அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஊடகக்காரர்களுடனான தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அவர்களுக்குள் நிலவிவந்த கள்ளக்கூட்டை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அம்பலப்படுத்தல் நிச்சயமாக அவர்களுக்கு ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் கோபமடைந்துள்ளனர், அவர்களில் சிலர் அரசாங்கத்தையும் நாட்டையும் பிணயமாக வைத்துப் பேரம்பேசத் தொடங்கிவிட்டனர். இருப்பினும் இது சிறு துளி மட்டுமே, வெள்ளம் போல இது இன்னும் பெருக இருக்கிறது. 

தொழிலதிபர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவது அமெரிக்காவில் சட்டப்பூர்வமானது என்று ஒரு மூத்த அமைச்சர் சொல்ல முயற்சி செய்தார், அவர் இந்தியாவிலும் அது சட்டப்பூர்வமாகப்பட வேண்டும் என்றும் தெரிவித்து அதன் நாசத்தை குறைத்துக் காட்ட முயற்சி செய்தார். அரசியலில் செல்வாக்கு செலுத்துவது என்பது அமெரிக்காவில் அல்லது வேறுநாடுகளில் வேண்டுமானால் சட்டப்பூர்வமாக இருக்கலாம், ஆனால் ஊழல் சட்டப்பூர்வமாக இருக்க முடியாது. அமெரிக்கா நமக்கு ஒரு முன்மாதிரியல்ல. மிக உயர்ந்த பதவிகளில் இருந்த முக்கியமான அதிகாரிகளை நீரா ராடியா ஊழலில் இழுத்துவிட்டுள்ளார், தனது நிறுவனத்தில் இயக்குனர் போன்ற பெரிய பதவிகள் தருவதாக ஆசைகாட்டி அவர்கள் மூலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு உதவியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகளை அரசியலில் செல்வாக்கு செலுத்துவது என்று கூறமுடியாது.

இந்த அரசியலில் செல்வாக்கு செலுத்துவது என்பது இரண்டாவது ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் மற்றும் பிரதமர் வரையிலும் மத்திய அமைச்சரவையை அமைப்பது மற்றும் எந்தத் துறைக்கு யாரை அமைச்சராக நியமிப்பது என்னும் அளவுக்குச் அளவுக்கு சென்றுள்ளது. நீரா ராடியாவை செல்வாக்கு செலுத்தும் நபர் என்பதைக் காட்டிலும் கார்பரேட் பெருங்குழுமங்களுக்காக சூழ்ச்சித் திறன்களில் ஈடுபடுபவர் என்று விவரிக்கலாம் 

ரத்தன் டாட்டா தனது தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்தது தனது தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாகும் என்று ஆட்சேபணை தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இது, தனது உரையாடலின் எஞ்சிய பகுதிகளை வெளியிடக் கூடாது என்று அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக இருந்தது. இந்த வகையான நடவடிக்கை ‘வாழைப்பழக் குடியரசு வகையிலான (அரசியல் ரீதியாக வளர்ச்சி பெறாத) நடவடிக்கை’ என்று விவரிக்கும் அளவுக்கு அவர் சென்றார். உண்மையில் ரத்தன் டாட்டாவும் கார்பரேட் பெருங்குழுமங்களும் தாம் இந்தியாவை ‘வாழைப்பழக் குடியரசாக’ மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். 

‘இந்த நடவடிக்கைகளால் பெரிய வர்த்தக நிறுவனங்களும் கார்பரேட் பெருங்குழுமங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் பதட்டமடைந்துள்ளன’ என்றும் இந்தியாவில் முதலீடு செய்ய அவர்கள் இதற்கு மேலும் விரும்பவில்லை என்று எச்.டி.எப்.சி.யின் தீபக் பரேக் கூறியுள்ளார். டாட்டாக்கள், மிட்டல்கள், முகேஷ் அம்பானி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்துகொண்டிருக்கின்றனர் என்றும் இந்த மாற்றங்களால் தாம் வருத்தமுற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது, 

'ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. மேற்கு உலகுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பிய ஒவ்வொருவருக்கும் நாங்கள் பிரியமானவர்களாக இருந்தோம். திடீரென்று ஒரு இடைவெளி விழுந்து விட்டது. நீண்டகாலமாகக் கட்டியமைத்துக் கொண்டிருந்த நிலைமையை உண்மையில் இது நமது குறிக்கோள்களுக்கு அப்பால்கொண்டு சென்றுவிட்டது. 'பெரிய நிறுவனங்கள்     வெளியே சென்று விடப் பார்த்துக் கொண்டிருக்கின்றன’. 

வேளாண துறை அமைச்சர் சரத் பவாரும் கார்பரேட் குழுமங்கள் பதட்டத்தில் இருக்கின்றன என்று கூறி தன்பங்குக்கு எரிகிற தீயில் எண்ணெயை வார்க்கிறார். நாட்டின் ‘வளர்ச்சி’ போக்கு நின்றுவிடக் கூடாது என்று அவர் கவலைப் படுகிறார். பிரதமரும் கூட அவர்களை முதுகில் தட்டிக்கொடுத்து நம்பிக்கையை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். 

டிசம்பர் 4 அன்று, இந்தியப் பெருங்குழும வாரவிழாவுக்குப் பிறகு, பிரதமர் கூறியதாவது:

'தேசப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும் வரி ஏயப்பைத் தடுப்பதற்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவருவதற்கும் அரசாங்க அதிகாரிகளுக்குத் தொலைபேசி ஒட்டுக்கேட்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக கார்பரேட் பெருங்குழுமங்களின் சில பிரிவுகளில் பதட்டம் தோன்றியிருப்பது எனக்குத் தெரியும். 

நமது நாட்டில் கார்பரேட் பெருங்குழுமங்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கித் தரும் அரசாங்கத்தின் கடப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். தனியார் தொழில்துறையினர் அச்சமின்றி சுதந்திரமாக செயல்படுவதற்கான ஒரு சமநிலையை ஏற்படுத்தித் தர விரும்புகிறோம்.’ 

கார்பரேட் குழுமங்கள் கையாளும் நெருக்கடித் தந்திரங்களுக்கு அரசாங்கத்தின் எதிர்வினையை பிரதமரின் பதில் பிரதிபலிப்பதாக இருக்கிறது. பெருங்குழுமங்களின் ஏமாற்றம், பதட்ட நாடகம் முழுமையும் முதலீட்டை வெளியே கொண்டு செல்வதாக அச்சுறுத்துவதும் தேசத்தைப் பணயமாக வைத்து, தங்கள் தவறான செயல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதாகும். 

தீபக் பரேக் எடுத்துக்காட்டியுள்ள, இந்திய கார்பரேட் நிறுவனங்கள் அயல்நாடுகளில் முதலீடு செய்யும் உதாரணங்கள் அனைத்தும் புதியவையோ அண்மைக் காலத்தவையோ அல்ல. அவர்கள் இதை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வணிக சாம்ராஜ்யத்தை ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் வேறுபல பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்துகொண்டிருக்கின்றனர். 

இந்தியாவை விட வேறு எங்கு அந்தப் பெருங்குழுமங்கள் இந்த அளவுக்குப் பெரிய லாபங்களை ஈட்ட முடியும்? சந்தை மிதிபட்டுபோய், பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் போய் வணிகம் செய்ய அவர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? 

1990களுக்குப் பிறகு, தாராளவாதத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில்,

அதாவது பி.வி.நரசிம்மராவுக்குப் பிறகு டாக்டர் மன்மோகன்சிங் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்குக் கதவு திறந்து விட்டார், அதன் பிறகு கார்பரேட் குழுமங்கள் குதித்தெழுந்ததைவிடப் பெரும் பாய்ச்சலில் தங்கள் வணிகத்தைப் பெருக்கின. டாக்டர் மன்மோகன்சிங் அடிவருடி முதலாளித்துவம் பற்றி நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார், ஆனால் அவரது காலத்தில் தான் அடிவருடி முதலாளித்துவம் பெரும் வளர்ச்சி கண்டது, மேலும் இந்த மாற்றங்களுக்கு அவரது சொந்த கொள்கைகள் தாம் முதன்மையான பொறுப்பாகும். 

இந்த ஆண்டுகள் முழுவதிலும் கார்பரேட் துறை இந்திய அரசாங்கத்தால் மிக முக்கியமான விதத்தில் நடத்தப்பட்டது. 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் மட்டும் அவர்களுக்கு முறையே ரூ 66,901 கோடிகளும் ரூ.79,554 கோடிகளும் வருமானவரியில் விலக்கு அளிக்கப்பட்டது, மேலும் சுங்கவரி, கலால் வரி ஆகியவற்றிலும் விலக்குகள் அளிக்கப்பட்டன. 2008-2009 ல் ரூ.4,20,946 கோடிகளும் 2009-2010 ல் ரூ.4,99,340 கோடிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன, அது அரசாங்கத்தின் மொத்த வருவாய் வசூலில் 79.08 விழுக்காடாகும். அதே ஆண்டுகளில் ‘ஆம் ஆத்மி’ என்று பாசத்துடன் அழைக்கப்படும் பிற குடிமக்களுக்கு 6.22 விழுக்காடு மற்றும் 6.48 விழுக்காடு மட்டுமே வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. 2010-2011ம் ஆண்டில் கார்பரேட் குழுமங்களுக்கு ரூ.5,02,000 கோடி வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன.

இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மட்டுமே. 

கார்பரேட் குழுமங்கள் பிரதமரால் ஆதரிக்கப்பட்ட போதும், இந்தியாவில் பாதுகாப்பின்மை பற்றி குறை கூறுகின்றன. இருந்தாலும் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பிறகு பின்வரும் சொத்துக்களை ஈட்டியுள்ளனர் என்பது உண்மையே. 

பி.வி.நரசிம்மராவ், டாகடர் மன்மோகன்சிங் ஆகியோர் கைங்கர்யத்தால், 18 ஆண்டுகள் காலகட்டத்தில் கார்பரேட் குழுமங்களின் சொத்துக்கள் 50 மடங்குகள், சில நேர்வுகளில் 100 மடங்குகள் கூட அதிகரித்துள்ளன.

நாட்டின் மொத்தச் செல்வங்களும் ஒரு சில குடும்பங்களின் கரங்களில் குவிக்கப்பட்டிருக்கிறது, மேலும் மிகப்பெரிய குவிப்பு நாட்டின் இரத்தத்தை உறிஞ்சும் 300 பெருங்குழுக்களிடம் இருக்கிறது.

 நிறுவனம்

 1990

 2009

1. அம்பானிகள்

ரூ.3241 கோடி

 4,25,187

2. டாட்டா

ரூ.6851 “

 2,30,827

3. ஜிண்டால்

ரூ.

 56,937

4. எல் அன்ட் டி

ரூ.1130 “

 44,544

5. மகிந்த்ரா

ரூ. 620 “

 38,353,

6. ஜெயபிரகாஷ்

ரூ. 484 “

 25,202

7. டி.வி.எஸ்.

ரூ. 929 “

 21,267

8. பஜாஜ்

ரூ.1228 “

 28,521

இன்னொருபுறம், நொடித்துப்போவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து வருகிறார்கள், அமைப்பு சாராத் தொழில்களில் உள்ள 44 கோடி மக்கள் குறைந்தபட்ச ஊதியமோ சமூகப் பாதுகாப்போ இல்லாமல் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான கிராமங்கள் பாதுகாப்பான குடி நீர் இல்லாமல் இருக்கின்றன. ஏராளமான மக்கள் உறைவிடம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்திய கிராமங்களில் பள்ளிகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, சாலைகள் இல்லை.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அண்மைக்காலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தொழில்மயமாக்கல், வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து நிலம் வலுக்கட்டயமாகப் பறிக்கப்பட்டு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. பல லட்சக்கணக்கான விவசாயிகள் நிலங்களிலிருந்து எவ்வித இழப்பீடு அல்லது மறுவாழ்வு இன்றி தூக்கியெறியப்படுகின்றனர். 

மலைகள் உடைக்கப்படுகின்றன, நதிகளின் கால்வாய்கள் திசைதிருப்பி விடப்படுகின்றன, சட்டங்கள் திருத்தப்படுகின்றன, அமெரிக்காவிடமும் பிற நாடுகளிடமும் வணிக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக நாட்டின் இறையாண்மை அடகுவைக்கப்படுகிறது. 

தேசமும் அதன் மக்களும் தங்கத் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு கார்பரேட் பெருங்குழுமங்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றனர். 

பிறகு ஏன் அவர்கள் புகார் கூறிக் கொண்டிருக்கின்றனர்? ரத்தன் டாட்டா, தீபக் பரேக் போன்ற மனிதர்கள் வேறு என்ன தான் எதிர்பார்க்கிறார்கள்? எதற்காக நாடு பணயம் வைக்கப்படுகிறது? 

தற்போதைய அரசாங்கம் - காங்கிரஸ் தலைமையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசாங்கம் - கார்பரேட் பெருங்குழுமங்களின் அரசு அன்றி வேறல்ல. 

வரிசை

பெயர்

நிகர மதிப்பு

மில்லியன் டாலர்களில்

கோடிகளில்

ஒருமில்லியன் டாலர்=4.50 கோடி

நகரம்

1

முகேஷ் அம்பானி

27,000

1,21,500

மும்பை

2

லக்ஷ்மி மிட்டல்

26,100

1,17,450

லண்டன்

3

அசிம் பிரேம்ஜி

17,600

 79,200

பெங்களூர்

4

சசி & ரவிரூயா

15,000

 67,500

மும்பை/லண்டன்

5

சாவித்ரி ஜிண்டால்

14,400

 64,800

ஹிசார்/டெல்லி

6

அனில் அம்பானி

13,300

 59,850

மும்பை

7

கெளதம் அதானி

10,700

 48,150

அகமதாபாத்

8

குஷால் பால் சிங்

 9,200

 41,400

புதுடெல்லி

9

சுனில் மிட்டல்

 8,600

 38,700

புதுடெல்லி

10

குமார் பிர்லா

 8,500

 38,250

மும்பை

                              நியூஏஜ் வார இதழ், ஜனவரி 23-29, 2011.

எஸ்.சுதாகர் ரெட்டி

தமிழில்:வெண்மணி அரிநரன்