எத்தனை ஆண்டுகள் மறைந்து போனாலும், மதுரை மாவட்டத்தில் குன்றுகளாக காட்சி தரும் மலைகளைப் பார்க்கும் போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வு மீண்டும், மீண்டும் முளைத்தெழும். சைவர்களின் கொட்டத்திற்கு எதிராக பள்ளிகளைத் திறந்து அனைத்து தரப்பினரும் கல்வி பெற வேண்டும் என்ற உயர்நோக்கம் கொண்ட சமணர்கள், அரசதிகாரத்தின் துணையோடு கொன்றுகுவிக்கப்பட்டு கொடுமைகளின் வடுக்கள் வரலாற்றின் பக்கங்களில் இன்னமும் கறையாக காட்சித் தருகிறது.

எண்ணாயிரம் பேரைக் கொன்ற கோபம் தீராது இன்னமும் அழித்தொழிக்க வேண்டும் என்ற சாதித்திமிர் கட்டவிழ்த்து விடப்பட்ட முரட்டுக்காளையென மதுரை மாவட்டத்தில் பலரைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது.

மதுரை என்றவுடன் பலருக்கும் மல்லிகைப்பூ ஞாபகத்திற்கு வருவதைப்போல, உத்தப்புரம் சுவர் கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். சாதிய ரீதியாக மனிதர்களைப் பிரிக்க கட்டப்பட்ட தீண்டாமைச்சுவரின் ஒருபகுதி இடிக்கப்பட்டு, வழிதிறந்தபோது அதற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் நடத்திய கொடி எரிப்பின் கனப்பின் நெருப்பு இன்னமும் தணலாகக் கிளம்புகிறது. சட்டம், நீதி ஆகியவை தங்கள் வீடுகளின் வாசல்களில் கட்டப்பட்ட பிராணிகள் என்பதை போல நினைத்து சாதிமேலாதிக்கம் புரிவோர் நடத்தும் அட்டகாசங்கள் குறைந்தபாடில்லை. அதற்கு நல்ல உதாரணம் வடிவேல்கரை கிராமம்.

மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் தான் இந்த வடிவேல்கரை கிராமம் உள்ளது. சமணர்கள் பள்ளிகளை வைத்து பலருக்கு கல்வி புகட்டிய நினைவிடங்கள் உள்ள கீழக்குயில்குடியும், வடிவேல்கரையும் ஒரே பஞ்சாயத்திற்கு உட்பட்டதாகும். இங்கு உள்ள 600 குடும்பங்களில் 300 பிள்ளைமார் சமுதாயக்குடும்பங்களும், 200 கள்ளர் சமுதாயக்குடும்பங்களும் வசித்து வருகின்றனர். 86 அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களும், 11 பள்ளர் மற்றும் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களும், 3 ஆசாரிமார்களும் வசித்து வருகின்றனர்.

சுமார் 1500 ஏக்கர் நிலத்தில் இங்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிலரிடமே நிலம் உள்ளது. மற்றவர்கள் இங்குள்ள நிலத்தில் உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இங்குள்ள அருந்ததிய மக்களில் 86 குடும்பங்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை நினைத்தால் இத்தனை ஐந்தாண்டு திட்டம் போட்டவர்களின் சட்டையைப் பிடிக்கத் தோன்றும். இங்குள்ள 70 அருந்ததிய சமுதாயக் குழந்தைகளில் தற்போது 55 குழந்தைகள் நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள கல்வி நிலையங்களை நோக்கி கல்விபயிலச் செல்கின்றன. 5 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்கள். அதில் 2 பெண்கள் அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. பத்தாவது முடித்த இருவர் தற்போது +1 படித்து வருகிறார்கள். ஒருவர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்.

அருந்ததிய மக்களின் அடிப்படை வேலையாக உள்ளது தப்படிப்பது தான். உழவு வேலை, கத்திரிக்காய் பறிப்பது என தோட்டவேலைகள் செய்தாலும், சாதிய ரீதியாக இவர்கள் தப்படிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் தான் பள்ளியில் படிக்கும் 8 குழந்தைகள் தற்போது பள்ளிக்கு சென்று கொண்டே, இழவு வீடுகளில் தப்படித்து குலத்தொழில் செய்துவரும் கொடுமையும் வடிவேல்கரையில் அரங்கேறி வருகிறது. இவர்களில் பட்டப்படிப்பு பெற்ற ஒரே நபர் முருகன் என்பவர் தான். அவர் பட்டப்படிப்பு படித்தார் என்பதற்காக அவர்கள் குடும்பத்தின் மீது நடத்தப்படும் வர்ணாசிரமவாதிகளின் தாக்குதல்கள் கொலைவெறி அளவுக்குப்போய் உள்ளது.

வடிவேல்கரை காந்திநகரைச் சேர்ந்த அம்மாவாசி என்ற அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்தவரின் மகன் முருகன் (25) என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-14 ந் தேதி நாகமலைப்புதுக்கோட்டையில் இருந்து வடிவேல்கரைக்கு வந்து கொண்டிருந்தபோது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஆனந்த், லெட்சுமணன், சிலம்பரசன் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர். அத்துடன் உடைகல்லை எடுத்து முருகனின் தலையில் போட்டு கொல்ல முயன்றுள்ளனர். அவர்களின் ஒரே கோபம் “தோட்டி மகனுக்கு என்ன படிப்பு?“

இந்தக் கொடூரத் தாக்குதலில் முருகனின் மண்டை உடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைக்காயச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில் தாக்குதலுக்குள்ளான முருகன் மற்றும் அவரது தந்தை அம்மாவாசி ஆகியோர் மீதே கொலைமுயற்சி உள்ளிட்ட 4 வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறை தாங்கள் எந்த சாதியத்திற்கு வேலியாக உள்ளோம் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

முருகன் தாக்குதலுக்குள்ளான அன்று வடிவேல்கரை ஊராட்சியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தோட்டி வேலை செய்து கொண்டிருந்தார் அவருடைய தந்தை அம்மாவாசி, அவர் மீதும் கொலைமுயற்சி வழக்கு. ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. அத்துடன் சாலைமறியல் போராட்டம் வேறு செய்துள்ளார்கள். மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மகஜரும் அளித்துள்ளனர்.

ஆதிக்கச்சாதியினரால் தாக்குதலுக்குள்ளான முருகன் எம்.காம்., படித்து முடித்து விட்டு தற்போது பி.எட் படித்து வருகிறார். இந்த நிலையில் காந்திநகர் பகுதியில் உள்ள அருந்ததிய குழந்தைகளுக்கு மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை இலவசமாக டியூசன் எடுத்து வருகிறார். தெருவிளக்கில் இவர் பாடம் நடத்துவதைப் பொறுக்காமல் தெருவிளக்கை இரவு 7 மணிக்கு மேல் தான் எரியவிடுகிறார்கள்.

வடிவேல்கரையைச் சேர்ந்த அருந்ததிய குழந்தைகள் செருப்பு போட்டு நடக்கமுடியாது. அதனால் காந்திநகரில் இருந்து வடிவேல்கரை கண்மாய் வழியாக நாகமலைப்புதுக்கோட்டைக்கு நடந்தே பள்ளிக்குச் செல்கிறார்கள், வானம் இருட்டியவுடன், இங்குள்ள பள்ளிக்குழந்தைகள், மழை வரக்கூடாது என வருணபகவானிடம் வரம் கேட்கிறார்கள். மழை நீர் பெருக்கடுத்தால் கண்மாய் வழியாகப் பள்ளி செல்லமுடியாது என்பதால் இவர்கள் வானைப் பார்த்து வணங்கி அழும் கொடுமை என்னவென்பது?

தோட்டி மகன் பட்டப்படிப்பு படிப்பதா என்ற ஆத்திரத்தில் முருகன் மீது தாக்குதல் நடத்திய வர்ணத்தின் புத்திரர்கள், இதற்கு முன்பாக கடந்த 2007-ஆம் ஆண்டு முருகனின் தம்பி அழகுப்பாண்டியையும் தாக்கினர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா? சாலையை மறைத்து நின்று கொண்டிருந்த மூன்று பேரை, “ அண்ணே, விலகிக்கொள்ளுங்க“ எனச் சொன்னது தான்.

“சக்கிலிச்சிக்காடா நாங்க பிறந்தோம்” எனச்சொல்லி அவரை மூன்று பேர் கடுமையாகத் தாக்கினர். இதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் காரணமாக அந்த மூன்று பேர் மீதும் வன்கொடுமைப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மூன்று மாதங்களுக்குப் பின் தான் அவர்களுக்கு பெயில் கிடைத்தது. அந்த வழக்கு இன்னமும் நடைபெற்று வருகிறது.

முருகன் தாக்கப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் அவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டு காவல்துறை மூலம் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் செல்வாக்கு படைத்தோரின் ஆதரவோடு சாதியச்சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் முருகனைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடத்தப்படும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களம் இறங்கியுள்ளது. உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட சக்திகளின் அருளாசியோடு தான் இந்த தாக்குதல் சம்பவங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

சாதி ஆணவம் படைத்தோரின் பகடைக்காயாக இல்லாமல், அழுத்தப்பட்ட மக்களில் நொறுக்கப்பட்டுள்ள மக்களாய் உள்ள அருந்ததிய மக்கள் மீது மதுரை வடிவேல்கரையில் வன்மத்தோடு நடத்தப்படும் தாக்குதல், காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இதயச்சுத்தியோடு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதற்கான போராட்டத்தை ஜனநாயக இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)