கல்வி வணிகமயம் ஆக்கப்பட்டு இருப்பதை எதிர்ப்பதாகக் கூறும் உயர்சாதிக் கும்பலினர் உண்மையில் அப்படி எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்ல; உள்ளூர அதை விரும்புகிறார்கள். கல்வி வணிகமயமாகி விட்டது; அதனால் ஏழைகள் கல்வி பெற முடியாமல் போய் விட்டது என்று கூக்குரலிடுகிறார்களே? பார்ப்பனர்களில் கற்பனைக்கும் எட்டாத வறுமையில் வாழ்வதாகக் கூறிக் கொள்பவர்கள் கூட கல்வி பெறுவதில் தடை ஏதும் காணோம். அது எப்படி முடிகிறது? கல்வி வணிகமயமானதால் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் கல்வி பெறுவதில் இருந்து தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் கல்வி பெறுவதற்கு, சாதி அமைப்பு தான் தடையாக இருக்கிறது என்ற உண்மையை மறைக்க, கல்வி வணிகமயம் ஆகியிருப்பதை எதிர்ப்பதாக வெளியில் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் 19-4-2011 அன்று கல்விக் கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கிறது என்றும், அரசாங்கம் இதில் தலையிட்டு, கட்டணத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்த பெற்றோர்கள் ஒன்று கூடி விவாதித்து இருக்கிறார்கள்.
 
          ஆனால் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25% ஏழை மாணவர்களை ஒவ்வொரு வகுப்பிலும் கட்டணம் வாங்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் எழுதியுள்ள கடிதத்தைக் கண்டு, கல்வி வணிகர்களை விட உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
 
          கல்வி உரிமைச் சட்டப்படி 25% ஏழை மாணவர்களை அனுமதிக்க வேண்டியிருப்பது, தங்கள் கல்வி வியாபாரத்திற்குக் குந்தகம் விளைவதாக நினைக்கும் கல்வி வணிகர்கள், இதை எதிர்த்துக் குரல் கொடுக்கும்படி அனைத்துப் பெற்றோர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இது சட்ட விரோதச் செயல் என்றும் இதற்கு கல்வி நிறுவனங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் 26-4-2011 அன்று கல்வித் துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
 
          ஆனால் 25% ஏழை மாணவர்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதி கல்வி நிறுவனங்களை விட உயர்சாதிக் கும்பலை மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒருவர் தன் குழந்தை தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, சிறந்த மாணவர்கள் படிக்கும் சிறந்த பள்ளிக்கு அனுப்புவதாகவும், அவர்களுடன் ஈடு கொடுக்க முடியாத மாணவர்களை வகுப்பில் சேர்ப்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்தச் சிரமப்படுவார்கள் என்றும், அதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் மனம் குமுறிக் கூறியிருக்கிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகளுடன் மற்ற மாணவர்களைச் சேர்த்து, நன்றாகப் படிக்கும் மாணவர்களுடைய படிப்பைக் கெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும், அப்படி அவர்களுக்குக் கல்வியை அளிக்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் அவர்களுக்கெனத் தனியாகப் பள்ளிகளைத் திறந்து கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார்கள். அதாவது கல்வி கற்றுக் கொடுக்காத நிலையங்களை உருவாக்கி அவற்றில் ஒடுக்கப்பட்ட வகுப்புக் குழந்தைகளைச் சேர்க்ககலாம் என்று கூறியுள்ளார்கள்.
 
          பெருந்தலைவர் காமராஜர் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என முனைந்தபோது, அப்போது இருந்த பார்ப்பன அதிகாரிகள், அப்படிச் செய்வதற்கு தமிழ்நாடடின் மொத்த வருமானமே போதாது என்று கணக்கு காட்டினர். அனைவருக்கும் கல்வி என்பது மேடைப் பேச்சுக்குத் தான் உதவும் என்றும் செயல்பாடு என்ற நிலையில் அது முடியாது என்றும் கூறினர். இதைக் கேட்டு அவர் மனம் ஒடிந்த இருந்த நிலையில், கல்வி மேதை நெ.து.சுந்தரவடிவேலு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எடுத்துக் காட்டினார். பெருந்தலைவர் கேட்ட "கிராமப்புறப் பள்ளிகள் செயல் திட்டத்தில்" வலுவான கட்டிடங்கள் கட்டவும், பெஞ்சுகள், டெஸ்க்குகள், பரிசோதனைச் சாலைகள், அவற்றிற்குத் தேவைப்படும் உபகரணங்கள் என்று பல இடம் பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டிய கல்வி மேதை அவையெல்லாம் தேவையற்றவை என்று எடுத்துரைத்தார்.

அரசின் செலவாக ஆசிரியர்களை நியமிப்பதும் கரும்பலகை மற்றும் சாக்பீஸ்களை வாங்கித் தருவதும் போதும் என்றும் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளியை மரத்தடியிலோ, கீற்றுக் கொட்டகையிலோ, முடிந்தால் வலுவான கட்டிடங்களிலோ அவரவர்கள் வசதிக்கு ஏற்ப நடத்திக் கொள்ளட்டும் என்றும் கூறினார். இதற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய செலவு அதிகமாக இராது என்பதையும், சுலபமாக ஏற்கும் அளவில் தான் இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார். உடனே உற்சாகமடைந்த பெருந்தலைவர் செயலில் இறங்கினார்.
 
          பெருந்தலைவரின் தொண்டினால் கல்வி பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் பழைய நிலைக்கே அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன், இப்பொழுது கல்வி வணிகமயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மை நோக்கத்தை மறைப்பதற்காக, கல்வி உரிமைச் சட்டம் என்ற நாடகத்தை ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம் உண்மையாக இருந்தால் கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும்; இலவசமாக மட்டுமே அளிக்க வேண்டும். கல்வியறிவின்மையைப் போக்குவதற்கு உலகம் முழுவதும் இம்முறை தான் கையாளப்பட்டு உள்ளது. பொருளாதார மேதையும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் இதைத் தான் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
 
          ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த, அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்குக் கடிதம் எழுதுவதும், பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதும், பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும், பொழுதைப் போக்கும் செயல்களே. இப்பொழுதும் உயர்சாதிக் கும்பலினர், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கல்வி வணிகமயமாகி இருப்பதை எதிர்ப்பது பாசாங்கு செய்கின்றனர்; ஆனால் உண்மையில் அதை ஆதரிக்கவும் இலவசக் கல்வியை எதிர்க்கவும செய்கின்றனர். அனைத்து மக்களுக்கும் கல்வியைத் தர வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு உண்மையில் இருந்தால் பெருந்தலைவர் நடவடிக்கை எடுத்தது போல் எடுக்க முடியும். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறக் கூடாது என்ற எண்ணத்தடனும் அதே நேரத்தில் அனைவருக்கும் கல்வியைத் தர அரசு முயன்று கொண்டு தான் இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதற்காகவும் தான் இச்சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
           பார்ப்பனர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அன்று போல் பெருந்தலைவரும் கல்வி மேதையும் இப்போது இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் தான் நாம் கல்வி பெற வழி வகுக்கும். நாம் என்ன செய்யப் போகிறோம்?
 
- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)