ரவீந்திரநாத தாகூரும் சுப்ரமண்ய பாரதியும் இந்த நூற்றாண்டின் இருபெரும் தேசிய கவிஞர்கள். தாகூர் வங்கத்திலும் பாரதி தமிழகத்திலும் தோன்றிய போதிலும் இருவரும் பாரதம் முழுமைக்கும் பொது வானவர்கள்; ஏன், உலகத்துக்கே பொதுவான வர்கள். இருவரையும் ஒப்புநோக்கி விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆராய வேண்டியது அவசியம். எனினும் வங்க மொழியிலும் தமிழ் மொழியிலும் நிறைந்த பாண்டித்யம் பெற்றவர்கள்தான் இதனை முழுமையாகச் செய்ய முடியும். ஏனெனில் தாகூரின் எழுத்துக்கள் பலவும் தமிழில் வெளிவரவில்லை; ஆங்கிலத்திலும் வெளிவராதவை அநேகம் உண்டு. எனவே இப்போதைக்கு இருப்பதைக் கொண்டு தான் ஆராய வேண்டும். பிரபல இலங்கை எழுத் தாளரான நண்பர் திரு.க. கைலாசபதி “மகாகவி கண்ட மகாகவி” என்ற தலைப்பில் சமீபத்தில் சில கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தத் துறையிலே அவர் முன்னோடியாக விளங்கியுள்ளார். அவரது முயற்சியும் பாராட்டுக்குரியது. எனினும் இவ்விஷயம் மேலும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்பட வேண்டும். இந்தச் சிறு கட்டுரையில் அதற்கு நிச்சயமாக இடமில்லை.

தாகூரையும் பாரதியையும் மேலோட்டமாகப் பார்க்கிற போது அவர்கள் இருவரது வாழ்விலும் சாதனையிலும் காணும் ஒற்றுமைகளைவிட வேற்றுமைகளே சட்டென்று நம் நினைவில் எழும். தாகூர் 1861-இல் தோன்றி 1941-இல் அமரரானார். கிட்டத்தட்ட நிறைவாழ்வு வாழ்ந்தவர் அவர். பாரதியோ தாகூருக்குப் பின்னர் 1882-இல் தோன்றி 1921-இல் அற்பாயுளில் நம்மை விட்டுப் பிரிந்தவர். இருவரும் எழுதியுள்ளவற்றைக் கவனித்தாலோ, தாகூரின் எழுத்துக்கள் மகா சமுத்திரம் போல் அளவில் விரிந்து பரந்தவை. உலக மகாகவிகள் கூட இந்த அளவுக்கு எழுதவில்லை என்று தாகூரின் விமர்சகரான எட்வர்ட் தாம்ஸன் குறிப்பிடுகிறார். பாரதியின் எழுத்துக்கள் தாகூருடன் ஒப்பிடும் போது அளவில் குறைந்தவை. என்றாலும் நாம் பாரதியின் குறுகிய ஆயுட் காலத்தையும் மறந்து விடுவதற்கில்லை. இருவருடைய வாழ்க்கை வசதி களைப் பார்த்தாலோ, தாகூர் வசதியான பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவரே ஒரு குட்டி ஜமீன்தார். இந்தியக் கலாசார மந்திரியும் எழுத்தாளருமான ஹுமாயூன் கபீர் சொல்லுவது போல், “அந்தக் காலத்திலிருந்த ஏனைய பிராமண ஜமீன்தார் களிடமிருந்து எந்த விதத்திலும் மாறுபடாத ஜமீன்தார்” அவர். பாரதியோ ஜமீன்தாரிடம் குறைந்த ஊதியத்துக்கு ஊழியம் செய்து, பின்னர் அதனை உதறியெறிந்துவிட்டு விலகியவர். வறுமையின் கொடுமையை வாழ்வில் நேரடியாக அனுபவி யாதவர் தாகூர். வாழ்வின் இறுதி வரையிலும் வறுமையுடன் போராடி உழலும் சமயங்களில் உள்ளமும் கூடச் சலித்தவர் பாரதி. மேலும் தாகூரின் குடும்பச் சூழ்நிலையே அவரது முற்போக்கான கருத்துக்களுக்கு இளமையிலேயே வித்திட்டது. தாகூரின் தாத்தாவும் தந்தையும் பிரமசமாஜிகள். அந்தக் காலத்தில் பிரம சமாஜம் சமுதாயச் சீர்திருத்தத்துக்காகப் பாடுபட்டது; மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தது. பாரதி தமது இளமைக் காலத்தில் வாழ்ந்த சூழ்நிலையோ ஜமீன்தாருக்கு லாலி பாடிய ஆஸ்தானப் புலவர்களின் சூழ்நிலை. “சின்னச் சங்கரன் கதை’யில் வருணிக்கப்படும் பிற்போக்கான நிலப்பிரபுத்துவத்தின் அகழி முதலைச் சூழ்நிலை. இந்தச் சூழ்நிலையிலிருந்து தம்மைத் தாமே அறுத்துக்கொண்டு தேசத்தின் சூழ்நிலை யோடும் எழுச்சியோடும் தம்மை ஐக்கியப்படுத்தி வளர்ந்து பரிணமித்தவர் பாரதி. தாகூரோ தமது ஆயுட் காலத்தில் உலகமெல்லாம் சுற்றிப் பார்த்தவர். பலமுறை வெளிநாடு சென்றவர். ஆனால் பாரதியோ சாகும் வரையிலும் இந்தியாவின் எல்லையைத் தாண்டி அறியாதவர். தாண்ட வழியற்றுப் போனவர்; தமது இலக்கிய வாழ்வின் செம்பாதியை அஞ்ஞாத வாசத்திலே கழித்தவர். தாகூருக்குத் தமது ஆயுட் காலத்திலேயே உலகப் புகழ் கிட்டியது; நோபல் பரிசு கிடைத்தது. பாரதிக்கோ தாயகத்திலேகூட அவரது ஆயுட் காலத்தில் போதிய புகழும் செல் வாக்கும் கிட்டவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர் தான் தமிழகம் அவரது பெருமையை நன்குணரத் தொடங்கியது. இத்தனைக்கும் மேலாக, பாரதி தாகூரை நன்கறிந்தவர்; தாகூருடைய கட்டுரைகள், கதைகள், கவிதை முதலியவற்றைத் தமிழாக்கியவர்; தாகூரைப் பற்றிப் பாராட்டி எழுதியவர். ஆனால் பாரதியின் பெயரைக்கூட, தாகூர் அறிந்திருந்ததாக நமக்குத் தெரியவில்லை.

ஃ ஃ ஃ

இவ்வாறு இந்த இருபெருங்கவிஞர்களின் வாழ்க்கையிலே தென்படும் வேற்றுமைகள் நம் மனத்தில் எழுவது இயல்புதான்; என்றாலும் இருவரது சாதனையிலும் கண்ணோட்டத்திலும் வேற்றுமையைவிட, ஒருமைப்பாடே மேலோங்கி யிருப்பதை நாம் காணமுடியும். பாரதியைத் தாகூர் அறியவில்லை; ஆனால் பாரதி தாகூரை அறிந் திருந்தார். எனவே தாகூரின் சிருஷ்டிகள் பாரதியைக் கவர்ந்திழுக்கவும், பாரதியின் சிருஷ்டிகளில் அதன் சாயல்கள் பிரதிபலித்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்று நாம் எதிர்பார்ப்பது இயற்கை. பாரதி தாகூரை மொழிபெயர்த்தார்; பல இடங்களில் தாகூரை மேற்கோள் காட்டுகிறார்; அவரது கருத்தை ஒப்புக் கொள்கிறார். என்றாலும் தாகூரின் சாயல்கள் பாரதியிடம் படிந்திருந்தன என்று நம்மால் சொல்ல இயலவில்லை. அதற்கான மேலோட்டமான சான்றுகள்கூட நம் கண்ணுக்குத் தென்படவில்லை. சமகாலத்தில் வாழ்ந்த இருபெருங் கவிஞர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திப்பது இயற்கை; மேலும் எந்த வொரு கவிஞனும் சமுதாயச் சூழ்நிலையிலிருந்து தப்பித்துக் கொண்டுவிட முடியாது. இருவரையும் உருவாக்கி வளர்த்ததே அன்று நிலவிய சமுதாயச் சூழ்நிலைதான் என்றே சொல்ல வேண்டும். எனவே ஒத்த கருத்துக்கள் (கற்பனைகள் அல்ல) இருவரிடமும் தோன்றியுள்ளதைக் கண்டு நாம் ஆச்சரியப்படு வதற்கு எதுவும் இல்லை.

சொல்லப் போனால் இவர்கள் இருவரும் வங்கத்திலே தோன்றி, பின்னர் நாடு முழுவதும் பரவிய இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தின் தேசிய எழுச்சியாலும் தேசிய மறுமலர்ச்சியாலும் ஆகர் ஷிக்கப்பட்டுத் தேசிய கவிஞர்களாக மலர்ந்தவர்கள்; தாகூர் இதற்கு முன்பே தேசிய இயக்கத்தைப் பற்றி எழுதியிருந்தபோதிலும் 1905ஆம் ஆண்டில் வங்காளப் பிரிவினை நடந்த போது, வங்கத்தின் ஐக்கியத்தைக் குலைக்கும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கொதித்துக் குமுறினார்; வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்துக்கும் தலைமை தாங்கினார்; பல பாடல்களைப் பாடினார். “சட்டம் அமுலுக்கு வந்தாலும் வராவிட்டாலும், இங்கிலாந்து மக்கள் நமது பரிதாபக் குரல்களைக் கேட்டாலும் கேட்கா விட்டாலும், நமது நாடு என்றென்றும் நமக்கே உரியது; நமது மூதாதையர்களின், நமது மக்களின், நமது சந்ததியார்களின் நாடு இது. நமக்கு உயிரும் உரமும் நன்மையும் தரும் நாடு இது!” என்று தாகூர் அன்று எழுதினார். “நாம் வங்காளிகள்: நாம் ஒன்றுபட்டவர்கள்” என்று கோஷித்தார். பாரதி யாரும் இதே சந்தர்ப்பத்தில் தான் தீவிரமான அரசியல் கவிஞராக உருமாறினார். சுதேசமித்திரனில் அவர் முதன் முதல் எழுதிய கவிதையே (15-9-1905) ‘வங்க வாழ்த்துக் கவிகள்’ என்பதே. அதுமட்டுமல்ல. வங்கத்தின் ‘வந்தே மாதர’ கோஷமும் அவரைக் கவர்ந்தது.

“ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகலென்ன நீதி?”

என்றும்,

“ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே”

என்றும் அவர் தமது வந்தே மாதர கீதத்தில் முழங்கினார். இதன் பின்னர் பாரதி தேசிய இயக்கத்தோடு ஒட்டி நின்று வளர்ந்து இந்திய நாட்டில் தலைசிறந்த அரசியல் கவிஞராகப் பரிண மித்தார். ஆனால் தாகூர் எந்தக் காலத்திலும் அரசியலில் தீவிரமாக இறங்கிவிடவில்லை. எனினும் தேசிய இயக்கத்தைக் குறித்துத் தமது முற்போக்கான கருத்துக்களை மட்டும் அவர் எடுத்துக் கூறத் தவறவில்லை. தேசிய இயக்கம் நாடு முழுவதிலும் காட்டுத் தீப்போல் பரவி வந்த காலத்தில் தாகூர் ஈடுபாடு கொள்ளாமல், தமது சாந்தி நிகேதனுக்குள்ளேயே ஒடுங்கியிருந்ததும் உண்டு. எனினும்கூட, தாகூருடைய தேசபக்தியையும், சுதந்திர வேட்கையையும் நாம் குறைத்து மதிப்பிடு வதற்கில்லை. மனிதாபிமான வேட்கையின் மூலமாகத் தாகூர் தேசம் முழுவதையும் அரவணைத்தார்; பாரதியோ தேச பக்தியின் மூலமாக மனிதாபிமான உணர்ச்சியை வளர்த்துக்கொண்டுவிட்டார்.

ஃ ஃ ஃ

எனினும் இந்த இரு கவிஞர்களின் மனிதாபி மானத் தன்மை கொண்ட தத்துவ தரிசனத்தை உருவாக்கிய சக்திகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யானவை என்றே சொல்லலாம். இந்திய நாட்டின் பழம் பெரும் தத்துவமான வேதாந்தம், உபநிஷத்தின் பிரம்ம ஞானம், இந்திய நாட்டின் பக்தி இலக் கியங்கள், இந்து மதத்தோடு சேர்ந்து வளர்ந்த பண்டைப் பெருநூல்கள், வங்காள மறுமலர்ச்சியின் போது தோன்றிய வங்க இலக்கிய கர்த்தாக்கள், ஷெல்லி, பைரன், கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் எல்லாம் இவர்கள் இருவருக்கும் ஊட்டமளித்த சக்திகள். இரண்டு பேரும் உலகு தழுவிய மனிதாபிமானத்தை வெளியிட்ட போதிலும், அந்த மனிதாபிமானத்தைப் பண்டை இந்திய தத்துவங்கள் இலக்கியங்களிலிருந்தே உருவாக்கிக் கொண்டார்கள். இதன் காரணமாக, அவர்கள் பழமையின் பிடிப்பிலிருந்து பூரணமாக விடுதலை பெறாமல் பல்வேறு பண்டைத் தத்துவங்களின் முரண்பாடுகளையும் அங்கீகரித்துக்கொண்டு, அதன் அஸ்திவாரத்திலேயே தங்கள் மனிதாபி மானத்தைக் கட்டி வளர்த்தார்கள். இதனால் விவேகானந்தரைப் போல் இவர்களும் இந்திய நாட்டின் பண்டைக் கலாசாரத்தின் பாரம்பரியமே உலகுக்கெல்லாம் வழிகாட்டும் என்று நம்பினார்கள். இதனைத் தாகூர் அமெரிக்காவில் செய்த பிரசங்கங் களிலும் நாம் காண முடிகிறது. “நாங்கள் இப் போது புழுதியோடு வீழ்ந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி, எங்களுடைய செல்வத்தின் மீது தெய்வ சாபம் இருக்கிறது” என்று அவர் பேசினார். இதனைப் பாரதியும் எழுதினார். “இந்து தர்மத்தை அனுசரித்து உலகம் முழுவதிலும் எல்லாத் தேசத்தாரும் உடன் பிறப்பென்றும் சமானமென்றும் தெரிந்துகொண்டு, பரஸ்பரம் அன்பு செலுத்தினால் பிழைக்கலாம்” என்று தாகூர் கருதுவதாகப் பாரதியார் குறிப்பிட்டார். இதே கருத்தோட்டத்தை நாம் பாரதியின் பல்வேறு எழுத்துக்களிலும் காண முடியும். எனவே தான் பாரதி தமது ‘பாரத சமுதாயம்’ என்ற பாட்டில்,

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்

 என்றுரைத்தான் கண்ண பெருமான்.

 எல்லாரும் அமரநிலை எய்து நன்முறையை

 இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்

 இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்; ஆம்

 இந்தியா உலகிற்களிக்கும்!”

என்று ஆணித்தரமாகப் பாடுகிறார். எனினும் இவ்விரு கவிஞர்களின் உலகு தழுவிய மனிதாபி மானக் கண்ணோட்டத்தின் தோற்றத்தில் ஒரு வித்தியாசம் உண்டு. தாகூர் உலகமெல்லாம் சுற்றிய கவிஞர். உலக மக்களை நேரே கண்டவர். பாரதி இந்திய மக்களை மட்டுமே கண்டவர். எனவே தாகூரின் மனிதாபிமானக் கொள்கையோ அறிவுபூர்வமாகவே உருவாயிற்று. பாரதியின் மனிதாபிமானக் கொள்கை உணர்வு பூர்வமாகவே உருவாயிற்று. இவ்வாறு உருவாவதற்கு இருபெரும் புலவர்களும் வாழ்ந்த காலச் சூழ்நிலையே காரணம் என்று நாம் கொள்ளலாம்.

ஃ ஃ ஃ

பாரதியும் தாகூரும் இந்திய நாட்டின் பண்டைத் தத்துவங்களிலும், மத இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு அவற்றிலே காலூன்றி நின்ற போதிலும், இருவரும் பண்டைய தத்துவங்களில் இடம் பெற்று இருக்கும் மாயாவாதத்திலும் அநித்தியக் கோட் பாட்டிலும் சிக்கிக் கொள்ளவில்லை. அதேபோல் இருவரும் எந்த ரூபமான துறவறத்தையும் அங்கீ கரிக்கவில்லை. “துறவிலே எனக்கு விமோசனம் இல்லை; விடுதலை இல்லை. இன்பத் தளைகள் ஆயிரக்கணக்கில் என்னைப் பிணிப்பதில்தான் விடுதலை என்னைத் தழுவுவதாக நான் உணர்கிறேன்” என்று பாடியவர் தாகூர். இதனால்தான் கௌதம புத்தரின் மனிதாபிமானத்திலும், பௌத்தக் கதை களிலும் ஈடுபாடு கொண்டிருந்த தாகூர், புத்தர் மனைவி மக்களைத் துறந்து துறவறம் நாடுவதையோ, துறவறத்தை வற்புறுத்துவதையோ ஆதரிக்கவில்லை. அவர் தமது ‘தோட்டக்காரன்’ (மாலி) என்ற கவிதைத் தொகுதியில் இதனை வெளியிடுகிறார். கவிதையின் சாரம் வருமாறு:

நடு ராத்தியில் ஒரு கிரகஸ்தன் தன் மனைவி மக்களையும், வீட்டையும் துறந்து துறவறம் பூண எண்ணுகிறான்; ‘வீட்டைத் துறந்து விட வேண்டும். இதுதான் நேரம். என்னை இந்தச் சம்சார மாயையில் யார் பூட்டி வைத்தது?’ என்று எண்ணுகிறான். உடனே கடவுள் ‘நான்தான்’ என்கிறார். அது அவன் காதில் விழவில்லை. குழந்தை, மனைவியின் மீது படுத்துத் தூங்குகிறது. ‘இதுவரை என்னை ஏமாற்றியது யார்? நீங்கள் ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?’ என்று கேட்கிறான். ‘அதுவும் நான் தான்’ என்கிறார் கடவுள். ஆனாலும் அவன் காதில் அந்தக் குரல் விழவில்லை. பிறகு குழந்தை கனவு கண்டு அழுகிறது. தாயை அணைத்துக் கொள்கிறது. எனினும் அவன் அதையெல்லாம் கவனிக்காமல் மனைவியையும், குழந்தையையும் விட்டு வெளியேற முனைகிறான்; அப்போதும் கடவுள் பேசுகிறார். ‘முட்டாளே! போகாதே!’ என்கிறார். அவனோ அதனைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். உடனே கடவுள் பின்வருமாறு சொல்கிறார்; ‘முட்டாள். நான் இங்குதான் இருக்கிறேன், இவன் என்னைத் தேடிக் கொண்டு எங்கோ போகிறானே!’

இதே கண்ணோட்டத்தை நாம் பாரதியிடமும் பரக்கக் காணலாம். பாரதியின் ‘பொய்யோ - மெய்யோ?’ என்ற பாடலிலும், அதற்கு அவர் எழுதிய முன்னுரையிலும் இந்தக் கருத்தை அழுத்த மாகக் கூறுவதை நாம் பார்க்கிறோம். பாரதி எழுதுகிறார்:

“இந்த உலகமே பொய்” என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப் பற்றி இந்த நிமிஷம் எனக்கு வருத்த

மில்லை. குடும்பத்திலிருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்து விட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலை போல் நிற்கிறாள் மனைவி. நமது துயருக் கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள். நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள். நமது குழந்தைகளை வளர்த்தாள். அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட் கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா? வீடு கட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது.

பாரதி இவ்வாறு கருதியதால் தான் அவர் “கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு” என்றார். “ஊருக்குழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்” என்றும், “ஒன்று பரம்பொருள்; நாமதன் மக்கள்; உலகு இன்பக் கேணி” என்றும் பாடினார். இதே போன்றுதான் தாகூரும் “எவ னொருவன் மனிதனுக்குச் சிறந்த சேவை செய் கிறானோ, அவனே கடவுளுக்குச் சிறந்த சேவை செய்து வருகிறான்” என்று கூறினார். அதுமட்டு மல்லாமல், தமது ‘நினைவுக் குறிப்பு’க்களில் “இந்த உலகம் இனியது. நான் மாள விரும்பவில்லை. என்றென்றும் நிரந்தரமான மானுட வாழ்வையே நான் வாழ விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

ஃ ஃ ஃ

இவ்வாறு உலகத்தையும் உலக வாழ்வையும் மக்களையும் இருவரும் நேசித்த காரணத்தாலேயே, இருவரும் தெய்வ பக்தியையும், மனிதாபிமானத்தையும் இணைத்ததாலேயே, அவர்கள் உலக மக்களிடத்தில், ஆண்டவனின் திருவுருவைக் கண்டார்கள். தாகூர் தமது கீதாஞ்சலியில் பின்வருமாறு பாடுகிறார்:

“தாளிட்ட, அடைபட்ட கோயிலின் இருண்ட மூலையில் நீ யாரைப் பூசிக்கின்றாய்? கண்ணைத் திறந்து உன் கடவுள் உன் முன்னிலையில் இல்லை என்பதை அறிந்துகொள். கடினமான தரையில் ஏர் கட்டி வாழ்வாரிடமும், சாலை அமைக்கச் சரளைக்கல் அமைப்பாரிடமும் அவன் மழையில் நனைகிறான். வெயிலில் காய்கிறான்!”

பாரதியாரும் கடவுளின் திருவுருவை உழைப் பவர்களின் உருவத்தில் காணத்தான் செய்கிறார்:

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!

எந்திரங்கள் வகுத்திடு வீரே!

கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!

கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே!

அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயிரம் தொழில் செய்திடு வீரே!

பெரும்புகழ் நுமக்கே இசைக் கின்றேன்

பிரம்மதேவன் கலை இங்கு நீரே!

ஆனால், உழைப்பவர்களின் உருவில் ஆண்ட வனைக் காணும் போக்கில் இருவேறு புலவர் களுக்கும் வேறுபாடு உண்டு. தாகூர் ஆண்டவனைக் காணும் தன்மை மனிதாபிமானத்தின் காரணமாக எழுந்தது. பாரதி அப்படியல்ல. பாரதி அவர் களைச் சிருஷ்டிகர்த்தாக்களாகப் பார்க்கிறார். எனவே அவர்களை ஆண்டவனுக்குச் சமதையாக மதிக்கிறார். “தேட்டமின்றி விழிஎதிர் காணும் தெய்வமாக”க் காண்கிறார்.

இந்தப் பார்வை வேறுபாட்டுக்குக் காரணம் உண்டு. பாரதி இந்திய நாட்டிலே எந்திர வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று விரும்பியவர். “ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்!” என்றெல்லாம் நமக்கு ஆணையிட்டவர். ஆனால், தாகூரோ எந்திர வளர்ச்சியில் நாட்டம் செலுத்த வில்லை. தாகூர் தமது அமெரிக்கச் சொற்பொழி வொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “இன்று உலகில் காணப்படும் பெரிய கைத்தொழில் ஸ்தா பனங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. அவை குரூபமாக இருப்பதே சிருஷ்டி அமைப்புக்கு முரணாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இயற்கையின் மகத்தான சக்தியானது பயங்கரத்தில் தோற்றமளிப்பதில்லை. அழகிலேயே காட்சி தருகிறது. எந்திர நாகரிகமானது இன்பத்தைப் பலியிட்டுப் பணத்தைத் திரட்டுகிறது. மனித உணர்ச்சிகள் எந்திரங்களை லகுவில் ஏற்க மறுப்பதால், எந்திரங் களின் பாதையை மறிப்பதால், அந்த நல்லுணர்ச்சி களை ஏளனம் பண்ணுகிறான் மனிதன்.”

இதைப் படிக்கும் போது உண்மையிலேயே தாகூரின் உணர்ச்சிகளே எந்திரங்களை ஏற்க மறுப்பதை நாம் காண்கிறோம். எந்திர வளர்ச்சியை நிராகரிக்கும் அளவுக்கு அவரிடம் நிலப்பிரபுத் துவத்தின் பிடிப்பு இருந்தது என்பதை நாம் உணர் கின்றோம். அந்தப் பிடிப்பு அவரை விட்டுக் கழன்று போவதற்கு வெகு காலம் ஆயிற்று என்பதையும் கூட நாம் அவரது வாய்மொழியாகவே காணலாம் (அதனைப் பின்னர் பார்க்கலாம்) ஆனால் பாரதியோ எந்திர வளர்ச்சியை விரும்பினார். நாடு எந்திரமயமாக வேண்டும் என்று வேட்கைப் பட்டார். எந்திர வளர்ச்சியினால் அழகுணர்ச்சி கெட்டுவிடும் என்று அவர் நினைக்கவில்லை. பூமாதேவியின் பொலிவு அதனால் மாறிவிடும் என்று அவர் கருதவில்லை. பாரதி பெல்ஜியக் கவிஞர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை யொன்றிலே பின்வருமாறு எழுதுகிறார்:

‘வலிமை ஓர் அழகு, அழகு ஒரு வலிமை, எந்திர ஆலை, நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத் தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகுதான். உயர்ந்த கவிகள் வலிமையுடைய பொருள்களை அவ்வக்காலத்தில் வழங்கிய வரையிலே வர்ணனை செய்துதான் இருக்கிறார்கள். இதிலே புதுமை ஒன்றுமில்லை. வலிமையே அழகு. ஒரு பொருளின் வெளியுருவத்தைப் பார்த்து அது அழகா இல்லையா என்று தீர்மானம் செய்யலாகாது. எந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றது. ஆதலால் அவை அழகு உடையன. அவற்றைக் கவி புகழ்ச்சி செய்தல் வேண்டும்.”

இந்த விஷயத்தில் பாரதி தாகூரிடமிருந்து துலாம்பரமாக மாறுபடுகிறார் என்பதை நாம் காண்கிறோம். இதற்குக் காரணம் பாரதி நிலப் பிரபுத்துவத் தளையை முறித்துக் கொண்டு, அசுர வீச்சில் முன்னேறத் துடித்தவர். ஆனால் தாகூரோ நிலப்பிரபுத்துவத் தளையில் ஓரளவு சுகம் கண்டு அதிலிருந்து விடுபடத் தயங்கியவர். எனவே தான் அவர் எந்திர வளர்ச்சியின் எழிலைக் காணத் தவறுகிறார்.

ஃ ஃ ஃ

இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள் வதற்கு சோவியத் புரட்சியைப் பற்றி இரு கவிஞர் களும் என்ன கூறினார்கள் என்பதைக் கண்டு தெளிந்து கொள்ளலாம். 1917ஆம் ஆண்டில் சோவியத் புரட்சி நடந்த ருஷ்ய நாட்டில் புதியதொரு சமுதாயம் மலர்ந்தபோது பாரதி அதனை ஆகாகாரமிட்டு வரவேற்றுப் பாடினார்.

“இடிபட்ட சுவர்போல கலி விழுந்தான்;

கிருத யுகம் எழுக மாதோ!”

என்று கோஷமிட்டார்.

“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில்

கடைக்கண் வைத்தாள்! அங்கே

ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி!

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!

வாகான தோள் புடைத்தார் வானமரர்!

பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்

போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம்

வையகத்தீர்! புதுமை காணீர்!”

என்று அந்தப் புதுமையைக் காணும்படி வையத் தாரையெல்லாம் வருந்தி அழைத்தார். இவ்வளவுக்கும் பாரதி அந்தப் புரட்சியை இந்திய நாட்டிலிருந்து மானசீகமாகவே கண்டார்; அதன் சாராம்சத்தை எடுத்த எடுப்பில் உணர்வு பூர்வமாகக் கண்டறியும் திறமையும் பக்குவமும் அவரிடம் இருந்தது. ஆனால் தாகூரின் உணர்ச்சியை அந்தப் புரட்சி அப்போது தொடவில்லை. இவ்வளவுக்கும் அவர் புரட்சிக்கு முன்பே மேல் நாடுகளுக்குச் சென்று வந்தவர்; ஏகாதிபத்தியக் கொடுமையை அதன் ஆட்சி பீடத்திலேயே நேரில் கண்டவர், என்றாலும் கூட, அவர் சோவியத் புரட்சியின் சாராம்சத்தை உடனடி யாகப் புரிந்து கொள்ளவில்லை; அதைப் பற்றி அவர் அப்போது ஒரு வார்த்தையும் பேசவில்லை. இதனால்தான் பின்னொரு சமயம் அவர் இத்தாலியப் பாஸிஸ்டான முஸோலினியின் ஆட்சியைக் கூடத் தீர ஆலோசித்துத் தெரிந்துகொள்ளாமல் போற்றிப் புகழ்ந்து விட்டார்; பின்னர் மற்றவர்களின் மூலம் உண்மை தெரிந்து, அந்தத் தவற்றைத் திருத்திக் கொண்டு விட்டார். எனினும் தாகூர் சோவியத் புரட்சியைப் பற்றித் தெரிந்துகொள்ளாமலே போய்விடவில்லை. அவர் 1930ஆம் ஆண்டில், தமது அந்திம காலத்தில், சோவியத் யூனியனுக்கு நேரடியாக விஜயம் செய்தார். அங்கு நடந்துள்ள புதுமைகளைக் கண்ணால் கண்டு பாராட்டினார். அது சமயம் அவர் எழுதிய கடிதங்கள் எல்லாம் நமக்கு இப்போதுதான் முழுமையாகக் கிடைத்து உள்ளன.

ருஷ்ய விஜயத்துக்குப் பின்னர் அவர் தமது மகன் ரதீந்திரநாத் தாகூருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு எழுதினார்: “ஜமீன்தார் அமைப்பு முறை குறித்துப் பெரிதும் வெட்கப் படுகிறேன். இன்று எனது மனம் மேலிடத்தை விட்டிறங்கி, கீழே ஓர் இடம் பிடித்துள்ளது. எனது குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு புல்லுருவியாக நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்று எண்ணும் போது நான் பெருங் கவலையடைகிறேன்.” இந்தக் கடிதத்தின் பகுதி எவ்வாறு தாகூர் நிலப்பிரபுத்துவத் தளையில் சிக்கியிருந்தார் என்பதையும், எதனால் 1917-லேயே சோவியத் புரட்சியைப் பற்றிப் பாடத் தவறினார் என்பதையும் நமக்குப் புலப்படுத்தும்.

பாரதியும் தாகூரும் நமது மதிப்புக்குரிய தேசிய கவிகள்தான் என்றாலும், நாம் இவர்கள் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் ஒன்று உண்டு. பாரதி தனது காலமெல்லாம் நாட்டு மக்களோடு ஒன்றி நின்றவர்; அவர்களது துன்ப துயரங்களில் உணர்வு பூர்வமாகப் பங்கு கொண்டவர். “இல்லையென்ற சொல்லை இல்லையாக வைப்பேன்” என்றும் “மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?” என்றும் முழங்கியவர்; “பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்று விரதம் பூண்டவர். பாரதியின் மனிதாபிமானம் உணர்வு பூர்வமானது. ஆனால் தாகூரின் மனிதாபிமானமோ அறிவு பூர்வமானது. அவரும் மனிதனை நேசித்தார். அவர் தமது கீதாஞ்சலியில் “ஏழைப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், திக்கற்றவர்களிடையேதான்” ஆண்டவன் கந்தல் உடுத்தித் திரிவதாகப் பாடினார். எனினும் அதே பாடலில் அவர் “தீனர், திக்கற்றோர், தாழ்ந் தோரிடையே நாதியற்றவர்க்கு நாதியாய், ஏழை பங்காளனாய்த் திரிந்து உலவும் இடத்தைச் சேர்வதற்கு எது வழி என்று தெரியாமல் என் இதயம் இடர்ப்படுகின்றது” என்றும் எழுதினார். “உன் ஆடை கிழிந்து அழுக்கடைந்தால் என்ன? ஆண்டவனைக் காணப் புழுதியில் இறங்கிவா” என்று எழுதிய அவர் மட்டும் புழுதியில் இறங்கத் துணியவில்லை. அவர் பாரதியைப் போல் மனிதர் களோடு பூமிப் புழுதியில் இறங்கி உணர்வு பூர்வமாக ஒட்டி நிற்கவில்லை. எனவே, தான் அவர் சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்வதற்கு முன் உழைத்து வாழும் வர்க்கமும் ஓய்வு வசதியுள்ள வர்க்கமும் உலகத்தில் இருப்பதை ஆதரித்தார். இறுதிக் காலத்தில் தான் அவரது இந்தக் கருத்தும் மனப்பான்மையும் மாறின. சாதாரணப் பொது மக்களுடன் இணைந்து பிணைந்து பூரணமாக நிற்கத் தவறியது பற்றி அவர் பிற்காலத்தில் வருத்தம் தெரிவித்தார். எனவேதான் அவர் தமது அந்திம காலத்தில் எழுதிய கவிதையொன்றில் பின்வருமாறு எழுதினார்.

“என் கவிதை எங்கெங்கே குறைபாடு கொண்டு உள்ளது என்பதை - நான் அதில் எங்குத் தவறி யுள்ளேன் என்பதை - நான் அறிகிறேன். எத்தனை யெத்தனையோ திசைவழியாக அவை திரிந்திருந் தாலும், அவை எல்லா மக்களையும் போய் எட்டத் தவறிவிட்டன என்பதை நான் காண்கிறேன். எனவே நான் இங்கே பூமிப் புழுதியிலேயிருந்து தோன்றும் கவிஞனின் செய்தியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். விவசாயியின் கவிஞனை, அவனது தோழனை, உண்மையான ஒருமைப்பாட்டை உருவாக்கும் சொல்லையும் செயலையும் கொண்ட கவிஞனை, எதிர்நோக்கி நிற்கிறேன். அவனது வாசகங்கள் மானுட உறவை வெளிப்படுத்தட்டும்! அவனது கவிதை கண்ணை மட்டும் மயக்குவதாக இராமல் விளங்கட்டும்! ஏமாற்றும் மூடு மந்திரமும் இல்லாத கவிதையாக இருக்கட்டும்! என்னிடம் இல்லாத திறமையை அவன் வழங்கட்டும்! அவன் பாசாங்கிலிருந்தும், பசப்பிலிருந்தும் ஆடம்பரத்தில் இருந்தும், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளட்டும்! அவன் உழைப்பாளி மக்களுக்குத் தன் இதயாபிமானத்தை வழங்கட்டும்.... எண்ணற்ற மக்களின் கவியான அந்தப் புதுமைக் கவியே!

நீ வருக! உன் வரவு நல்வரவாகுக! நீ அனாமதேய மான சாதாரண மனிதனின் பாடல்களைப் பாடு! அவனது ஊமையான வாய் திறவாத இதயத்தில் ஒளி பாய்ச்சு!....”

ஆம், தாகூர் நமக்கு விடுத்துள்ள அழைப்பு இது. பாரதியும் தாகூரும் நமக்குக் கற்றுத்தரும் பாடம் இது. இல்லையா?

(தாமரை, செப்டம்பர், 1961)

Pin It