சோனியா காந்தியின் கைப் பாவையாக சுழன்று வரும் மன்மோகன் சிங் மத்தியப் புலனாய்வுக் குழுவான சி.பி.ஐக்கு அறிவுரை கூறியிருப்பதாக கடந்த 4ந்தேதி ஏடுகளில் செய்தி வெளியானது. மத்திய அரசின் அழுத்தத்திற்கு ஏற்ப சி.பி.ஐ செயல்படுகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் பிரதமரின் அறிவுரை கவனத்திற்குரியதாக இருக்கிறது.

“இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்புகளில் சி.பிஐ முதன்மை துறையாக விளங்குகிறது. தங்கள் பணிகளில் எந்தக் குறுக்கீடு வந்தாலும் அதற்கு சி.பி.ஐ அதிகாரிகள் பயப்படக் கூடாது. விருப்பு-வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அவர்கள் எந்த உயர் பதவிகளில் இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' - இதுதான் பிரதமரின் அறிவுரை.

பிரதமர் இப்படிச் சொன்னாலும் அது வெறும் வாய் வார்த்தை தான் பிரதமரின் கடந்தகால செயல்பாடுகள் விளக்குவதாக உள்ளன. சி.பி.ஐ விசாரணை அமைப்பு என்பது உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்று சுதந்திரமாக சுயா தீனமாக செயலாற்ற வேண்டும். அப்படியிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கிறது.

சி.பி.ஐ. விசாரணை அமைப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் மத்திய அரசு அதன் விசாரணைகளில் தலையிட்டு விசாரணையின் போக்கை திசை திருப்புகிறது அல்லது எதிர் கட்சியினர் மீது சி.பி.ஐயை ஏவி விட்டு அழுத்தம் கொடுக்கிறது என்ற விமர்சனம் மத்திய அரசின் மீது எப்போதும் உண்டு.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மட்டும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறதா என்றால்... கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சியமைத்த தேசியக் கட்சிகள் சி.பி.ஐயை தவறாகவே வழி நடத்தியிருக்கின்றன. சில நேரங்களில் சி.பி.ஐ அமைப்பின் கைகளை அரசியல் சக்திகள் கட்டிப் போட்டு விடுவதன் உண்மைகள் வெளிப்படாமலே போய் விடுகின்றன.

குஜராத் முஸ்லிம் படுகொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்திருக் கும் இடைக்கால அறிக்கையில் மோடி மீது எவ்வித குற்றச்சாட் டையும் பதிவு செய்யவில்லை. திட்டமிட்ட சதிச் செயல் என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு நரேந்திர மோடிதான் காரணம் என்பது ஊர் உலகம் அறிந்த உண்மை. இதற்கு கூடுதல் சான்றுகளாக - சமீபத்தில் மோடியை குற்றவாளி என பகிரங்கமாக அறிவித்த குஜராத் மாநிலத்தின் உளவுத்துறை அதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்ட பலர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீ குமார் என்ற குஜராத்தின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கூட வாக்குமூலம் அளித்திருந்தார்.

மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் மோடிக்கு எதிரான ஆதாரங்களை அடுக்கினார். 

தொலைக்காட்சி சேனல்களும் கூட மோடிக்கு எதிரான ஆதாரங்களை நாட்டு மக்களுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டன. ஆனாலும் மத்திய அரசுக்கு எதுவும் தெரியாததுபோல் அது நடந்து கொள்கிறது. மத்திய அரசு நினைத்திருந்தால் சி.பி.ஐ விசாரணை அமைப்பை சரியாக வழி நடத்தி மோடியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.

“தவறு செய்பவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்று சி.பி.ஐக்கு அறிவுரை கூறும் பிரதமருக்கு அதில் நம்பிக்கை இருந்திருக்குமானால் இந்நேரம் மோடி கைது செய்யப்பட்டிருப்பாரே!

சி.பி.ஐயை தனக்கு சாதமாக பயன்படுத்திய மத்திய அரசின் ஊழல்களுக்கு எதிராக பாஜக வாய் திறந்தால் அப்போது மட்டும், மோடி போன்றவர்களின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும் வேலையை செய்து கொண்டு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்'' என்றும் அறிவுரை சொல்லும் தகுதி பிரதமருக்கு இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இதேபோல, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிராக்சியா சிங் என்கிற இந்துத்துவா பெண் சாமியார் சிறைக் காவலில் வைக்கப்பட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங்கை அத்வானி சந்தித்தார். அப்போது பிராக்யா சிங்கிற்கு காவல் துறையினர் கஷ்டப்படுத்தக் கூடாது என்றும், சாமியாரிணிக்கு சில சலுகைகளும் செய்து தரப்பட வேண்டும் என்றும் அத்வானி கோரியபோது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று பிரதமர் சொன்னாரா? மாறாக அத்வானியின் கோரிக்கைகளை நிறைவேற்றவே அவர் முயற்சி எடுத்தார். இப்படி சி.பி.ஐயின் நேர்மையான விசாரணைகள் சிலவற்றில் மத்திய அரசே தலையிட்டு திசை மாற்றியிருக்கிறது.

திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் அல்லது மத்திய காங்கிரஸ் அரசை திமுக தாங்கிப் பிடிப்பதால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்திய சி.பி.ஐ., அந்த தொலைக்காட்சியின் மேலாளர் சரத்குமாரையும், கனிமொழியையும் மட்டும் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கிறது.

அந்த தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கலைஞரின் மனைவி தயாளு அம்மையாரை விட்டு விட்டு, 20 சதவீத பங்ககளை மட்டுமே வைத்திருக்கும் கனிமொழியை குற்றப்பத்திரிகையில் சேர்ந்திருப்பது சி.பி.ஐ.யின் நேர்மையற்ற விசாரணையா? பாரபட்ச விசாரணையா? தயாளு அம்மாளை குற்றப் பத்திரிகையில் சேர்க்க வேண்டாம் என்று மத்திய அரசு சி.பி.ஐ.க்கு ரகசியமாக சொல்லியிருக்கிறது என்பது இதிலிருந்து அப்பட்டமாக தெரியவில்லையா?

இந்நிலையில்... “சி.பி.ஐ அமைப்பு எந்தக் குறுக்கீட்டுக்கும் பயப்படக் கூடாது'' என்கிறாரே பிரதமர்.... அப்படியானால் மத்திய அரசைத் தவிர யாருக்கும் பயப்படக்கூடாது என்று பிரதமர் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா? இன்னும் சொல்லப்போனால்... ராஜீவ்காந்தி காலத்தில் நடந்த போஃபர்ஸ் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பிரதமரின் கட்சித் தலைவியான சோனியா காந்தியின் உறவினரான ஒட்டாவியோ குவட்ரோச்சி சி.பி.ஐ வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டபோது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, இன்று சி.பி.ஐயைப் பார்த்து அறிவுரை கூறுவதை நாம் எப்படி எடுத்துக் கொள் வது?

- அபு ஹிதாயா

Pin It