நான், பழனி ஷஹான். பல இலக்கிய மற்றும் அரசியல் இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன். சில இதழ்களுக்காக, அரசியல் பிரமுகர்களை நேர்காணல் செய்து வழங்கியுள்ளேன். மேலும், இணைய இதழ்கள் சிலவற்றிற்கு செய்தி சேகரித்துத் தரும் பணியையும் செய்து கொண்டுள்ளேன்.

palani shahanநான் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கீரனூரில் நிரந்தரமாக வசித்து வருகின்றேன். தற்காலிகமாக சென்னையில் உள்ளேன்.

கடந்த 21.11.2015 சனிக்கிழமை அன்று, மாலை 4 மணி அளவில், சென்னை குன்றத்தூர் அருகேயுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்வைக் காணச் சென்றிருந்தேன். அங்கு மக்கள் ஏராளமாக, அக்காட்சியை காண வந்து சென்று கொண்டிருந்தனர். ஏரியைக் காண வந்த மக்களை, ஏரிச் சாலையின் குறிப்பிட்ட எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், நான் எனது செல்போனில் ஏரியில் நீர் நிறைந்திருக்கும் காட்சியையும், அதனைக் காண வந்த பொதுமக்களின் கூட்டத்தையும் வீடியோ செய்து கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் மக்கள் கூச்சம் வலுவாகக் கேட்டது. இதனால், நான் உடனே எனது பின்புறமாகத் திரும்பிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது, காவல்துறையினர் பொதுமக்களின் மீது தடியடி நடத்திக் கொண்டிருந்தனர். நான் யதேர்ச்சையாக அதனையும் எனது செல்போனில் வீடியோ பதிவு செய்தேன்.

நான் வீடியோ செய்வதைக் கண்ட காவலர்கள், என்னை நோக்கி வந்து, எனது செல்போனை பறித்துக் கொண்டு, என்னுடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயினர். என்ன ஏதுவென்று புரியாத நிலையில், நான் பேசத் தொடங்குமுன், அங்கு பணியிலிருந்த துணை ஆய்வாளர் சுரேஷ் என்னுடைய கண்ணத்தில் அறைந்தார். அதன் பின்னர் அருகிலிருந்த காவலர்களும் அதேபோல் அறைந்தனர். அந்த வலிகளோடு நான் ஒரு எழுத்தாளன், பத்திரிக்கையாளன் என்று கூறினேன். அதனைக் கேட்ட துணை ஆய்வாளர் சுரேஷ், ‘நீ எவனா வேனா இரு’ என்று கூற, மூன்று காவலர்கள் என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய், காவல் வாகனத்திற்குள் தள்ளினர்.

காவல் வாகனத்தின் இருக்கையில் என்னை உட்கார வைத்த காவலர்கள், எனது வலது, இடது, முன் மற்றும் பின் என சூழ்ந்து கொண்டு, விசாரித்தனர். நான் மீண்டும், பத்திரிக்கையாளன் என்றும், எழுத்தாளன் என்று கூறியதோடு, அப்போது என் கையில் இருந்த, சில இதழ்களில் எனது புகைப்படத்துடன் வெளிவந்திருந்த ஆக்கங்களை எடுத்துக் காட்டினேன். அவற்றைப் பார்த்ததன் பிறகும், அவர்கள் என்னை அலட்சியப்படுத்திவிட்டு, மோசமான வார்த்தைகளில் திட்டினர்.

மிகவும் கொச்சைப் படுத்தி (நாக்கூசும் வார்த்தைகளில்), வேறு எங்கேனும் சென்று வீடியோ எடுடா என்று ஏசினர். பிறகு என்னுடைய பெயரைக் கேட்டனர். நான் எனது பெயர் ஷஹான் என்று கூறினேன். உடனே முஸ்லிமா என்றனர். நான் ஆமாம் என்று பதில் சொன்னேன். நான் ஒரு முஸ்லிம் என்பது தெரிந்ததும், என்னை மத ரீதியாகத் துன்புறத்தத் தொடங்கினர்.

’முஸ்லீம்களுக்கெல்லாம் ரெண்டு எக்ஸ்ட்ரா இருக்கத்தாண்டா செய்யும்’ என்று ஒரு காவலர் கூற, துணை ஆய்வாளர் சுரேஷ் ‘ஏரிக்கு ஏதும் குண்டு வைத்தாயா? என்ன திட்டத்துலடா வீடியோ எடுத்த’ என்று மிரட்டல் தொனியில் கேட்டார். நான் எனது நிலையை, மீண்டும், மீண்டும் விளக்கிக் கூறினேன். ஆனால் அவர்கள் என்னைத் தீவிரவாதியாகவே அணுகினரே அன்றி, வேறொன்றையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

பிறகு சிறிது நேரத்தில், எனக்கு முன்னால் (டிரைவர் சீட் வழியாக உள்ளே நுழைந்திருந்தவர்) இருந்த காவலர், என்னுடைய தலையைப் பிடித்து கீழே அமுக்கி குனிய வைத்தார். உடனே வலது மற்றும் இடதிலிருந்தவர்கள் என்னுடைய கைகளை இறுக்கமாக முறுக்கிப் பிடித்துக் கொண்டவுடன், பின்னாலிருந்த காவலர் என்னுடைய தலையில் தொடர்ச்சியாக அடித்தார். அடுத்து சற்று என்னை நிமிர வைத்தவர்கள், என்னுடைய இரண்டு காதுகளிலும் ஒரே நேரத்தில் அடி விழும்படி, இரண்டு முறை அடித்தனர். அதனால் நான் அதிகம் சோர்ந்து போயினேன்.

இப்படியே அடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று என்னை வாகனத்திலிருந்து கீழே இறக்கி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, குன்றத்தூர் காவல்நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர். காவல்நிலையத்தில் என்னை முட்டிங்கால் போடச் சொல்லி கொடுமைப்படுத்தி, வலுக்கட்டாயமாக அமர வைத்தனர். இதன் பின்னர் என்னை ரிமாண்ட் செய்வதாக மிரட்டியவர்கள், நான் மீண்டும், மீண்டும் பலமுறை கெஞ்சியதன் பின்னர், என்னிடமிருந்த 500 ரூபாயை பறித்துக் கொண்டு, ஒரு வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு, நாங்கள் அழைக்கும் போது ஆஜராக வேண்டுமென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் நான் அங்கிருந்து, தங்கியிருந்த அறைக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், துணை ஆய்வாளர் சுரேஷ் எனக்கு செல்போனில் (செல் : 9677285968, 9498128868) அழைத்துப் பேசினார். அதில் அவர், ‘இங்கு நடந்ததை எவனிடமாவது கூறினால், உன்னை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிடுவேன்’ என மிரட்டினார். அதன் பின்னரும் அழைத்து அடிக்கடி மிரட்டி வருகிறார்.

சம்பவம் நடந்த தினத்தன்று, இரவு 9 மணிக்குத்தான் நான் அறைக்குத் திரும்பினேன். அதனால் இரவு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுவிட்டு, வலியின் தாக்கத்தினால் உறங்கிவிட்டேன். மீண்டும் நான் புத்துயிர் பெறுவதற்கு மறுநாள் அதாவது, 22.11.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆகிவிட்டது. அதன் பின்னரே, நான் நடந்த சம்பவம் குறித்து தெரிந்தவர்கள் பலரிடமும் அழைத்துக் கூறத் தொடங்கினேன். இதேபோல, சில தோழர்கள் இதனை முகநூலில் பதிவு செய்ததால், பலரும் எனக்கு அழைத்தும் பேசினர். அவர்களில் சிலர் துணை ஆய்வாளர் சுரேஷிற்கு அழைத்துப் பேசி கண்டித்தும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23.11.2015 திங்கள் மாலை, இச்சம்பவத்திற்காக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி, கண்டனத்தைப் பதிவு செய்தது. அக்கட்சியின் தலைவர் திரு.கே.எம்.சரீப் என்னை அப்பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அழைத்தன் பேரில், நானும் அங்கு சென்றிருந்தேன்.

இதனைத் தொடர்ந்து சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், அரசியல் பிரமுகர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சரக காவல், துணை ஆய்வாளர் சுரேஷ் என் மீது நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு, சட்ட விதி மீறலுக்கு, மனித உரிமை மீறலுக்கு, அராஜகப் போக்கிற்கு, நான் தற்போது அவர் மீதும், அன்று அவரோடு பணியில் இருந்தவர்களின் மீதும், புகார் மனு எழுதி, அதனை தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும், காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் பதிவுத் தபால் வாயிலாக அனுப்பி வைத்துள்ளேன்.

அடுத்ததாக, பாதிக்கப்பட்டவன் என்கிற ரீதியில், எனக்கான நீதி வேண்டி, நான் துணை ஆய்வாளர் சுரேஷ் மீது, தனிப்பட்ட முறையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் உள்ளேன். தற்போது, அதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டுக் கொண்டுள்ளேன்.

ஒரு எழுத்தாளன், பத்திரிக்கையாளன் என்பவன், மக்களுக்கான பிரதிநிதியாக தன்னார்வமாய் பணி செய்வன். அந்த வகையில் என் மீது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு எதிராக, ஊடகங்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்ய முன்வர வேண்டும். இச்சம்பவம் குறித்து தங்களின் பத்திரிக்கைகளில், செய்தி வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு

பழனி ஷஹான்

***