில வருடங்களுக்கு முன் நான்கு மாநிலத் தேர்தல்களில் பாஜக அரசு தோற்றது. அதற்கு முக்கிய காரணம் வெங்காய உற்பத்தி குறைந்ததால் உருவான விலை உயர்வாக இருந்தது. இதே ஒரு நிலைமை இனி வருவதாக இருந்தால் தேர்தலில் வெற்றி பெற வெங்காய இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் அப்போது அந்த நாடு கூறும் நிபந்தனைகளை ஏற்று எப்படியாவது வெற்றி பெற முயலமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?. எனவே நம் நாட்டை சுதந்திர நாடாக காப்பாற்றுவது விவாயிகளே. ஆனால் இப்படிப்பட்ட விவசாயம் அழிகிறது.

  மேலும் இந்த சம்பள உயர்வுகளால் சுமை தாங்க முடியாமல் 1994 முதல் 2014 வரை 20 வருடங்களில் 2.86 லட்சம் வேலைகள் வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இன்றைய அரசு ஊழியர்களே, தங்களின் பிள்ளைகளின் வாய்ப்புகளைக் குறைத்து வருகிறார்கள். மேலும் அப்படியே அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் பென்சன் இல்லை. இது தங்கள்பிள்ளைகளுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியல்லவா? தான் கஷ்டபட்டாலும் கஷ்டப்படுவேன்; என் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

  இந்த சம்பள உயர்வால் அரசுகள் செய்யவேண்டிய அடிப்படை கட்டமைப்புப் பணிகள் (சாலைகள், இரயில் சேவைகள் மற்றும் போக்குவரவு வசதிகள், நீர் நிலைகள் சீரமைப்பு முதலியவை) செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

  இந்த சம்பள பாரம் தாங்கமுடியாமல் பொதுத்துறை நிறுவனங்கள், நம் நாட்டின் இயற்கை வளங்கள் விற்கப்பட்டு இவர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இவர்கள் அப்படியே கொண்டு போய் பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருள்களான கார், இருசக்கர வாகனங்கள், ஏசி, மின்னணுப் பொருள்கள், டிவி, கைபேசி போன்றவற்றை வாங்கிக் கொள்கிறார்கள்.இப்படி நம் நாட்டின் இயற்கை வளங்களும், நம் மூதாதையர்களின் வியர்வையால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களும் யாரும் அறியாமலேயே, யாரும் உணராமலேயே அவர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுதான் நவீன வியாபார உத்தி என்பது. அவர்கள் செய்த சூழ்ச்சி வென்றது. அவர்கள் நினைத்தது நடந்தது. நாம் நம்முடைய செல்வங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

  நிச்சயமான பென்சன் என்பது ஒரு அரசு ஊழியனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய உரிமை. இன்று அரசு வேலை என்பது எத்தனையோ போராட்டத்திற்கும் உழைப்பிற்கும் பலனாக கிடைக்கிறது. புதிய பென்சன் என்பது அதன் பலனை அனுபவிக்காமலே செய்து விடுகிறது. 2004-ம் வருடத்திற்குப் பிறகு வேலையில் சேர்ந்தவர்களுக்கு இது இல்லை. புதிய பென்சன் திட்டம் தான் உள்ளது. இதானது இவர்கள் ஓய்வு பெறும் போது, இவர்களின் பங்களிப்பும், அரசு கொடுக்கும் பணமும் சேர்ந்து எங்காவது முதலீடு செய்யப்படும். இதில் வரும் இலாபம் இவர்களுக்கு பென்சனாக வழங்கப்படும். இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இவர்கள் இதை தன்னுடைய பிள்ளைகளின் அல்லது மனைவியின் பிற பெயர்களில் காகிதத்தில் கம்பெனிகள் துவங்கி இதை அதில் முதலீடு செய்து களீபரம் செய்து இவர்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள்.

அரசு ஊழியனாக இராஜாவாக வாழ்பவர்கள் ஓய்வு பெற்றதும் வீட்டுக்கும் உறவினர்களுக்கும் நன்பர்களுக்கும் வேண்டாதவர்களாக கூஜாவாக வாழம் அவல நிலைதான் ஏற்படப் போகிறது. இன்றைய சம்பள அளவில் எந்த அரசும் நிச்சயமாக ஓய்வூதியம் தர முடியாது. எனவே சம்பள உயர்வு என்பது இவர்களுக்கே இவர்கள் இழைத்துக் கொள்ளும் அநீதியாகும். அரசு ஊழியர்களுக்கு இன்று கிடைக்கும் சம்பளம் பாதியாக்கப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கூடஇவர்களுக்கு மிகப் பெரிய நன்மையாகவே இருக்கும். யாரிடமும் கையேந்தாத வாழ்க்கையை இவர்கள் அனுபவிக்க முடியும். சம்பளம் குறைப்பதற்கு பன்னாட்டு கம்பெனிகளின் எதிர்ப்பை இவர்கள் சமாளிக்க வேண்டி வரும். இந்த உண்மைகளை உணர்ந்து இவர்கள் போராட வேண்டும். 

  இந்த சம்பள உயர்வுகளால் அரசு ஊழியர்கள் ஊதாரிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணில் கண்ட பொருளை எல்லாம் வாங்கிக் குவிக்கும் மனநிலை இப்போது இவர்களிடம் காணப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டுமானால் 25 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர்கள் அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்களின் வருங்கால வைப்புநிதியை முழுமையாகப் பெற்றுச் சென்றார்கள். இடையில் அதிலிருந்து கடன் எடுப்பது என்பது அரிதாகவே இருந்தது. ஆனால் இப்போது இவர்கள் ஓய்வு பெறும் போது வருங்கால வைப்பு நிதி “பெறுவதற்கு எதுவுமே இல்லை” என்னும் நிலையில் தான் இருக்கிறது. பெரும்பாலனவர்கள் கடனாளிகளாகவே ஆகி விடுகிறார்கள். மனிதன் நூறு ரூபாய் வருமானம் கூடும்போது 200 ரூபாய் செலவை அதிகரிப்பவன் ஆகவே இருக்கிறான். எனவே வருமானம் கூடக்கூட கடனும் அதிகரிக்கிறது. மேலும் 25 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு பெறும்போது ஆரோக்கியமாக ஓய்வு பெற்றார்கள். ஆனால் இன்றோ வருமானம் கூடியதால் உருவான தவறான உணவுப் பழக்கம், தவறான வாழ்க்கை முறைகளால் நோயாளியாகவே ஓய்வு பெறுகிறார்கள்.     

இந்த சம்பள உயர்வுகளால் அரசு ஊழியர்களுக்கு தங்கள் வேலையின் மீது உள்ள ஈடுபாடு மிகவும் குறைந்தே வருகிறது. அன்றைய ஊழியர்கள் குறைந்த வருமானத்தில் எளிமையாக வாழ்ந்தார்கள். மற்ற ஆடம்பர விசயங்களில் ஈடுபட அவர்களுக்கு வருமானம் இல்லை. எனவே அலுவலகம் வந்தால் அலுவலில் ஈடுபட்டார்கள். ஆனால் இன்றோ அலுவல்களில் வந்துவிட்டால் புதிய மாடல் கார்களைப் பற்றியும், புதிய புதிய மாடல் கைபேசி பற்றியும், வாரக் கடைசி செல்ல வேண்டிய குடும்ப உல்லாச பயணங்களைப் பற்றியும் உள்ள சிந்தனைகளும் பேச்சுக்களும் தான் பற்றிக் கொள்கின்றன. அலுவலகங்களில் பைல்கள் குவிந்திருக்க தொடு திரை கைபேசியில் தட்டிக் கொண்டிருக்கும் ஊழியர்களைத்தான் அலுவலுகங்களில் காண்கிறோம். இதற்கான இரண்டு உதாரணங்களை நாம் பார்க்கலாம்.

1.  நம் நாட்டில் புழங்கும் நாணயங்கள்

ஒரு நாட்டில் மக்கள் தினமும் நாணயங்களை கையாள வேண்டி வருகிறது. மக்களில் கண்பார்வை இல்லாதவர்கள் இருப்பார்கள். 40- 50 வயதைக் கடக்கும் போது பொதுவாகவே ஏற்படும் பார்வைக் குறைவு உடையவர்கள் இருப்பார்கள். பேருந்தில் நடத்துனர் போன்ற, இந்த நாணயங்களை வேகமாக கையாள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். சுமார் 25வருடங்களுக்கு முன் நம் நாட்டில் புழங்கி வந்த நாணயங்களைப் பாருங்கள். அவற்றை எந்த பார்வைக் குறைவு உடையவர்களும் எளிதில் புரிந்து கொள்ளவும் தொட்டே அறிவதற்கும் வசதியாக பல வடிவங்களில் இருந்தன. ஆனால் இன்றைய நாணயங்களைப் பாருங்கள். 50 பைசா, 5 ரூபாய், 1 ரூபாய் இவற்றுக்கெல்லாம் என்ன வித்தியாசம்? 1 ரூபாய் – க்கும், 2 ரூபாய்-க்கும் என்ன வித்தியாசம் ? இவையெல்லாம் முடிவெடுக்கும் அதிகாரிகளின் ஈடுபாட்டுக் குறைவையே காட்டுகிறது. ஏனெனில் இவர்களின் மனமெல்லாம் மேற்கூறிய விசயங்களிலே சுழல்கிறது. இயந்திரத்தனமாக முடிவெடுக்கப்படுகிறது.

2.  நம் நாட்டு இரயில் நிலையங்களில் உள்ள நாற்காலிகள் 

இப்போது நம் இரயில் நிலையங்களில் பளபளப்பான நாற்காலிகளை இன்றைய பொறியியலார் வடிவமைத்து இருக்கிறார்கள். இதில் யாராவது உட்காரமுடியுமா? அதில் உட்கார்ந்து சாய்ந்துவிட்டால் முன்னோக்கி வழுக்கி கீழே விழவேண்டியது தான். ஆனால் பழைய இருக்கைகளில் எவ்வளவு சுகமாக உட்கார முடியும்? எனவே சம்பள உயர்வு இவர்களின் வேலையின் தரத்தைக் குறைத்திருக்கிறது.

மேலும் அன்று இவர்கள் சைக்கிளிலோ, நடந்தோ அல்லது பேருந்திலோ வேலைக்கு வருவார்கள். இதனால் உடல் உழைப்பு என்பது இவர்களுக்கு கடினமானதாகத் தெரியவில்லை. வெயில், மழை போன்ற இயற்கையும் இவர்களுக்கு கஷ்டமாக இல்லை. இன்று வாகனத்தில் வருகிறார்கள். வீட்டிலும், அலுவலகங்களிலும் ஏ.சி. இப்படி வாழ்பவர்கள் வெயிலில் நின்று கண்காணிக்க வேண்டி வரும் வேலைகளை எப்படி செய்வார்கள்? தன் அலுவலக கடைநிலை ஊழியனை அனுப்புகிறார்கள் இதனால்தான் சாலைகள், பாலங்கள் முதலியவற்றின் தரம் குறைகிறது.

சம்பளம் உயரும்போது அவர்களின் வருமானத்துக்கான வாழ்க்கை முறையை பிள்ளைகளுக்கு கொடுக்கிறார்கள். பிள்ளைகள் அப்படியே பழகிவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் சுயவாழ்க்கையில் சம்சாரிக்கும் போது இதே அரசு ஊழியமும் வருமானமும் இவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும் சூழ்நிலையில் தங்களை புதிய வாழ்க்கை முறைக்கு மாற்ற முடியாமல் கஷ்டப்படுவதையும், கடனாளிகளாவதையும் நாம் பார்க்கிறோம்.

இங்கு நடப்பதை பார்க்கும் போது இரண்டு கதைகள் தான் நினைவுக்கு வருகின்றன. ஓன்று பொன் முட்டை இடும் வாத்தின் கதை. இது எல்லோரும் அறிந்ததுதான். மற்றொரு கதை கண்ணாடிக் குவளையில் உள்ள தவளையின் கதை. ஒரு தவளை ஒரு கண்ணாடி குவளையில் உள்ள குளிர்ந்த நீரில் கிடக்கிறது. அதன் கீழே ஒரு மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நீரின் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இதமான சூடாகிக் கொண்டிருக்கிறது. தவளைக்கு நல்ல சுகமாக இருக்கிறது. சுகத்தை மெய் மறந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல நீர் சூடாக துவங்குகிறது. வெந்து சாகிறது.

ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு 100 ரூபாய் பெரியது. ஆனால் 1 கணக்கில் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு அது சிறியதே. எனவே சம்பளம் கூட கூட மக்கள் கொடுக்க வேண்டிய இலஞ்சத்தின் அளவும் கூடுகிறது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்காக வாதிடும் பன்னாட்டு கம்பெனியார் உதாரணம் காட்டுவது மென்பொருள் துறையைத்தான். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தவில்லையானால் திறமைசாலிகள் அரசுக்கு கிடைக்க மாட்டார்கள் என்று அறிவுரை கொடுக்கப்பட்டது. குறைந்த சம்பளமானாலும் நிச்சயமான பென்சன் உண்டு என்றால் நிச்சயமாக திறமைசாலிகள் அரசுக்கு கிடைக்கத்தான் செய்வார்கள். அப்படியும் அவர்கள் அரசுப் பணிக்கு வரவில்லையானால் அவர்கள் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாத மூடர்களாகவும், பணமே வாழ்க்கை என்பவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் அரசு ஊழியத்திற்கு வந்தாலும் இங்கிருந்து பணம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். இலஞ்சமும் ஊழலும் அதிகரிக்கும் . எனவே சம்பளம் குறைப்பது இப்படிபட்டவர்களை வடிகட்டிவிட்டு நல்லவர்கள் அரசு வேலைக்கு வர வழிவகுக்கும்.

இந்த சம்பளக் கமிசனைப் பற்றி ஒரு முறை நம்முடைய மத்திய நிதி அமைச்சர் கூறும் போது ‘இதை அமுல்படுத்தும் போது இவர்கள் பொருள் வாங்குவதால் தொழில்கள் வளரும்’ என்று கூறியிருக்கிறார். இதை அமுல் படுத்துவதால் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருடம் அதிக செலவு வரும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதே பணம் நம்முடைய அடிப்படைகட்டமைப்புக்கு (சாலை, ரயில், பாலங்கள், அணைகள் முதலானவை ) செலவிடப்பட்டால் அந்தப் பணம் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் சென்று தொழில் வளர்ச்சி அடையாதா? அதனுடன் நாம் நம்முடைய நாட்டில் வந்து இவற்றில் முதலீடு செய்யுங்கள் என்று மற்ற நாடுகளுக்குச் சென்று அவர்களைக் கெஞ்சி கூத்தாடுவதை நிறுத்தலாமே?அதை ஏன் செய்யவில்லை? ஏனென்றால் ஒரு தொழிலாளிக்கு வருமானம் அதிகரித்தால் அவன் உணவுப் பொருள் வாங்கவும், துணி வாங்கவும் செலவு செய்வான். அவன் போய் ஏ.சி – யும், காரும், பிரிட்ஜூம் வாங்கிக் கொண்டிருக்க மாட்டான்.

  எனவே இந்த நாட்டின் இறையாண்மைக்கும், பொருளாதாரத்திற்கும், அரசு ஊழியர்களுக்கும், அவர்களின் வருங்கால தலைமுறைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிக்கும் இந்த சம்பள உயர்வுகள் அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும். இது நம் நாடு மற்ற நாடுகளால் கொள்ளையடிக்கப்படுவதற்கு மட்டுமே உதவுகிறது.

  ஒரு நாட்டுக்கு உணவுப் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமானது என்று நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். எனவே அதற்குத் தான் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். நம்முடைய கலாச்சாரமும், பண்பாடும், நாகரிகமும், நம்முடைய விழாக்களும், வாழ்க்கையும் விவசாயத்தையே மையமாகக் கொண்டு இயங்கி வந்திருக்கிறது.

  மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மனுக்கு நாட்டை ஆள்வது பற்றி அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு கொடுக்கும் உபதேசத்தில் ஒன்று “குத்தகைக் காரனுக்கு ஆறில் ஒன்று” என்பது. அதாவது விளைச்சலில் 5 பங்கு நிலத்தின் சொந்தக் காரனுக்கும், 1 பங்கு குத்தகைக்காரனுக்கும். இதிலிருந்து அறிவது அன்று விவசாயத்தில் 6-ல் 1 பங்கு என்பதே லாபமானதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ அது பாதி பாதியாக மாறிய பிறகும் லாபம் இல்லை.

  இராமாயணத்தில் ராமனின் தந்தை தசரதனுக்கு குழந்தை இல்லாததால் பல்லாண்டுகள் தவம் இருந்து ராமனைப் பெறுகிறான். அப்போது தசரதனின் சந்தோசத்தில் பொன், வெள்ளி, மாணிக்கம், வைரம் இவற்றை எல்லாம் வாரி வாரி வழங்குகிறான். அதனுடன் அவன் வழங்கும் வேறொரு பொருளும் உண்டு. அது என்ன தெரியுமா? விதை நெல். அப்படியானால் விவசாயத்துக்கு நம் முன்னோர்கள் என்ன முன்னுரிமை கொடுத்திருந்தார்கள் என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும். நம்முடைய திருவிழாக்கள் எல்லாம் விவசாய காலத்தை அனுசரித்தே அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே நம் நாட்டு தொழில்களில் எல்லாம் விவசாயம் தான் வருமானம் அதிகமானதாக ஆக்கப்பட வேண்டும். அவன் வருமானம் அதிகமாகும்போது அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப் படவேண்டும். அரசுத்துறை என்பதே இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டதுதான். எனவே நாட்டு மக்கள் முன்னேறும் போதுதான் இவர்கள் அதிக சம்பளம் பெறுவதற்கான தார்மீக தகுதியைப் பெறுகிறார்கள்.

- ஜே.என்.ஜெயச்சந்திரன்