அருகிவரும் அபூர்வ நாட்டுப்புறக் கலையான லாவணி பற்றிய ஒரு ஆவணப்படத்தை தஞ்சைத் தமிழ்க்கூடம் வெளியிட்டுள்ளது. தோழர் தஞ்சை சாம்பான், திருமதி பரிமளா ராஜகுமாரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியவர் எஸ்.ராஜகுமாரன். முனைவர்கள் கு.முருகேசன், ஆர்.விவேகானந்த கோபால் இருவரும் இந்த லாவணிக் கலையின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி இடையிடையே விளக்கிப் பேசியுள்ளனர். தஞ்சை ரெங்கராஜன் குழுவினரின் தப்பாட்டமும் சிறிது இணைக்கப்பட்டுள்ளது.

எதிர் எதிராக அமர்ந்து டேப் அடித்துப் போட்டியிட்டுப் பாடும் இந்த லாவணிக்கலை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வந்ததாகும். காமதகனம் என்றும், எரிந்த கட்சி-எரியாத கட்சி என்றும் தமிழகம் முழுவதும் இக்கலை பரவியது. பழங்கலைகள் ஆதரிப்பாரின்றி அழிந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென்ற வேண்டுகோள் இதில் விடுக்கப்பட்டுள்ளது.

பழைய சக்கரவர்த்தித் திருமகள் திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யும், எம்ஜிஆரும் டேப் அடித்து லாவணி பாடுவார்கள். கேலியும், நையாண்டியும், எக்காளமும், ஆரவாரமுமாய் அதை மக்கள் மிகவும் ரசித்துக் கொண்டாடினர். காலத்தோடு, குறிப்பாக சமகாலப் பிரச்சனைகளோடு இணையாத கலைகள் தான் அழிகின்றன. லாவணியிலும் சமகால மக்களின் வாழ்க்கை, இன்பதுன்பங்கள், வெற்றி தோல்விகளை உள்ளடக்கமாக உருவாக்கினால் மக்கள் ரசிக்கவே செய்வர். எத்தனை காலத்திற்கு மன்மதன் எரிந்த கதையையே அல்லது ஒரே ராகத்தையே மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். இசை வடிவங்களும், இசைக் கோர்வைகளும், கருவிகளும் வேகமாய் மாறி வரும் காலமிது.

லாவணிக் கலைஞர்களான எம்.கே.அப்துல்காதர், ஆர். சச்சிதானந்தமும் அருமையாகப் பாடியுள்ளனர். ஆனால் புதிய தலைமுறையினருக்கு பாடலோ, கதையோ ஒன்றும் தெரியாது என்பதால் இது புரியாது.

எனவே லாவணிக் கலையைப் பாதுகாக்க வேண்டுமானால் அதற்கு முதலில் கவிஞர்கள் முனவர வேண்டும். நவீன கால உள்ளடக்கம் கொண்ட பாடல்களைப் புனைந்து தர வேண்டும். லாவணிக் கலைஞர்கள் அப்படி மேடைகளில் பாடி, பேசி வந்தால் நிச்சயமாக மக்கள் ஆதரிப்பார்கள். இக்கலையும் அழியாதிருக்கும். ஆனால் இப்படத்தை மிகவும் திறம்பட எடுத்துள்ள தஞ்சைத் தமிழ்க்கூடத்தை மனமாரப் பாராட்ட வேண்டும்.

வெளியீடு:-

தமிழ்க்கூடம்

புதிய எண்: 18/3 இராமானுஜம் தெரு

தி.நகர், சென்னை - 600017

விலை ரூ.110-

(செம்மலர் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

Pin It