kashmir indian army

இந்தியாவின் ஜனநாயகத் தன்மை குறித்து காஷ்மீர் மாகாணமும் அம்மக்களும் சர்வதேச சமூகத்திடம் கேள்விகளை தொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சொந்த மண்ணின் பிள்ளைகளை கூண்டுக்குள் அடைபட்ட பறவைகளைப் போன்று சித்திரவதை செய்யும் இந்தியா என்ற எஜமானனின் உச்சாணிக் கொம்பில் ஏறி நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இதுவரை நேர்மறையான பதில்களை சர்வதேச சமூகமும் இந்திய சமூகமும் கொடுத்ததில்லை என்பதுதான் யதார்த்தம்.

ராணுவத்தினரைக் கண்டு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் விடலைகள்... கணவன் இருக்கின்றானா இல்லையா என்பது குறித்து எந்த அறிவுமில்லாத பாதி விதவைகளின் கூட்டம்... தோண்டத் தோண்ட தீராத புதை குழிகள்... தனது வீட்டுப் பிள்ளைகளுக்கே கப்றுகளை தோண்டும் முதியவர்கள்... போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்படும் இளசுகள்... காணாமல் போன பிள்ளைகளை தேடும் பெற்றோர்கள்... இன்னும் இரத்த வெறி அடங்காமல் கழுகுப் பார்வையுடன் திரியும் ராணுவத்தினர் என காஷ்மீர் சமூக அமைப்பியலின் நிலை, தீர்வுகளே தெரியாத துயரத்தில் தென்படுகிறது.

சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடத்திய ஆய்வில் பல புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கூட்டாக படுகொலை செய்யப்பட்டு அந்தப் பள்ளத்தாக்கின் சொந்தக்காரர்கள் தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என்ற பட்டத்துடன் கப்று அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்பார்த்துதான் இன்னும் காஷ்மீர் வீடுகளில் உம்மாக்களும் வாப்பாக்களும் மனைவிகளும் சகோதரிகளும் அண்ணன் தம்பிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் சர்வதேச மக்கள் தீர்ப்பாயமும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் 333 பேர் சட்டவிரோதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு முடமாக்கப்பட்டுள்ளதாகவும், 972 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

அட்லாண்டிக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் மனித உரிமைப் போராளியுமான வசுந்தரா ஸ்ரீநாத் சமீபத்தில் காஷ்மீர் பள்ளதாக்குக்கு சென்று சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அந்த ஆய்வு அறிக்கைகள் மோடி ஆட்சிக்குப் பின்பு காஷ்மீரில் ராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதை தெளிவாக உணர்த்துகிறது. காஷ்மீரில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி காஷ்மீரிகள் குறிவைக்கப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் மனித உயிர்களை வைத்து ஒரு மிகப் பெரிய வியாபாரத்தை ராணுவமும் காஷ்மீர் காவல்துறையும் இந்திய உளவுத் துறையும் நடத்தி வருவதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சில இளைஞர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு அவர்களை ஏ, ஏ பிளஸ், பி, சி என்ற கிரேடுகளில் தரம் பிரிக்கிறார்கள். இதன்படி சி கிரேடில் உள்ள நபரை என்கவுண்டர் செய்தால் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாயும், பி கிரேடில் உள்ளவர்களை சுட்டுக் கொன்றால் 1 லட்சம் ரூபாயும், ஏ பிளஸ்சுக்கு ரூ 5 லட்சம் வரையும் சன்மானம் அளிக்கப்படுகிறது. இந்த சன்மானத்திற்காகவும் பதவி உயர்வுக்காகவும் நித்தம் நித்தம் அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்படுகிறது. மேலும் சி கிரேடில் உள்ள ஒரு நபரை சுட்டுக்கொல்ல ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தால் விலை குறைவு என்பதால் அவர்கள் அதை செய்வது இல்லையாம். இதற்காகவே சி கிரேடில் உள்ள நபர்களை ஏ பிளஸ் கிரேடுக்கு உளவு துறையினர் தரம் உயர்த்துவதாகவும் பேராசிரியர் வசுந்தரா ஸ்ரீநாத் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

சவங்களை வைத்து நடக்கும் இந்த மோசமான வியபாரம் உலகின் எந்த போர்க்களத்திலும் நடக்காதது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னை காட்டிக் கொள்ளும் இந்திய அரசின் இந்த கொடூர முகம் முழுவதுமாக மறைக்கப்பட்டு வருகிறது. இரும்பு மனிதரின் இந்த ஆட்சியில் இன்னும் ராணுவத்தினர் உசுப்பேற்றப்பட்டு வருகின்றனர். காஷ்மீரின் எல்லைப்புற கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் இந்திய ராணுவத்தின் பலி ஆடுகளாக பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். இந்திய ராணுவம் இதுவரை படுகொலை செய்ததில் கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கையை விட அப்பாவிகளின் எண்ணிக்கைதான் அதிகம் என சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் குற்றம் சாட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ்-ன் முசுலீம் பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் காஷ்மீரில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அமைப்பினரும் இஹ்வானி என்ற அரசு இயந்திரம் மூலம் இயக்கப்படும் கிளர்ச்சிக்குழுவும் முசுலீம் இளைஞர்களைக் குறிவைக்க ராணுவத்திற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் நுண்ணியமாக குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். காஷ்மீரில் ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் வசுந்தரா ஸ்ரீநாத் சில ராணுவத்தினரிடம் இத்தகைய மனித உரிமைகள் மீறப்படுவதற்கான காரணம் குறித்து கேட்டபோது அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் மிகக் கொடூரமானவை, "காஷ்மீரிகளின் முதுகெலும்புகளை உடைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நமக்கு எதிராக திரும்ப மாட்டார்கள்".

இதுதான் இன்று அந்த அழகிய பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மண்ணுக்கு சொந்தமானவர்களின் முதுகெலும்பை உடைத்து அவர்களை முடமாக்கி வைத்து விட்டால் அங்கு இந்திய ஜனநாயகத்தின் அத்துமீறலை எளிதாக நிறுவி விடலாம். பாதுகாப்பு படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் காஷ்மீரில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதால் ராணுவ எதேச்சதிகாரம் எளிதாக அரங்கேற்றப்படுகிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியாவில் எல்லைப்புற மாகாணங்களில் கூட்டு படுகொலைகளும் பாலியல் வன்முறைகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

ராணுவத்தின் இந்த கொடூரத்தின் சாட்சியாக இன்றும் இரோம் சர்மிளா என்ற போராளி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் சவங்களுடன் செல்ஃபி எடுக்கும் இந்த நூதன உலகம் அதைக் கண்டுக்கொள்வதில்லை. காஷ்மீர் பிரச்சினைக்கு இறுதியாக பேராசிரியர் வசுந்தரா ஸ்ரீநாத் வைக்கும் தீர்வு எளிதானது. முதலாவதாக ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை இந்திய அரசு ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தைகளையாவது துவக்க வேண்டும். அடுத்ததாக காஷ்மீர் என்பது அந்த மக்களுக்கு சொந்தமான மண் என்பதை இந்திய அரசு உணர்ந்து அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மட்டும் ராணுவ முகாம்களை அமைத்துவிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் ராணுவ முகாம்களை சிறிது சிறிதாக மூட வேண்டும். அடிப்படையாக அவர் இந்திய அரசை கேட்டுக்கொள்வது இதுதான்..........காஷ்மீரிகளின் தேசப்பற்றை தயவு செய்து சந்தேகம் கொள்ளாதீர்கள்.

- ஷாகுல் ஹமீது