தேர்தல் கூட்டணிகள் மற்றும் இடதுசாரிகள் பற்றி பல்வேறு விதமான தப்பெண்ணங்கள் திட்டமிட்டே சிலரால் பரப்பப்படுகின்றன. சிலர் அதை நம்பவும் செய்கிறார்கள். இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் இந்த தப்பெண்ணங்கள் தொற்றிக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

அவற்றில் முதலாவதாகக் குறிப்பிடப்பட வேண்டியது இடதுசாரிகள் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுகின்றார்கள் என்கிற கருத்தாகும். ஏன் அணி மாறுகின்றார்கள் என்பதற்கு மிக அபாரமான கற்பனை வளத்துடன் தங்களது இயல்புக்கு ஏற்ப காரணம் கற்பிக்கின்றனர். என்ன காரணம்? சில தொகுதிகள் அதிகமாகக் கொடுக்கின்றார்கள் என்பதற்காக இடதுசாரிகள் அணி மாறுகின்றார்கள் என்பது. அதை முதலில் பார்த்து விடுவோம்.

சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இருந்து ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு காங்கிரஸ் எதிர்ப்பு என்பதுதான். காங்கிரசை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும், அதனிடத்தில் ஒரு இடது ஜனநாயக மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் குறிக்கோள்.

முதலாளித்துவ நிலப்புரபுத்துவ நலன்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட காங்கிரசை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்கிற நிலையை எடுத்துவிட்டால் அதைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற தேர்தல் உத்திகளை வகுத்தாக வேண்டும். இந்த கட்டுரையில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த கூட்டணி நிலைப்பாடுகளை மட்டும் பார்க்கலாம்.

1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டு மார்க்சிஸ்ட் கட்சி தனியாக அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நாட்டில் நடந்துள்ள அனைத்து மக்களவைத் தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரசுக்கு எதிராகவே, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ, போட்டியிட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஒரேயொரு விதிவிலக்கு. காங்கிரசைவிட பெரிய அபாயமான பாஜகவை காங்கிரசின் உதவியின்றி அதிகாரத்திலிருந்து வீழ்த்தியிருக்க முடியாது. ஏனெனில், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளில் சில மதவாத பாஜகவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்தன. அதாவது அந்த அணியில் இருந்தன. (அந்த மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியின்றி பாஜக அதிகாரத்திற்கு வந்திருக்கவே முடியாது என்பது தனிக்கதை). எனவே இடதுசாரிகள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காங்கிரசும் இடம் பெற்றிருக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா போன்ற இடதுசாரிகள் பலமாக இருக்கும் மாநிலங்களில் போட்டியே காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளுக்கும்தான். மற்றொரு புறம் இடதுசாரிகள் பலவீனமாக உள்ள, ஆனால் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தனியாகவே பாஜகவை எதிர்த்து நின்றது. அங்கும் கூட தாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் தவிர பிற இடங்களில் மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் காங்கிரசை ஆதரித்தார்கள். ஆந்திரா போன்ற மாநிலங்களில் தொகுதிகள் பிரித்துக் கொள்ளப்பட்டன. மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகள் போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாது; காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகள் போட்டியிடவில்லை. தேர்தலுக்குப் பின்னர் அமைந்த காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தையும் மார்க்சிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரித்தனர்.

சுருக்கமாகச் சொன்னால் 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சில மாநிலங்களில் காங்கிரசை நேரடியாகவோ, மறைமுகமாகவோ (ரகசியமாக அல்ல) ஆதரித்தது தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் மார்க்சிஸ்டுகள் காங்கிரசை எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

இனி குறிப்பாக தமிழக தேர்தல் அரசியலுக்கு வருவோம்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் இடதுசாரிகள் காங்கிரசை எதிர்த்தே போட்டியிட்டு வருகின்றனர். அதற்காக காங்கிரசுக்கு எதிராக எந்தக் கட்சி நின்றாலும் அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடுவதில்லை.

1967ல் காங்கிரசுக்கு எதிராக திமுகவை ஆதரித்தார்கள். அதே திமுக 1972 தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தது. எதிர்த்து நின்றதோ ராஜாஜியின் சுதந்திரா கட்சி அங்கம் வகித்த வலதுசாரி பிற்போக்குவாதக் கூட்டணி.  எனவே மார்க்சிஸ்டுகள் தனியே போட்டியிட்டனர். இதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச கொள்கை கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இடதுசாரிகள் தொகுதிப் பங்கீடுகள் செய்து கொள்வதில்லை.

அடுத்து ஒரு முக்கியமான உண்மையையும் நினைவுறுத்த வேண்டியிருக்கின்றது. 1972ல் எம்ஜிஆர் அதிமுகவைத் துவக்குகிறார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் வருகின்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் என்.சங்கரய்யா வேட்பு மனு தாக்கல் செய்கின்றார். புதிதாகத் துவக்கப்பட்ட கட்சியான அதிமுக கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்தக் கட்சியின் வேட்பாளர் மாயத் தேவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிலிருந்து விலகுகின்றது. இது எதை உணர்த்துகின்றது என்பதை சற்று யோசித்து பார்க்க வேண்டும். மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் நோக்கமாக இருந்ததே தவிர சீட்டு அல்ல.

அதிமுக தேர்தல் களத்திற்கு வந்த பின்னர் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தன. கம்யூனிஸ்டுகள் காங்கிரசுக்கு எதிரான கூட்டணியிலேயே தொடர்ந்து இடம் பெற்றனர். 1996ல் மதிமுக கூட்டணியில் இடம் பெற்றனர். அதாவது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் ஒரு மாற்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர் என்பதைக் குறித்துக் கொள்ளவும். ஆனால், பின்னர் 1998 மக்களவைத் தேர்தலில் மதிமுக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தது.

இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்டுகள் எடுத்த நிலை மிகுந்த கவனத்திற்கு உரியது. ஒரு பக்கம் அதிமுக-பாஜக-மதிமுக கூட்டணி. மறுபக்கம் திமுக கூட்டணி. பாஜக எதிர்ப்பு நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீட்டுக்கு மார்க்சிஸ்டுகள் முயற்சித்தனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. மார்க்சிஸ்டுகள் என்ன செய்தனர்? மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் தனியாகப் போட்டியிட்டனர். மற்ற தொகுதிகளில் திமுகவை ஆதரித்து தனியே பிரச்சாரம் செய்தனர்.

இன்னுமொரு முக்கியமான செய்தி தோழர் லீலாவதி படுகொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டுதான் ஆகியிருந்தது. கொலை செய்தது திமுகவினர். ஆனால், அதே திமுகவை சிபிஎம் ஆதரித்தோம்!

பொதுவான அரசியல் போராட்டம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம் களத்தில் அன்றாடம் நடக்கும் போராட்டம். இரண்டும் முரண்படும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படக் கூடும். அவற்றில் ஒன்றுதான் 1998 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சிபிஎம் சந்தித்த நிலைமை. தோழர்களுக்கு ஏற்பட்ட கொடுமையை பிரதானமாகக் கருதி திமுகவையும் எதிர்ப்பது என்று முடிவெடுத்திருந்தால் அது பாஜகவிற்கு இன்னும் சாதகமாக ஆகியிருக்கக் கூடும்.

இது போன்ற நிலைமைகள் நாடு முழுவதும் மட்டுமின்றி தமிழகத்திலேயே பல முறை ஏற்பட்டிருக்கின்றது. சிபிஎம் தோழர்களை கொலை செய்த திமுக, அதிமுக கட்சிகளை சிபிஎம் கட்சி வெவ்வேறு தேர்தல்களில் பொதுவான அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப ஆதரித்திருக்கிறது. மற்ற கட்சிகளை விடுங்கள். மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் மோதல்கள் நடப்பதும், அவற்றில் இரு கட்சியினரும் உயிரிழப்பதும் நடந்திருக்கின்றன. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டால் அது எதிரிகளுக்கே மேலும் சாதகமாகும். எனவே அத்தகைய சம்பவங்களையும், அரசியல் தேவைகளையும் தனித்தனியே பிரித்தே பார்க்க வேண்டும். வேறு வழியில்லை.

மேலும், கம்யூனிஸ்டுகள் வளர்ந்து விடாமல் நான் பார்த்துக் கொண்டேன் என்று 1999 மக்களவைத் தேர்தலில் மதுரையின் வீதிவீதியாகச் சென்று கருணாநிதி விஷம் கக்கினார். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அவர் பாஜக கூட்டணியில் இருக்கும்போது இப்படிப் பேசினார். எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலையிலிருக்கும் மதவாத பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் கொடுத்து வளர்க்க முயற்சித்தவர். (இந்தக் குற்றச்சாட்டிலிருந்து அதிமுகவும் தப்ப முடியாது). ஆனால், கம்யூனிஸ்டுகள் வளரக் கூடாதாம். இது அவரது வர்க்க குணத்தை, முதலாளித்துவ குணத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. அப்படிப் பேசியவ‌ருடனேயே பின்னர் 2004ல் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக இடதுசாரிகள் அணி சேர்ந்தார்கள். 2006ல் அதிமுகவின் அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டவும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். மக்களுக்கு உடனடியாக எது நன்மை பயக்கும் என்று கட்சி கருதுகிறதோ அந்த அரசியல் நிலைப்பாட்டிற்கே முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் நினைவூட்டவே இவ்விடத்தில் இந்த சிறு விளக்கம்.

1998க்குப் பின்னர் 2004 வரையிலும் பாஜகவே மார்க்சிஸ்ட் கட்சியின் முதன்மையான எதிரியாக இருந்தது. அதை அதிகாரத்திலிருந்து அகற்றுவதும், மற்ற கட்சிகளிடமிருந்து தனிமைப்படுத்துவதும் மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகளின் உடனடி இலக்காக ஆனது. ஆதலால், காங்கிரசுடனும் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் வெளியிலிருந்து ஆதரித்தனர் இடதுசாரிகள். அந்த திட்டத்திற்கு மாறாகவும், தேச நலனுக்கு எதிராகவும் மன்மோகன்சிங் அரசாங்கம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதை எதிர்த்து தங்களது ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர்.

2009 தேர்தல் நடந்தது. காங்கிரஸ், பாஜக இரண்டையும் எதிர்த்துப் போட்டியிட்டனர் இடதுசாரிகள். ஏனெனில், மதவாத பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றும் அபாயம் இருக்கவில்லை. இடதுசாரிகளின் அந்தக் கணிப்பு மிகச் சரியாக இருந்தது என்பதற்கு தேர்தல் முடிவுகளே சாட்சி. பாஜகவின் பலம் மேலும் குறைந்திருந்தது. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதற்கு கிராமப்புற வேலை உத்திரவாதச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற இடதுசாரிகளின் முயற்சியால், நிர்ப்பந்தத்தால் ஐமுகூ அரசாங்கம் இயற்றிய சட்டங்களும், திட்டங்களும் முக்கிய காரணமாக இருந்தன.

இப்போது நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தை பார்ப்போம்.

திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி என இரண்டிலுமே ஏகப்பட்ட குழப்பம். அதிமுக தலைமை ஏடாகூடமாகத்தான் நடந்து கொண்டது. இடதுசாரிகளைப் பொருத்த வரையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பது என்பது அரசியல் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டிற்கு கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுமே வந்துவிட்டன. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது. பிரச்சனைகள் வருகின்றன. அதன் அணுகுமுறை சரியில்லை என்பதனால் மூன்றாவது அணி அமைப்பது குறித்த யோசனை வருகின்றது. பின்னர் அது ஆளும் கூட்டணிக்கே சாதகமாகும் என்பதனாலும், அதிமுக மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வந்ததானாலும் அந்த யோசனை கைவிடப்படுகின்றது. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படுகின்றது.

மார்க்சிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் இறுதியாக 18 தொகுதிகள் கேட்டதாகவும், அதிமுக இறுதியில் 12 தொகுதிகள் தர முன்வந்த அடிப்படையிலும் கூட்டணி அமைக்கப்படுகின்றது. (கூட்டணி என்ற சொல் இக்கட்டுரை முழுவதும் ஒரு வசதிக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் தொகுதிப் பங்கீடு மட்டுமே எப்போதும் செய்து கொள்ளப்படுகின்றது). உண்மையில் சில தொகுதிகள் கூடுதலாக வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின், மார்க்சிஸ்டுகளின் நோக்கமாக இருந்திருந்தால் அதை எதிர்க் கூட்டணி கொடுத்திருந்தாலும் அங்கு போய் அவர்கள் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், எப்போதும் அப்படி அவர்கள் நடந்து கொண்டதில்லை. தமிழகத்தைப் பொருத்த வரையில் அப்படி நடந்து கொள்ளும் ஒரே முக்கிய அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். யார் அதிக தொகுதிகள் கொடுக்கின்றார்களோ அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள்.

தங்களது அரசியல் நிலைப்பாட்டை தாங்களே தனியாக சாதிக்கப் போதுமான பலம் இல்லாத காரணத்தினாலேயே இடதுசாரிகள் மற்றவர்களின் உதவியையும் பெறுகின்றார்கள். அதற்காக அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து விடுவதில்லை. திமுக, அதிமுக, மதிமுக, பாமக போன்ற பகுத்தறிவு பேசும் கட்சிகள் தங்களது லாபத்திற்காக மதவாத பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்கியதே இல்லை. அந்த பாவத்தைச் செய்யாதவர்கள் இடதுசாரிகளும், தலித் கட்சிகளும் மட்டுமே.

ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும், பேசாமல் தனியாகப் போட்டியிட்டு விடலாமே என்றும், தேர்தலையே புறக்கணித்துவிடலாமே என்றும் சிலர் கருத்துக்கள் கூறுகின்றனர். நக்சலைட்டுகள் தேர்தலைப் புறக்கணிக்கின்றார்கள்; வைகோ தேர்தலைப் புறக்கணித்துள்ளார். நக்சலைட்டுகளால் மக்களுக்கு எந்த நன்மையும் விளைந்ததில்லை. வைகோவின் தற்போதைய முடிவினாலும் மக்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை (ஒரு வேளை அவரது வாக்காளர்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வாக்களிக்காததனால் அது ஆளும் திமுக கூட்டணியின் வெற்றிக்கு உதவுகின்ற தீமையை வேண்டுமானால் தரலாம்). தன்னுடைய அல்லது தன்னுடய கட்சியான மதிமுகவின் தன்மானத்தைக் காப்பதற்காக இந்த முடிவை மேற்கொண்டதாக வைகோ தெரிவிக்கின்றார். ஆனால், இந்தப் போக்கில் அவர் மக்களை மறந்து விட்டார்.

'அரசியலில் பங்கேற்க மறுப்பதற்கு நீங்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளில் ஒன்று, உங்களைவிடக் கீழானவர்களால் நீங்கள் ஆளப்படுவதாகும்' என்பது கிரேக்க தத்துவ மேதை பிளோட்டோவின் கூற்றாகும். இதை சம்பந்தப்பட்ட அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.