தமிழகத் தேர்தலும் நமது நிலையும்

தமிழகத் தேர்தலுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 13 ம்தேதி நடைபெறும் என் அறிவிக்கப்பட்டவுடன் ஊடகங்கள் பரபரப்பை உருவாக்கத் தொடங்கி விட்டன. தமிழகத்தின் அனைத்து முக்கியப் பிரச்சினைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. கட்சிகளிடையே கூட்டணி குறித்தும் அதன் பின்னணி யாருக்கு சீட்டு தரப்போகிறார்கள் என்றும் ஊதிப்பெருக்கி பத்திரிக்கைகள் பெரும் வியாபாரத்தில் இறங்கி விட்டன. இப்போது மக்களின் பிரச்சினைகளே திமுக அதிமுக கூட்டணிகள் தேர்தல் உடன்பாடுகள் என்றாகி விட்டது. இதுவரை மக்களை ஏறெடுத்தும் பார்க்காத அரசியல் கட்சி தலைவர்கள் ஓட்டுப் பொறுக்குவதற்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று கூழைக்கும்பிடு போடத் தொடங்கி விட்டனர்.

karunanidhi_213நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் அரசியல் கட்சித் தலைவர்களின் சவடால்களும் தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஊதிப் பெருக்கப்பட்ட அனுமானங்களும் நிரம்பி வழியகின்றன. லட்சங்களில் கூட எத்தனை பூஜ்யங்கள் இருக்கும் என்று அறியாது அதை நினைத்தும் பாத்திராத உழைக்கும் மக்கள் ஊழல் பல இலட்சம் கோடிகளில் நடந்துள்ளது என்பதை நினைத்தும் பேசியும் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளனர். அதே சமயத்தில் அப்படி உலக சாதனைகளை முறியடித்த ஊழல் பணம் இத்தேர்தலில் செலவழிக்கப்பட போவதாகவும் மக்களின் அதிர்ச்சி கலந்த உரையாடல்களில் உள்ளன. அதனால் எந்த தேர்தலிலும் இருக்கும் மக்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் அனைத்து ஓட்டுக்கட்சிகள் மீது உள்ள சலிப்பும் கோபமும் அதிகரித்துள்ளது.

இன்னொருபுறம் அண்ணன் அஞ்சா நெஞ்சன் துவக்கி வைத்த திருமங்கல வழி முறை பணப்பட்டுவாடா கலாச்சாரமும் மற்ற கட்சிகளுக்கு பீதியை கிளப்பி உள்ளது. (அமெரிக்க தூதரக அதிகாரியிடம் அழகிரியின் நேரடி உதவியாளரால் தாங்கள் ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அளித்ததாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது விக்கிலீக்ஸ் இணையதள தகவலாக அம்பலப்படுத்தப்பட்டு அது இந்து நாளேட்டில் முதல் தலைப்பு செய்தியாகவும் வெளியிடப்பட்டது. இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை) இப்படி எல்லா வகையிலும் இழிந்து விட்ட தேர்தல் சூழல் நமக்கு முன்னே பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

இத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்குமா? தமிழகத்தின் பிரச்சினைகளை தேர்தல் மூலம் தீர்த்து விட முடியுமா? நாம் யாருக்கு வாக்களிப்பது? யாரை வெற்றி பெறச் செய்வது?

கொள்ளைக்கார சந்தர்ப்பவாதக் கூட்டணிகள்

முதலில் போட்டியிடும் அணிகளின் அரசியல் பின்னணியை பரிசீலிப்போம். 63 தொகுதிகளை அதுவும் தான் விரும்பிய தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது என்று கூறி விட்டு நடுவண் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொள்வதாகவும் வேதனையுடன் அறிக்கை விடுத்தார். நடுவண் அரசிலிருந்து விலகிக் கொள்வதாக முடிவெடுத்தபோது இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அஞ்சா நெஞ்சன் அறிக்கை விடுத்தார். திமுகவின் ஜால்ராவான வீரமணி சுயமரியாதையுடன் முடிவெடுத்தாகவும் ஒட் டு மொத்த உலகத் தமிழர்களும் இந்த முடிவை வரவேற்பதாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் காங்கிரஸ் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று சவடால் அறிக்கை விடுத்தார். இந்த வீராவேச சவாடால்களை விடுத்த மறுநாளே காங்கிரஸ் தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அக்கட்சி கேட்ட 63 தொகுதிக்கும் ஒப்புக் கொண்டு உடன்பாடு செய்து கொண்டார். தங்களின் தலைவரின் சுயமரியாதையின் வீரியத்தை புரிந்து கொண்டதாலோ என்னவோ டெல்லிவரை சென்று ராஜினாமா கடிதங்களை கொடுக்காமல் கையில் வைத்திருந்த திமுக எம்பிக்கள் சென்னை திரும்பினர்.

ஏன் திமுக திடீரென்று காங்கிரசிடம் அடிபணிந்தது? என்பதற்கான திரைமறைவு இரகசியங்கள் உடனே அம்பலமாகின. அது 3 சீட்டுகள் அதிகமாக கேட்டதனால் கூட்டணி முறிந்து விடவில்லை. 2ஜி அலைக்கற்றை பேர ஊழல் தொடர்பாக தனது குடும்பத்தினரை கைது செய்வதை தடுக்க வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்ததை காங்கிரஸ் மறுத்து விட்டதே காரணம். அலைக்கற்றை பேர ஊழலை வைத்து மிரட்டியதால்தான் திமுக முன்னதாக 60 இடங்களுக்கு இறங்கி வந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் 3 சீட்டுகளுக்காக என்ற பெயரில் உலக இலக்கியம் அறிந்த தனது அருமைப்புதல்வி ஊழலில் உலக சாதனை புரிந்ததற்காக அவர் கைதாகமல் தடுக்கவே அமைச்சர்களை பதவி விலக செய்தார். ஆனால் இதே நடவடிக்கையை மூன்று லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆடாத சதை தனது குடும்ப உறுப்பினர்களுக்காக ஆடியது. பல லட்சம் கோடி ரூபாய்களை சுருட்டிய திமுக தலைமை பண பலத்தையும் அதிகாரபலம் மற்றும் இலவச டிவி ,ஒரு ரூபாய் அரிசி போன்ற கவர்ச்சி திட்டங்களை மட்டும் நம்பியே களமிறங்குகிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நேரு காலம் தொடங்கி ஊழலிலும் அதிகார முறைகேடுகளிலும் வரலாறு படைத்தவர்கள். இந்திராகாலத்தின் எமர்ஜென்சி என்ற பெயரில் பாசிச காட்டாட்சியை அமல்படுத்தியவர்கள். பீரங்கிபேர ஊழல் தொடங்கி காமன் வெல்த் ஊழல் அலைக்கற்றை ஊழல் என பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள் தொடர்ந்து செய்து வருபவர்கள். உலகமயமாக்கல் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி நாட்டை காட் ஒப்பந்தத்திற்கு அடகு வைத்தவர்கள். இந்திய வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் தடையின்றி கொள்ளையடிக்க திறந்து விட்டு அதன் பங்காளிகளாக இருந்தவர்கள் காங்கிரசார். ஈழத்தை இரத்த சேற்றில் மூழ்கடிக்க ராஜபக்சேவுக்கு அனைத்து வகையிலும் உதவியது காங்கிரஸ். ஈழத்தமிழர்கள் அநீதியான போரில் கொடூரமாக கொல்லப்பட்டபோது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உலக நாடுகள் திரளாமல் தடுத்த கொண்டது காங்கிரஸ் ஆட்சி ( இந்து நாளேட்டில் விக்கி லீக்ஸ் இதை ஆதாரபூர்வமாக தகவல்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது).

இப்போது உலக மகா ஊழலிலும் கொள்ளையிலும் பங்கு இருக்கிற போது எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என்ற அடிப்படையில் திமுகவுடன் உடன்பாடும் கூட்டணியும் கொண்டதுதான் காங்கிரஸ். பா.ம.கவை பொறுத்தவரை நாடறிந்த சந்தர்ப்பவாதிகள். தனது வாரிசுக்காகவே கொள்கை பேசும் அப்பட்டமான நயவஞ்சக அரசியல்வாதிகள். உலகமே அதிர்ச்சியில் ஆழ்த்திய அலைக்கற்றை ஊழலை ப்பற்றி மூச்சுச்கூட விடவில்லை. அதே போன்று காங்கிரஸ் அரசுதான் ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய படுகொலைப் போரில் உலகநாடுகள் தலையிடாமல் தடுத்தது என்பது ஆதாரத்துடன் வெளியானபோதும் இவர்களும் விடுதலைச் சிறுத்தைகளும் கண்டு கொள்ளவில்லை. சாதிவெறியில் மூழ்கிதிளைக்கும் பா.ம.க இன்னும் தனது சாதியினரிடம் மாநாடு நடத்திக்கொண்டே சமூக நீதியையும் பேசும் வேடதாரிகள். தேர்தல் முடிந்தவுடன் பதவிக்காக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயங்காத மூர்க்கமான பதவி பேராசைக் கொண்ட கும்பலாகும். தனது மகன் எம்பி சீட்டுக்காக கருணாநிதியுடம் பலமுறை காவடி எடுத்து கெஞ்சி கூத்தாடியதை நாடே அறிந்த கதை..

எதிரணியை பொறுத்தவரை கடந்த கால ஆட்சியில் நிலபேர ஊழல் துவங்கி சத்துணவு முட்டை, சுடுகாட்டு கூரை வரை அனைத்து துறைகளிலும் ஊழல் புரிந்தவர்கள், வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணத்தால் உலகப்புகழ் பெற்றவர்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று கூறிய ஜெயலலிதா அன்று ஈழ விடுதலை ஆதரவாளர்களை வேட்டையாடியதை யாருக்கும் மறந்திருக்க முடியாது. ஒரே இரவில் பல ஆயிரம் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது அவர்களின் தலைவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தது. மத மாற்றம் தடைச்சட்டம், கோவில்களில் ஆடு வெட்ட தடை, பத்திரிகையாளர்களை கைது செய்ததது என அடுக்காக பார்ப்பனிய பாசிச தர்பார் ஆட்சியே நடத்திய பெருமையுடையவர்கள். பிற கட்சி தலைவர்கள் தன்னுடைய கட்சி தலைவர்கள் என யாருமே அணுக முடியாதபடி அகம்பாவத்துடன் தொடர்பற்ற நிலையிலேயே எப்போதும் இருக்கும் ஜெயலலிதா தேர்தல் கூட்டணியை எப்படி ஏதேச்சதிகாரமாக கையாண்டார் என்பது அனைவருமே அறிந்த ஒன்று.

அரசியல் அடிப்படையின்றி முதலமைச்சர் கனவுடன் சவடால் அடித்து விஜயகாந்த் இது வரை பேசிய அரசியலே சுருக்கமாகச் சொன்னால் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்பதைத்தான். அது கொள்ளையடிக்கவா என்பதை வெளிப்படையாக கூறுவதில் அவருக்குள்ள தயக்கம் தெரிகிறது. 30 மற்றும் 40 சீட்டுகளுக்காக கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என்றெல்லாம் சினிமா வசனம்பேசிய மானஸ்தரை மக்கள் தேடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை சிறுதாவூர் நிலப்பிரச்சினை குறித்து வாயே திறக்கவில்லை.

jayalalitha_thevar_370போட்டியிடும் இரு அணிகளுமே சாதாரண மக்களின் பிரதிநிதிகளே அல்ல. பன்னாட்டு முதலாளிகளின் எடுபிடிகளாகவும் இந்திய கார்ப்பரேட்டுகளின் உணர்வுப்பூர்வமான பிரதிநிதிகளாகவும் வலம் வருபவர்கள். இக்கட்சிகளால் தமிகத்தின் நீண்டநாள் பிரச்சினைகளான காவிரி மற்றும் பெரியாறு போன்ற நதி நீர் பங்கீடு பிரச்சினைகளையோ வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம் தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்குதல், அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பில் தமிழ் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை அளித்தல் போன்ற அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஏனெனில் திமுக கூட்டணியிலும் அதற்கு எதிரணியான அதிமுக கூட்டணியிலும் விஜயாகாந்த் உள்ளிட்டு வணிக கல்லூரிகள் தொடங்கி கொள்ளை அடிக்கும் முதலாளிகளே நிறைந்துள்ளனர்.

போட்டியிடும் இரு அணிகளுமே உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு ஆதரவானவை. விவசாய நிலங்களையும் ,கடற்கரை நிலங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் சிறப்பு பொருளாதரா மண்டலங்களுக்கு தாரை வார்ப்பதில் போட்டி போடுபவை. அப்படி ஏழை விவசாயிகள், மீனவர்களின் நிலங்ளை அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு அளிப்பதை தொழில் வளர்ச்சி என்று பெருமை அடித்து கொள்பவை.

பெயரளவில் தலித் கட்சிகளை அந்த மக்களிடம் ஓட்டு பொறுக்குவதற்காக இரு அணிகளும் கூட்டணி சேர்த்திருந்தாலும் திமுக, பா.ம.க ,அதிமுக, தேதிமுகவின் சாதிய கண்ணோட்டம் அனைவருமே அறிந்த ஒன்று. தலித் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இயலாத அளவில் தீண்டாமை கடைபிடிப்பவை. (திருமாவளவன் தனியே பிரச்சாரம் செய்வதாக அறிவுள்ளதை நினைவுபடுத்தவும்) தலித் மக்கள் தாக்கப்பட்டாலோ அவர்களின் நிலங்களும் மீனவ மக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலோ துரும்பபைக் கூட எடுத்துப்போடாதவை.

லஞ்ச ஊழலிலும் சந்தர்ப்ப வாதத்திலும் மூழ்கி திளைத்துள்ள இந்த இரு அணிகளுமே ஓட்டு பொறுக்குவதற்காக பல வித வேடங்களை புனைந்து வருகிறார்கள். இவர்களில் யாருக்கு ஓட்டு போடப்பபோகிறோம் என்று கேள்வி எழுப்புவதை விட யாருக்கு நம்மை கொள்ளையடிக்க உரிமை அளிக்கப்போகிறோம் என்று கேட்பதே பொருத்தமாக இருக்கும். எரிகின்ற கொள்ளியில் எது நல்ல கொள்ளி ? இதில் காங்கிரசை மட்டும் தோற்கடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க வுக்கு மறைமுக ஆதரவு அளிப்பது ஆகும். காங்கிரசுடன் போட்டி போட்டுக் கொண்டு பன்னாட்டு முதலாளியாக (ஆசியாவின் பணக்காரர்களின் வரிசைப்பட்டியலில் 23 ஆவது இடத்தில் இருப்பவர்கள்) வளர்ந்துள்ள திமுகவை குறைத்து மதிப்பிடுவதாகும். எல்லாவகையிலும் கபட வேடதாரிகளான திமுகவின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் ஈழத்தில் இன அழிப்பு போர் நடந்திருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது மீண்டும் ஒ ருபார்ப்பனிய பொற்காலத்திற்கு வித்திட்டு ஈழ ஆதரவாளர்களை நசுக்குவதற்கு அனுமதிப்பதாகும்.

அப்படியானால் இக்கட்சிகளில் நல்லவர்களே இல்லையா? இக்கட்சிகள் நீங்கலாக மக்களுக்காக பாடுபடும் சுயேட்சைகளுககு வாக்கு அளிக்க கூடாதா? என்று கேள்விகள் எழுகின்றன.

உண்மையில் எந்த நல்லவரோ, வல்லவரோ, தேர்ந்தெடுக்கப்பட்டாலும் எதுவுமே இந்த ஆட்சி அமைப்புக்குள் செய்ய முடியாது என்பதே உண்மை. முதலாவதாக, நமது நாட்டிலுள்ள ஆட்சி முறையானது நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையாகும். நாடாளுமன்றம் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) சட்டப் பேரவை, சட்ட மாமன்றம் ஆகிய அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலின் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு எந்தவித அதிகாரங்களுமில்லை.

இவர்கள் சட்டசபையிலோ, நாடாளுமன்றத்திலோ சட்டங்கள், கொள்கைகள், திட்டங்களை இயற்றுவதற்கு தான் அதிகாரம் உள்ளது. அவற்றை அமல்படுத்துவதற்கு அல்ல. அதுவும் அமைச்சகத்திலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தயாரிக்கும் சட்டங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தான் இயற்றுவது சாத்தியம். அமல்படுத்தும் அதிகாரங்கள் அதிகாரிகளிடம்தான் உள்ளன. இப்படி மக்கள் பிரதிநிதிகள் கொண்ட கலைகளின் மூலமாக ஆட்சி புரிவது அரசாங்கம் என்றழைக்கப்படுகிறது.

ஆனால் நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்வித அதிகாரங்களும் இல்லாத பட்சத்தில் நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாத பட்சத்தில் நம்மால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள்தான் நம்மை ஆள்கின்றன. மத்தியில் மிக உயர்ந்த நிலை அதிகாரிகளிலிருந்து கிராமத்திலுள்ள கிராம சேவக்/தலையாய வரை உள்ள அதிகாரிகளின் அமைப்பே அரசு என்றழைக்கப்படுகிறது. இந்த அரசு தான் அல்லது அதிகாரவர்க்கம்தான் உண்மையில் (சட்டப்படியும்) அதிகாரங்களை குவித்துக் கொண்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டங்களின்படி எந்த அதிகாரியும் விசாரணையிலிருந்து தண்டனை பெறுவதிலிருந்து விதிவிலக்கு பெற்றவராவர்.

தவறு செய்யும் அதிகாரியை அதுவும் குறிப்பாக உயர்நிலை அதிகாரி மீது தனிநபர் ஒருவர் தனிப்பட்ட புகார் தரலாம். அவருக்கு மேல் நிலையிலிருக்கும் அதிகாரியிடம்தான் தர வேண்டும். இவர்களே உண்மையில் அதிகாரங்கள் உள்ளவர்கள். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளுக்கு எந்தவித அதிகாரமுமில்லை. தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கத்தினருக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன. ஒரு நாட்டில் தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அங்கே அரசு நிர்வாகம் எந்தவித தடையுமின்றி நடந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற முழு திரையின் பின் அதிகாரவர்க்க ஆட்சியே நடைபெறுகிறது. 

அப்படியே தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர். அல்லது தனிப்பட்ட முறையிலும் ஊழலிலும் ஊதாரித்தனத்திலும் திளைக்கின்றனர். கொடுத்த வாக்குகுறுதிகளோ தேர்வு செய்யப்பட்ட பின்னர் கைவிட்டு அவர்தம் தொகுதியிலிருந்தே தலைமறைவாகி விடுகின்றனர். இப்படி தவறுகளையும், கொள்கையை கைவிட்டு சந்தர்ப்பவாதத்தில் மூழ்கினாலும், கொள்ளையடித்தாலும் மக்களுக்கு துரோங்களை இழைத்தாலும் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் எப்படியாவது தண்டிக்க முடியுமா? நம்மால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. இத்துடன் சட்ட சபைக்கு போகாமல் அவர்கள் பெறும் சம்பளம், தினப்படி, அங்கு போய் தூங்குவது, அரட்டை அடிப்பது, கொள்ளையடிப்பதற்கென்றே கொடுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 65 கோடி (எம்.எல்.ஏக்கு ஆண்டு 1 கோடி எம்பிக்கு ஆண்டுக்கு 2 கோடி) ஆகியவை குறித்து எங்கும் புகார் செய்ய முடியாது. இப்படி தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கவோ, அவர்களைத் தண்டிப்பதற்கோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிகாரமும் இல்லை. அதிகபட்சம் போனால் அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வாக்குப் போடாமல் அவர்கள் வெற்றி பெறுவதிலிருந்து தடுக்க இயலும். தோல்வி அடைந்த அந்த ஊழல்வாதிகள் 5 ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பழைய கதையை தொடருவார்கள். இதுதான் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் அவலம் ஆகும்.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த உள்ளீடாக சாதி அமைப்பு உள்ளது. இப்போலி ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரமாக உள்ள இந்திய அரசியல் சட்டத்திலேயே தீண்டாமை கடைபிடிப்பது பற்றி மட்டுமே குற்றம் என்கிறது. ஆனால் சாதி அமைப்பு இருக்கும் வரை தீண்டாமையும் இருக்கும் என்பது அறிவியல் உண்மை. சாதி அமைப்பும் தீண்டாமையும் பிரிக்க முடியாத இயற்கையான உயிரியல் தொடர்புடையவை. ஆனால் அரசியல் சட்டம் சாதி அமைப்பை ஒழிப்பது குறித்தோ அதை கடைப்பிடிப்பதை குற்றம் என்றோ எந்த பிரிவும் பேசுவதில்லை. அதனால் இங்கு நாடாறுமன்ற ஜனநாயகம் சாதிய அமைப்பிற்கு ஏற்றவாறு செயல்படுகிறது. தேர்தல் முறையே சாதியை அடிப்படையாக கொண்டு நடைபெறுகிறது. எந்த தொகுதியில் எந்த சாதியினர் உள்ளனரே அந்த சாதியினரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதில் இடது சாரிகளும் விதிவிலக்கல்ல. தலித் மக்களுக்கோ அல்லது எந்த ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் வாய்ப்பே வழங்காத‌ இத்தேர்தல் முறை. எனவே அனைத்து ஆதிக்கசாதிகளுக்குள்ளேயே இங்கே ஒரே சம வாய்ப்பு என்பது இல்லை. இதில் எங்கே தலித் மக்களின் பிரதிநிதிகள் வர வாய்ப்யுள்ளது? இந்த அமைப்பும் தேர்தல் முறையும் மறுபடியும் மறுபடியும் சாதிய உணர்வையும் சாதி அமைப்பையும் உற்பத்தி செய்வதாக அதன் ஊற்றுக்கண்ணாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஏற்கனவே பார்த்தது போல், இத்தேர்தலில் போட்டியிடும் எந்தக் கட்சியினரும் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளாக உள்ள வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், கல்வியின்மை, தலைவிரித்தாடும் இலஞ்சம், இலாவண்யம் போன்றவற்றை தீர்க்க எந்த விதத் திட்டத்தையும் முன் வைக்கவில்லை. நிலப் பிரபுத்துவ தயாள மனப்பான்மையுடன் மக்களுக்கு தர்மம் செய்யும் பாணியில் இலவசத் திட்டங்களை வாரி இறைத்துள்ளனர். இதன் மூலமாக, மக்களை நிரந்தரமாக கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட முயற்சித்துள்ளனர். இவற்றை விட மிக முக்கியமானதாக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் நமது நாட்டையும், நாட்டின் வளங்களையும் ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைப்பதிலும், ஒவ்வொன்றாக விற்பதிலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னனியில்தான் உள்ளன. எந்த ஒரு கட்சியும் நாடு மீண்டும் காலனியாதிக்கத்திற்குள்ளாவது குறித்து கவலைப்படாதது மட்டுமின்றி, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவே செய்கின்றன. 

எனவே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை காலனியாக்குவதையே மேற்கொள்ளும். இதிலிருந்து நாடு தப்பிக்க முடியாது. இப்படி எரிகின்ற அடிப்படைப் பிரச்சனையில் எந்தவித அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்காது பதவிக்கான கூட்டணிகளை இப்போது போட்டியிடும் கட்சிகள் அமைத்துள்ளன. இக்கூட்டணிகளைக் கலப்படமற்ற முற்றிலும் பிழைப்புவாத சந்தர்ப்பவாதக் கூட்டணிகளாகவே கருத இயலும். இறுதியில் இக்கூட்டணிகள் மக்கள் விரோத கூட்டணிகளே.

இவையனைத்தையும் ஒரு சேர தொகுத்துப் பார்க்கும் போது, தலித் மக்களாகிய நமக்கோ அல்லது எந்த பிரிவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ தமிழர்களுக்கோ இத்தேர்தலினால் எந்தவித பயனும் இல்லை, புறக்கணிப்பே சிறந்த வழி என்ற முடிவுக்கு வர இயலும். ஆனால் நாம் மட்டுமே புறக்கணித்து விடுவதால் பிரச்சினை தீர்ந்து விடுவதில்லை. இவ்விஷயத்தில் ஒரு சிலர் எந்தக் கட்சியும் பிடிக்கவில்லை. அதனால் அவற்றில் எதற்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்று அதற்கென தேர்தல் எந்திரத்திலுள்ள ஒரு பட்டனை அழுத்திவிடலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர். பிரச்சினை ஓட்டுக் கட்சிகள் மட்டுமல்ல அதாவது ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஆட்சி அமைப்பையே மாற்ற வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினை.

இங்கு நாம் மட்டும் புறக்கணிப்பது என்பதும் சில கோரிக்கைகளுக்காக அவற்றை நிறைவேற்றாத பட்சத்தில் கோபத்தை வெளிப்படுத்த புறக்கணிப்பதும் தீர்வு அல்ல. ஏனெனில் இங்கு கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டால் அமைப்பை ஏற்றுக் கொள்வர். நம்மை பொறுத்த வரை (தனிப்பட்ட முறையில்) இந்த அமைப்பை நிராகரித்துவிட்டு மாற்று அமைப்பை மக்கள் உருவாக்கும் வரை, அப்படி அதற்கு மக்கள் பலம் பெறுவது வரை, புறக்கணிப்பதே சரியானதாக இருக்கும். ஆனால் இந்த போலி ஜனநாயக அமைப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தங்களது சொந்த அனுபவத்தின் மூலமாக புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ச்சியான முறையில் இப்போலி ஜனநாயக அமைப்பையும் காலனியாதிக்கத்தை வரவேற்கும் கட்சிகளையும், எதிர்க்க திராணியற்ற கட்சிகளையும் அம்பலப்படுத்தவும் வேண்டும். மாற்று ஆட்சி முறைகளைப் பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.