கடந்த 2011 மே, 16 அன்று திங்கட்கிழமை கோவை, மாவட்டத்தில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் தன் ஒரே செல்ல மகன் தர்சனை 1ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக தான் வேலைபார்க்கும் தனியார் கம்பெனியில் ரூ.5 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு, தன் மகன் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவான், சமூகத்தில் பெரிய ஆளாக ஜொலிப்பான் என்கிற கனவுகளோடு பள்ளியில் 5 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை கட்டியுள்ளார் பி.காம். பட்டதாரியான தாய் சங்கீதா.

பள்ளி நிர்வாகம், ஒன்றாம் வகுப்புக்கு 12ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தைக் கேட்டுள்ளார்கள். பதறிய தாய் சங்கீதா பள்ளி நிர்வாகத்திடம் எதிர் கேள்வி கேட்காமல் சிறிது நாள் அவகாசம் மட்டும் கேட்டு வந்துள்ளார். உற்சாகமாய் பள்ளிக்கு மகனை அழைத்துச் சென்றவர், சோகத்தோடு திரும்பி வந்திருக்கிறார்.

கணவர் தர்மராஜுவோ அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலையை வைத்து வாழ்க்கை நடத்துபவர். எங்கெங்கோ கடன் கேட்டு அலைந்து திரிந்திருக்கிறார். எங்கும் கிடைக்கவில்லை. எல்லோரும் மே, ஜூன் மாதங்கள் பள்ளி கட்டணத்திற்காக அல்லாடுபவர்கள்தானே, அதனால் யாரிடமும் கடன் கிடைக்கவில்லை. சாதி மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினரிடமும் ஆதரவு இல்லை.

தன் ஒரே மகனை பள்ளியில் சேர்த்து அழகு பார்க்கலாம், என்றிருந்த கனவுகள் நொருங்கிவிடுமோ என்கிற அச்சத்தில் 18-5-2011 அன்று தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். காப்பற்ற முயற்சி செய்த அவளின் கணவரும் தீக்காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 20-5-2011 அன்று தர்சனின் தாய் சங்கீதா மரணமடைந்தார்.

சங்கீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் காவல் துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில் “என் ஒரே மகன் தர்சனை பள்ளியில் 1ஆம் வகுப்பு சேர்ப்பதற்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் கேட்டார்கள். என்னால் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கட்ட முடிந்தது.

மீதிப்பணத்தை கட்ட முடியவில்லை. ஒரே ஒரு மகனை 1ஆம் வகுப்பு கூட சேர்க்க முடியாத என் நிலைமையை நொந்து எண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டேன்” என்று மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவ்வாறே காவல்துறையும் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) பதிவு செய்திருக்கிறது.

ஆனால் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. காவல்துறையினரிடம் காரணம் கேட்டால் தன் சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டால் யார் மீது நடவடிக்கை எடுக்கமுடியும் என எதிர் கேள்வி கேட்கின்றனர்.

சங்கீதா இறந்தது சொந்த காரணங்களுக்காகவா? பெர்க்ஸ் பள்ளியில் ஒன்றாம் வகுப்புக்கு அரசு ரூ.4190 தானே தீர்மானித்திருக்கிறது. அப்படியிருக்கையில் 12 ஆயிரம் ரூபாய் எப்படிக் கேட்டார்கள்? இதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிப்பதற்குக் கூட இவ்வளவு தொகையை அரசு நிர்ணயிக்கவில்லை.

அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இலவசம் என மத்திய அரசு அறிவித்ததே அது யாருக்காக? அருகாமைப் பள்ளியில் தாழ்த்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு உள்ளதே அது ஏன் தர்சனுக்கு கிடைக்கவில்லை? இப்படி பலப்பல கேள்விகள் எழுகிறது. எப்படி இருப்பினும் சங்கீதா என்கிற தாயை இழந்து விட்டோம்.

இதை தற்கொலை என்கிற கோணத்தில் பார்த்தால் தற்கொலைதான். “கொலை செய்பவனை காட்டிலும் கொலை செய்யத் தூண்டியவன்தான் முதல் குற்றவாளி” என்று சட்டம் சொல்வது உண்மையானால், பள்ளி நிர்வாகிகளை கைது செய்திருக்கவேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? அனாதையாய் போன சங்கீதாவின் மகன் தர்சன் படிப்பதற்கு அரசு உதவி செய்யுமா?மக்கள் வாக்களித்தது, வாய்க்கரிசி போடுவதற்கல்ல! வாழவைக்க!

Pin It