இல்லை, கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலமே என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான காலம்

ஆசிரியர்: Zsuzsanna Clark என்ற ஹங்கேரியப் பெண்.
வெளியானது: இலண்டனிலிருந்து வெளியாகும் 17.10.2009 நாளிட்ட, மெயில் பத்திரிக்கையில்
தமிழாக்கம்: இராமியா

 
1970 - 80களில், ஒற்றைக் கட்சி (கம்யூனிஸ்ட்) ஆட்சியின் கீழ் 'இரும்புத் திரை'க்குப் பின்னால் ஹங்கேரியில் வாழ்ந்த வாழ்நிலையைப் பற்றி என்னிடம் கேட்கப்படும் பொழுது, இரகசிய போலீஸ்களின் கண்காணிப்பு, ரொட்டிக்காக நீண்ட வரிசையில் நிற்பது என்பது போன்ற, கசப்பான அனுபவங்களைக் கூறுவேன் என்று பெரும்பாலோர் எதிர்பார்க்கின்றனர்.
 
 ஆனால் உண்மை வேறு விதமாக இருந்தது என்று கூறும் போது அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். பொதுவுடைமை ஆட்சி நடந்த ஹங்கேரியில் வாழ்க்கை நரகமாக இல்லை; உண்மையில் அது மிகவும் மகிழ்சியுடன் வாழும் இடமாக இருந்தது.
 
 கம்யூனிஸ்டுகள் மக்கள் அனைவருக்கும் வேலை உத்தரவாதத்தை அளித்தனர்; நல்ல தரமான கல்வியையும், இலவச மருத்துவ சேவையையும் அளித்தனர். அங்கு பலாத்காரமான குற்றங்கள் அறவே இல்லாமல் இருந்தது.
 
 எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால், மக்களிடையே தோழமை உணர்வு இருந்தது. இவ்வுணர்வு, நான் இப்பொழுது வாழும் பிரிட்டனில் அறவே இல்லை; என்னுடைய சொந்த நாடான ஹங்கேரியிலும் (அன்று இருந்ததைப் போன்று) இன்று இல்லை. அக்காலத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம்; எங்களிடம் இருந்த எதையும் மற்றவர்களுடன் மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டோம்.
 
 நான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில், ஹங்கேரியின் வட பகுதியில் உள்ள எஸ்டர்கோம் (Esztorgom) நகரில் 1968ஆம் ஆண்டில் பிறந்தேன். என் தாயார், ஜூலியானா (Julianna), நாட்டின் ஏழ்மை மிக்க, கிழக்குப் பகுதியில் இருந்து வந்தவர். 1939ஆம் ஆண்டில் பிறந்த அவருடைய குழந்தைப் பருவம் துன்பமயமாக இருந்தது.
 
 அவர் தனது 11வது வயதிலேயே படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு நேராக வயல் வெளிகளில் வேலைக்குப் போக வேண்டி இருந்தது. அவர் ரொட்டித் துண்டை வாங்குவதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து 5 மைல்கள் நடக்க வேண்டி இருந்தது. குழந்தைப் பருவத்தில் அவர் எப்பொழுதும் பசியுடனேயே இருந்தார். அவர் கோழி முட்டை இடுவதற்காக அதன் பின்னாலேயே காத்திருந்து, அது முட்டை இட்டவுடன், அதை உடைத்துப் பச்சையாவே வெண் கருவையும் மஞ்சள் கருவையும் விழுங்குவாராம்.
 
 நாட்டில் கம்யூனிச ஆட்சி ஏற்படுவதற்கு முன்னால் நிலைமை இப்படித் தான் இருந்தது. கம்யூனிச ஆட்சி ஏற்பட்ட பின், 1956இல் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்ட பிறகு தான் நிலைமைகள் மாறத் தொடங்கின.
 
 கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டன; (வறட்டுத் தனமாக நடந்து கொள்ளாமல்) உள்நாட்டு மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டால் தான் நிலைக்க முடியும் என்று அவர்கள் உணர்ந்தனர். ஸ்டாலினை வறட்டுத்தனமாகப் பின்பற்றுவதை விட்டு விட்டு, நாட்டின் உள்நிலைமைகளை உணர்ந்து செயல்படும் போக்கு வளரத் தொடங்கியது.
 
 நாட்டின் தலைமைப் பொறுப்பைப் புதிதாக ஏற்ற ஜனோஸ் கதார் (Janos Kadar) என்பவர் ஹங்கேரியை மகிழ்ச்சியின் பாசறையாக மாற்றினார். கம்யூனிச நாடுகளில் (உள்நாட்டு நிலைமைகளைக் கணக்கில் கொண்டு செயல்பட்ட ) ஹங்கேரி, மற்ற நாடுகளை விடச் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் இருந்தது எனலாம்.
 
கம்யூனிச ஆட்சியினால் கிடைத்த பல நன்மைகளில் ஒன்று, விடுமுறைக் காலத்தையும், பொழுது போக்கு அம்சங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் திறந்து விடப்பட்டது எனலாம். முன்பெல்லாம் அவை உயர்குடி மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மட்டுமே உரியனவையாக இருந்தன. இரண்டாம் உலகப் போர் முடிந்த காலத்திலும் மக்கள் நாட்டின் மறு நிர்மாணத்திற்காகக் கடுமையாகப் பாடுபட வேண்டி இருந்ததால், பொழுதுபோக்கு பற்றி நினைக்க முடியாமலே இருந்தது.
 
1960களில் நிலைமைகள் மாறத் தொடங்கின; வாழ்க்கையின் பல அம்சங்களில் நல்ல முன்னேற்றங்களைக் காண முடிந்தது. 1960களின் இறுதி ஆண்டுகளில் தொழிற் சங்கங்கள், அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவை, அனைத்து மக்களும் விடுமுறைக் காலங்களைக் குறைந்த செலவில் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்குத் தேவையான பொழுது போக்கு மையங்களை அமைத்துக் கொடுத்தன.
 
என்னுடைய பெற்றோர்கள் பக்கத்தில் இருந்த டோரக் (Dorog) நகரில் ஹங்கரோட்டன் (Hungaroton) என்ற ஒலிப் பதிவு செய்யும் அரசு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டு இருந்தனர். ஆகவே 'ஹங்கேரியின் கடல்' எனப்படும் பலேட்டன் ஏரிக்குப் (Balaton Lake) பகுதியில் அமைந்திருந்த, அத்தொழிற்சாலையின் விடுமுறை முகாமில் நாங்கள் வசித்து வந்தோம்.
 
இந்த முகாம் பிரிட்டனில் இருந்த விடுமுறை முகாம் போன்றதே ஆகும்; ஆனால் அங்கு அவரவர்களே தங்களுடைய மாலை நேரப் பொழுது போக்கு வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். பிரிட்டன் விடுமுறை முகாமில் இருந்தது போல பட்லின் பாங்கான பொழுது போக்காளர்கள் (Butlins - style Redcoats) இருக்கவில்லை.
 
என்னுடைய சிறு வயதில் என் பெற்றோர்கள் அவர்களுடைய சிறிய நிலங்களில் பிராணிகளையும் பறவைகளையும் வளர்த்து வந்தது என்னுடைய நினைவுகளில் இன்றும் பசுமையாக உள்ளது. பலர் அவ்வாறு பிராணிகளை வளர்த்ததுடன் காய்கறிகளையும் பயிரிட்டு வந்தனர். புடாபெஸ்ட் (Budapest) மற்றும் பெரிய நகரங்கள் அல்லாத பகுதிகள் (இவ்வாறு) பிராணிகள் வளர்க்கும் மற்றும் காய்கறி பயிரிடும் பகுதிகளாக இருந்தன.
 
என்னுடைய பெற்றோர்கள் 50 கோழிகள், பன்றிகள், முயல்கள், சிறிய வாத்துகள், பெரிய வாத்துகள், புறாக்களை வைத்திருந்தனர். அவற்றை எங்கள் குடும்பத்தின் சொந்தத் தேவைகளுக்கு மட்டுமன்றி, வெளியே மற்ற நண்பர்களுக்கு விற்கவும் செய்தோம். வாத்து இறகுகளினால் தலையணைகளையும் மெத்தைகளையும் செய்தோம்.
 
(கம்யூனிச) அரசு, கல்வி மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருந்தது. கம்யூனிச ஆட்சி ஏற்படுவதற்கு முன் என்னைப் போன்ற விவசாயிகளின் பிள்ளைகளுக்கும், நகர்ப்புறத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும், கல்வி என்பது எட்டாமல் இருந்தது. கம்யூனிச ஆட்சி ஏற்பட்ட பின் நிலைமைகள் மாறத் தொடங்கின.
 
ஹங்கேரியில் பள்ளிக் கல்வி முறை, அன்று பிரிட்டனில் இருந்ததைப் போலவே இருந்தது. பள்ளிக் கல்வி, இலக்கணப் பள்ளிகள், இடைநிலைப் பள்ளிகள், தொழிற் பயிற்சிப் பள்ளிகள் என வகைப்படுத்தப்பட்டு இருந்தன. ஒரே வேறுபாடு என்னவென்றால் நாங்கள் 14 வயது வரை தொடக்கப் பள்ளியில் கல்வி கற்றோம். (பிரிட்டனைப் போல) 11 வயது வரை அல்ல.
 
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மாலை நேரப் பள்ளிகளும் இருந்தன. இளமையில் கல்வியைத் தொடர முடியாத என்னுடைய பெற்றோர்கள் அப்பள்ளிகளில் படித்தனர்; அவர்கள் கணிதம், வரலாறு, ஹங்கேரிய இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றைப் படித்தனர்.
 
என்னுடைய பள்ளி நாட்கள் இனிமையாக இருந்தன; அதிலும் கம்யூனிச நாடுகளில் பொதுவாகக் காணப்பட்ட முன்னோடிகள் (Pioneer) அமைப்பில் உறுப்பினராக இருந்த காலங்கள் மிகவும் இனிமையானவை.
 
மேற்கத்திய நாட்டினர் இந்த முன்னோடி அமைப்பு என்பது, இள வயதினரிடம் கம்யூனிச தத்துவத்தை வலுக்கட்டாமாகத் திணிக்கும் அநாகரிகமான முயற்சி என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த அமைப்பு, மக்களிடையே நட்பை வளர்ப்பது, பொது மக்களின் நன்மைக்காக வேலை செய்வதன் முக்கியத்துவம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகளையே கற்றுக் கொடுத்தது. 'ஒவ்வொருவருக்காக அனைவரும்' என்பதே எங்கள் முழக்கமாக இருந்தது; அவ்வாறு சிந்திப்பதற்கே நாங்கள் ஊக்கப்படுத்தப் பட்டோம்.
 
முன்னோடி அமைப்பின் உறுப்பினர்கள் படிப்பிலும், சமூகத் தொண்டிலும், பள்ளிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளங்கினால், அவர்கள் அனைவரும் கோடைக் கால முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அது மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் நல்ல பரிசாகும். நான் ஒவ்வொரு ஆண்டும் இம்முகாமில் கலந்து கொண்டேன்; ஏனெனில் உடற்பயிற்சி, விளையாட்டு, பாட்டு பாடுதல், துப்பாக்கி சுடுதல், இலக்கியம், நூல்நிலையப் பணி என அனைத்து வேலைகளிலும் பங்கு எடுத்துக் கொண்டேன்.
 
முன்னோடிகள் முகாமின் கடைசி இரவில் குளிர் காய்வதற்காக நெருப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டு இருக்கும் போது, முன்னோடிகள் அமைப்பின் தேசிய கீதம் என்று சொல்லத் தக்க பாட்டான 'அந்த மரத்தில் உள்ள அணிலைப் போல, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்ற பாடலையும், மற்ற வழக்கமான பாடல்களையும் பாடுவோம். எங்கள் மனதிற்குள் பலவிதமான உணர்வுகள் - நண்பர்களைப் பிரியப் போகிறோமே என்ற சோக உணர்வும், மீண்டும் உற்றார் உறவினர்களைக் காணப் போகிறோம் என்ற மகிழ்வு உணர்வுமாக, ஒன்றுக்கொன்று நேர் எதிரான உணர்வுகள் - எழும்.
 
இந்நாட்களில், தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளாதவர்களும், முன்னோடிகள் அமைப்பில் இருந்த நாட்களின் நினைவுகளை மிகுந்த மகிழ்வுடன் மனதில் அசை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
 
மேற்கத்திய நாடுகளில் அக்காலத்தில் 'முற்போக்கு' கருத்துகள் என்று கேலி செய்யப்பட்டவை எதுவும் ஹங்கேரியப் பள்ளிகளில் பாடங்களாகச் சொல்லித் தரப்படவில்லை. பாடத் திட்டங்களின் தரம் மிக உயர்வாகவும் ஒழுக்க நெறிகள் மிகவும் கண்டிப்பாகவும் இருந்தன.
 
என்னுடைய ஆதர்ச ஆசிரியர், ஹங்கேரிய இலக்கணத்தை அறிந்து கொள்ளாமல், எண்ணங்களையும், உணர்வுகளையும், மனவலிமையையும் ஒருங்கிணைக்க முடியாது என்று கற்றுக் கொடுத்தார். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம் என்றும், வெறும் மதிப்பெண்கள் பெறுவதற்காகப் படிப்பது தவறு என்றும் அவர் கற்றுக் கொடுத்தார்.
 
பிரிட்டனைப் போல் அல்லாமல், ஹங்கேரியில் எங்களுக்கு நேர்முகத் தேர்வும் (viva voce) ஒவ்வொரு பாடத்திற்கும் இருந்தது. எடுத்துக்காட்டாக இலக்கியப் பாடங்களில் பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டி இருக்கும்; ஆசிரியர்கள் தேர்வின் போது வாய்மொழியாகக் கேட்கும் வினாக்களுக்கு மாணவர்கள் வாய்மொழியாக விடையளிக்க வேண்டி இருக்கும்.
 
தேசிய விழாக்கள் கொண்டாடப்படும் போதெல்லாம், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் முன் ஒரு செய்யுளையோ, செய்யுளின் அடிகளையோ ஒப்பிக்கச் சொல்லிப் பணிக்கப்படுபவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். பண்பாடு மிக மிக முக்கியமானதாக அரசாங்கத்தால் மதிக்கப்பட்டது. இசை, இலக்கியம், நாட்டியம் போன்ற வாழ்வின் மென்மையான மகிழ்ச்சிகளை உயர் மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டும் உரிமையானதாக இருப்பதைக் கம்யூனிஸ்டுகள் விரும்பவில்லை. (அவை உழைக்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்).
 
அதாவது இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு மிக அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டன; மிகக் குறைவான கட்டணங்களில் மக்கள் இந்நிகழ்ச்சிளைக் காண அனுமதிக்கப்பட்டனர்.
 
கலை நிகழ்ச்சிக் கூடங்கள் ஒவ்வொரு சிற்றூரிலும் திறக்கப்பட்டன. இது அவ்வப்பகுதிகளில் உள்ள உழைக்கும் மக்கள், கலை நிகழ்சிகளை எளிதில் காண வழி வகுத்ததுடன், கலைத் துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பையும் நல்கியது.
 
அந்நாளைய அரசின் கொள்கையான, மக்களுடைய பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தை எதிரொலிக்கும் விதமாகத் தான், ஹங்கேரியத் தொலைக் காட்சியில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன.
 
நான் பதின்ம வயதில் (teen age) இருந்த காலத்தில் சனிக் கிழமை இரவு போன்ற முக்கியமான மனமகிழ் நேரத்தில் ஜூல்ஸ் வெர்னெ (Jules Verne) போன்ற பிரெஞ்சு நாட்டு வீர தீர சாகசக் கதைகளையும், செய்யுள் ஒப்பித்தல் நிகழ்ச்சிகளையும், நேரடி அரங்க நிகழ்ச்சிகளையும், இத்தாலிய நகைச்சுவைப் படங்களையும் வேறு பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பது வழக்கம்.
 
ஹங்கேரியத் தொலைக் காட்சி நிகழ்சிகள் பல அந்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன.
 
சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் நேயர்கள் ஆவலுடன் பார்த்த ·போர்ஸிட் (Forsyte) வீர தீர சாகசக் கதைகளில் வரும் ஸோம்ஸ் ·போர்ஸிட்டின் (Soames Forsyte) சோதனைக் காலத்தை 1970களின் முற்பகுதியில் ஹங்கேரியர்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர். டேவிட் அட்டன்பரோவின் ஆவணப் படங்களையும் பிரிட்டிஷ் தகவல் பரப்பு நிறுவனத்தினர் (BBC) தயாரித்த ஒனெடின் லைன் (Oneddin Line) என்ற புகழ் பெற்ற படத்தையும் அந்நாட்களில் நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன்.
 
இருந்தாலும், மக்கள், தொலைக்காட்சியைப் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டு, சோம்பேறிகள் ஆகிவிடும் அபாயம் நேர்ந்து விடக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக இருந்தது.
 
ஒவ்வொரு திங்கட் கிழமை இரவும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து இருக்க ஊக்குவிக்கும் விதமாக, விசேஷ நிகழ்ச்சிகளை அரசாங்கம் ஒளிபரப்பியது. மற்றவர்கள் இதை குடும்ப நலனைத் திட்டமிடும் இரவு என அழைத்தனர். கம்யூனிச ஆட்சியில் நடந்த இந்நிகழ்வினால் திங்கட் கிழமை இரவில் கருவுற்றவர்களின் எண்ணிக்கை அதிமாக இருந்தது என்பது படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டக் கூடிய செய்தியாகும்.
 
நாட்டின் தன்மையை உணர்ந்து நடந்த கம்யூனிச ஆட்சியில் நாங்கள் வாழ்ந்ததால், நாங்கள் உண்பதற்குப் போதுமான உணவு கிடைத்தது; தேவையற்ற பொருட்களை வாங்கும்படி விளம்பரங்களால் எங்கள் மூளை சலவை செய்யப்படவில்லை.
 
என் இளமைக் காலங்கள் முழுவதும் மற்ற இள வயதினர்களைப் போலவே உடுத்துவதற்குப் போதுமானதும், மனநிறைவு அளிப்பதுமான உடைகள் கிடைத்தன. என்னுடைய பள்ளிக்கூடப் பை, என் பெற்றோர்கள் வேலை செய்த தொழிற்சாலையில் இருந்து கிடைத்தது. ஆனால் இன்று ஹங்கேரியில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரியுமா? பிரிட்டனைப் போலவே அங்கும் குழந்தைகள் தங்களுக்குப் பொருத்தமில்லாத உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்.
 
கம்யூனிச ஆட்சிக் காலத்தில் மக்கள் பொதுவாக, பணப்பித்து இல்லாமல் இருந்தார்கள். என் தந்தையும் அவ்வாறே பணப்பித்து இல்லமல் இருந்தார்.
 
அவர் வாகனப் பழுது பார்க்கும் தொழிலாளியாக இருந்தார். அவர் எப்பொழுதும் நியாயமான கூலியையே கேட்பார். ஒரு முறை ஒரு மேற்கு ஜெர்மனி நாட்டுக்காரர், வாகனம் பழுதடைந்து என்ஜின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டு இருப்பதை அவர் பார்த்தார். உடனே அவர் மனம் இளகி அதைப் பழுது நீக்கித் தந்தார். அதற்காகப் பணம் எதுவும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். வியந்து போன அந்த மேற்கு ஜெர்மனிக்காரர் தன் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அளித்த ஒரு புட்டி பீரையும் (beer) பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். துயரத்தில் சிக்கி இருக்கும் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், அதற்குக் கூலி பெறுவது மனிதப் பண்பு அல்ல என்றும் அவர் கூறி விட்டார்.
 
 1989ஆம் ஆண்டில் கம்யூனிசம் முடிவிற்கு வந்த பொழுது மற்ற பலரைப் போல நானும் வியப்பும் சோகமும் அடைந்தேன். சிலர் (கம்யூனிச) அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டு சென்றனர் என்றாலும் நானும் என் குடும்பத்தினரும் உட்பட மிகப் பெரும்பான்மையான மக்கள் அதை ஆதரிக்கவில்லை.
 
அந்த 'இரும்பத் திரை'க்குப் பின்னால் கம்யூனிச ஆட்சியில் வளமான வாழ்க்கையைப் பெற்ற மிகப் பெரும்பான்மையான மக்களின் குரல்கள் கேட்கப்படவே இல்லை. இன்றும் இதைப் பற்றிய விவாதங்கள் வரும் பொழுது எங்கள் குரல்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
 
அதற்குப் பதிலாக மேற்கத்திய நாடுகளில், நாங்கள் மேலை நாடுகளின் செல்வ வளத்தை ஏக்கத்துடன் பார்ப்பதாகவும், கம்யூனிச ஆட்சியைப் பொடிப் பொடியாக்கி விட வேண்டும் என்ற துடித்துக் கொண்டு இருப்பதாகவும் பொய்யாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
 
ஹங்கேரியில் கம்யூனிசம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. அப்பொழுது மற்ற சோஷலிச நாடுகளுக்குச் செல்லத் தடை ஏதும் இருக்கவில்லை; ஆனால் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல சில கட்டுப்பாடுகள் இருந்தன. சில ஹங்கேரியர்கள் (நான் உட்பட) கட்டாய ரஷ்யப் பாடங்களை ரசித்துப் படித்தோம்.
 
அங்கு சிறு சிறு கட்டுப்பாடுகளும், தேவையற்ற அதிகார வர்க்க அடுக்குகளும் இருந்தன; அரசாங்கத்தை ஒரு அளவிற்கு மேல் விமர்சிக்கச் சில கட்டுப்பாடுகள் இருந்தன. இருப்பினும், இவற்றை எல்லாம் மீறி, முழுவதுமாகப் பார்க்கையில், குறைகளை விட நன்மைகளே மிகுதியாக இருந்தன.
 
கடந்த இருபது ஆண்டுகளில் பெரும்பாலான நல்ல அம்சங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன.
 
இப்பொழுது மக்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. ஏழ்மையும், குற்றச் செயல்களும் அதிகரித்து உள்ளன. உழைக்கும் மக்கள் இப்பொழுதெல்லாம் இசை அரங்குகளுக்கோ, நடன அரங்குகளுக்கோ செல்ல முடிவதில்லை; பிரிட்டனில் உள்ளதைப் போலவே, தேவை இல்லாதவற்றை எல்லாம் காணும்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இன்னும் வேடிக்கையான ஒரு உண்மை என்னவென்றால், இப்பொழுது (முதலாளித்துவ ஆட்சியில்) இருப்பது போல, கம்யூனிச ஆட்சியில் மக்களை மிரட்டி அடிபணிய வைக்கும் பெரியண்ணாக்கள் இருந்ததில்லை.
 
எல்லாவற்றையும் விட வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக அனுபவித்த தோழமை உணர்வு இப்பொழுது முற்றிலும் மறைந்து விட்டது. கடந்த இருபது ஆண்டுகளில் ஆடம்பரமான அங்காடிகளையும், பல கட்சி 'ஜனநாயகத்தையும்' பெற்றிருக்கிறோம்; ஆனால் மனித வாழ்வின் மகிழ்ச்சியை முற்றிலும் இழந்து நிற்கிறோம்.
 
ஆசிரியர்: Zsuzsanna Clark என்ற ஹங்கேரியப் பெண்.
வெளியானது: இலண்டனிலிருந்து வெளியாகும் 17.10.2009 நாளிட்ட, மெயில் பத்திரிக்கையில்
தமிழாக்கம்: இராமியா 

 Read more: http://www.dailymail.co.uk/news/article-1221064/Oppressive-grey-No-growing-communism-happiest-time-life.html#ixzz2YYDlRT8R