அமெரிக்காவில் நான்கு நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஊசி போட்டுக் கொன்றார்களாம். அது ஊடகங்களால் பெரிய அளவில் செய்தியாக்கப்படவில்லை. வலைத் தளங்களிலும் வெளியிடப்படவில்லை. அதனால் நாம் பார்த்துக் கண்ணீர் வடிக்க முடியவில்லை.

அமெரிக்காவிலும் ஒரு மதம் இருக்கிறது. அந்த மதத்தின் படி எந்தத் தவறு செய்தாலும், அந்தத் தவறு செய்த பின் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம். அவர்களைப் பொறுத்தவரை ஆண் மீசை தாடி இல்லாமல் இருப்பதுதான் அழகு. பெண் உடலை எந்தளவிற்கு வெளியே காட்டுகிறார்களோ அந்தளவிற்கு பணவசதி படைத்தவர்; நாகரீகமானவர்; விடுதலை அடைந்தவர். அவர்களுக்கு புனிதமானது பைபிள். பெண் ஆதாமின் விலா எலும்பிலிருந்து வந்தவள்.. என்பது போன்ற இன்ன பிற கலாச்சார பண்பாட்டு பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள். அவர்கள் ஊசி போட்டோ மின்சாரம் செலுத்தியோ மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

இந்தியாவிற்கு தமிழ்நாட்டிற்கு பெரும்பான்மையாக ஒரு மதம் இருக்கிறது. அதில் பெண்ணென்றால் பூ, பொட்டு, புடவை, தாய், மகள், மனைவி, இடுப்புத் தெரிய சேலை கட்டுவது, அடக்க ஒடுக்கம், மீசை வச்ச ஆம்பளை, இந்த வாழ்க்கை போன ஜென்மத்தில் செய்த பாவத்தால் கிடைத்தது, இறந்தவர்களை எரிப்பது அல்லது ஆற்றில் விடுவது, அரைகுறையாக எரிந்த பிணத்தை தின்னும் அகோரி என்பது போன்ற இன்ன பிற கலாச்சார பண்பாட்டு பழக்க வழக்கங்களைக் கொண்டது இம்மதம். இங்கும் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் செயல் சட்டப்பூர்வமானது. அஜ்மல் கசாப் அண்மையில் தூக்கிலிடப்பட்டது எல்லோரும் அறிந்த்தே.

இஸ்லாமியர்களின் கலாச்சார அடையாளம், தாடி, குல்லா, குர்ரான், ஐந்து முறை தொழுதல், பெண் பர்தா அணிவது, ஆண் பெண் இருவருமே உடலை மறைத்து உடை அணிவது, இறந்தவர்களை அமைதியாக எடுத்துச் செல்வது என்பது போன்ற இன்ன பிற கலாச்சார பண்பாட்டு பழக்க வழக்கங்கள் உள்ளன. அவர்கள் நாட்டிலும் மரண தண்டனை இருக்கிறது. அதை பொது இடத்தில் வாளால் வெட்டி நிறைவேற்றுகிறார்கள். அதுவும் சட்டப்பூர்வமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியை மன்னித்து விட விரும்பினால் குற்றவாளியை உயிருடன் விடலாம் என்கிற சட்டமும் அங்கு உள்ளது.

இப்படி, அவரவர் பண்பாடு, கலாச்சாரம், பொருளியல் ஆகியவற்றை ஒட்டி ஒரு சட்டம் இருக்கிறது. அதில் மரண தண்டனையும் இருக்கிறது. அவ்வாறு மரண தண்டனை அளிக்கப்படும் போது, கருணை எங்கே இருக்கிறது? எல்லா வகை மரண தண்டனையும் உயிரை எடுப்பதுதான்; கொடூரமானதுதான்; காட்டுமிராண்டித் தனமானதுதான்; நாகரீக வளர்ச்சியற்ற சமூகத்தின் வெளிப்பாடுதான்.

மனித உரிமை என்ற சொல்லை உலகுக்கெல்லாம் அறிவுறுத்தி விட்டு ஊசி போட்டு மரண தண்டனை விதிக்கலாமாம். அஹிம்சை பூமி என்று பெயர் வாங்கிக் கொண்டு கசாபை தூக்குக் கயிற்றில் தொங்க விடலாமாம். யாரும் வாய் திறக்க மாட்டார்களாம். ஆனால் இஸ்லாமிய நாட்டில் அந்த மதச் சட்டப்படி நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை மட்டும் காட்டுமிராண்டித்தனமானதாம். என்ன வகை நியாயம் இது?.

எந்த வகையிலும் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள மாட்டோம், மரண தண்டனை என்பது மனித குலத்திற்கே இழுக்கை ஏற்படுத்துகிறது; மனிதாபிமானமற்றது என்கிற அடிப்படையில் அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ, உலகில் வேறெங்கிலுமோ நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்டிப்பதும் வேறு.

ரிசானாவிற்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை, இக்கொடூர செய்தி வெளியில் தெரியாமல் புதைந்து விடக்கூடாது என்ற அளவில் ஒரு துக்ககரமான செய்தியாக, உலகம் முழுக்க மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்வது வேறு.

ஆனால் ரிசானாவிற்கு நிறைவேற்றப்பட்டது மட்டுமே கொடூரமான மரண தண்டனை என்பதும், அதற்கு இஸ்லாமியர்களின் காட்டுமிராண்டித்தனமான சட்டம் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்வதும் மனிதாபிமான அடிப்படையிலானது அல்ல; மனித உரிமை அடிப்படையிலானதுமல்ல. மத துவேசத்தின் அடிப்படையிலானது. சக மதத்தினர் மீதுள்ள சகிப்புத்தன்மையற்ற தன்மையையும் வெறுப்பையும் வெளிப்படுத்துவது. இது மரண தண்டனை குறித்த ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையல்ல.

இன்றைக்கும் இந்தியா சர்வதேச மரண தண்டனை ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. கையெழுத்திட மறுத்த அடுத்த நாள் காலைதான் கசாபைத் தூக்கிலிட்டனர். அதற்கு நாம் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.

இப்பொழுது டெல்லி சம்பவத்திற்குப் பிறகு, பாலியல் வன்முறையில் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட சட்டம் வழிவகை செய்துள்ளது.

இப்படி நம் நாட்டில் அமலில் இருக்கும் மரண தண்டனையை ஒழிக்கத் திராணியற்றவர்கள், அதற்கு எதிராகப் போராடக் கூடத் திராணியற்றவர்கள் இஸ்லாமிய சட்டத்தை குறை கூற கொஞ்சங்கூடத் தகுதியில்லாதவர்கள்.

- இந்திரா காந்தி அலங்காரம்