பொழுதுபோகாத நேரத்தில் கருத்துச் சொல்வதற்கும் பின்னர், புலம்பி அழுது கண்ணீர் வடிப்பதற்குமான கருவியாகியிருக்கிறது ‘கற்பு’. படப்பிடிப்பு குறைந்து போனதால் பரிமேலழகர் வேடம் கட்டி, ‘கற்பு’க்கு விளக்கம் கொடுத்தார் நடிகை குஷ்பு. அந்த விளக்கமே விவகாரமாகி தொலைக்காட்சிகளிலும் செய்திகளிலும் பரபரப்பாக்கப்பட்டு, குஷ்புவுக்கு எதிராக உயர்ந்தன துடைப்பக் கட்டைகளும் செருப்புகளும் ஊடகங்களின் வணிகப்போட்டியில் விளையாட்டுப் பொருளானது தமிழச்சிகளின் ‘கற்பு’.

திருமணத்திற்கு முன்பே இந்தியப் பெண்கள் பாலுறவு வைத்துக் கொள்கிறார்களா என்ற அதிமுக்கியமான ஆய்வை மேற்கொண்டது தரத்திற்கு பெயர்போன ‘இந்தியா டுடே’ இதழ். சென்னைப் பெண்கள் இந்த அனுபவத்தில் வளர்ச்சி பெற்றுள்ளார்களா என்பதைப் பற்றி தனது அனுபவம் கலந்த கருத்துகளை வெளியிட்டார் ‘பாலுறவு வல்லுநர்’ குஷ்பு. (சென்னை பெண்களின் அந்த அனுபவம் குறித்து ஆய்வுப்பூர்வமாக அறிவதற்கு குஷ்பு பொருத்தமானவர் என எந்த அடிப்படையில் அந்த இதழ் தேர்வு செய்தது என்பது தெரியவில்லை)

தகுதி குறித்த அக்கறையின்றி பிரபலத்தன்மை மட்டுமே ஒருவரிடமிருந்து கருத்துப் பெறுவதற்கான அடிப்படை என்கிற போக்கு மிகுந்திருக்கும் இதழியலில் குஷ்புவிடம் கருத்துக் கேட்பது என்பதும் பத்திரிகா தர்மங்களில் ஒன்றாகிவிடுகிறது. பிரபலத்தன்மை கொண்டவர்கள் தங்களுடைய கருத்து என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து நா காப்பதில்லை.

‘கற்பு’ குறித்த கருத்துரையை வழங்க ஆரம்பித்த குஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” என ‘சமூக அக்கறை’ மிளிரப் பேசியிருந்தார்.

ஆண் நண்பர்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் பெண்கள் குறித்த ‘கவலை’யையும், நட்சத்திர விடுதியின் மது அரங்கிலிருந்து வெளியே வரும்போது பாலியல் தொந்தரவினால் விபத்துக்குள்ளாகி மரணமடைந்த ஸ்டெஃபானி விவகாரம் தொடர்பான வேதனையையும் தனது குரலில் வெளிப்படுத்தியிருந்தார் குஷ்பு. இந்த பேட்டி வெளியாகி 5 நாட்கள் கழிந்த பிறகுதான் ‘கற்பு’ என்பது விவாதப் பொருளானது. குஷ்புவின் ‘கன்னித்தன்மை’ ஆராய்ச்சியை ஒரு ‘ஈவினிங் பேப்ப’ரான தமிழ் முரசு தனது வணிக நோக்கத்திற்காக தலைப்புச் செய்தியாக்க, ‘பத்தவச்சிட்டியே பரட்டை’ என்பது போல மாற்றுக் கருத்து தீ மளமளவெனப் பரவத் தொடங்கியது.

‘கற்பு’ என்பது ஆண்வர்க்கம் தனது ஆதிக்க உணர்வுக்காக உருவாக்கிய சொல். இருதார மணம், பலதார மணம், பரத்தையர் தொடர்பு இவையெல்லாம் ஆண்மையின் அடையாளமாக நிறுவப்பட்டன. பெண்கள் மட்டும் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என காப்பிய நாயகிகள் போல வாழவேண்டும் என ஆண்களின் தலைமையிலான சமுதாயம் வரையறுத்தது. எனவே, பெண்களை கற்புச் சிறைக்குள் வைத்தது. தங்களை அடைத்து வைத்திருக்கும் சிறைகளை பெண்கள் உடைக்கத் தொடங்கிய பிறகு, ‘கற்பு’ குறித்த கண்ணோட்டமும் மாறிவிட்டது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தனது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமை உண்டு என்பது நடைமுறையாகிவிட்டது.

பெண்களின் உடலில் உள்ள ஒரு உறுப்புடன் தொடர்புடையதே கற்பு என்ற ஆண்வர்க்க சிந்தனை நொறுக்கப்பட்டு, அது மனம் சார்ந்தது என்ற தெளிவு இன்று நிலவுகிறது. கற்பு என ஒன்று உண்டெனில் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைக்கப்படவேண்டும் என்பதை புரட்சிக் கவிஞர் வலியுறுத்தினார். தந்தை பெரியார் அவர்கள் திருமண முறையையே ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என மாற்றினார். ஒப்பந்தம் மீறப்பட்டால், பிரிந்து வாழ்வதற்கும் பிறிதொரு துணையைத் தேடிக்கொள்வதற்கும் இருவருக்குமே உரிமையுண்டு. இவையெல்லாமே கற்பு என்பது ஒரு வழிப்பாதையல்ல என்பதற்கான நிலைப்பாடுகள்.

ஆண் தனது சுதந்திரத்திற்காகவும், அந்த சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் உருவாக்கிய ‘கற்பு’க் கோட்பாடுகளை உடைத்து நொறுக்கிய முற்போக்காளர்கள், அது பெண்ணின் மனம் சார்ந்தது என்பதையே வலியுறுத்துகின்றனர். கற்புக்கும் உறுப்புக்கும் முடிச்சு போடவில்லை. ஆனால் குஷ்பு பேசும் ‘கற்பு’ அப்படிப்பட்டதல்ல. அது முழுக்க முழுக்க உடல் சார்ந்தது. அவருடைய ‘கருத்து சுதந்திரம்’ என்பது மற்ற பெண்களின் சுதந்திரம், வாழ்க்கை முறை ஆகியவற்றின் மீது தாக்குதலை நடத்துகிறது.

ஒரு பெண், தன் மன விருப்பப்படி அமைத்துக் கொள்ள வேண்டிய வாழ்கையை, குஷ்பு தன் விருப்பப்படி அமைக்க வேண்டும் என்ற கோணத்தில் கருத்துத் திணிப்பை நிகழ்த்தியிருக்கிறார். நடிகை என்பதால் குஷ்புவுக்கு கிடைத்த பொருளாதாரமும் அதனால் மாற்றம் பெற்ற வாழ்க்கைச் சூழலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. தனது பொருளாதார வாழ்க்கைச் சூழலினால் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ‘கற்பு’, ‘கன்னித்தன்மை’ குறித்த உடல்சார்ந்த கோட்பாடுகளை, தமிழகத்தின் பொதுக் கோட்பாடாக்க குஷ்பு முனைந்திருப்பது கருத்து வன்முறையேயன்றி வேறில்லை.

அதுவும் யாரை நோக்கி இந்த வன்முறையை ஏவியிருக்கிறார்? பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் தன்னைவிட பின் தங்கியிருக்கும் தமிழக மக்களை நோக்கி ஏவியிருக்கிறார். ‘பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களை பார்க்க முடிகிறது’ என்பது குஷ்புவின் கூற்று. சென்னையில் உள்ள இந்த மாதிரியான இடங்கள் எத்தனை? ஒரு சனிக்கிழமை இரவில் எத்தனை பெண்கள் அதில் கலந்துகொள்ள முடியும்? சென்னையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?

இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் 2 விழுக்காட்டுக்கும் குறைவான பெண்களைத்தான் அந்த மாதிரி இடங்களில் பார்க்க முடியும். குஷ்புவின் வாழ்க்கைத்தரம் அந்த 2 விழுக்காட்டுக்கு உட்பட்டது. அத்தகைய இரவு கேளிக்கைகளுக்கு வரும் பெண்களின் அளவு 1 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தபோதே, அதன் நிரந்தர வாடிக்கையாளராக குஷ்பு இருந்திருக்கலாம். அதனால் தற்போது அது 2 விழுக்காடாக உயர்ந்திருப்பதைப் பார்க்கையில் ஏராளமான பெண்கள் அங்கே வருவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

தன்னைச் சுற்றி இருப்பது மட்டுமே உலகம் என்ற மயக்கத்தில் குளுகுளுகாரில் ஏறி கருப்புக் கண்ணாடிகளை ஏற்றி விட்டுக்கொள்ளும் போது வெளியுலகை அறிய வாய்ப்பின்றி போய்விடுகிறது. அதனால் தான் ஸ்டெஃபானியின் ‘கற்பு’ பற்றியோ, விழுப்புரம் மாவட்ட கொடுமைக்குள்ளான பத்மினியின் ‘கற்பு’ பற்றியோ, விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரால் பாலியல் வன்முறைக்குள்ளான ரீட்டா மேரியின் ‘கற்பு’ பற்றியோ கவலைப்படமுடியவில்லை.

குஷ்புவின் அடுத்த கவலை என்பது ‘பாய்ஃபிரெண்ட்’ பற்றியதாக இருக்கிறது. “வாரந்தோறும் பாய்ஃபிரெண்டை மாற்றிக்கொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”- இப்படி நொந்துகொள்கிறார் ‘கற்பு’ பற்றி நிறையவே புரிந்துகொண்டு, பல பாய்ஃபிரண்டுகள் தன் வாழ்க்கையில் மாறியதை ஏற்கனவே துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கும் குஷ்பு. தன்னால் கடைப்பிடிக்க முடியாத ஒன்றைக்கூட, கருத்து என்ற பெயரால் அடுத்தவர் மீது திணிக்கின்ற வன்முறை இங்கே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கருத்துக்கணிப்பு நடத்திய இதழின் தரத்துக்குரிய கருத்துகளை வாரி வழங்கியதோடு அவர் நின்றிருந்தால் துடைப்பக்கட்டை போராட்டங்கள் பெரிதாகியிருக்காது. தனது கருத்து வன்முறையை அடுத்த கட்டத்திற்கு அவர் நகர்ந்த்திச் சென்றதுதான் மிக மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கியது. ஊடகங்களின் வணிகப் போட்டிக்கு குஷ்புவின் ‘கற்பு’ ஆராய்ச்சி கைகொடுத்து சர்ச்சையான நேரத்தில், ‘தினத்தந்தி’ இது பற்றி அவரிடம் கேள்வி எழுப்புகிறது. மறுபடியும் தனது ஆய்வு அறிவை வெளிப்படுத்துகிறார் பாலியல் வல்லுநர் குஷ்பு. “தமிழ்நாட்டில் செக்ஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்கிறார்களா? திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று எதிர்க்கேள்விகள் தொடுத்தார்.

குஷ்பு பொதுவாகத்தானே கருத்து தெரிவித்தார், தமிழ்நாட்டுப் பெண்களைக் குறிப்பிட்டா கருத்து தெரிவித்தார் என்று அவருக்காக வரிந்துகட்டுகிறவர்கள், குஷ்பு கேட்ட எதிர்க்கேள்விகளை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஏனென்றால், இந்த பேட்டி வெளியான நாளேட்டை தாங்கள் படித்ததாக சொன்னால், தங்களின் அறிவு மேதைமை தொடர்பான பிம்பம் உடைந்து கண்ணாடி சில்லுகள் போல ஆகிவிடுமே என்ற தயக்கம்தான். கருத்துக் கணிப்பு நடத்திய இதழில் வெளியான குஷ்புவின் கற்பு ஆராய்ச்சியை மட்டுமே முன்வைத்து அவர்கள் விவாதம் நடத்துகிறார்கள். அவர் தெரிவித்த இந்த அப்பட்டமான கருத்தைப் பற்றி வாய் திறக்க முன்வருவதில்லை.

துடைப்பக் கட்டைகளைத் தூக்கியவர்கள், கருத்துக் கணிப்பு நடத்திய இதழை படிப்பவர்கள் அல்லர். இந்த நாளேட்டைத்தான் படிக்கும் பழக்கமுடையவர்கள். தங்களை நேரடியாகக் குறிப்பிட்டு குஷ்பு தெரிவித்த கருத்துக்கு, உடனடியாக அவர்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்விளைவுதான் துடைப்பக்கட்டைப் போராட்டம். இது குறித்தும் குஷ்புவின் புதுப்புது வழக்கறிஞர்கள் ‘சம்மன்’ இல்லாமல் ஆஜராகி வாதிட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

“கருத்து சொல்லும் உரிமை அவருக்கு இல்லையா? அவரது கருத்துக்கு பதில் கருத்து சொல்வதைவிட்டு விட்டு போராட்டம் நடத்துவது சரியா? இது வன்முறை அல்லவா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள் குஷ்புவின் திடீர் வழக்கறிஞர்கள். கருத்து சொல்வது குஷ்புவின் உரிமை எனும் போது, யாரைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரோ அவர்களிடமிருந்து வெளிப்படும் விளைவை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் குஷ்புவைச் சார்கிறது. தனது அனுபவ ரீதியான கருத்துக்கள் என்ற நிலையைத் தாண்டி தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் பற்றியும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதிலும் குறிப்பாக கல்வியறிவு இல்லாதவர்களையும் கல்வியறிவு குறைவானவர்களையும் நோக்கி தனது கருத்து தாக்குதலை நடத்தியிருக்கிறார்.

பல பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவரான குஷ்பு தனது மேதைமையைக் காட்ட வார்த்தை என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார். தனது சொந்தக் கருத்துக்காக ஒட்டுமொத்த பெண்களையும் இழுத்து அவர்கள் மீது கருத்தியல் வன்முறை நடத்துகிறார் படிப்பறிவு குறைந்தவர்கள் அதை தங்கள் கருத்துக்களால் எதிர்கொள்வார்கள் என மேதைகள் நினைத்தால் அது ஏமாற்றமாகத்தான் இருக்கும். அவர்களுக்கு குஷ்புவைப் போல கருத்து வன்முறை பற்றியெல்லாம் தெரியாது. அவர்களிடம் வார்த்தை ஆயுதங்கள் கிடையாது. தங்கள் மீது எறியப்படும் தடித்த சொல்லுக்குப் பதிலாக செருப்புகளை எறிகிறார்கள். பண்டித நேரு ‘நான்சென்ஸ்’ என்றதற்காக தமிழகம் அவரை கருப்புக்கொடியால் எதிர்த்தது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியிருக்கிறது.

குஷ்புவுக்கு எதிரான போராட்டங்களெல்லாம் தானாக எழுந்தவையா:? அவையெல்லாம் தமிழ்க் கலாச்சார பாதுகாவலர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்பவர்களின் தூண்டுதலால் நடந்தவைதானே என்றும் இது அரசியல் நோக்கத்ததுடன் நடத்தப்படுவதுதானே என்றும் கேட்கிறார்கள் குஷ்புவின் வழக்கறிஞர்கள். இதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை. முற்ற முழுக்க அரசியல் தான் . எந்த அரசியலை குஷ்புவும் அவரது கூட்டமும் சில வாரங்களுக்கு முன் கையாண்டதோ அதே அரசியல் தான் இப்போது திசை மாறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இயக்குநர் தங்கர்பச்சான் நடிகைகளை இழிவுபடுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரை நடிகர் சங்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். தங்கர்பச்சான் ஏற்கனவே பத்திரிகையில் மன்னிப்பு கோரியிருந்த போதும், நடிகர் சங்கத் தலைவருக்கு முன்னால் குஷ்பு உள்ளிட்ட நடிகைகளைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்தார்கள். அதை தொலைக்காட்சிகள் பதிவு செய்து ஒளிபரப்பியபிறகும், எங்களைப் பற்றி இழிவாக பேசிய தங்கர்பச்சானை மன்னிக்க முடியாது என்று அராஜகம் செய்தது அரசியல் அல்லாமல் வேறென்ன?

நடிகைகள் பற்றி தங்கர் சொன்னதை கருத்துக்கு கருத்து என்று எதிர்க்கும் துணிவோ நேர்மையோ அறிவாற்றலோ மேதைமைமிக்க குஷ்புவுக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இல்லை என்பதை தமிழகம் பார்த்தது. நடிகைகள் இழிவுபடுத்தப்படுவது மன்னிக்க முடியாத குற்றமென்றால் தமிழ்ப் பெண்களை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தி வெளிப்படும் கருத்துக்கள் எந்த வகை குற்றம்? இதனை மட்டும் கருத்துக்கு கருத்து என்றளவில் எதிர்க்க வேண்டும், போராட்ட உணர்வை வெளிப்படுத்துவது கூடாது என்று வாதிடுவது என்ன நியாயம்?

‘கற்பு’ என்பது குறித்த உளவியல் ரீதியான சிந்தனை எதுவும் குஷ்புவிடமிருந்து வெளிப்பட்டுவிடவில்லை. கர்ப்பம், பால்வினை நோய், கன்னித்தன்மை என உடல் சார்ந்த கருத்துக்ளை முன்வைத்தே அவர் தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றிய கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதுவும் மேட்டுக்குடி மக்களின் நுகர்வு மனப்பான்மையை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக் கோட்பாடாக திணிக்க முயன்றிருக்கிறார்.

குஷ்புவின் கருத்து சுதந்திரத்தை ஆதரித்து, அது முற்போக்கான சிந்தனை என்றும் ‘எய்ட்ஸ் விழிப்புண்ர்வு பிராச்சாரம்’ என்றும் பதாகை பிடிக்கிறவர்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. போகிற போக்கில், குஷ்புவை பெரியாரின் பேத்தி என்றும் மார்க்ஸின் மருமகள் என்றும் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்தான் அது. அறிவார்ந்தவர்களின் இத்தகைய தாங்கிப்பிடிக்கும் தன்மையைப் பார்க்கும் போது, குஷ்புக்கு கோயில் கட்டிய பாமர ரசிகன் கூட இவர்களைவிட உயர்ந்தவனாக இருக்கிறான்.

குஷ்பு என்ற நடிகை தனது வாழ்க்கையை மட்டும் அடிப்படையாக வைத்து, தமிழகப் பெண்களின் கற்பை தீர்மானித்து கருத்து வழங்கியிருக்கிறார். இது, ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்ற இலக்கிய வரிகளின் வெளிப்பாடு. தங்களைப் பற்றி தீர்மானிக்க குஷ்பு யார் என்று துடைப்பக்கட்டைகளைக் தூக்கினார்கள் பெண்கள். இது, “ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு” என்ற அறிவியல் சமன்பாடு.

- கோவி லெனின்