கடுமையான விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அரிசி, பருப்பு விலைகள் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அந்தக் காலங்களில் வெங்காயம் விற்று தங்கம் வாங்கிய நிலை மாறி, தற்போது தங்கத்தை விற்று வெங்காயம் வாங்கி உணவுப் பொருட்களுக்கு சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கினாலும், சாதாரண ஏழை மக்கள் இதர செலவுகளுக்காக நாள்தோறும் ரூ.80/- செலவு செய்ய வேண்டியநிலை உள்ளது. தமிழகத்திலும், நாடு முழுவதிலும் நெல் உற்பத்தி கடந்தாண்டை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ள போதிலும், வெளி மார்க்கெட்டுகளில் கொள்ளை விலை வைத்து விற்கப்படுகிறது.ஆனால் ஆளும் அரசு உணவுப் பொருள் விலைவாசி உயர்வு எந்த பாதிப்பையும் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை என்று கூறிவருகிறது.

தமிழகத்தில் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ரூ.94ம், விவசாய பணிகளுக்கு ரூ.80/-ம், தீப்பெட்டி தொழிற்சாலையில் ரூ.54/-ம் தினக்கூலியாக கிடைக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் அனைத்துவிதமான அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கடுமையாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக 2004ல் பால்விலை ரூ.12ஆக இருந்தது. தற்பொழுது 2011ல் ரூ.24ஆக உயர்ந்திருக்கிறது. 2010 ஜனவரி மாதத்தில் ரூ.3க்கு விற்கப்பட்ட செங்கல் 2011ல் ரூ.7 ஆக உயர்ந்திருக்கிறது. 2010ல் சிமெண்ட் விலை ரூ.225ஆக இருந்தது. தற்போது 2011ல் ரூ.270ஆக உயர்ந்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பேருந்து கட்டணம் எந்தவிதஅரசு உத்தரவும் இல்லாமல் டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், PP, TSS என்று பலவித பெயர்களைச் சொல்லி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை,கோவை, சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் குறைந்தபட்ச டிக்கட் கட்டணம் ரூ.5 என உயர்த்தப்பட்டிருக்கிறது.

வீடுகளுக்கான மின்கட்டணம் மிக நுட்பமாக யூனிட் கணக்கிட்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும், சிறு தொழில் செய்பவர்களுமே.கடந்த 2010ல் உணவு மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.4000 கோடி, ஆனால் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.3750கோடியே ஆகும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கக் கூடிய நிலையிலேயே இந்த நிதிக்குறைப்பு என்பது செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொது விநியோகத்தை சீரழிக்கக் கூடிய நடவடிக்கையாகும்.மூன்றாம் உலக நாடுகளில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு தேவையான உரங்களின் விலையும், விதைகளின் விலையும் மிகப் பெரும் பன்னாட்டு ரசாயன நிறுவனங்களின் கைகளிலும், விவசாய தொழில் நிறுவனங்களிலும் சிக்கி தவிக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து வளரும் நாடுகளிலுமே உரங்கள் மற்றும் விதைகளின் விலை விவசாயிகளால் எளிதில் வாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.வளர்ந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் பெயரால் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் வெட்டப்பட்டுள்ளன. பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.இதனால் பல்வேறு குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வால் பல குடும்பங்கள் பட்டினிக் கொடுமை கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போல் உணவுதானிய பற்றாக்குறையால் தற்போது ஏற்படவில்லை. மிகப்பெரும் அளவு உணவு தானியம் குவிந்து கிடந்தாலும் அதை மக்களால் வாங்க முடியவில்லை என்பதே உண்மை.2009இல் காங்.--திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின், பெட்ரோல், டீசல் விலை உயர்வு 10 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவு தானிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யாமல் விலை உயர்வை தடுத்து நிறுத்த இயலாது. 2009--10ஆம் நிதியாண்டில் முன்பேர வர்த்தகம் ரூ.77.50இலட்சம் கோடிக்கு நடைபெற்று இருக்கிறது. இது 2010--2011ம் நிதியாண்டில் இன்னும் இரண்டு மாதத்தில் ரூ.110 இலட்சம் கோடியை எட்டிவிடும். 2010-அக்டோபரில் மட்டும் வேளாண் பொருட்களின் முன்பேர வர்த்தகம் 25 சதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் 8 மாதங்களில் மட்டும் முன்பேர வர்த்தகத்தில் வேளாண் விளைபொருட்களின் வர்த்தகம் 6.51இலட்சம் கோடிக்கு நடைபெற்று உள்ளது. உலகப் பொருளாதார மந்த நிலையால் பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் அதிகம் இலாபம் ஈட்ட முடியாத முதலீட்டாளர்கள் தற்போது உணவுப் பொருள் ஆன்லைன் முன்பேர வர்த்தகத்தில் இறங்கிவிட்டனர்இந்த முன்பேர வர்த்தகத்தை தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் அரசின் கூட்டணியில் தி.மு.க.வும் உள்ளது.

ஆனால் திடீரென்று மக்களின் மேல் கரிசனம் காட்டுவதுபோல் தற்போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முன்பேர வர்த்தகத்தை தடைசெய்வோம் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. தற்பொழுது விலைவாசி உயர்வுக்கு மற்றொரு காரணமாக விளங்குவது பதுக்கல். அத்தியாவசியப் பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கிக் கொள்ளலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது பி.ஜே.பி. அரசு. இதன் விளைவாக பொருட்களை பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு தி.மு.க.வும் காங்கிரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டுப்பாடற்ற வணிகத்தை கொண்டுவந்து காய்கறி கடை வரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து, அரசின் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற நிலையை உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக முக்கியக் கூட்டாளியாக இருக்கிறது.

3737 விவசாயிகள் தற்கொலை... 

மகாராஷ்டிராவிலா? இல்லை.... நமது தமிழகத்தில்தான்.கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது தமிழகத்தில் 3737 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய குற்றப்பதிவு மையம் அளிக்கும் தகவல் இது. ஆனால் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி சொல்வதோ வெறும் 3 மட்டுமே...

2011 ஜனவரி 9 இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு முதல் பக்க செய்தியாக இத்தகவலை விவரமாக வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இது. தமிழக அரசு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது... சென்னை வளர்ச்சி மையத்தில் (Madras Institute of Development Studies - MIDS) பணியாற்றிய பேராசிரியர். கே. நாகராஜ், 1997 முதல் 2005 வரையிலான தற்கொலைகள் பற்றி ஆராய்ச்சி செய்தவர். உள்ளூர் போலீஸ் மூலம் தகவல் பெற்றதால், நம்பகத்தன்மை உள்ள விவரங்கள் இவை என்கிறார். ஆதாரப் பூர்வமானதும் கூட என்கிறார். 

(MIDS) ஐ சார்ந்த எஸ். ஜனகராஜன் கருத்தும் இதுவே. பேராசிரியர். கே.நாகராஜ் சொல்வது. நான் விரிவான ஆராய்ச்சி செய்துள்ளேன். மூன்றே மூன்று தற்கொலைகள் தான் கடந்த 5 ஆண்டில் நடந்துள்ளது என்று தமிழக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது. கேள்விக்குரியதும் கூட. (NCRB) சேகரிக்கும் விவரங்கள் நேரடியாக கிராமப்புற காவல் நிலையங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை.     

Pin It